உன்னை என்றும் காதல் செய்வேனே 1
உன்னை என்றும் காதல் செய்வேனே 1
"அக்கா ... அக்கா ... சீக்கிரம் வாங்க லேட் ஆகுது . " செல்வியின் குரலைக் கேட்டு வேகவேகமாக சிகையலங்காரத்தை முடித்து விட்டு தன் கைப்பையை எடுத்துக் கொண்டு கீழே இறங்கினாள், பிரியா.
செல்வி , செல்வியின் தந்தை ரகுராம் இருவரும் டைனிங் டேபிளில் அமர்ந்திருக்க பிரியாவும் அங்கு அடைக்கலமானாள்.
"குட்மார்னிங் அங்கிள்"
"குட்மார்னிங் பிரியா"
"அக்கா திஸ் இஸ் நாட் ஃபேர். அப்பாக்கு மட்டும் தான் குட்மார்னிங் கா ? எனக்கு இல்லையா? " செல்வி கடிந்து கொள்ள
" அய்யோ உன்னை மறப்பேனா. குட்மார்னிங் செல்வி. லேட்டா சொன்னதுக்கு சாரி."
"இட்ஸ் ஓகே. குட்மார்னிங் அக்கா."
வார்த்தைக்கு வார்த்தை அக்கா என்று சொல்லும் செல்விக்கு பிரியா ஒன்றும் சகோதரி அல்ல. உறவு முறையும் கிடையாது. அப்பாவின் பழைய நண்பர் ஒருவரின் மகள் தான் பிரியா.
பிரியா தனியாக சென்னைக்கு வேலை பார்க்க வந்த போது அவளை தனியே விட மனமில்லாமல் பிரியாவின் தந்தை ரகுராமிடம் பேசிய போது தன் வீட்டில் உள்ள அறையை எடுத்துக் கொள்ள கூறினார்.
அடுத்தவர்களுக்கு சிரமம் கொடுக்க கூடாது என்ற எண்ணம் கொண்ட பிரியா கெஸ்ட்டாக இருக்க மனதில்லை.பேயிங் கெஸ்ட்டாக வருவதென்றால் வருகிறேன் என்றவளை எண்ணி திகைத்து பின்பு அவளை பிடித்து விடவே அவரும் சம்மதித்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக பிரியா அவர்கள் வீட்டில் தான் பேயிங் கெஸ்ட்டாக இருக்கிறாள்.
பிரியா வந்த சில நாட்கள் யாரிடமும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள்.
தனிமையையே அவள் அதிகம் விரும்பினாள்.அப்போது செல்வி பன்னிரெண்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள். பாடம் புரியாமல் அழுத போது பிரியா அவளுக்கு பாடங்களை கற்பித்தாள்.
அதுவரை யாரிடமும் பேசாத பிரியா அவர்களை புரிந்து கொள்ள ஆரம்பித்தாள். அவர்களிடம் சகஜமாக பழகினாள்.
உடன் பிறந்தவர்கள் இல்லாமல் தனியாக இருந்த செல்விக்கு பிரியாவின் துணை மிகவும் பிடித்திருந்தது. அவளை எந்நேரமும் ஒட்டிக் கொண்டிருந்தாள்.
பிரியாவுக்கும் அவளை பிடித்து விட அவளுக்கு சகோதரியாகவும் தோழியாகவும், இன்னும் சில நேரங்களில் தாயாகவும் இருந்தாள்.
இருவரும் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள பாசத்தை பார்த்து ரகுராம், அவருடைய மனைவி பரிமலா பல நேரங்களில் ஆச்சரியப்பட்டதுண்டு.
முதலில் தூரமாக தெரிந்த பிரியாவை தன்னுடைய மற்றொரு மகளைப் போல் பாவித்தார்.செல்விக்கு என்று எது வாங்கினாலும் ப்ரியாவிற்கும் சேர்த்து தான் வாங்குவார். இருந்தாலும் பிரியாவிடம் பிடிக்காத விஷயம் முதல் தேதி ஆனால் தான் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் பணத்தை ரகுராமிடம் ஒப்படைப்பதுதான்.
அது அவளிடம் பிடிக்காவிட்டாலும் அதில் அவளுடைய சுயகௌரவம் இருப்பதால் அதை எண்ணி அவர் மறுப்பதில்லை மூன்று பேர் மட்டும் இருந்த குடும்பம் இப்பொழுது நான்கு பேராய் ஜொலிக்கிறது.
மூவரும் டைனிங் டேபிளில
் உட்கார்ந்திருக்க, பரிமளா அவர்களுக்கு ஆவி பறக்க இட்லியை கொண்டு வந்தாள்.
"ஐயோ இன்னைக்கும் இட்லியா?" தலையில் அடித்த செல்வியை எல்லோரும் பார்த்தார்கள்.
" ஏன்? இட்லிக்கு என்ன குறை? மல்லிகைப்பூ மாதிரி தானே இருக்கு."
" அப்போ எடுத்து தலைல வச்சுக்கோங்க அப்பா."
" செல்வி இப்ப என்ன வேணும்?"
" பின்ன என்னக்கா நேத்து இட்லி. முந்தா நேத்து இட்லி. இப்ப இன்னைக்கியும் இட்லி."
வெறுப்பாக கூறினாள், செல்வி.
"நீதானடி உன் கையால ஆக்குற இட்லி நல்லா இருக்குன்னு முந்தா நேத்து சொன்ன"
" ஆமாம் நான்தான் சொன்னே. நல்லா இருக்குன்னு சொன்னேன். அதுக்காக டெய்லியும் இட்லி ஆக்கி சாவடிங்கன்னு சொல்லல. நல்லா இருக்குன்னு டெய்லியும் அதையே சாப்பிட்டா வெறுத்து போய்டும். இனிமே தப்பி தவறிகூட உங்ககிட்ட உங்க சமையல் நல்லா இருக்குன்னு சொல்லவே மாட்டேன்."
" ரிலாக்ஸ் செல்வி இப்ப என்ன உனக்கு இட்லி வேணாம் அவ்வளவுதானே . சரி விடு நான் உனக்கு தோசை சுட்டு தரேன்" என்று எழுந்தாள்.
" அக்கா ஐயோ வேணாம் உங்க தோசைக்கு இந்த இட்லி பரவாயில்ல." செல்வியின் குறும்பிற்கு பிரியா முறைக்க,
"சாரிக்கா. சும்மா பேச்சுக்கு சொன்னேன்." என பாவம் போல் கேட்க ,பிரியா சிரித்துவிட்டாள்.
"நிஜமாவே சும்மாதான் அக்கா சொன்னேன். காலேஜுக்கு லேட் ஆச்சு அதான் ."
"இன்னும் ஒரு மணி நேரம் இருக்குலமா அப்புறம் என்ன?"
" அது வந்துப்பா இன்னைக்கு internal இருக்கு ."
" படிச்சியாமா?"
" அக்கா தான் சொல்லி கொடுத்தாங்க"
என பிரியாவை பார்க்க ப்ரியா ஒன்றும் தெரியாமல் விழிக்க செல்வியின் சைகையை புரிந்து கொண்டு ஆமாம் என்பது போல் தலையை ஆட்டினாள்.
'எப்படியோ சமாளித்து விட்டோம்' என கடைசி துண்டு இட்லியை வாயில் போட்டு கைகழுவி எழுந்துவிட்டாள்,செல்வி.
" அக்கா நான் வெளியே வெயிட் பண்றேன்"
செல்வி போர்டிகோவில் காத்திருக்க பிரியா வந்ததும் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு இருவரும் கிளம்பிவிட்டார்கள்.
" செல்வி?"
" சொல்லுங்க அக்கா "
"இன்னிக்கி இன்டர்னல் இருக்குன்னு என்கிட்ட சொல்லவே இல்ல. என்கிட்ட தான் படிச்சேன்னு வேற அங்கிள் கிட்ட சொன்ன, ஏன்?"
" அதுவா ஒரு நிமிஷம் அந்த ஓரமா வண்டிய நிறுத்துங்க."
" ஏன்?"
" நிறுத்துங்க. நான் சொல்றேன்." செல்வி சொன்னதும் பிரியா வண்டியை ஓரமாக நிறுத்தினாள். அவள் வண்டியை நிறுத்திய அடுத்த கணமே செல்வி வண்டியிலிருந்து இறங்கி விட்டாள்.
" அக்கா இன்னிக்கு இன்டர்நல்லா ஒன்னுமில்ல. ஃப்ரெண்ட்ஸ் கூட வெளியே போகலாம்னுதான். நான் இங்கேயே இறங்குகிறேன். நீங்க கிளம்புங்க."
" ஓஹோ அப்படி போகுதா கதை." பிரியா சொல்ல அசட்டு சிரிப்பு ஒன்றை கொடுத்துவிட்டு கிளம்பினாள், செல்வி.