Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

Abhinay Raj Kalambur Sabarajan

Tragedy Drama Comedy

2  

Abhinay Raj Kalambur Sabarajan

Tragedy Drama Comedy

பழி வாங்கும் படலம்

பழி வாங்கும் படலம்

10 mins
322


அறையில் அமைதி ஓங்கியிருந்தது. உயிர் நடமாட்டமே இல்லை என்பது போல் ஜீவனற்று இருந்தது. ஒரு சிறிய மின்சார விளக்கின் சக்தி அந்த அறையிலிருந்து இருளை விரட்டிக்கொண்டிருந்தது. சூரியன் மறையும் வேலை தான் ஆயினும் ஜன்னல்கள் கதவுகள் அனைத்தும் மூட பட்டிருந்ததால் அறையினுள் மின் விளக்கின் வெளிச்சம் தேவையாக இருந்தது. அமைதி கவ்விக்கிடந்த அந்த அறையினுள் திடீரென்று பேச்சு சத்தம் கேட்கத் துவங்கியது. பேசுபவர்களின் குரலிலிருந்து வந்திருப்பது இருவர் என்று கண்டுகொள்ள முடிந்தது.

விசாலமாக பெரும் அரங்கம் போல் இருந்த அந்த அறையினுள் ஒரு மூலையில் துணிகள் குவியல் குவியலாக குவிக்க பட்டிருந்தன. அதன் மறைவில் அந்த இரண்டு பேரும் பதுங்கி பதுங்கி வந்து தாங்கள் முன்னமே தேர்ந்தெடுத்திருந்த மறைவிடத்திற்கு வந்து சேர்ந்தனர். நெடுந்தூர பிரயாணத்தினால் இருவர் முகமும் சோர்ந்து காணப்பட்டது. வேகமாக வந்ததினாலோ அல்லது பதட்டத்தினாலோ அவர்கள் இருவருக்கும் பலமாக மூச்சு இறைத்துக்கொண்டிருந்தது. முதலில் வந்தவனை நோக்கி இரண்டாவதாக வந்தவன் கேள்வி எழுப்பினான்.

“இன்னமும் கூட எனக்கு பயமா தான் இருக்கு!! ஒரு வேளை நம்ம அனுப்பின ஆள் காரியத்த சரியா முடிக்கலனா நம்ம வசமா மாட்டிப்போம். நீங்க இவ்ளோ அவசர பட்டிருக்க வேணாம்னு தோணுது??”


முதல்ல வந்தவன் மெதுவாக திரும்பினான். அவனோட செவந்து போன கண்ண பாத்தவுடனே பின்னால் வந்தவன் பயத்துல தலையை குனிந்துவிட்டான். 


“நம்ம குடும்பத்தையே கொன்னுருக்கான். அவன சும்மா விட சொல்றியா ரங்கா?” கண்ணுல வெறி பறக்க கேள்வி கேட்டான்.


“சும்மா விட சொல்லல வீரா!! ஆனா எதுக்கு இவ்ளோ அவசரம்னு தான் கேக்கறேன். நம்ம அனுப்பின ஆள் காரியத்த முடிக்கலனா நம்ம நெலம ரொம்ப கஷ்டமாகிடும்.”


“வேலன் மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. அவன் கண்டிப்பா நான் சொன்ன வேலைய முடிப்பான்.”


“நம்ம எதிரி விஷப்புகை கக்குற அந்த எந்திரத்த தயாரா வச்சிருக்கான். நம்ம இன்னிக்கு வருவோம்னு அவனுக்கு முன்னாடியே தெரிஞ்சுருக்கு. அதுல மாட்டிக்கிட்டா அப்புறம் நம்மளும் மூச்சடைச்சு சாகவேண்டியது தான். மின்சாரத்தை அனைக்கறது ஒன்னும் சாதாரணமான காரியமில்லை அத வேலனால செய்ய முடியுமான்னு எனக்கு சந்தேகமா இருக்கு”


ரங்கன் இப்படி கூறி முடித்த சமயத்தில் அந்த அறையில் எரிந்து கொண்டிருந்த சிறிய விளக்கு அணைந்து அங்கே இருள் கவ்வத்துவங்கியது. இதை கண்ட வீரா ரங்கனை பார்த்து லேசாக சிரித்தான். அதை கண்ட ரங்கன் தன் தலையை தாழ்த்தினான். 

“மறைஞ்சிருக்குற எல்லாரையும் வெளிய வர சொல்லு ரங்கா” வீரா கட்டளையிட்டான். ரங்கா சமிக்ஞை செய்யவும் மறைந்திருந்த ரங்காவின் கூட்டாளிகள் வெளியே வந்தனர். 


“இன்னும் கொஞ்ச நேரத்துல நம்ம எதிரி இந்த அறைக்குள்ள வந்துடுவான். அவனுக்கு உதவியா இருந்த அந்த விஷம் கக்குற எந்திரம் இன்னிக்கு வேலை செய்யாது. நம்ம வேலன் இந்த இடத்துக்கு வர மின்சாரத்தை துண்டிச்சிட்டான். முள்ள முள்ளால தான் எடுக்கணும். நான் சொன்ன அந்த விஷக்கிருமிய எல்லாரும் கொண்டு வந்திருக்கீங்களா?”


ஆமாம் என்பதற்கு அறிகுறியாக தங்கள் கைகளை உயர்த்தினர். முகத்தில் திருப்தி நிலவ வீரா ரங்கனை நோக்கினான். ரங்கன் வீராவை நோக்கி தலை அசைத்துவிட்டு தன் கூட்டாளிகளை அறையின் ஒவ்வொரு மூலைக்கும் சென்று சிறு சிறு குழுவாக ஒளிந்துகொள்ளுமாறு உத்தரவிட்டான். அதன்படியே அனைவரும் பிரிந்து சென்றனர்.


அவர்கள் ஒளிந்துகொள்வதற்கும் அந்த அறை திறப்பதற்கும் சரியாக இருந்தது. அறையை திறந்து உள்ளே நுழைந்தான் மினுஸ்கி. உள்ளே நுழைந்த மினுஸ்கி முதல் காரியமாக விஷம் கக்கும் எந்திரத்தை செயல்படுத்தலானான். ஆனால் என்ன ஏமாற்றம் அது செயல்படவில்லை. குழப்பத்தில் மின் விளக்கை செயல்படுத்தினால் அதுவும் எரியவில்லை. இதை கண்ட வீரா குரூர சிரிப்பை உதிரவிட்டான். நிலைமையை புரிந்து கொண்ட மினுஸ்கி தன் மேல் சட்டையை கழட்டி எறிந்துவிட்டு அறையை விட்டு மீண்டும் எங்கோ சென்றான். 


அவன் கழட்டி எறிந்த சட்டை வீராவின் அருகினில் வந்து விழுந்தது. அதை அசட்டையாக விட்டுவிட்டு கதவை நோக்கி பார்வையை செலுத்தினான். சிறிது நேரத்திற்குள் ஒரு உருவம் வீராவின் அருகினில் பதுங்கி பதுங்கி வந்து நின்றது. அதை கண்ட வீரா முதலில் அதிர்ச்சி அடைந்தாலும் வந்தவன் வேலன் என்று அறிந்துகொண்டதும் நிதானமடைந்தான். 


ஆனால் வேலனின் முகமோ பதட்டத்துடன் இருந்தது. அதை கவனித்த வீரா விஷயத்தை விசாரித்தான். 


  “வீரா எல்லாரையும் உடனே கிளப்புங்க!! இங்க இருந்தா ஆபத்து.. நம்ம எல்லாரும் இப்போவே இங்கிருந்து தப்பிச்சாகனும்.”


  குழப்பத்தோடு நின்ற வீரா மேலும் விசாரிப்பதற்குள் திடீரென்று அந்த அறையினுள் வெளிச்சம் வந்தது. அதை கண்டு திரும்பிய வீரா மின்விளக்கு அறையினுள் எரிவதை கண்டான். அதன் அருகினில் விஷம் கக்கும் கருவியும் இயங்குவதை கண்டான். உடனே வேலன் பக்கம் பார்வையை செலுத்தினான்.


  “மின்சக்தி உருவாக்கும் கருவியை மினுஸ்கி செயல்படுத்திவிட்டதால இந்த அறைக்கு மின்சாரம் கிடைச்சுடுச்சு” னு வேலன் கவலையோட சொன்னான்.


  விஷம் கக்கும் கருவி இயங்கத் துவங்கிவிட்டதை கண்ட வீரா உரத்த குரலில் அனைவரையும் தப்பிக்குமாறு கட்டளையிட்டு விட்டு தானும் தப்பிக்க விரைந்தான். பெரும் போராட்டத்திற்கு பிறகு அந்த அறையிலிருந்து வீராவும் வேலனும் வெளியேறினார்கள். ஆனால் தங்கள் கூட்டாளிகளில் பெரும்பாலானோர் விஷப்புகையில் சிக்கிக்கொண்டனர். அவ்வாறு சிக்கி உயிரிழந்தவர்களில் ரங்கனும் ஒருவன். இப்படிப்பட்ட பெரும் இழப்பை சற்றும் எதிர்பார்க்காத வீராவின் உடல் கவலையும் ஆத்திரமும் பொங்கியதால் நடுங்கிற்று, அவன் கண்களில் கனல் பற்றிக்கொண்டு எழுந்தது. 


  “மன்னிச்சுடு ரங்கா!! இதுக்கு பழிக்கு பழி கண்டிப்பா வாங்குவேன்!!” வீரா ஆத்திரத்தில் கர்ஜித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். சோகத்திலிருந்த வேலனும் அமைதியாக வீராவை தொடர்ந்தான்.


  அறையினுள் அந்த மங்கிய வெளிச்சத்தில் பலரின் உயிரற்ற உடல்கள் அங்கங்கே சிதறிக்கிடந்தன. அவை அனைத்தையும் நிதானமாக கவனித்த மினுஸ்கி தன் முகத்தில் திருப்தி படர வறண்ட சிரிப்போடு அந்த விஷம் கக்கும் கருவியை கையில் எடுத்தான்.


  “நல்ல பயனுள்ளதா தான் இருக்கு இந்த விஷம் கக்குற கருவி. எத்தனை கொசுவ கொன்னிருக்கு. இது இருக்குறவரைக்கும் நிம்மதியா தூங்கலாம்”னு சொல்லிவிட்டு மினுஸ்கி அந்த கொசு விரட்டிய மறுபடியும் செயல்படுத்தினான்.


==========================================================


     வெளிச்சத்திலிருந்து இருட்டினுள் நுழைந்ததால் வேலனின் கண்கள் இருளிற்கு பழக சிறிது நேரம் பிடித்தது. சிறிது நேரம் கழிந்த பிறகு தானும் வீராவும் ஒரு பெரும் குழாயினுள் பறந்து கொண்டிருப்பதை உணர்ந்தான். போகும் வழி நெடுக அங்கங்கே பாசி படிந்தும், எண்ணெய், வண்ணப்பூச்சு ஆகியவை கசிந்தும் காணப்பட்டன. படிந்து அங்கங்கே தொங்கி கொண்டிருந்த பாசியிலிருந்து கழிவு நீர் ‘தொப்’ ‘தொப்’ என வடிந்து கொண்டிருந்தது. இவை அனைத்தையும் பார்த்துக்கொண்டே சென்ற வேலனை வீரா திடீரென தடுத்து நிறுத்தினான்.


  “எதுக்கு திடீருன்னு இப்டி ஒரு இடத்துக்கு நம்மள கூட்டிகிட்டு வந்திருக்காரு வீரா?” மனசுக்குள்ள சந்தேகம் வந்தது வேலனுக்கு.


   அவர்கள் இருவரும் வந்து நின்ற இடத்தருகே பாசி காய்ந்து போன சிறு கற்குவியல் ஒன்றிருந்தது. ஏதோ கேக்க வந்த வேலனை தடுத்தி நிறுத்திய வீரா தன் பார்வையை அந்த கற்குவியல் மீது நிலைநிறுத்தியிருந்தான்.


  அதையடுத்து தன் பார்வையை அப்புறம் செலுத்திய வேலன், அங்கே இரண்டு கால்களில் தவ்வி தவ்வி ஒரு உருவம் வந்து நிற்பதை கண்டான். சற்று நேரத்தில் அந்த உருவம் அந்த பாறையின் பெரிய மூக்கு ஒன்றின் மேல் வந்து நின்றது. அந்த உருவத்தை கண்ட வேலனின் உடலே உறைந்து போனது போல் இருந்தது. கால்கள் உடைந்து, இறகுகள் கிழிந்து, கொடுக்கு மடிந்து தொங்கியபடி ஒரு வயது முதிர்ந்த கொசு அங்கு வந்து நின்று கொண்டிருந்தது வேலனின் திகிலை அதிகரித்தது.


   “என்னடா வெளாண்டுகிட்டு இருக்கீங்க? என்னால முடியாதுனு தானே இளவட்டங்க கிட்ட இந்த வேலைய குடுத்தேன். இப்டி அனாமத்தா உசுர பலி குடுத்துட்டு வந்து நின்னுகிட்டு இருக்க? எடுத்தோம் கவுத்தோம்னு எல்லாத்தையும் பண்ணினா இப்டி தான் அடி வாங்கிட்டு வந்து நிப்ப. என்ன பாத்தாவது கத்துக்கவேணாமா நீங்க?” அந்த வயசான கொசு வீராவை பார்த்து பொரிந்து தள்ளியது.


 ஒரு வார்த்தையும் எதிர்த்து பேசாமல் தலை குனிந்து நின்ற வீராவை சில வினாடி முறைத்து பார்த்துவிட்டு தன் கண்களை வேலனின் பக்கம் திருப்பியது அந்த வயது முதிர்ந்த கொசு. அந்த இளம் கொசு தன் உருவத்தை கண்டு அதிர்ந்து போயிருப்பதை கண்ட அந்த வயதான கொசு லேசாக சிரித்தது.


  “என்ன வேலா அப்டி பாக்குற. நான் யார்னு வெளங்கலையா? என்னைய எல்லோரும் கிங்கரன்னு கூப்பிடுவாங்க. வீராவோட பெரியப்பன் நானு.” சொல்லிட்டு வேலனை கிங்கரன் ஏறிட்டு பார்த்தார்.


  வேலன் பேச துவங்குமுன், மீண்டும் பார்வையை வீரா மீது திருப்பிய கிங்கரன் கோபம் பொங்க பேசினார் “ரங்கனுக்கு பழி தீத்தே ஆகணும் வீரா…”


  “இன்னிக்கே போய் அவன் கதைய முடிச்சுடறேன்” கிங்கரனின் பேச்சை தடுத்த வீரா வெறியோட பேசினான்.


  “நம்ம ஆளுங்க பத்து பேர் தான் உசுரோட சுத்துறானுங்க அது உன் கண்ண உறுத்துதா?” அலட்சியமா கேள்வி கேட்டார் கிங்கரன்.


  வீரா வழக்கம் போல பூமியை பார்க்கத்துவங்கினான். “கொசுங்க கூட சண்டை போட்டாலே அதுல ஆபத்து நெறைய இருக்கும். இதுல நம்ம மனுஷனுங்க கூட சண்டை போடறோம் அப்போ ஆபத்து எவ்ளோ இருக்கும். இதெல்லாம் யோசிக்க வேணாமா நீ?” 


  கிங்கரன் மேலும் தொடர்ந்தார். “மனுஷனுங்க சரியான எம கிராதகனுங்க. நம்மளால என்ன பண்ண முடியும்னு தெரிஞ்சுக்குறத விட நம்மள எப்படி அழிக்கலாம்னு நல்லா தெரிஞ்சு வச்சிருக்குறானுங்க. அது தெரியாம போய் மாட்டிக்கிட்ட பலன் தான் இப்போ இப்டி அங்க இங்க அசைய முடியாம இந்த அழுகி போன எடத்துல வந்து தஞ்சம் புகுந்திருக்கன். வேணும்னா சொல்லு உனக்கும் சேத்து இங்க ஒரு இடம் புடிச்சு வெக்குறன்”


 “நான் இப்ப என்ன செய்யட்டும் பெரிப்பா?” வீரா கேட்ட கேள்வியில் ஒரு அபூர்வமான நிதானம் தெரிந்தது. அதை கண்டுகொண்ட கிங்கரன் தன் திட்டத்தை விளக்க ஆரம்பித்தார். வேலனும் வீராவும் முழு கவனத்துடன் அந்த வயது முதிர்ந்த திட்டத்தை கேட்டுக்கொண்டனர். 


  திட்டத்தை விளக்கி முடித்த கிங்கரன், வீராவையும் வேலனையும் மாறி மாறி நோக்கினார். “இன்னும் ரெண்டு வாரம் காத்திருங்க. அதுக்கு அப்புறம் தான் சரியான சமயம். அப்போ அவனை தாக்கினா, நம்ம காரியம் ஒரு வேளை நிறைவேற வாய்ப்பிருக்கு. இப்ப ரெண்டு பெரும் புறப்படுங்க” கூறிவிட்டு கிங்கரன் அங்கிருந்து புறப்பட்டார்.


  வீராவும் வேலனும் கிங்கரன் சொன்ன திட்டத்தை மனதில் நன்கு பதியவைத்து கொண்டு தங்கள் வீடுகளை நோக்கி புறப்பட்டனர். கிங்கரன் கூறிய இரண்டு வார கெடு எப்பொழுது முடியும் என்று எதிர்பார்த்துக்கொண்டு வீரா தன் வீட்டை நோக்கி பறந்து சென்றான்.


   வீடு சேர்ந்த வேலனும் வீராவும் பிற கூட்டாளிகளை அழைத்து கிங்கரன் கூறிய திட்டத்தை எடுத்து விளக்கினார். ஒவ்வொருவரும் என்ன செய்யவேண்டும் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று விளக்கிமுடித்த பின்னர் கூட்டாளிகள் அனைவரும் களைந்து சென்றனர். அவர்கள் செல்வதை பார்த்துக்கொண்டே நின்ற வேலன் வீராவை நோக்கி “அவருக்கு இருக்குற பயம் எனக்கும் இருக்கதான் செய்யுது. திட்டம் என்னமோ பலமா தான் இருக்கு ஆனா அத எப்படி செய்யபோறோமோ தெரியல வீரா”னு தன் கவலையை தெரிவித்தான்.


   “அந்த பயம் எனக்கும் இப்போ வந்திருக்கு வேலா. இந்த பயம் எனக்குள்ள வரக்கூடாதுன்னு தான் அவ்ளோ கடுமையா இருந்தன். கிங்கரன் பெரியப்பாவோட வார்த்தை கூட எனக்கு பயத்தை கொண்டு வரல ஆனா ரங்காவை இழந்த மாதிரி உங்களையும் இழந்துட கூடாதேங்குற நெனப்பு தான் எனக்குள்ள பயத்தை தருது” அமைதியா பதில் அளித்தான் வீரா.


  இரு நண்பர்களும் சிறிது நேரம் மௌனமாக தங்கள் இறக்கைகளை அடித்துக்கொண்டு நின்ற இடத்திலேயே காற்றில் மிதந்துகொண்டிருந்தனர்.


   “ம்ம்ம்… எப்படியும் நம்ம முடிவு என்னனு இன்னும் ரெண்டு வாரத்துல தெரிஞ்சுடும்” மௌனத்தை கலைத்த வீரா, இப்படி சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டான். இரண்டு வாரமும் கழிந்து அவன் எதிர்பார்த்த அந்த தினமும் வந்தது. திட்டமிட்டபடி வீராவும் வேலனும் மினுஸ்கியின் வீட்டை அடைந்தனர். இம்முறை அவர்கள் மின்சாரத்தை அனைக்கவில்லை. கொசு விரட்டியை கண்டு அஞ்சவுமில்லை. கிங்கரன் கூறிய திட்டத்தின் மீது வைத்திருந்த நம்பிக்கையினால் அந்த இயந்திரத்தின் மீது அச்சம் கொள்ளாமல் அந்த அறையினுள் நுழைந்தனர்.


அறையினுள் மினுஸ்கி மெத்தை மீது சாய்ந்து கொண்டிருப்பதை கண்ட வீரா வேலனை நோக்கி சமிக்ஞை செய்தான். அதை கண்ட வேலன், கண்களை மூடி நீண்ட மூச்சு இழுத்துவிட்டுகொண்டு தனக்கு தானே நம்பிக்கை வருவித்துக்கொண்டான். சில நொடிகளில் தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு வேலன் அங்கிருந்து மினுஸ்கியை நோக்கி புறப்பட்டான். பறந்து செல்லும்போது கொசுவிரட்டியின் மீது அவன் பார்வை விழுந்ததும் ரங்காவின் தவிப்பு அவன் கண் முன் தோன்றியது. இதனால் கலவரம் கொண்ட வேலன் வீராவை நோக்கினான். 


  வேலனின் மனப்போக்கை உணர்ந்து கொண்ட வீரா தன் நிதானமான பார்வையின் மூலம் வேலனுக்கு நம்பிக்கையூட்டினான். வேலனும் மனதை திடப்படுத்திக்கொண்டு மினுஸ்கியை நோக்கி சென்றான். எந்த நிமிடமும் விஷம் பட்டு பலியாவோம் என்று எண்ணிக்கொண்டு சென்ற வேலன் அசந்துபோனான். மினுஸ்கியின் கை எட்டுமளவு நெருங்கியும் விஷம் தன்னை தாக்காமலிருப்பதை கண்ட வேலன் ஆச்சரியம் பொங்க அந்த இடத்திலேயே சிறிது நேரம் உலாவினான். அப்பொழுதும் தனக்கு எதுவும் நேரவில்லை என்பதை உணர்ந்து கொண்ட வேலன் அதை அறிவிக்க வீராவை நோக்கி திரும்பி சென்றான். 


  அந்த சிறிது நேரம் உலவிய வேலனை மினுஸ்கி கண்டுகொண்டான். உடனே சந்தேகம் எழவே, அவன் கொசு விரட்டும் இயந்திரத்தை பரிசோதித்து பார்த்தான். அது செயல் பட்டுக்கொண்டிருந்தும் அதனால் எந்த ஒரு நன்மையையும் இல்லை என்று கண்டுகொண்ட மினுஸ்கி “ச்ச!! பாதி பாட்டில்க்கு கீழ போனா இந்த கொசுவிரட்டி ஒழுங்கா வேல செய்யாது போல. இது தெரியாம தேவ இல்லாம வாங்கிவச்சுட்டேன்”னு சலிச்சுக்கிட்டே அடுத்த அறைக்கு சென்றான். 


  இதை கண்ட வீரா தன் உதட்டில் விஷமச்சிரிப்பு படர “கிங்கரனின் தீய திட்டம் வேலை செய்கின்றது. உண்மையான போராட்டம் இனி துவங்க போகிறது” என்று எண்ணினான். தன் அருகே வந்து நின்ற வேலன், வீராவை நோக்கி, “எப்படி வீரா? கிங்கரன் சொன்ன மாதிரியே அந்த விஷம் கக்குற கருவி வேல செய்யாம போச்சு?” என்று ஆச்சரியம் பொங்க கேள்வி எழுப்பினான். 


   “அது செயல்பட்டுட்டு தான் இருக்கு வேலா. ஆனா அதோட வீரியம் கொறஞ்சுடுச்சு. கிங்கரன் இதனால தான் நம்மள ரெண்டு வாரம் காத்துட்டு இருக்க சொல்லிருக்காரு.” உற்சாகத்துடன் மறுமொழி சொன்னான் வீரா.


  “அவ்ளோ தானே இனிமே நமக்கு எந்த ஆபத்தும் இல்லையே? எதுக்கு காத்துட்டு இருக்கோம்?” வேலன் கேள்வி எழுப்பினான்.

  “இனிமே தான் ஆபத்து ஆரம்பிக்குது வேலா. அங்க கொஞ்சம் பாரு”


  வேலன் வீரா சொன்ன திசையை நோக்கினான். அங்கே மினுஸ்கி வலைகள் கொண்ட மட்டை ஒன்றை கையில் ஏந்தி கொண்டு வருவதை கண்டான். அறையினுள் நுழைந்ததும் அந்த மட்டையை குறுக்கும் நெடுக்குமாக வீச ஆரம்பித்தான். இதை கண்டு புரியாமல் நின்று கொண்டிருந்த வேலனை கண்ட வீரா “கிங்கரன் பெரியப்பாவோட இந்த நிலைமைக்கு காரணம் அந்த மட்டை தான் வேலா”னு நிதானமாக கூறினான்.


   “நீங்க சொல்றது புரியல வீரா?” 


   “அந்த மட்டைல இருக்குற வலைகளை பாத்தியா? அதுல மின்சாரம் பாயுது. நம்ம அவனை சுத்தி பறக்கும்போது அவன் அத வீசி நம்ம அந்த வலைல மாட்டிக்கிட்டா நம்ம நெலம என்ன ஆகும் தெரியுமா?” வீரா வேலனை நோக்கி கேள்வி எழுப்பினான். 


   மனசுல திகில் லேசா உருவெடுக்க, பயந்துபோய் வீராவை வேலன் ஏறிட்டு பார்த்தான். 


  “உடம்பு பொசுங்கிடும்”னு சொல்லிட்டு மினுஸ்கி பக்கம் பார்வையை திருப்பினான் வீரா. 


  அதிர்ந்து போன வேலன் உடல் நடுங்க “அப்புறம் எப்படி நம்ம நோக்கத்தை நிறைவேத்துறது?”னு கேள்வி எழுப்பினான்.


  “சொல்றன்”னு சொல்லிட்டு தன் கூட்டாளிகள் எல்லாரையும் பார்த்து அந்த மட்டையை பற்றியும் தன் திட்டத்தை பற்றியும் விளக்கினான். வீராவின் திட்டத்தை கேட்ட அவன் கூட்டாளிகள் ஸ்தம்பித்து நின்றனர். இது சாத்தியமா என்று கூட சந்தேகித்தனர்.


  “நாம எல்லோரும் ஒண்ணா சேந்து ஒழுங்கோட நான் சொன்னதை செஞ்சா நம்மில் முக்கால்வாசி பேர் உயிரோட திரும்பபோலாம் இல்லனா எல்லோரும் கூண்டோட காலி தான்.” வீரா இப்டி சொல்லிட்டு பேச்சை நிறுத்தினான். 


   சற்று நேரத்தில் அனைவரும் வேறு வேறு திக்கில் பறந்து சென்றனர். சிறிது நேரம் ஒருவரும் மினுஸ்கியை நெருங்கவில்லை. கொசுக்கள் ஏதும் கண்ணில் படாத காரணத்தினால் அந்த கொசுவிரட்டும் மட்டையை கீழே வைத்துவிட்டு மேதையின் மீது சாய்ந்து படுத்தான். 


  “கொய்ய்ய்ய்ங்ங்” 

    

    திடீரென்று ஒரு கொசு மினுஸ்கியின் இடது காதின் அருகே பறந்துவிட்டு சென்றது. அந்த சத்தத்தினால் எழுந்த மினுஸ்கி உடனே கொசு கொல்லும் மட்டையை கையில் எடுத்துக்கொண்டான். கொசு பறந்து சென்ற இடது பக்கம் திரும்பி அந்த கொசுவின் வரவை மீண்டும் எதிர்பார்த்து நின்றான்.


  “”கொய்ய்ய்ய்ங்ங்” 


   திடீரென்று வலது காதின் அருகே ஒரு கொசு பறந்துவிட்டு சென்றது. உடனே மினுஸ்கி அந்த மட்டையை வலது புறம் வீசினான். மீண்டும் இடது காதின் அருகே ஒரு கொசு பறந்துவிட்டு சென்றது. கொசுக்களின் ஒருங்கிணைந்த தாக்குதலை புரிந்துகொண்ட மினுஸ்கி எச்சரிக்கை அடைந்தான். கால்களின் அருகே ஒரு கொசு அணுகுவதை அவனுடைய கூர்மையான கண்கள் கண்டுகொண்டன. உடனே அந்த மட்டையை வீசினான். மிகவும் அருகில் நெருங்கிவந்த அந்த கொசு தப்பிக்க வழியில்லாமல் அந்த மட்டையின் வலையில் மாட்டிக்கொண்டது.


  அதன் உடல் பொசுங்கி உயிரற்று விழுவதை தொலைவிலிருந்து கண்ட வேலன் கண்களில் அனல் பறக்க தன் நண்பர்களை மேலும் முனைப்போடும் எச்சரிக்கையோடும் அணுகுமாறு உத்தரவிட்டான். 


  மீண்டும் கொசுக்களின் தாக்குதல் துவங்கியது. வலது கையில் தான் மட்டையுள்ளது என்ற துணிவில் ஒரு கொசு அவனது வலது தோளை அணுகினால் அவனால் எதுவும் செய்யமுடியாது என்று எண்ணி துணிச்சலுடன் வலது தோள்பட்டையில் சென்று அமர்ந்தது. அதை கண்டு கொண்ட மினுஸ்கி சட்டென்று அவன் இடது கையால் தோள்பட்டையில் “சரேல்” என்று அறைந்தான். அந்த அப்பாவிக்கொசுவின் உடலில் இருந்த ரத்தம் கையில் ஒட்டிக்கொள்ள அந்த உயிரற்ற கொசுவின் உடல் மட்டும் மெல்ல தரையில் சென்று விழுந்தது.


  கையில் இருந்த ரத்தத்தை துடைத்து விட்டு மீண்டும் மட்டையை இரு முறை வீசினான். “ஸ்ஸ்ஸ்ஸ்ர்ர்ர்ர்ர்” இன்னொரு கொசுவின் உடல் பொசுங்கி விழுந்தது.


  தன்னுடைய பக்கம் பலத்த சேதம் உண்டாவதை கண்டுகொண்ட வீரா, பெரும் மனவேதனை அடைந்தான். மினுஸ்கி நிமிர்ந்து அமர்ந்து கொண்டிருப்பதை கண்ட வீராவுக்கு ஒரு யோசனை தோன்றியது. அதை விட்டால் வேறு வழியில்லை என்று உணர்ந்த வீரா மற்ற அனைவரையும் பின்வாங்குமாறு உத்தரவிட்டான். தான் திரும்பாவிடில் அனைவரும் அங்கிருந்து தப்பித்துவிடவேண்டும் என்றும் அறிவித்துவிட்டு பறந்து சென்றான்.


   அவன் பறந்து செல்வதை பார்த்துக்கொண்டு வேலனும் பிறரும் கவலையுடன் நின்றனர். இன்னும் மினுஸ்கி அமர்ந்துகொண்டு இருப்பதை கண்ட வீரா உறுதியுடன் பறந்து சென்றான். அமர்ந்திருந்த மினுஸ்கியை பின்புறத்திலிருந்து அணுகிய வீரா அரவம் இல்லாமல் வெற்றிகரமாக அவன் கழுத்தின் மீது சென்று அமர்ந்தான். தொலைவிலிருந்து இதை கண்ட வீராவின் நண்பர்கள் பெரு மகிழ்ச்சி கொண்டனர்.


  அனால் அவ்வாறு வீரா உணர்த்த நொடிப்பொழுதிலேயே அதை உணர்ந்த மினுஸ்கி தன் கையினால் கழுத்தில் “பட்ட்” என்று அறைந்தான். அப்படி அறைந்து விட்டு தன் கையை ஏறிட்டு பார்த்தான். இரண்டு விரல்களின் நடுவே வீராவின் உடல் அசைவின்றி கிடந்தது. அதன் உடலில் இருந்து ரத்தம் எதுவும் வழியாததால் அந்த கொசு தன்னை கடிக்கவில்லை என்று உறுதி செய்து கொண்டு திருப்தியுடன் அந்த கொசுவின் மீது லேசாக ஊதினான். வீராவும் காற்றில் மிதந்து சென்று கீழே விழுந்தது.


   இதை தொலைவிலிருந்து கண்ட வேலனின் கண்ணில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது. நெஞ்சம் விம்மியது. தன் உற்ற நண்பனும் இரண்டு போனான் என்ற எண்ணம் வாட்டி எடுத்தது. வேலன் அவ்வாறு எவ்வளவு நேரம் அங்கே இருந்திருப்பானோ தெரியாது. தன் கூட்டாளி ஒருவன் தன்னை அழைத்த பின்பே நினைவு பெற்றான். உடனே தன் கூட்டாளிகள் அனைவரையும் புறப்படும்படி உத்தரவிட்டுவிட்டு தானும் வெளியேறினான். சிறிது நேரத்திற்கு பிறகு கிங்கரன் முன் வேலன் நின்றுகொண்டிருந்தான். நடந்த சம்பவங்களை வேலனிடம் கேட்டறிந்த கிங்கரன் மனம் பெரும் வேதனை அடைந்தது. இருவரும் சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்தனர். நீர் வழியும் சத்தம் தவிர அப்பொழுது வேறொரு பழக்கப்பட்ட சத்தமும் எழுந்தது.


  “””கொய்ய்ய்ய்ங்ங்”


  அதை கேட்டு இருவரும் சத்தம் வந்த திக்கை நோக்கினார். தள்ளாடி தள்ளாடி வீரா பறந்து வந்து சேர்ந்தான். தன் ஆறு கால்களில் நடு இரண்டு கார்களை இழந்து நின்ற வீராவை கண்டு இருவரும் ஸ்தம்பித்து நின்றனர்.


  “எப்படி??… நீங்கள் உயிரற்று விழுவதை பார்த்தேனே?” வேலன் பேச்சு வராமல் திக்கி திக்கி கேள்வி எழுப்பினான்.


  “மினுஸ்கி என்ன அடிக்கவந்தப்போ அதிர்ஷ்டவசமா அவன் கையோட விரல் இடுக்குல மாட்டிகிட்டேன். அதனால என்னால அசையவும் முடியல. என்ன கொன்னுடதா நெனச்சு ஊதிவிட்டுட்டான். நானும் தப்பிக்க உயிரில்லாத மாதிரி நடிச்சு அவன் கவனிக்காதபோது தப்பிச்சு வந்தன்”னு விளக்கினான் வீரா.


  வீரா திரும்பி வந்ததில் பெரும் சந்தோஷம் கொண்டார் கிங்கரன். வேலன் மட்டும் ஒரு நெடிய மூச்செடுத்து ஆனாலும் இவ்ளோ கஷ்டப்பட்டு அந்த மினுஸ்கிய பழி வாங்க முடியலையே”னு வருத்தப்பட்டான்.


  இதை கேட்ட வீரா விஷமத்தோட சிரித்தான். அதன் பொருளை உணர்ந்து கொண்ட கிங்கரனும் வேலனும் பெருமகிழ்ச்சி கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் குதித்தனர்.


         நான்கு நாட்கள் பிறகு, மருத்துவமனையில்


   மினுஸ்கியின் முகமும் உடலும் வாடியிருந்தது. கடந்த மூன்று நாட்களாக அவன் உடலில் ஏற்பட்ட ஜுரம் காரணமாக அவன் உடல் மிகவும் வாட்டமடைந்து இருந்தது. தன் முன் தன் இரத்தச்சோதனை அறிக்கையை மேலும் கீழும் மேய்ந்துகொண்டிருந்த மருத்துவரை அடங்காத கலவரத்துடன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் மினுஸ்கி.


  சிறிது நேரம் அந்த தாள்களை புரட்டிப்பார்த்துவிட்டு மருத்துவர் மினுஸ்கியை நோக்கினார். ஒரு நெடிய மூச்சு விட்டுவிட்டு “மன்னிச்சுடு மினுஸ்கி, உனக்கு டெங்கு காய்ச்சல் வந்திருக்கு” என்று கூறிவிட்டு மினுஸ்கியின் தோளை தட்டிக்கொடுத்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.Rate this content
Log in

More tamil story from Abhinay Raj Kalambur Sabarajan

Similar tamil story from Tragedy