ABHINAY RAJ KALAMBUR SABARAJAN

Action Fantasy

4  

ABHINAY RAJ KALAMBUR SABARAJAN

Action Fantasy

வந்தியத்தேவன் எழுச்சி

வந்தியத்தேவன் எழுச்சி

17 mins
210


     'பன்னிரு வயது இளம் சிறுவனுக்கு அவ்வளவு சினம் வரக்கூடுமோ?' என்று பலர் கேட்டிருக்க கூடும். அப்படி ஓர் வெஞ்சினத்தினை அச்சிறுவனின் மனம் ஏற்று நின்றது. அவன் கண் முன்னே, தான் பிறந்து வளர்ந்த, தன் முன்னோர்கள் வம்சாவளியாக வாழ்ந்து வந்த கோட்டை எரிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த அழிக்க முடியாத செல்வத்துடன் பெரும்படை ஒன்று திரும்பி சென்று கொண்டிருந்தது... எங்கு நோக்கினும் "சோழம்" "சோழம்" என்ற முழக்கம் மட்டுமே எதிரொலித்து கொண்டிருந்தது. அந்த பெரும்படையின் நடுவே புலி கொடி பறக்க அதன் கீழே தேரில் முதலாம் பராந்தக சோழன் ஜெயககோஷங்களுக்கு இடையே ஆரோகணித்து சென்று கொண்டிருந்தார்.

  அவரை கண்டதும் ஏற்கனவே கொதித்து கொண்டிருந்த சிறுவனின் மனம் எரிமலையாக வெடிக்க துவங்கியது. ஆயினும் சிவப்பேறிய கண்களை தவிர அச்சிறுவன் சினம் கொண்டிருப்பதாய் வெளிக்காட்டும் எந்த ஒரு உணர்வும் அவனிடம் தோன்றவில்லை. அந்த பெரும்படை மீது மட்டுமே, அதிலும் நடுவே சென்ற பராந்தக சோழன் மீது மட்டுமே, அதிலும் அவன் முகத்தில் கொண்டிருந்த சிரிப்பின் மீது மட்டுமே அச்சிறுவன் கண்கள் நிலைத்திருந்தன. அச்சமயம் தீப்பிடித்து எறிந்த கருப்பு கொடி ஒன்று பறந்து வந்து அவன் காலருகில் வீழ்ந்தது. தன் குலத்தின் கொடியது என்பதை உணர்ந்து கொண்ட அவன், தீக்கிரையாகிக் கொண்டிருந்த இளங்காளையின் உருவத்தினை ஆழ்ந்து நோக்கினான்.

  "வித்யாதரா!" சோர்ந்திருந்த குரலில் அவனுடைய தாய் அழைப்பதை அச்சிறுவன் உணர்ந்து கொண்டான். கண்களை மூடி பெருமூச்செறிந்த அவன் மெல்ல தன் தாயை நோக்கி திரும்பினான். மன்னனை இழந்த ராணியாக, தந்தையை இழந்த மகளாக தலைவிரிகோலமாய் கண்கள் வறண்டு போய் உடலில் ஜீவனின்றி அமர்ந்திருந்தாள் வித்யாதரனின் அன்னை. பாறை ஒன்றின் முகத்திலிருந்து போர்க்களத்தை கவனித்து கொண்டிருந்த வித்யாதரன் உடனே அங்கிருந்து கீழே குதித்து மரங்களின் மறைவில் அமர்ந்திருந்த தன் அன்னையை நோக்கி ஓடினான்.

   "தண்ணீர் வேண்டுமா அம்மா?" சினத்தினை மறைத்துக்கொண்டு கனிவுடன் கேள்வி எழுப்பினான்.

   "இந்நிலையில் தேகம் தான் வேட்கை கொள்ளுமா? அங்கே பாரடா வித்யாதரா! நம் இல்லம் எரிந்து கொண்டிருக்கிறது, உன் தந்தையும் பாட்டனும் உடன் எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஐயோ!! நாமும் அவர்களோடு மாண்டிருக்க கூடாதா? இப்படி ஓர் கொடுமையை சுமந்து வாழும்படி செய்துவிட்டாய் கடவுளே!!" விதயதரனின் அன்னை அழுது புலம்பினாள்.

   மெல்ல அவள் அருகே சென்ற வித்யாதரன் அவள் தோள் மீது கரம் வைத்தான். "அன்னையே!! அதோ கேட்டீர்களா? நம்மை வென்ற பகைவரின் எக்காள சிரிப்பை? நம் கோட்டையை கொளுத்தி நம் வீட்டை பிரித்த அந்த கொடுவஞ்சகனின் ஆர்பரிப்பை?" திடமாக எழுந்தது வித்யாதரனின் கேள்வி.

   அவளிடம் இருந்து பதிலேதும் வராமல் போகவே மேலும் தொடர்ந்தான். "நம் குலத்தினை சீரழித்தவர்கள் தழைத்தோங்கி நிற்கையில் எஞ்சி இருக்கும் நாம் அதற்கு நிகர் செய்யாது சாவை தேடுதல் முறையோ? நம் உயிரை காத்து மறுவாசிப்பு நல்கிய நம் குலதெய்வம் நந்திதேவருக்கு இதுவா நாம் செய்யும் கைம்மாறு?" வரிசையாக கேள்விகளை அடுக்கிய வித்யாதரன் அதற்கு பதிலும் உரைத்தான். "நம்மை அழிக்க வந்த பகைவரை கதறக்கதற அழித்த பின்னர் அன்றோ நாம் அம்முடிவை பற்றி சிந்திக்கவேண்டும்"

   இவ்வாறு வித்யாதரன் கூறியதும் அழுகையை நிறுத்திய அவன் அன்னை வியப்புடன் தன் மகனை நோக்கினாள். பன்னிரு வயது இளம் சிறுவனின் மனதில் இப்படியோர் வைராக்கியமும் வெஞ்சினமும் அதே சமயம் தடுமாற்றம் கொள்ளாத நிதானமும் இருப்பதை கண்டு பெரும் வியப்பில் ஆழ்ந்துபோனாள். அதே சமயம் தன் குலத்தின் எதிர்காலத்தின் மீதும் அளவு கடந்த நம்பிக்கை தோன்றியது, உடனே தன் மகனை பெருமிதத்துடன் கட்டி அணைத்து கொண்டாள்.

 

எழுபது ஆண்டுகள் கழிந்து (சேவூர் போர்க்களம்)

     வீரபாண்டியன் படை நடுவே புகுந்த இளம்சிறுவன் இடம் வலம் என பாய்ந்து பகைவரை வீழ்த்தி கொண்டிருந்தான். அவனுடைய ஆவேசத்தை கண்ட சோழ வீரர்கள் மேலும் உத்வேகத்துடன் களத்தினில் போரிட்டனர். சோழ முடி இளவரசன் ஆதித்த கரிகாலனின் வீரத்தை கண்டு நடுங்கி பாண்டியர் படை பின்வாங்க துவங்கியது. சோழர் தளபதியாக நின்ற மலையமான் இளவரசனின் போர்திறனை கண்டு வாயடைத்து நின்று கொண்டிருந்தார். தோல்வியை தெரிந்து கொண்ட வீர பாண்டியன் போர்க்களத்திலிருந்து பின்வாங்கினான். பகைவன் தப்புவதை கண்டுகொண்ட ஆதித்த கரிகாலன் பெரும்வெறி கொண்டு தப்பியவர்களை மூர்க்கத்துடன் துரத்திச்சென்றான்.

  "இது தான் தக்க சமயம்!!" பிரதான படையிலிருந்து சோழ இளவரசன் பிரிந்து செல்வதை கண்டுகொண்ட போர்வீரன் ஒருவன் ரகசியமாக இளவரசனை பின்தொடர்ந்தான். பல்லாண்டு பகையை நிறைவேற்ற சோழ பாண்டியர் போரில் பாண்டியர் படையில் அவ்வீரன் சேர்ந்திருந்தான். தக்க தருணத்தை எதிர்நோக்கி காத்திருக்க அது கைக்கருகில் வந்ததை கண்டு திருப்தியுடன் ஆதித்த கரிகாலனை பின்தொடர்ந்து காட்டினுள் நுழைந்தான். காட்டினுள் சுற்றி சுற்றி தேடிக்கொண்டிருந்த இளவரசனை கண்டுகொண்ட அவ்வீரன் பின்புறத்திலிருந்து மெல்ல அவனை நெருங்கினான். கையிலிருந்த குறுவாளை இளவரசன் மீது குத்துவதற்கு ஓங்கிவிட்டான். குறுவாள் பாயவந்த மறுநொடி வீரனொருவன் உள்ளே புகுந்து கேடயத்தில் வாளினை தாங்கினான். அதே வேகத்தில் கேடயத்தினை முன்னே தள்ளவும் குத்தவந்தவன் பின்னே தள்ளப்பட்டான். இளவரசனை காப்பாற்றிய அவ்வீரன் மறுகையில் இருந்த ஈட்டியை எதிரில் நின்றவன் மீது பாய்ச்சவும் அது அவன் வலது தோளை கிழித்தது. அப்படியோர் தாக்குதலால் நிலைதடுமாறி கீழே விழுந்தவன் அடுத்த நொடி எழுந்து பின்வாங்க துவங்கினான். 

  அவ்வாறு பின்வாங்கியவாறே இளவரசனை நோக்கிய அவன் "உன்னையும் உன் குலத்தையும் என்றேனும் வேரோடு அழிக்காமல் விடமாட்டேன்" என்று சூளுரைத்து விட்டு அவ்விடத்திலிருந்து ஓட்டமெடுத்தான். நொடிப்பொழுதில் நடந்தேறிய அணைத்து நிகழ்வுகளையும் இமைகொட்டாமல் கவனித்துக்கொண்டிருந்த ஆதித்த கரிகாலனை அடுத்த சில நொடிகளில் சோழர் மெய்க்காப்புப்படை சூழ்ந்துகொண்டது. அவற்றின் முன்னே வந்த பார்த்திபேந்திரபல்லவன் பதறி அடித்துக்கொண்டு ஓடிவந்து இளவரசன் முன் நின்றான். "இளவரசே!! எங்களை விட்டு இப்படி பிரிந்து வரலாமா? நல்லவேளை உங்களுக்கு தீங்கு நேராமல் ஏகாம்பரேஸ்வரர் காப்பாற்றினார்" என்று பதறினான்.

  அவனை நோக்கி புன்னகைத்த சோழ இளவரசன் "ஏகாம்பரேஸ்வரர் காப்பாற்றவில்லை நண்பா!! அதோ நிற்கும் அந்த வீரன் காப்பாற்றினான்" என்று பெருமிதத்துடன் கூறினார். ஈட்டியும் கேடயமும் தாங்கி நின்ற அவ்வீரனை சோழர்களின் கண்கள் அனைத்தும் நன்றியுடன் நோக்கவே அவர்களனைவரையும் விழிகள் மருள மருள நோக்கிக்கொண்டிருந்தான் வந்தியத்தேவன்.

      ஆதித்த கரிகாலன் அந்த இளைஞனை புன்னகையுடன் நெருங்கினான். உடனே அவனும் ஈட்டியினை நேரே பிடித்தவாறே நிலத்தினுள் மண்டியிட்டான். அதற்குள் தாவிச்சென்ற ஆதித்த கரிகாலன் அவனை தடுத்து மார்புற தழுவிக்கொண்டான். " என் உயிர் காத்து நின்ற வீரன் என் முன் மண்டியிடுவது முறையல்ல.!!" என்று பெருமிதத்துடன் கூறினான்.

  வந்தியதேவனின் விழிகள் ஓரத்தில் நீர் திறந்தது. ஆனந்தத்தின் எல்லையில் தத்தளித்து கொண்டிருக்க சொல் இழந்து இளவரசன் முன் நின்றான்.

  அணைப்பை நீக்கிய ஆதித்த கரிகாலன் "உன் பெயர் என்னவென்று கூறவில்லையே?" என்று கேள்வி எழுப்பினான்.

  "வல்லவரையன் வந்தியத்தேவன் என்பது என்னுடைய பெயர் இளவரசே" என்று பணிவுடன் கூறினான் வந்தியத்தேவன்.

  இதை கேட்டு புருவமுயர்த்திய ஆதித்த கரிகாலன் "வாணர் குலத்து வீரனா?" என்று கேள்வி எழுப்ப, வெட்கத்தினால் புழுங்கிய வந்தியத்தேவன் "வாணர் குலத்து இளவரசன் ஐயா" என்று நிலத்தினை நோக்கியவாறே கூறினான்.

  அதை கேட்ட ஆதித்த கரிகாலன் "ஆஹா!! இப்பொழுது புரிகிறது!! வாணர் குலத்தின் தினவு தான் நான் பிழைத்திருக்க காரணம்.. உன் குல வீரத்தினை பற்றி பிறர் சொல்லி கேட்டிருக்கிறேன் இன்றே நேரில் காணும் வாய்ப்பு கிடைத்தது" என்று கூறி வந்தியத்தேவன் தோலினை தட்டிக்குடுத்தான்.

 அதே சமயம் இளவரசனை நெருங்கிய பார்த்திபேந்திரன் அவன் தோள் மீது கை வைத்து விழிகள் மூலம் சங்கேதமாய் ஏதோ கூறினான். அதை உணர்ந்து கொண்ட சோழ இளவரசனும் அதை ஒப்புகொண்டவாறே அருகில் இருந்த வீரனை அழைத்து "இவ்வீரரை அழைத்து கொண்டு போய் சேனாதிபதியின் முன் நிறுத்தி நடந்தவற்றை கூறு. இவரை நன்கு உபசரிக்கும்படி நான் கூறியதாக மலையமான் அவர்களிடம் சொல்" என்று அவ்வீரனுடன் வந்தியத்தேவனை அனுப்பிவைத்தான்.

  அடுத்த நொடி ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திர பல்லவனும் வீரபாண்டியனை வேட்டையாட பாய்ந்து சென்றனர். படைக்கலத்தினை நோக்கி சென்று கொண்டிருந்த வந்தியத்தேவனுக்கு கனவுலகில் மிதப்பது போன்ற உணர்வு உண்டாயிற்று!! அவன் மனம் வானுலகில் மிதந்து கொண்டிருந்தது." ஆஹா!! இளவரசர் ஆதித்த கரிகாலரின் நன்றிக்கு பத்திரமாகும் பெரு கிடைத்துவிட்டது. அத்துணை பெரும்வெறியில் இருந்த மனிதர் எப்படி ஒரு நொடிக்குள் வசீகரிக்கும் நிலைக்கு மாற முடியும். அவர் முகம் கடுமையாக இருந்த பொழுதும் உதட்டில் தோன்றியதே ஒரு புன்னகை!! அடடா!! நம் குலத்தினை அவர் வாயால் புகழ்ந்ததை கேட்டதற்கு எத்துணை ஆனந்தமாய் இருந்தது.. வந்தியத்தேவா நீ பெரும் அதிர்ஷ்டசாலி!!" இவ்வாறெல்லாம் மனதினுள்ளே எண்ணிக்கொண்டு உதட்டில் புன்னகையுடன் சென்றுகொண்டிருந்தான்.

  சேனாதிபதி மலையமான் போர்க்களத்தில் எஞ்சிய பாண்டியர்களை ஒழித்து விட்டு சரணாகதி அடைந்தவர்களை தனியே காவலில் அடைத்து விட்டு தன் கூடத்திற்கு வந்து சேர்ந்தார். வாளினை மட்டும் உரையில் வைத்துவிட்டு கவசத்தை கூட கழற்றாமல் கவலையுடன் கூடத்தில் நடந்துகொண்டிருந்தார். அப்பொழுது உள்ளே நுழைந்த வீரன் சேனாதிபதிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு சோழ இளவரசர் கூறிய செய்திகளை கூறினான். அதன் பின்னர் மலையமான் கட்டளையிட வந்தியத்தேவன் கூடத்தினுள் கொண்டு வந்து நிறுத்தப்பட்டான்.

   சேனாதிபதியின் கண்கள் வந்தியத்தேவனை ஊடுருவி நோக்கின.. வந்தியத்தேவனும் அனுபவமும் பெரும்வீரமும் கொண்ட மலையமானின் முன் திருதிருவென முழித்துக்கொண்டு நின்றான். ஆதித்த கரிகாலனின் மீது நடந்த தாக்குதல் முயற்சி பற்றி வந்தியத்தேவனிடம் அவர் விசாரிக்கவும் இது தன் சமயம் என்று அவனும் தன் வீரச்செயல்களை பறையடிக்க துவங்கினான். படபடவென பேசிக்கொண்டே சென்ற வந்தியத்தேவனை ஆழ்ந்து நோக்கிய அவர் சற்று தள்ளிநின்ற வீரனையும் அடுத்து நோக்கினார். சேனாதிபதியின் பார்வையில் இருந்த பொருளை புரிந்துகொண்ட அவன் பொங்கி வந்த சிரிப்பினை அடக்கிக்கொள்ள பார்வையை நிலத்தின் மீது திருப்பினான்.

 "போதும் அப்பா உன் வீரபிரதாபங்கள்!!! வாணர் குலத்தில் உன் உறவினர் எல்லாம் எங்கிருக்கிறார்கள்?" என்று பேச்சை மாற்ற முயன்றார்.

  "அய்யா!! எனக்கு உறவென்று சொல்லிக்கொள்ள யாரும் இல்லை!!! நேற்று தான் நான் வாணர்குலத்து இளவரசன்... இன்று வீடு கூட இன்றி ஊர் ஊராக சுற்றும் நாடோடி" என்று வறண்ட குரலில் கூறினான்.

 அதன் பின்னர் அங்கே சில நொடிகளுக்கு மௌனம் நிலவியது.. சட்டென வாயில் காவலன் செய்தி ஒன்றை அறிவிக்க சோழ வீரர்கள் சிலர் கூடத்தின் உள்ளே நுழைந்தனர். அவர்களை ஏறிட்டு நோக்கிய மலையமான் தொண்டையை கணைத்துக்கொண்டு ஆழ்ந்த குரலில் பேசத்துவங்கினார். "என்ன செய்தி?"

   "சேனாதிபதி!! பார்த்திபேந்திர பல்லவர் கட்டளையின் பேரில் இளவரசரை கொள்ள முயன்றவனை துரத்தி கொண்டு சென்றோம். ஆயினும் அவன் எப்படியோ தப்பிவிட்டான்." என்று பதிலளித்தான் அந்த வீரர்குழுவின் தலைவன்.

  இதை கேட்டு ஆழ்ந்து சிந்தித்த மலையமான் "போர்களத்தினுள் குறுவாள் கொண்டுவருபவன் நிச்சயமாக படை வீரனாக இருக்க வாய்ப்பில்லை. இவன் நிச்சயம் பாண்டிய நாட்டான் அல்ல" என்று கூறினார்.

  "நீங்கள் சொல்வது மிகவும் சரி!! துரத்தி சென்ற எங்களுக்கு காட்டினுள் ஒரு துப்பு கிடைத்தது" என்று கூறி அவன் கையில் வைத்திருந்த பொருளை எடுத்து சேனாதிபதியிடம் வழங்கினான். அதை கண்டதும் விழிகள் அகல விரிய அந்த வீரர்தலைவனை நோக்கிய அவர் "இந்த பதக்கம் கங்க நாட்டினர் அணியும் அணிகலன் ஆயிரன்றே!! அப்படியெனில் இந்த முயற்சி செய்தது மூன்றாம் பூதகனா?" என்று ஆத்திரத்துடன் கேள்வி எழுப்பினார். அந்த கேள்வி கேட்கும் பொழுதே அவர் தன் பற்களை நற நறவென கடித்து கொண்டார்.

  வீரர்குழு தலைவன் ஆமென்றவாறு தலையசைத்தான். கண்கள் சிவக்க தொலைவில் நோக்கிய அவர் "சோழர்களின் செல்வமான ராஜாதித்தனை இவன் பாட்டன் கொன்ற பொழுதே இவர்களை கொன்று போட்டிருக்க வேண்டும்." என்று உடம்பெல்லாம் நடுங்கும்படி கூறினார் அந்த வீரக்கிழவன். அதை கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன் தன் மனதில் இருந்ததை சொல்லலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் உதட்டினை கடித்து கொண்டு நின்றான்.

  மலையமானின் கண்கள் அதை கண்டுகொள்ள "நீ ஏதோ இதை பற்றி கூற விரும்புகிறாய் போல இருக்கிறதே?" என்று கேள்வி எழுப்பினார்.

  "தப்பிச்சென்ற அவ்வீரன் இளவரசரை நோக்கி அவரையும் அவர் குளத்தினையும் வேரோடு அழிப்பதாக சூளுரைத்துவிட்டு சென்றான் அய்யா!! எனக்கு அதன் பொருள் அப்பொழுது ஏதும் விளங்கவில்லை. இப்பொழுது இங்கே நீங்கள் கூறியதை கேட்கும் பொழுது இதில் ஏதேனும் தொடர்பு இருக்குமோ என்று தோன்றுகிறது" என்று வந்தியத்தேவன் தெரிவித்தான்.

  இதைக்கேட்டதும் மலையமானின் கண்கள் எழுபது ஆண்டுகள் பின்னோக்கி நகர்ந்தன.. அப்பொழுது மிகச்சிறு வயதில் பராந்தக சோழர் படையில் மன்னருக்கு உதவியாக போர்க்களத்துக்கு சென்றிருந்த அவர் கண்முன் அங்கே நிகழ்ந்த காரியங்கள் நினைவுக்கு வரவும் அனைத்திற்கும் பொருள் புரிந்தது.. உடனே வந்தியத்தேவனை நோக்கிய அவர் "இதை என்னிடம் கூறிவிட்டாய் அல்லவா!! இனி இதை பற்றி வேறு யாரிடமும் பேசக்கூடாது.. அடியோடு மறந்துவிடு" என்று கட்டளையிட்டார். வந்தியத்தேவனும் சிரம் தாழ்த்தி அக்கட்டளையை ஏற்றுக்கொண்டான்.

  அதே சமயம் கூடத்தின் வெளியே படைக்கலத்தில் பெரும் ஆரவாரம் ஏற்பட்டது. என்னவென்று அறிந்து கொள்ள மலையமான் வெளியே நோக்கவும் அதன் பொருளுணர்ந்து வீரனொருவன் வெளியே ஓடினான். சில நொடிகளில் திரும்பிய அவன் பெருமிதத்துடன் மலையமானை நோக்கி " ஐயா!!! சோழ இளவரசர் தன் சபதத்தினை நிறைவேற்றிவிட்டார். வீரபாண்டியனின் தலையை கொய்துவிட்டார். " என்று குதூகலத்துடன் கூறினான்.


தொடரும்    சோழற்கூடத்தினுள் ஆதித்த கரிகாலனும் பார்த்திபேந்திரனும் மலையமானுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்தனர். கங்க நாட்டு மன்னன் எப்பொழுது இவ்வளவு தூரம் துணிந்து விட்டானோ இனியும் அவனை விட்டுவைப்பது தவறு என்றும் உடனே கஞ்சி மீது படை எடுத்து மீட்க வேண்டும் என்றும், ஒருவாறு காஞ்சி நம் கைக்கு அகப்பட்டுவிட்டால் பின்னர் கங்கநாட்டை எளிதாக துவம்சம் செய்து விடலாம் என்றும் அந்த வீரகிழவர் அறிவுறுத்தினார்.

  ஆயினும் தெற்கே சேரர்களும் ஈழமும் எஞ்சி இருக்க இந்நிலையில் வடதிசை படையெடுப்பு அவசியம் தானா என்று ஆதித்த கரிகாலன் வாதித்து கொண்டிருந்தான்.

  ஆதித்தனுடன் வாதிடும்பொழுது மிகமிக அவசியமான ஆயுதம் பொறுமை என்று மலையமான் நன்கு உணர்ந்திருந்தார். அவனுடைய மூர்க்க குணம் சில சமயம் அவனை நிதானம் தவற வைத்துவிடும். அந்நேரம் அவனிடம் பாசமும் சரி கோபமும் சரி எடுப்பது. பொறுமையுடன் நின்ற இடத்திலேயே நின்று தர்க்கம் செய்தால் மட்டுமே ஆதித்தன் வழிக்கு வருவான் என்பதை அவர் மட்டுமே நன்கு உணர்ந்திருந்தார்.

  "ஆதித்தா!! உள்ள நிலைமையை சற்று பொறுமையுடன் நீ ஆராய வேண்டும்.. நம் முழுமுதற் பகைவனான பாண்டியனை நீ வீழ்த்திவிட்டாய்.. இனிமேல் சேரர்கள் சோழநாட்டினுள் தலையெடுக்க அஞ்சுவார்கள். ஈழத்தினை பொறுத்த மட்டில் உன் தம்பி ஆவலுடன் கன்னிப்போருக்கு காத்திருக்கிறான். அவனை வேண்டுமானால் பெரியவேளாருடன் அனுப்பிவைக்கலாம். ஆனால் உன்னை பொறுத்தமட்டில் பகையழிப்பதை காட்டிலும் பெரிய பொறுப்பு சுமத்தப்பட்டுள்ளது. சோழ வம்சத்தினை பாதுகாக்கும் காவலனாக நீ இப்பொழுது மாறவேண்டும். நம் வம்சத்தினை அழிக்கத்துணிந்தவன் ஒருவன் இருக்கிறான் என்று தெரிந்த பின்னர் அவனை விட்டுவைத்தல் சரி அல்ல!!" என்று இளவரசனுக்கு அறிவுரைத்தார்.

  சிறிது நேரம் மௌனத்தில் ஆழ்ந்த இளவரசன் கூடத்தில் இடம் வலம் என நடந்துகொண்டிருந்தான். சில நொடி சிந்தனைக்கு பிறகு தொண்டையை கணைத்துக்கொண்ட அவன், "ஆகட்டும் தாத்தா! நாம் உடனே வடதிசை படையெடுப்பில் ஈடுபடுவோம். நீங்கள் பார்த்திபேந்திரனையும் இங்கிருக்கும் படையையும் உடன் அழைத்துக்கொண்டு கடம்பூரில் சென்று தங்கி படை சேகரியுங்கள். நம் திருக்கோயிலூர் படையையும் அழைத்து வைத்து சைன்யத்தினை உறுதி செய்யுங்கள். நான் வீரபாண்டியனின் சிரத்தினை எடுத்துக்கொண்டு தஞ்சை சென்று மன்னர்காலடியில் வைத்து அவர் ஆசிகளை பெற்றுவிட்டு அடுத்த முழுநிலவன்று உங்களை வந்து சேர்ந்துகொள்கிறேன். அதன் பின்னர் போர் திட்டத்தினை பற்றி சிந்திப்போம்" என்று மலையமான் திட்டத்திற்கு தன் ஒப்புதலை அளித்தான்.

  அடுத்த நொடி மீண்டும் உற்சாக நிலைக்கு வந்துவிட்ட அவன் "இப்பொழுது சொல்லுங்கள் என்னை காப்பாற்றிய வீர இளைஞன் எங்கே?" என்று கேள்வி எழுப்பினான்.

  கூடத்தினுள் நின்ற வந்தியத்தேவனை ஏற இறங்க நோக்கிய ஆதித்தன் புன்னகையுடன் அவனை அருகில் அழைத்து அமர வைத்துக்கொண்டான். அவன் தோள் மீது கைவைத்து கொண்டு அன்புடன் பேசத்துவங்கினான். வந்தியதேவனின் படபடப்பாக பேச்சு ஆதித்த கரிகாலனை எளிதில் கவர்ந்தது. எளிதில் அவர்களிடையே நட்பு விரிந்தது. வந்தியத்தேவனின் வரலாற்றையும் அவனுடைய திறன்களையும் கண்டு அறிந்துகொண்ட ஆதித்த கரிகாலன் "தம்பி!! இனி வீடு நாடற்ற அனாதை என்று எப்பொழுதும் சொல்லிக்கொள்ள கூடாது!! சோழம் தான் இனி உன் தேசம், சோழம் தான் உன் வீடு.. நாங்கள் அனைவரும் உன் பந்துக்கள்!! புரிந்ததா?" என்று கனிவுடன் கேள்வி எழுப்பினார்.

  ஆதித்த கரிகாலனின் சொற்கள் வந்தியத்தேவன் விழிகளில் நீர் திரள வைத்தன.. "இளவரசே!! தங்களிடம் இருந்து இந்த வார்த்தைகளை கேட்க கிடைத்தது என்னுடைய கொடுப்பினை. சோழ வீரனாக இதுகாறும் சொல்லில் மட்டுமே நின்றிருந்தேன், இனி செயலிலும் சோழ வீரனாக இருப்பேன்" என்று உணர்ச்சியுடன் கூறினான்.

  இதை கேட்டு புன்னகைத்த ஆதித்தன் "ஆம்!! உன் வீரம் எங்களுக்கு நிச்சயம் தேவை!! ஆயினும் இப்பொழுது உன் வீரத்துடன் தீரமும் எங்களுக்கு தேவை படுகிறது" என்று எடுத்துரைத்தான்.

  "தாங்கள் கூறுவது புரியவில்லை இளவரசே!!" என்று குழப்பத்துடன் வந்தியத்தேவன் கூறினான்.

  "புரியவைக்கிறேன்!!" என்று கூறி வாயில் காவலனை அழைத்த இளவரசன் அவனிடம் "உடனே சென்று கந்தமாறனை அழைத்து வா" என்று கட்டளையிட்டான்.

  சில நொடிகளில் அவன் முன்னே வந்து நின்ற கடம்பூர் இளவரசனிடம், "தம்பி கந்தமாரா!! நீ நம் வடதிசை எல்லைக்காவலுக்கு உடனே புறப்படவேண்டும். உன்னுடன் இந்த இளைஞனையும் அழைத்துச்செல்." என்று கூறிவிட்டு இருவரிடமும் அவர்களுக்கான பணியை ஆதித்தன் விளக்க துவங்கினான்.

  "வந்தியதேவ!! கந்தமாறன் நம் வடக்கு எல்லை காவல்படை தலைவன். அவனுடன் நீ செல்லவேண்டும், நீ வானகப்பாடி நாட்டில் வளந்திருப்பதால் அருகிலிருக்கும் கங்கநாடும் அதன் எல்லைகளும் எல்லைக்காவல் திறனும் அங்குள்ள ஆபத்துகளும் பாதுகாப்பு பிழைகளும் உனக்கு நன்றாய் தெரிந்திருக்கிறது. உனக்கு நான் அளிக்கும்வேளை இது தான். கந்தமாறனுடன் நீ அந்நாட்டினுள் நுழைந்து அவர்கள் கோட்டையை நோக்கி படை நடத்தி செல்ல எளிதான வழி எது என்பதை கண்டறிந்து வரவேண்டும். முடியுமல்லவா?" என்று கேள்வி எழுப்பினான்.

  அதை கேட்டதும் வந்தியத்தேவன் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினான். "இளவரசே!! கங்கபாடி நாட்டினை வேவுபார்த்து செய்தி அறிவது மிகவும் எளிதான ஒன்று தான்.. ஆயினும் திருக்கோவிலுருந்து காஞ்சி வரை பகைவரிருக்க மேற்கே கங்கபாடி நாட்டிற்குள் நுழையலாமா என்று தான் எனக்கு குழப்பமாக உள்ளது" என்று எடுத்துரைத்தான்.

   வந்தியத்தேவன் கூறியதை கேட்டு பார்த்திபேந்திரனும் ஆதித்த கரிகாலனும் உரக்க நகைத்தார்கள். அதன் பொருள் புரியாமல் விழித்த வந்தியத்தேவன் "ஏதேனும் தவறாக கூறிவிட்டேனா இளவரசே?" என்று கேள்வி எழுப்பினான்.

  சிரித்து முடித்த ஆதித்த கரிகாலன் "இல்லை அப்பா!! நீ கேட்ட கேள்வி சரி தான்.. ஆயினும் பார்த்திபேந்திர பல்லவனை வைத்துக்கொண்டிருக்கும் பொழுது காஞ்சி பற்றிய கவலை ஏது? அதனால் தான் சிரித்தோம். அவனுடைய ஒற்றர்கள் காஞ்சியில் உள்ள நிலைமை பற்றி தொடர்ந்து தகவல் அனுப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.. ராஷ்டிரகூடர்களுக்கு வடக்கே பகை இருப்பதினால் தெற்கினை நிர்வாகிக்க பெரும்படையை அவர்களால் ஒதுக்க முடியவில்லை. நாம் இன்று படையெடுத்தோம் என்றால் நான்கே நாட்களில் காஞ்சியை கைப்பற்றிவிடலாம். தெற்கில் நமக்கு பெரும்பகை இருந்ததினால் இதனை நாளாக காஞ்சியை அவர்களிடம் விட்டு வைத்தோம். இனி அதை திரும்ப பெறுவது ஒரு பொருட்டல்ல" என்று இளவரசன் விளக்கம் அளித்தான்.

   அதன் பிறகு வந்தியத்தேவன் ஒப்புக்கொள்ளவும் , அன்று மாலைப்பொழுதே வந்தியத்தேவனும் கந்தமாறனும் பத்து வீரர்களுடன் வடக்கு எல்லைக்கு பயணம் மேற்கொண்டார்கள். இரண்டு நாள் ஓய்வின் பின்னர் மலையமானும் சோழர் படையுடன் கடம்பூர் நோக்கி புறப்பட்டார். வீரபாண்டியன் தலையுடன் புறப்பட்ட சோழ இளவரசன் மெய்க்காவல் படையுடன் தஞ்சை நோக்கி சென்றான்.

             ஒரு திங்கள் கழிந்து கந்தமாறனும் வந்தியத்தேவனும் ஐம்பது வீரர்கள் கொண்ட சிறுபடையுடன் கங்கபாடி நாட்டின் எல்லை அருகே இருந்த காட்டில் பதுங்கி இருந்தனர். இந்த ஒரு மாதத்தில் வந்தியத்தேவனும் கந்தமாறனும் பிரிக்க முடியா தோழர்கள் ஆகியிருந்தனர். பெரும்பாலும் கங்கபாடி நாட்டு எல்லையை இருவர் மட்டுமே சென்று வேவு பார்த்து திரும்பினார். அப்படி பலநாட்களாக வேவுபார்த்த பின்னர் நாட்டினுள் நுழைய எளிதான எல்லைப்பகுதி எது என்பதை கண்டறிந்தனர்.

   குளிருக்கு தீ மூட்டியவாறே கந்தமாறன் பேச்சினை துவங்கினான். "நாளைக்கு நம் வீரர்களுடன் பகைவரின் எல்லையினுள் ஊடுருவி விடலாம் அல்லவா?" என்று கேள்வி எழுப்பினான்.

  "ஆம் நண்பா!! விடியலுக்கு முன்னே அவர்கள் நாட்டினுள் நுழைந்து விடுவது நல்லது. நம் வீரர்களை தயாராக இருக்கும்படி கட்டளையிட்டுவிடு " என்று வந்தியத்தேவன் பதில் உரைத்தான்.

  அதே சமயம் அவர்களை நெருங்கிய வீரனொருவன் கந்தமாறனை நோக்கி "இளவரசே!! சோழ இளவரசரிடம் இருந்து தூதுவன் ஒருவன் ஓலை கொண்டுவந்துள்ளான்" என்று கூறி ஆதித்தனின் ஓலையை வழங்கினான். அதை பிரித்து படித்துப்பார்த்த கந்தமாறன் முகத்தினில் மகிழ்ச்சியும் கவலையும் மாறி மாறி தோன்றியது..

  "இளவரசர் என்ன செய்தி அனுப்பி உள்ளார்?"

  "இளவரசர் சோழர்படை கொண்டு காஞ்சியை கைப்பறிவிட்டார். நம்மிடம் இருந்து தகவல் வந்தவுடன் படையெடுத்து வருவதாக கூறியுள்ளார்"

  "இப்பொழுது தானே காஞ்சியை கைப்பற்றியுள்ளார் அதற்குள் இவர்கள் மீது படையெடுப்பதா?" வந்தியத்தேவன் வியப்புடன் கேள்வி எழுப்பினான். அதை கேட்டு புன்னகைத்த கந்தமாறன் "இளவரசரை பற்றி உனக்கு சரியாக்க தெரிந்திருக்கவில்லை. பகை இருக்கிறது என்று தெரிந்த பின்னர் அவரால் ஓய்ந்திருக்க முடியாது. அவற்றை ஒட்டுமொத்தமாக அழித்த பின்னரே அவர் மனம் அமைதி அடையும்.. இவ்வளவு ஏன்? இந்த கங்கபாடி படையெடுப்பை முடித்தபின்னர் கூட அவர் பொறுமை கொள்ள மாட்டார். உடனே ஈழத்திற்கோ அல்லது சேர நாட்டிற்கோ படையெடுப்பார்" என்று சகஜமாக கூறினான்.

  இதை கேட்டு சிறிது நேரம் மௌனம் கொண்ட வந்தியத்தேவன் "அப்படியானால் நாம் அவரை வெகு நாள் காத்திருக்கவைத்தல் நல்லதல்லா" என்று கூறிவிட்டு மீண்டும் நிலத்தினை நோக்கினான். திடீரென்று ஏதோ எண்ணம் தோன்றவும் மீண்டும் கந்தமாறனை நோக்கிய அவன் "நண்பா!! நம் திட்டத்தில் ஒரு சிறு மாற்றம். நாளை அதிகாலை நாம் புறப்படுகிறோம் ஆனால் நம் படையுடன் அல்ல.. நாம் இருவர் மட்டுமே புறப்படுவோம். அது தன் விரைவில் கோட்டை வரை சென்று திரும்ப வேகமான வழி. அணைத்து வீரர்களுடன் சென்றால் தேவையில்லாத தாமதம் உண்டாகும்" என்றான்.

  அதில் இருந்த உண்மையை உணர்ந்த கந்தமாறனும் அத்திட்டத்திற்கு ஒப்புக்கொண்டான். அதே தருணம் வந்தியத்தேவன் அந்த தூதுவனை அழைத்து அடுத்த ஒரு திங்களுக்குள் அணைத்து தகவல்களுடன் தானும் கடம்பூர் இளவரசரும் பிறவீரர்களுடன் வந்து சேருவோம் என்று ஓலை எழுதி இளவரசரிடம் சேர்க்கும் படி கொடுத்தனுப்பினான். எஞ்சி இருந்த வீரர்களிடம் தாங்கள் திட்டத்தினை பகிர்ந்து கொண்ட கந்தமாறன் இன்னும் பதினைந்து நாட்களில் திரும்பிவிடுவதாக அவர்களிடம் தெரிவித்தான். அடுத்த நாள் அதிகாலைக்கு முன்னர் இருவரும் கங்கநாட்டு எல்லை நோக்கி புறப்பட்டனர்.

   விடியலுக்கு அரைஜாமம் முன்னர் கங்கநாட்டு எல்லையை அடைந்த அவர்கள் அங்கிருந்து எவ்வாறு செல்லலாம் என்று சிந்தித்தனர். சட்டென வந்தியத்தேவனுக்கு ஒரு திட்டம் தோன்றியது. உடனே கந்தமாறனை நோக்கிய அவன் "வா நண்பா!! " என்று கூறி ராஜபாட்டையை நோக்கி நடந்தான்.

  "என்ன செய்கிறாய் நண்பா? ராஜபாட்டை வழி ஆபத்து.. அங்கே ஊர் எல்லையில் காவல் அதிகம் இருக்கும்" என்று பதறினான்.

  அதனை பொருட்படுத்தாமல் மேலே தொடர்ந்து சென்றான் வந்தியத்தேவன். அடுத்த ஒரு நாழிகையில் இருவரும் ராஜபாட்டையை நெருங்கினர். அந்த பாதைவழி நுழையும் முன்னர் காட்டினுள் சற்று நேரம் நின்ற வந்தியத்தேவன் ஈட்டியை தவிர பிற ஆயுதங்களையும் சோழர் படை அடையாளங்கள் அனைத்தையும் அவிழ்த்து மூட்டைகட்டி அருகே நின்றிருந்த ஒற்றை வேப்ப மரத்தின் மீது வைத்தான். பிறகு கந்தமாறனை நோக்கி "நண்பா!! உடனே ஈட்டியை தவிர அணைத்து ஆயுதங்களையும் களைந்துவிட்டு, சோழர்கள் என்று எந்த ஒரு அடையாளமும் நம் மீது இருத்தல் கூடாது. உன் வாளையும் இந்த மூட்டையுடன் சேர்த்துக்கட்டிவிடு" என்று கூறினான்.

  ஒன்றும் விளங்காமல் நின்ற கந்தமாறன், வந்தியத்தேவனிடம் இருந்து விளக்கம் ஏதும் வராமல் போகவும் வேறு வழியின்றி அவன் சொன்ன படியே செய்தான். அவன் அவ்வாறு மூட்டை கட்டி மரத்தில் ஏற்றிவைத்த மறு நொடி வந்தியத்தேவன் பந்தம் ஒன்றை பற்றவைதான். கந்தமாறனை அழைத்துக்கொண்டு மிடுக்குடன் ராஜபாட்டையில் நடக்கத்துவங்கினான்.

   கங்கநாட்டு எல்லைக்காவல் வீரர்கள் அரை தூக்கத்தில் இருந்தனர். அதில் ஒருவன் மட்டும் எதேச்சையாக கண்விழிக்க தொலைவில் இருந்த தீப்பந்தத்தை வெளிச்சம் அவன் கண்ணில் பட்டது. உடனே எச்சரிக்கை அடைந்த அவ்வீரன் அருகிலிருந்த பிற வீரர்களையும் எழுப்பினான். ஒற்றைதீப்பந்தம் ஒன்று தங்களை நோக்கி நிதானமாக நகர்ந்து வருவதை அவர்கள் உணர்ந்தனர். அப்படியெனில் வருவது ஒருவரோ அல்லது இருவரோ தான் என்று நிம்மதி அடைந்தனர். வெகு விரைவில் அவர்களை வந்தியத்தேவனும் கந்தமாறனும் நெருங்கினார்கள்.

   துணிப்பையும் ஈட்டியும் மட்டும் வைத்துக்கொண்டு நின்ற அந்த இருவரையும் கண்ட காவல்படை தலைவன் ஐயத்துடன் அவர்களை விசாரித்தான். "யார் நீங்கள்?"

  "அய்யா நாங்கள் வழிப்போக்கர்கள்!!" என்று கந்தமாறன் பணிவுடன் கூறினான்.

  "வழிப்போக்கர்களுக்கு எதற்கு ஈட்டி?"

  "காட்டு வழியே வருவதால் மிருகங்களிடமிருந்து பாதுகாத்துக்கொள்ள!!" மீண்டும் கந்தமாறன் பதில் கூறினான்.

  "எங்கு போகிறீர்கள்?"

  இந்த கேள்வியேதும் பிடிக்காத வந்தியத்தேவன் "நாங்கள் எங்கு சென்றால் உங்களுக்கு என்ன? எங்கள் விருப்பம் அது" என்று அலட்சியத்துடன் பதில் கூறினான்.

  அதை கேட்டு எள்ளலுடன் சிரித்த அந்த காவர்தலைவன் "பாரடா இவன் திமிரை!! நம்மிடம் இவன் பயனவிவரங்களை கூறமாட்டானாம்.. தம்பி நீங்கள் சொல்லா விட்டால் மேலே தொடர்ந்து செல்ல முடியாது.. திரும்ப வேண்டியது தான்" என்று பதில் உரைத்தான்.

   "எங்களை தடுக்க நீ யார்?" வந்தியத்தேவன் திமிருடன் கேள்வி எழுப்பினான்.

   "வாய் பேச்சில் வல்லவனாக இருப்பாய் போலவே! உன் வாய் இங்கு எடுபடாது" என்றான் அவன்

  "அப்படியென்றால் கையின் செயலை பார்" என்று கூறி காவலர் தலைவன் மீது ஓங்கி ஒரு குத்து விட்டான். அவன் சுருண்டு விழவும் நான்கு பேர் அவர்களை நெருங்கினர். கந்தமாறனும் வந்தியத்தேவனும் ஆளுக்கு இருவர் என அவர்களுடன் சண்டையிட்டனர். நால்வரும் எளிதில் வீழ்த்தப்பட்டாலும் அடுத்த சில நொடிகளிலேயே பெரும் குழு ஒன்று அவர்களை சுற்றிவளைத்து கைது செய்தது. அக்கூட்டத்தினை பிளந்து கொண்டு ஒருவன் முன் வந்து நிற்கவும் அனைவரும் "தளபதி வாழ்க தளபதி வாழ்க" என்று கோஷம் எழுப்பினர்.

  அதை கேட்ட வந்தியத்தேவனும் "அதிர்ஷ்ட தெய்வம் நம்முடனே இருக்கிறாள்" என்று மனதினுள் மகிழ்ச்சி அடைந்தான்.

கங்க நாட்டின் தளபதி எல்லைப்புற காவலை மேற்பார்வையிட வந்திருப்பதாக யூகித்த வந்தியத்தேவன் தன் திட்டம் எதிர்பார்த்ததை விட எளிதாகிவிட்டதை உணர்ந்து குதூகலம் அடைந்தான். அவன் எதிர்பார்த்தது போலவே அடுத்த சம்பவங்களும் நடந்தன..

  நொடிப்பொழுதில் ஐவரை வீழ்த்திய இந்த இருவரும் வழிப்போக்கர்களாக இருக்க முடியாது. இவர்களை விசாரிப்பதே நல்லது என்று எண்ணிய தளபதி உடனே அவர்கள் இருவரையும் சங்கிலியில் பிணைத்து கங்கநாட்டு தலைநகருக்கு அழைத்துச்சென்றான். மூன்று நாட்களில் தலைநகரை அடைந்ததும் அங்கே வந்தியத்தேவனும் கந்தமாறனும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

  சிறையில் தன் மனதில் இருந்த கோவத்தையெல்லாம் வந்தியத்தேவன் மீது திட்டித்தீர்த்தான் கந்தமாறன்.. "உன்னை போன்ற அவசர புத்தி கொண்டவனை நான் கண்டதே இல்லை.. இப்படி அநியாயமாக பகைவர் சிறையில் சிக்க வைத்துவிட்டாயே. உன்னை நம்பி வந்ததற்கு நல்ல பலன் கிடைத்துவிட்டது.. முட்டாளே!! " என்று வசை பாடினான்.

  அனைத்தையும் அமைதியுடன் கேட்டுக்கொண்டிருந்த வந்தியத்தேவன் கந்தமாறன் திட்டி ஓய்ந்ததும் அவனை அமைதி படுத்தினான். "நண்பா!! பொறுமையாக இரு!! எல்லாம் திட்டபடியே போய்க்கொண்டிருக்கிறது.. உனக்கும் எனக்கும் ஒரு கேடும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்"

  "எப்படி முடியும்!! காஞ்சியை சோழர்படை கைப்பற்றிய செய்தியும் நம் படைபலத்தினை பற்றிய தகவல்களும் இவர்களை எட்டியவுடனே நாம் யார் என்பது இவர்களுக்கு தெரிந்துவிடும்.. அடுத்த நொடியே நமக்கு கொடூர மரணம் நிச்சயம்" என்று கந்தமாறன் படபடத்தான்.

  "அதற்கு முன் இன்றிரவே நாம் இச்சிறையை விட்டு தப்பிவிடுவோம்" என்று கூறிய வந்தியத்தேவன் தரையில் நன்கு கால்களை நீட்டி படுத்துகொண்டான். அதை பற்றி கந்தமாறன் கேள்வி கேட்கவும் இரவு உணவு முடியும் வரை பொறுத்திருக்குமாறு கூறினான். மேலும் ஏன் அவ்வாறு சண்டையை வளர்த்தான் என்பதற்கும் காரணம் கூறினான்.

  மிக விரைவில் கோட்டையை அடைய சிறந்த வழி அதை தவிர வேறு இல்லை என்றும், மேலும் கோட்டைக்கு போகும் வழியில் அதிகம் தடை இல்லாத பாதையையே கைதிகளை கொண்டு செல்ல வீரர்கள் தேர்நதெடுப்பர் என்றும் இப்பொழுது எல்லையிலிருந்து கோட்டையை அடைய சிறந்த வழியையும் எளிதாக கண்டறிந்து விட்டதாகவும் கூறினான். அனைத்தையும் கேட்ட கந்தமாறனுக்கு வந்தியத்தேவனின் திறமை மீது பெரு மதிப்பு உண்டாயிற்று.. அதை காட்டிலும் அவர்கள் தப்பிச்செல்ல வந்தியத்தேவன் என்ன திட்டம் வைத்துள்ளான் என்பதை அறிந்துகொள்ள ஆவல் எழுந்தது..

  அவ்வாறே இரவு உணவும் முடிந்தது.. ஆயினும் வந்தியத்தேவன் அலட்டிக்கொள்ளாமல் மீண்டும் தரையில் படுத்துகொண்டான். சிறை சூன்யமாக இருந்ததால் காவலர்களின் நடவடிக்கைகள் தெளிவாக கேட்டன.. நள்ளிரவு நெருங்கியதும் காவலர்கள் பேச்சு சத்தம் எல்லாம் அடங்கின.. அத்தருணம் பார்த்து வந்தியத்தேவன் சுறுசுறுப்புடன் எழுந்து நின்றான். அரை நாழிகை பொறுத்திருந்து பின்னர் காவலன் ஒருவன் சிறையினுள் நுழைந்து வந்தியத்தேவனின் அரை கதவை திறந்தான். ஏதும் பேசாமல் தன்னை தொடரும் படி சைகை செய்த அந்த காவலன் வந்த வழியே செல்லாமல் சிறைச்சாலையின் பின்புறமாக அவ்விருவரையும் அழைத்து சென்றான். இரண்டு மூன்று கட்டுக்கள் கடந்து இடம் வலம் என திரும்பி சென்று ஒரு சிறு அறையினுள் நுழைந்தான். அதன் சுவரினை நெருங்கிய அக்காவலன் ஒரு இடத்தில சென்று சுவரினை தள்ளவும் அங்கே ஒரு பிளவு ஏற்பட்டது. ஒரு ஆள் அளவு இடைவெளி தோன்றவும் மூவரும் அதனுள் நுழைந்தனர். சிறிது நேரத்தில் அவர்கள் தாங்கள் எங்கிருக்கிறோம் என்பதை அவர்கள் கண்டுகொண்டனர். கோட்டையின் பின்புறத்தில் இருந்த அகழியின் கரையில் அவர்கள் நின்றுகொண்டிருந்தனர். ஒரு சிறு தெப்பம் நீரில் மெல்ல மிதந்துகொண்டிருந்தது. அதில் மூவரும் சப்தமின்றி ஏறிக்கொண்டு விரைவாக படகு செலுத்தினர். அகழியை கடந்ததும் அக்காவலனை நோக்கிய வந்தியத்தேவன் "இனி நீ இங்கு இருக்க வேண்டாம்.. தப்பி சென்றுவிடு" என்று கூறி அவனை அனுப்பிவைத்தான்.

  பின்னர் கந்தமாறனை அழைத்துக்கொண்டு கங்கபாடி நாட்டின் எல்லையை நோக்கி மீண்டும் புறப்பட்டான். அது வரை நடந்த ஆச்சர்யங்கள் அனைத்தும் கந்தமாறனை குழப்பத்திலும் வியப்பிலும் புரட்டி எடுத்தன.. அவன் கண்களில் தோன்றிய கேள்விகளை கண்டு புன்னகைத்த வந்தியத்தேவன் "அந்த காவலன் வணக்கப்பாடி நாட்டினை சேர்ந்தவன்" என்று மட்டும் கூறி கண் சிமிட்டிவிட்டு அமைதியாக நடந்தான்.

  கந்தமாறன் வியப்பு பெருமடங்கு அதிகரித்தது.. ஆயினும் வந்தியத்தேவன் அதை புறந்தள்ளிவிட்டு கந்தமாறனை விரைவாக அழைத்துச்சென்றான். அடுத்த பதினைந்து நாட்களில் அவர்கள் சொன்னது போலவே இருவரும் காஞ்சியை அடைந்தனர். அங்கே சோழர் சைன்யம் தயாராக இருந்தது. வந்தியத்தேவன் கூறிய தகவல்களை கொண்டு ஆதித்தனும் பார்த்திபேந்திரனும் போர்த்திட்டம் வகுத்தனர். நல்ல கிழமை ஒன்றில் புறப்பட்ட சோழர் படை அடுத்த இரண்டு திங்களில் கங்கபாடி நாட்டினை கைப்பற்றியது. ஆதித்தனின் வாள் நெஞ்சில் பாய அந்நாட்டு மண்ணான பாதகன் உயிரிழந்தான்.

  இந்த வெற்றியை கொண்டாட காஞ்சியில் பொன்மாளிகை ஒன்றை எழுப்பப்போவதாக ஆதித்தகரிகாலன் சோழர் படைக்கு பெருமையுடன் அறிவித்தான். தன் பொன் மாளிகை திட்டத்தினை மலையமானிடம் அறிவிக்க ஆதித்தகரிகாலன் பார்த்திபேந்திரன் மற்றும் வந்தியத்தேவனுடன் திருக்கோவிலூருக்கு வந்து சேர்ந்தான். ஆயினும் அங்கே வந்ததும் மலையமான் தஞ்சையிலிருந்து வந்த சில முக்கிய செய்திகளை ஆதித்தனுடன் பகிர்ந்துகொண்டார். அதன் பேரில் அம்மூவரும் கலந்து பேசி வந்தியத்தேவனை மன்னரைக்காண தஞ்சைக்கு ஓலையுடன் அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். ஆதித்தனை தனியே அழைத்த மலையமான் வந்தியத்தேவன் போன்ற ஒருவன் இச்சமயம் இளையபிராட்டி குந்தவைக்கு பெரும் உதவியாக இருப்பான் என்று கூறவும் அவளிடம் சேர்ப்பிக்கவும் ஒரு ஓலை எழுதி இரண்டையும் வந்தியத்தேவனிடம் அளித்து அவன் செய்ய வேண்டிய காரியங்களை அறிவித்தான்.

  "வந்தியதேவா!! தஞ்சையிலிருந்து மன்னரின் நிலைக்குறித்தும் பழுவேட்டரைகள் குறித்தும் பல கவலை தரும் செய்திகள் வந்துள்ளன.. இந்நிலையில் நீ எனக்கோர் உதவி செய்ய வேண்டும்.. இந்த ஓலையை எது செய்தேனும் மன்னரிடம் சேர்ப்பிக்கவேண்டும்.போகும் வழியில் எந்த ஒரு சண்டையிலும் ஈடுபடவேண்டாம்.. உன் வீரத்தினை நான் நன்கு அறிவேன்.. பல முறை நேரிலும் கண்டுள்ளேன்.. எனவே சண்டையிலிருந்து ஒதுங்கிக்கொண்டால் உன் வீரத்திற்கு குறை ஏதும் வந்துவிடாது.. ஓலையை குடுத்து முடித்த பின்னர் பழையாறை சென்று இளையபிராட்டி குந்தவை தேவியிடம் இந்த ஓலையை கொடுக்கவேண்டும்" என்று கூறி இரண்டு ஓலையையும் வழங்கினான்.

  அவ்வாறே அவ்வோலைகளை பெற்றுக்கொண்டு வந்தியத்தேவனும் குதூகலத்துடன் காவிரி நாட்டினை நோக்கி பயணத்தினை துவங்கினான். திருக்கோவிலூரில் இருந்து புறப்பட்ட வந்தியத்தேவன் சிதம்பரத்தை அடைந்தான். சிதம்பரம் கோவிலுக்குள் நுழைந்த வந்தியத்தேவன் நடராஜர் சந்நிதியை கண்மூடி வணங்கினான். அப்பொழுது வயது முதிர்ந்த கிழவர் ஒருவர் அவனை நெருங்கி வந்து நின்றார். "என்ன அப்பனே!! திடீரென சிதம்பரத்திற்கு வருகை தந்துள்ளாய்!! இந்த கிழவனை நாடி வந்த காரணம் என்னவோ?" என்று கேள்வி எழுப்பினார்.

  அவரை பார்த்து புன்னகைத்த வந்தியத்தேவன் விழிகளின் ஓரம் நீர் வழிந்தது. "தாத்தா!!" என்று அவருடைய காலில் விழுந்தான்.

  வந்தியத்தேவன் தலை வைத்த அந்த கிழவர் "இந்த வித்யாதரனின் ஆசீர்வாதம் என்றும் உனக்குண்டு" என்று பெருமையுடன் வாழ்த்தினார்.

  நிமிர்ந்து நின்று அவரை பெருமையுடன் நோக்கிய வந்தியத்தேவன் "கங்கபாடி நாடும் வீழ்ந்துவிட்டது தாத்தா!!" என்று வைராக்கியத்துடன் கூறினான்.

  அதை கேட்டதும் வித்யாதரனின் கண்களில் ஒளி தோன்றியது.. கர்வத்துடன் தன் பேரனை தட்டிக்குடுத்த வித்யாதரன், "வாணர் குலத்தில் நீ பிறந்தது நான் செய்த பேறு. எழுபது ஆண்டுகள் முன்னர் சோழர்களுடன் சேர்ந்து கொண்டு நொளம்பர்களும், கங்காபடி நாட்டவரும் நம் நாட்டினை அழித்து சூறையாடினர். நம் நண்பர்களாக நம்முடன் நிற்கவேண்டிய வைதும்பராயர்களும் நமக்கு துரோகம் செய்து பகைவருக்கு உதவினர். அதில் என்னால் வைதும்பரையார்களை மட்டுமே அழிக்க முடிந்தது... இரண்டு ஆண்டுகள் முன்னர் களம் இறங்கிய நீ நொளம்பர்களை வேருடன் பிடிங்கி எறிந்தாய். இன்று கங்கர்களை வீழ்த்திவிட்டாய்.. அதுவும் அதே சோழர் துணை கொண்டே!!" என்று பெருமிதத்துடன் கூறினார்.

   அதை கேட்டு பெருமிதத்துடன் வந்தியத்தேவன் புன்னகைத்தான். மேலும் தொடர்ந்த வித்யாதரன் "அடுத்து நம் குறி சோழ வம்சத்தினை அழிப்பது தானே?" என்று கேள்வி எழுப்பினார்.

   அதற்கு உடனே பதில் கூறாமல் சிறிது நேரம் சிந்தித்த வந்தியத்தேவன் "அதற்கு முயற்சி செய்வேன்.. இப்பொழுது சோழ தேசத்தின் அரசியல் சூழ்நிலை நமக்கு வசதியாகவே உள்ளது.. ஆயினும் சோழர்களை அழிப்பது கடினம் தாத்தா!! அவர்களில் எத்துணை பேரை கொன்றாலும் அவர்கள் அரியணைக்கு யாரேனும் வந்துகொண்டே இருப்பார்கள்.. இவ்வளவு ஏன் தக்கோலத்து போரில் கங்க நாட்டவர் சோழ முடியிலவரசர் ராஜாதித்தரை கங்கநாட்டு மன்னன் பூதகன் கொன்றதாக கூறுகிறார்கள் ஆயினும் உண்மையில் அந்த போர்க்களத்தில் அவர் மீது அம்பெய்தி கொன்றவர் நீர். அரிஞ்சயனையும் சமயம் பார்த்துகொன்றீர் ஆயினும் சோழ குலம் இன்னும் நிலைத்திருக்கிறது பார்த்தீர்களா!!!" என்று வந்தியத்தேவன் கேள்வி எழுப்பினான்.

  அதை கேட்ட வித்யாதரன் மனம் சஞ்சலம் கொண்டது.. "இப்பொழுது என்ன செய்ய போகிறாய் நீ?" என்று கேள்வி எழுப்பினார்.

  "அதை காட்டிலும் சிறந்த திட்டத்தினை வைத்துள்ளேன் தாத்தா!! முடி இளவரசன் ஆதித்த கரிகாலன் பல நாள் உயிர்த்திருக்க மாட்டான். அவனுடைய பகை எண்ணிக்கை பல உள்ளன... எவராலோ நிச்சயம் கொல்லப்படுவான்.. அப்படியில்லயேல் நல்ல தருணம் பார்த்து நானே கொன்றுவிடுவேன்.. அதற்கு பிறகு தான் சுவாரசியமான நிகழ்வுகளை எதிர்பார்க்கிறேன்... "

  இதை கேட்டதும் வித்யாதரனின் கண்கள் மலர்ந்தன.. குழிவிழுந்த கண்களில் புத்துணர்ச்சி ஏற்பட்டு ஆவலுடன் வந்தியத்தேவனை நோக்கினார்.

  "ஆதித்த கரிகாலனை போன்று மற்ற இளவரசர்கள் இல்லை தாத்தா!! அருள்மொழியும் மதுராந்தகனும் எளிதாக கைக்குள் கொண்டுவந்துவிடலாம். அவர்களில் யார் ஆட்சிக்கு வரினும் அவர்களை கைக்குள் கொண்டு இந்த சோழ தேசத்தினையே என் கைக்குள் கொண்டுவர போகிறேன். என்னுடைய திட்டம் வாங்கியபடி நாட்டினை தாண்டி சோழ நாட்டையும் என் சொற்படி நடக்க வைக்க போகிறேன்.. மன்னனாக இருந்து தான் நாடாளவேண்டும் என்பதில்லை.. மன்னனை என் சொற்படி ஆட்டிவைத்து ராஜதந்திரி ஆக போகிறேன்" என்று விழிகளில் திமிருடன் கூறினான்.

  "இதெல்லாம் நடக்க கூடுமா வந்தியதேவா?" வித்யாதரன் கவலையுடன் கேள்வி எழுப்பினார்.

  அதை கேட்டு அலட்சியத்துடன் சிரித்த வந்தியத்தேவன், "இவை அனைத்தையும் நிகழ்த்த எனக்கு ஒரு துருப்புசீட்டும் உள்ளது தாத்தா!! சோழர் குல இளவரசி.. அவளை மனம் முடித்து விட்டால் அவளை கொண்டே அருள்மொழி வர்மனை என் கட்டுப்பாட்டினுள் கொண்டுவருவேன்" என்று ஊக்கத்துடன் கூறினான் வந்தியத்தேவன்.

   "வந்தியதேவா!! நீ பெரும் ராஜதந்திரி ஆக போகிறாய் என்று நிச்சயமாக நம்புகிறேன்.. உன் திட்டம் பலிக்க வேண்டும் என்று நந்திதேவரை வேண்டுகிறேன்.. நம் குலம் நிலைபெற்று நீயும் நம் சந்ததியும் வாழ்வாங்கு வாழ ஆசீர்வதிக்கிறேன்" என்று வித்யாதரன் பெருமையுடன் கூறினார்.

  தன் தாத்தாவிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்ட வந்தியத்தேவன் நடராஜர் கோவிலை விட்டு வெளியே வந்தான். கோவிலுக்கு வெளியே சற்று தொலைவில் இருந்த மருத மரம் ஒன்றின் மறைவிலிருந்து வைஷ்ணவன் ஒருவன் தன்னை வேவுபார்ப்பதை வந்தியத்தேவன் கண்டுகொண்டான். அதை கண்டு விஷமப்புன்னகை கூட்டிய வந்தியத்தேவன் "என் திட்டம் வெற்றி பெறுவதில் பெரும்பங்கு வகிக்கப்போவது நீர் தான் ஆழ்வார்கடியாரே" என்று மெல்லிய குரலில் கூறிவிட்டு குதிரையை ஒட்டிக்கொண்டு கடம்பூர் நோக்கி புறப்பட்டான் வந்தியத்தேவன்.

                                                                                       - வந்தியத்தேவன் எழுச்சி முற்றும்


Rate this content
Log in

Similar tamil story from Action