பணமா? பாசமா?
பணமா? பாசமா?
கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! - 3
பணமா? பாசமா?
(கோவை என். தீனதயாளன்)
ஹை விவு, அவி, ரிஷி, வினி, அனி மற்றும் மை டியர் குட்டீஸ்!
கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?
'ஓ..' என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!
'காலையில் எட்டரை மணி. பள்ளிக்கூடம் ரொம்ப பரபரப்பா இருந்துச்சி. பள்ளிக்கூடத்தின் பெரிய கதவைத் திறந்து வெச்சிருந்தாங்க. குழந்தைகள் ஒவ்வொருத்தரா பள்ளிக்கு வந்துகிட்டிருந்தாங்க. சில குழந்தைகளை கார்லே வந்து இறக்கி விட்டாங்க. சில குழந்தைகளை அவங்க அப்பா ஸ்கூட்டர்லே கொண்டு வந்து விட்டுட்டு போனாங்க. கொஞ்சம் பெரிய பசங்க, பொண்ணுக எல்லாம் சைக்கிளில் வந்து, சைக்கிளை நிறுத்தத்தில் நிறுத்திட்டு அவங்கவங்க வகுப்பை நோக்கி போய்கிட்டிருந்தாங்க. எட்டே முக்கால் மணிக்கு நிறைய பேர் பள்ளிக்கூட பேருந்திலே வந்து இறங்கி வகுப்பை நோக்கி ஓடுனாங்க. புத்தகப் பையை வெச்சிட்டு சரியா எட்டு அம்பதுக்கு எல்லாரும் ப்ரார்த்தனை கூடத்துக்கு வந்தாகணும்.
அதே சமயத்துலே ஐந்தாம் வகுப்பு-ஏ வில் படிக்கிற ரகுவும் அவங்க அப்பா கூட ஸ்கூட்டர்லே வந்து இறங்குனான். அவங்க அப்பா அவனை இறக்கி விட்டுட்டு அந்த பக்கமா நகர்ந்ததும் ஒரு பெரிய்ய கார் வந்து நின்னுச்சு. அதுலே இருந்து அவனோட வகுப்பில் படிக்கிற பரமேஷ் இறங்கினான். அவனைப் பார்த்ததும் ரகுவுக்கு சந்தோஷம் ஆயிடுச்சி. பரமேஷும் உற்சாகமா ரகுவைப் பார்த்து ஓடி வந்தான். ரெண்டு பேரும் எப்பவும் ரொம்ப நட்போட இருப்பாங்க. பரமேஷும் ரகுவும் சந்தோஷமா பேசிகிட்டே வகுப்பை நோக்கி சீக்கிரமா நடந்தாங்க. அதுக்குள்ளே பரமேஷோட ட்ரைவர் பள்ளிப் பையை பரமேஷ்கிட்டே கொண்டு வந்து குடுத்துட்டு 'கெளம்பறேன்' அப்பிடீன்னு சொல்லிட்டு போனாரு.
இரண்டு பேரும் வகுப்புலே ஒற்றுமையா இருப்பாங்க. சாப்புடறது, விளையாடறது எல்லாம் ஒன்னாவேதான் செய்வாங்க. பக்கத்துப் பக்கத்துலேதான் உட்காருவாங்க.
பரமேஷ் பத்தி ரகு அடிக்கடி அவங்க அப்பா அம்மாகிட்டே சொல்லுவான். பரமேஷ் எப்பவுமே கார்லேதான் வருவான்மா' என்பான். பரமேஷுக்கு எப்பவுமே மதிய சாப்பாட்டை வீட்டுலே இருந்து ட்ரைவர்தான்மா கொண்டு வந்து கொடுப்பாரு' என்பான். (ரகு எப்பவுமே மதிய சாப்பாட்டை ஒரு சின்ன டிபன் பாக்ஸ்லே போட்டு பள்ளிக்கு எடுத்துட்டுப் போயிருவான்),'விதவிதமா வாட்ச் கட்டிட்டு வருவான்மா' என்பான். 'நெறையா 'சாக்லேட்' எடுத்துட்டு வந்து எல்லாப் பசங்களுக்கும் தருவான்மா' என்பான். 'அவங்க ரொம்ப பணக்காரங்க போல இருக்கு' என்பான்
ரகுவின் அம்மா அப்பா இருவரும் வேலைக்குப் போறவங்க. அவன் சொன்னைதையெல்லாம் கேட்டுக்குவாங்க. வேற ஒன்னும் பேச மாட்டாங்க.
'டேய் ஒரு லீவு நாளைக்கு எங்க வீட்டுக்கு வாடா.. நீச்சல் குளம், டேபிள் டென்னிஸ், பேட்மின்ட்டன், கேரம் அப்பிடீன்னு நெறயா வெளையாடுறதக்கு இருக்கு. நீ வந்தா ஒரு நாள் முழுக்க ஜாலியா இருக்கலாம்.' என அடிக்கடி ரகுவை அழைத்துக் கொண்டிருந்தான் பரமேஷ். 'நீ எப்போ வந்தாலும் நான் கார் அனுப்பி உன்னைக் கூப்ட்டுக்கிறேன்டா' என்பான்.
'உங்க அப்பா அம்மா ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?' ன்னு ரகு கேப்பான். 'அதெல்லாம் ஒன்னும் சொல்ல மாட்டாங்கடா.' என்பான் பரமேஷ்.
ரகுவும், பரமேஷ் தன்னை அடிக்கடி அவங்க வீட்டுக்கு கூப்பிடுறதை, அவங்க அம்மாகிட்டே இதை சொல்லுவான். 'அவங்க வீடு ரொம்ப் பெருசாம்மா.. நெறைய விளையாடறதுக்கு இருக்காம்.. எனக்கும் ஆசையா இருக்குமா.. நானும் ஒரு நாள் அவங்க வீட்டுக்குப் போய்ப் பார்த்துட்டு வரட்டுமா?' என்று கேட்டுக் கொண்டேயிருப்பான்.
'சரி ஒரு ஞாயிற்றுக் கிழமை பத்திரமா போயிட்டு வா' என்று ரகுவின் அம்மாவும் அனுமதி கொடுத்து விட்டார். அடுத்த ஞாயிற்றுக் கிழமை காரை அனுப்பி ரகுவை அழைத்துக் கொண்டான் பரமேஷ்.
ரகு காரை விட்டு இறங்கினான். 'யப்ப்பா.. எவ்வ்ளோ பெரிய்ய்ய்ய வீடுடா உங்களோடது..' என்று ஆச்சரியப்பட்டான். பரமேஷ் ரகுவை அழைத்துக் கொண்டு போய் ஹாலில் உட்கார வைத்தான்.
அப்போது பரமேஷின் அம்மாவும் அப்பாவும் அவசர அவசரமா அவங்களோட ரூமுல இருந்து வந்தாங்க. 'அடே குட்டிப்பய்யா.. நீதான் ரகுவா.. உன்னைப் பத்தி பரமேஷ் நிறைய சொல்வாண்டா.. ' என்று செல்லமாக ரகுவை கன்னத்தில் தட்டி விட்டு, பரமேஷிடம், 'பரமு கண்ணா.. நீங்க வெளையாடிகிட்டு இருங்க.. ஃபேக்டரிலே ஒரு மெஷின் ரிப்பேர் ஆயிருச்சி.. நானும் அப்பாவும் போயி அதை கவனிக்கனும்.. அப்போதான் நாளைக்கி 'ப்ரொடக்ஷன்' ஆரம்பிக்க முடியும். என்ன வேணுமின்னாலும் வேலையாட்கள்கிட்ட சொல்லி வாங்கிக்கோங்க.' என்று சொல்லி விட்டு புறப்பட்டு விட்டார்கள்.
ரகுவுக்கு ரொம்ப கஷ்டமா போச்சி. ஞாயிறு ஒரு நாள் கூட பரமேஷ் கூட அவங்க அப்பா அம்மா இருக்க முடியலையேன்னு வருத்தப் பட்டான். ஆனா பரமேஷ் அதைப் பத்தி கவலைப் பட்ட மாதிரி தெரியலே. கேட்டால் 'அடிக்கடி இப்பிடி நடக்கறதுதாண்டா.. நீ வா நம்ம நீச்சல் குளத்துக்குப் போவோம்.' என்று அழைத்துப் போனான்.
இருவரும் ஒரு மணி நேரம் நீச்சல் குளத்தில் மிதந்தார்கள். வேலையாள் வந்து இடையில் 'சிக்கன் சூப்பும் – ஓம பிஸ்கட்டும்' ஒரு தட்டில் வைத்து விட்டுப் போனார். பின் டேபிள் டென்னிஸ் விளையாடினார்கள். வேலையாள் 'ஃபாரின் சாக்லேட்'ஸை ஒரு தட்டில் கொண்டு வந்து வைத்து விட்டுப் போனார்.
மதியம் வந்தது. 'என்னடா உங்க அப்பா அம்மாவெ இன்னும் காணோம்..' என்று கவலையாக் கேட்டான் ரகு. 'அவங்க வருவாங்கடா.. நீ வா நம்ம சாப்பிடலாம்..' என்று அழைத்துப் போனான் பரமேஷ். பெரிய்ய்ய டைனிங்க் டேபிளில் சிக்கன் பிரியாணி, மட்டன் பிரியாணி, மீன் வருவல், வெள்ளை சாதம், சப்பாத்தி, ரஸம், தயிர், இரண்டு வகை இனிப்புகள் என எக்கச்சக்கமான ஐட்டங்கள்.
அத்தனை இருந்தும் ரகுவால் உற்சாகமாக சாப்பிட முடியவில்லை. 'பரமேஷ் பாவம். அவனோட அப்பா அம்மா கூட இருக்க முடியாமல் போய் விட்டதே..!' அப்பிடீன்னு அவனுக்கு ரொம்ப வருத்தமா இருந்தது.
மதியத்துக்கு மேல் தோட்டத்திற்கு சென்று சிறிது நேரம் விளையாடினார்கள். திடீரென பரமேஷ் களைப்பானான். தெர்மாமீட்டரை வைத்து வேலையாள் பார்த்தார். கொஞ்சம் காய்ச்சல் இருந்தது. பரமேஷின் அப்பா அம்மாவுக்கு உடனே பணியாள் தெரிவித்தார். சற்று நேரத்தில் அவர்களின் குடும்ப மருத்துவர் வந்தார். சோதித்துப் பார்த்தார்.. பரமேஷின் பெற்றோரை அழைத்து 'பயப்படுவற்கு ஒன்றுமில்லை. சிறிது ஓய்வெடுத்தால் போதும்' என்று ஆங்கிலத்தில் சொல்லி விட்டு அவர் சென்று விட்டார்.
'சாரிடா ரகு.. உங்கூட விளையாட முடியலே..' என்று பரமேஷ் வருந்தினான்.
ஆறு மணி இருக்கும். பரமேஷின் அப்பா அம்மா வந்தார்கள். பரமேஷின் அம்மா வந்து தர்மா மீட்டர் வைத்துப் பார்த்தார். 'இப்பொ காய்ச்சல் இல்லைடா கண்ணா.. ரெஸ்ட் எடு..' என்று சொல்லிவிட்டு அவருடைய அறைக்கு சென்று விட்டார்.
பரமேஷிடம் சொல்லி விட்டு ரகு கிளம்பினான்.
வீட்டிற்கு வந்த ரகு ரொம்ப நேரம் ஒன்னுமே பேசலே. 'என்னடா கண்ணா.. என்னாச்சு உனக்கு.. உடம்பு கிடம்பு சரியில்லையா.' என்று அவன் தலையை ரகுவின் அம்மா தொட்டுப் பார்த்தார்.
ஏனோ தெரியவில்லை.. ரகு அவன் அம்மாவின் மடியில் அப்படியே சாய்ந்து அழத்தொடங்கினான்..
'சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். உங்கள்லே, யாராவது சொல்லுங்க பார்க்கலாம்.. ரகு ஏன் பரமேஷ் வீட்டுக்கு போயிட்டு வந்து உற்சாகமில்லாம இருந்தான். அவங்க அம்மா அவன் தலையை தொட்டுப் பார்த்ததும் ஏன் அவங்க அம்மா மடியிலே படுத்து அழ ஆரம்பித்தான்..? இதுக்கான காரணத்தைச் சொல்லி கதையை முடிக்கப் போறது யாரு?' - என்று நான் கேட்டேன்.
'நானு' என்று முன் வந்த விவு தொடர்ந்தான்:
'பரமேஷ் ரொம்ப வசதியானவன். அவனுக்கு எந்த குறையும் கவலையும் இருக்காது. கேட்டதெல்லாம் கிடைக்கும். எப்பவும் சந்தோஷமா இருப்பான்' அப்பிடீன்னு ரகு நினைச்சிருந்தான். பரமேஷின் வீட்டுக்கு போனப்புறம்தான் அவனுக்கு ஒன்னு தெரிஞ்சது. வெறும் வசதி மட்டும் இருந்தா சந்தோஷம் வந்துடாது. எத்தனை வேலையாட்கள் பார்த்துக்க இருந்தாலும் அப்பா அம்மா பாத்துக்கறதுக்குற மாதிரி இருக்காது. லீவு நாட்கள்லே தன்னோட அம்மா அப்பா தன்னோடவே இருக்கறப்பொ ரொம்ப சந்தோஷமா இருக்கும். தனக்கு உடம்பு சரி இல்லைன்னா அம்மாவோ அப்பாவோ லீவு போட்டுகிட்டு வீட்டுலேயே இருந்து கவனிச்சிப் பார்த்துக்குவாங்க. ஆனா பரமேஷுக்கு லீவு நாள்லே கூட அவங்க அப்பா அம்மாவோட இருக்க முடியலே. உடம்பு சரி இல்லேன்னதுமே அவங்க அப்பா அம்மா உடனே வந்து பாக்கவும் முடியலே. ஆதனாலே, தன்னோட அம்மா ரகுவை 'என்னடா கண்ணா.. என்னாச்சு உனக்கு.. உடம்பு கிடம்பு சரியில்லையா.' ன்னு கேட்டு அவன் தலையை தொட்டுப் பார்த்த உடனேயே ரகுவுக்கு நிம்மதியாவும் சந்தோஷமாவும் இருந்துச்சி. ஆனா அதே சமயம், நிறைய வசதி இருந்தும் பரமேஷுக்கு அந்த அளவுக்கு நிம்மதியோ சந்தோஷமோ கிடைக்கலையேன்னு நினைச்ச உடனே ரகுவுக்கு அழுகை வந்துருச்சி.'
'அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?' என்று ரிஷி கேட்க, அவி சொன்னான்:
'காரோ, பணமோ, வசதியோ, பணி ஆட்களோ நமக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்க முடியாது. அம்மா அப்பாவோட ஆசை, பாசம், அன்பு இதுதான் நமக்கு நிம்மதியையும் சந்தோஷத்தையும் கொடுக்கும்.' இதுதான் இந்தக் கதையின் நீதி. சரியா?
குட்டீஸ்! சரியாச் சொன்னே அவி. குழந்தைகளே உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, இந்தக் கதையப் பத்தி உங்க மனசுக்குப் பட்டதை எழுதி அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?
அன்புடன்
கோவை என். தீனதயாளன்
