பவித்ரன் கலைச்செல்வன்

Horror Fantasy Thriller

4  

பவித்ரன் கலைச்செல்வன்

Horror Fantasy Thriller

பலி

பலி

8 mins
325


நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி. மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன். கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன். கையளவு சம்பளம் மனதளவு வேலை. என நிம்மதியான வாழ்க்கை சலித்துப்போனதோ என்னவோ.

கடந்த ஒருவாரமாக திகில் தரும் பொருள்களை தேடியலைகிறேன் அதிர்ச்சியான விசயங்களை ஆர்வமாய் தேடுகிறேன்.. விசித்திரத்தை விரும்புகிறேன் விபரீதங்களுக்கு ஏங்குகிறேன்.


இவையனைத்திற்கும் தஞ்சை பெரிய கோயிலும் ராஜனும் தான் காரணம். ஆம் கடந்த ஒரு வாரமாக தஞ்சை பெரிய கோயிலில் கல்வெட்டு ஆய்வுக்கு அமர்த்தப் பட்டேன். ராஜன் என் சக ஆய்வாளன்.. முன்னாள் ஆய்விலும் நாங்கள் இருவரும் ஆய்வு உதவியாளராக இருந்தோம் அப்போதிருந்தே பழக்கம்.


ராஜன் ஒன்று சொல்வான் முன்னோர்கள் தங்களது எதிர்காலத்தை முன்னமே அறிந்துதான் அவற்றை தான் கல்வெட்டில் பதிந்திருப்பதாக சொல்வான் பலவேளைகளில் அவனது இந்த கருத்து மூடத்தனமாக தோன்றினாலும். தஞ்சையின் பல கல்வெட்டுகள் அவனது இந்த கருத்தை ஒத்துபோயின.


வலசை பதினாறு வளவன் படிய என்கிற பாடல் குறிக்கின்ற கணக்கும் பிற்கால வரலாற்று கணக்கும் சரிவர பொருந்துகிறது .. நான் இதனை ஒரு எதர்சையான ஒத்துப்போதல் என்று எண்ணினாலும் ராஜன் அதனை அப்படி எண்ணவில்லை. இதுபோன்ற வாதங்களில் அதிகம் நான் விட்டுக்கொடுத்து விடுவேன்.


தஞ்சை நீங்கள் எண்ணுவது போல் வெறும் கோயிலும் வரலாற்று சின்னம் மட்டுமல்ல அது பல அமானுஸ்ய ரகசியங்களின் கருவூலம் கூட. தஞ்சை கோயில் பற்றி அங்கிருந்து 23 கிமீட்டர் தெற்கு நோக்கிய தொலைவில் ஒரு கல்வெட்டு இருப்பதாகவும் அதை ஆய்வு செய்து அரசுக்கு தெரிவிக்கவும் துறை மேலிடத்திலிருந்து உத்தரவு வந்தது. ராஜன் என்னை மட்டும் அனுப்பினான்..

நானும் கிளம்பினேன்.


நிகழவிருப்பதை அப்போது நானும் அறிந்திருக்கவில்லை ராஜனும் அறிந்திருக்கவில்லை.. அரசாங்க ஆணையின் படி ஈச்சன்கோட்டை அருகினில் தென்திக்குபுரம் என்னும் கிராமத்தை வந்தடைந்தேன் பனைமரங்களை சாலையின் இருபுறத்திலும் நெருக்கமாக அமைத்து வைத்திருந்தது.


வாடைக்காற்றின் ஊதலது பனைமரங்களின் ஊடே வளைந்து செல்வதால் ஏற்படும் விநோத ஒலி நெஞ்சத்தை கொஞ்சம் அசைத்தது அச்சம் ஆழ்மனதில் சொட்டுச்சொட்டாய் இறங்கியது. சில்லென்ற குளிரும் நடுக்கத்தை தந்தது. மதிய வேளையில் இத்தனை அமானுஸ்யமாக நான் உணர்ந்தது இதுவே முதல்முறை. கண்களுக்கு தென்படும் தூரம்வரை யாருமே இல்லை மனித இருப்பிற்கான அடையாளம் இருப்பதாக கூட தெரியவில்லை. அரசாங்க ஆணையில் கிராமம் என்று குறிப்பிட்டது பொய்யோ என்று எண்ணம் வர.


கணநேரம் சிந்தையில் ஆயிரம் கேள்விகள் . ஏதேனும் சூழ்ச்சியோ? ராஜன் ஏன் உடன் வரவில்லை?. வந்தது அரசாங்க ஆணைதானா?.. தஞ்சை கோயிலையே இன்னும் முழுதாக ஆயப்படாத நேரத்தில் ஏன் அதன் சிறுதுரும்பினை ஆய்ந்து சொல்ல வேண்டும் ? அரசின் அபாயமான முடிவில் நாமாய் வந்து சிக்கிவிட்டோமா?. சிக்க வைக்கபட்டமோ?.. ராஜனுக்கு இது தெரிந்திருக்குமோ?.. தெரிந்தே ஏதேனும் சிக்கலில் வைத்தானோ?


சிந்தனையின் குரூர கேள்விகள் தந்த அதீத பயத்தில் நடுக்கத்தில் நீண்ட தூரம் வந்திருந்தேன் இப்போது கண்தோன்றும் தூரத்தில் அரையாடை கிழவர் ஒருவர் கண்பட. அது மனிதர்தானா? இல்லை தேடிவந்த விபரீதத்தின் உருவமோ? ஏதேதோ யோசனைகள் சட்டென குழப்பத்தை வீழ்த்தி அந்த மனிதனை துரத்திப்பிடித்து மெல்ல மெல்ல பேச்சிகொடுத்து வேண்டியவற்றை அறிந்துகொண்டேன்.


சற்றுநேரம் மௌனமாய் வந்த அந்த கிழவர் என்ன சொன்னீங்க? பெரிய கோயிலுக்கு போக போறீங்களா?. வேண்டாம் தம்பி அது நல்லதில்ல. ஏன் என்ன பிரச்சனை பெரியவரே?

அது நீங்க நினைக்கிற மாதிரியான கோயிலில்ல..

அப்புறம் என்ன மாதிரியான இடமது... நான் அங்க இருக்குற கல்வெட்ட ஆய்வு செய்ய வந்திருக்கிறேன் என்று சொன்னேன்...

பேசியபடியே வந்த நாங்கள் அந்த கோயிலின் வாயிலை வந்தடைந்திருந்தோம்... அதிர்ந்திருந்த பெரியவர் தம்பி நீ பேசினத கேட்டு அந்த கோயில் உன் தேடி வந்திருக்கு ... எப்படியாவது இங்கிருந்து தப்பிச்சு போயிரு என்று கத்தியபடி தலைதெறிக்க ஓடிய பெரியவர் என் கண்ணெதிரே கழுத்து முறிந்து விழுவதை கண்டு பயந்து ஒடிட முயன்றேன் ..


அந்த இடத்திலிருந்து சுமார் 3.5 கிமீட்டர் ஓடிவந்திருப்பேன்.. அவரது வார்த்தைகளை மீண்டும் எண்ணிப்பார்த்தேன். தம்பி நீ பேசினத கேட்டு அந்த கோயில் உன்ன தேடி வந்திருக்கு.. பயத்தில் உளறியிருப்பார் .. நாம் தானே நடந்த வந்திருப்போம் என்று திரும்பிய என் வலதுபுரத்தில் அந்த கோயில் நின்றிருந்தது.. நெஞ்சம் படபடவென அதிகபட்ச வேகத்தில் அடித்தது.. பயத்தில் உடலெங்கும் வியர்த்தது... எல்லாம் முடிந்தது இனி நம் வாழ்க்கை அவ்வளவுதான் என்று அழுதுபுலம்பினேன்..


எல்லாம் முடிந்தது என்கிற எண்ணம் வேறூன்றியதாலோ என்னவோ.. நான் ஒரு வெறித்த ஆர்வத்தில் கோயிலுக்குள் சென்றேன். அந்த கல்வெட்டினை தேடினேன்.. கோபுர வாயிலிருந்து உட்பிரகாரத்தில் நுழைந்ததும் அந்த கதவு மூடிக்கொண்டது.. ஒரு பெரும் பாம்பின் வாய்க்குள் புகுந்தது போல இருந்தது.. பயங்கரமான ஓசையோடு காற்றுவீசியது.. அதைவிட பயங்கரமாக காண்டாமணி ஒலித்தது .. உடலின் மொத்தமும் அந்த ஒலிகளால் அதிர்ந்தது.. உட்பிரகாரத்தின் வலதுபுறத்தை சென்று சேர்ந்தேன் மத்தியகால கல்வெட்டுகள் இருந்தன .. ப்ராந்திய சோழன் .. பெருவணிக மாசான ஜமீன்வரைக்கும் குறிப்பிட பட்டிருந்தது..


இன்னும் இது என்ன கோயில் என்று விளங்கவில்லை.. அமைப்பில் சிவன் கோயிலை போல தோற்றமளித்தாலும் அதற்கான அடையாளங்கள் ஏதுமில்லை.. கோயிலின் மத்தியில் உள்ள கருவறையை சுற்றிலும் நிறைய கல்வெட்டுகள் இருந்தன... எதர்ச்சையாக ஒன்றை படித்தேன்..

சத்தியம் காத்தவரை காத்துநிற்கும் சங்கணமாண்டி என்று குறிப்பிட பட்டிருந்தது... கோயிலின் உள்ளே அங்கங்கே சங்குவைத்திருந்த ஒருஉருவ சிலைகள் இருந்ததை கொண்டு இக்கோயிலே சங்கணமாண்டிக் கோயிலாகதான் இருக்கும் என்று அறிந்துகொண்டேன்...

அடுத்தடுத்ததாக நிறைய கல்வெட்டுகளை குறிப்பெடுத்து படித்துபார்த்ததில்.. தஞ்சை கோயிலுக்கு இந்த கிராமத்து மக்கள்பலரும் தினக்கூலியாக கட்டுமான பணிக்கு சென்றிருப்பது தெரிந்தது.. அவர்கள் தினமும் இந்த சங்கமாண்டிக் கோயிலினை பூஜித்த பின்னரே பணிக்கு சென்றுள்ளனர்...

அடுத்தடுத்த கல்வெட்டுகளை பிரிதி எடுத்துக்கொண்டதில் இரவு நெருங்கியிருந்தது.. சரி கிளம்பிவிடலாம் என்று வெளியில் சென்றால் கதவினை திறக்க முடியவில்லை.. இந்த விசித்திரத்தை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.. எதற்கு என்னை அடைத்து வைக்கவேண்டும்.?. கொல்லத்தான் என்றால் ஏன் இதுவரை உயிரோடு வைத்திருக்க வேண்டும்?. குழப்பங்கள் அதிகரித்தன..

திடீரென யாரோ ஒருவர் என்னருகே வந்தார்.. இந்த கோயிலின் பூசாரியாம்... அண்ணே இந்த கதவு திறக்கல நான் வெளிய போகனும் எப்படியாவது உதவி பண்ணுங்கண்ணே.. தயவு செஞ்சு உதவிபண்ணுங்க.. இல்ல தம்பி இங்கிருந்து நானே வெளிய போக முடியாது நாம உள்ளவரவும் வெளிய போகவும் அந்த சங்கணமாண்டி சாமிதான் மனசு வெக்கனும்... எழு வருசமா இங்க உள்ள இருக்கேன் ...

இரவினில் ஒற்றை நந்தாவிளக்கு மட்டுமே அந்த பெருங்கோயிலின் வெளிச்சமாய் இருந்தது.. பெரிதும் இருளடர்ந்த அந்த கோயிலின் அச்சத்தோடு அந்த இரவை கடந்தேன்..

அதிகாலை அமைதியாய் விடிந்தது நேரத்தின் அருமை இங்கு தேவைப்படவில்லை மெல்ல மெல்ல வெய்யில் பரவ விழித்தேன்... தயராகிவிட்டு.. என் மனதின் திருப்திக்காக இதர கல்வெட்டுகளை பிரதியெடுத்து படிக்க துவங்கினேன்..

"ஜெய வருடம் கார்த்திகை மாதம். சங்கணமாண்டி காவலிருக்க சத்தியம் பெற்ற சுற்றத்தார் அனைவரும் வழக்கம் போல் பணிக்கு சென்றனர்.. ஏற்கனவே ஏகபட்ட செலவினங்கள் செய்தும் நிறைவடையாத காரணத்தால் சலித்து போனான் ராஜராஜ சோழன்.. சலிப்பின் பேச்சை தாங்க முடியாத கருவூராருக்கும் சோழனுக்கும் வாதம் முற்றியதாக.. பூஜை நேரத்தில் மாதையன்" சொல்லியதாக குறிப்பிருந்தது..

அடுத்தடுத்த பிரதிகள் என்னை உலுக்கி எரிந்தன. வாதத்தின் இறுதியில் கோயிலையே இடித்து அழிப்பதாக வெகுண்டான் ராஜராஜன் பின்னர் தம்மை உணர்ந்த இருவரும் தவறை உணர்ந்து இதுபோல் இனியாரும் அழிக்க முற்படாத வண்ணம் காவலை பலப்படுத்த எண்ணினர்...


அரக்கரும் அவுணரும் அக்கொடுத் தீயரும்

ஒருகணம் துணியா ஒருபெரும் பாவம்

அரங்கேற்றத் துணிந்தார் அதர்வன வேதம்

சிரங்கொய்து படைத்தார் சிறப்பென முடித்தாரே..

(இனி தஞ்சை கோயிலின் கட்டுமான காலத்திற்கு கதை போகிறது )

குருவாகிய கருவூராரே எந்தன் சிந்தை கொண்ட பயத்திற்கு என்ன வழி வைத்துள்ளீர்.. என் சங்கடம் தீர்க்க என்ன வழி வைத்துள்ளீர்... என்றான் ராஜராஜ சோழன்..


பொறு மகனே சாத்திர வல்லுநரை கலந்துள்ளேன் அவர்கள் ஆய்ந்து நன்மார்க்க மொன்று உரைப்பர்.. என்றார் கருவூரார்..

கோயிலின் நந்தி மண்டபத்தில் அமர்ந்திருந்தனர் இருவரும்.. கருவூரார்க்கு இது பெருங்கனவு அதற்கு பாதகம் வர விட்டுவைப்பாரோ.. ராஜராஜனுக்கும் நெடுநாள் ஆசை உழைப்பு செலவு.. இருவரும் ஆழமாக சிந்தித்திருந்தனர் அவர்தம் மனதுள் அந்த அம்பலநாதனை பெரியோனை மனமுருக வேண்டினர்... மங்கு இருளில் மறைந்த மந்திரி பொங்கு ஔியில் மிடறி வந்தார்.. மன்னன் மனதை மனனம் செய்து வைத்திருந்த மந்திரி ஆவார் அவர்...


முன்னமே முறையொன்றை வேண்டி மறையாளர் பலரை வேலைபடுத்தி வைத்திருந்தேன் மன்னவா.. துயரது கடப்பீர் சென்ற காவலன் வந்து துல்லிய வழியோதுவான்.. என்றுரைத்தார் மந்திரி

இவர்கள் உரையாடல் நிகழும் மட்டில் பரந்த இருளில் இருந்து ஔிக்கு நகர்ந்தான் ஒரு காவலாளி...

ஆயம் காத்த அரசர் வாழி.. தேயம் காத்த தென்னன் வாழி.. ஆங்கே ஆன்மம் வளர்த்த சித்தர் வாழி .. யாண்டும் நன்மை உதிர்க்கும் அமைச்சரும் வாழியே.. என்று ஒப்பித்தான் காவலன்..

ஈண்டு வந்த விடயமேது மொழி... என்று ஆணையிட்டான் ராஜராஜன்...


மதிசூழ் மந்திரியினையும் மனஞ்சூழ் மன்னவரையும் மறையார்கள் காண வேண்டி வருகை புரிந்துள்ளனர் அரசே...

கலையிழந்த மன்னர் முகம் ஔி கண்ட வழிப்போக்கனாய் மிளிர்ந்தது.. நகரத்தில் எண்ணைக் கொப்பரையில் வாட்டியது போல் மனது வாட்டிய பொழுது தப்பிக்க ஒரு சிறுவழியும் பெரியது அல்லவா.. மன்னர் கூறுமுன் மந்திரி அவர்களை அனுப்பும்படி மந்திரி காவலாளியை பணித்தார்...


திரண்ட பட்டாடையை தோளில் சுற்றி ஒருமுனையை கரத்தில் தாங்கியபடி நெற்றி நிறைய சிவச்சின்னம் பூசி.. அகன்ற தோள்களில் பற்பல மணிகளுடன் தென்பட்டனர் ஐவர்..

அரசர் வாழ்க. நாங்கள் நம்தேசத்தில் சாத்திர விற்பனராக தொழிலுருகிறோம். தாங்கள் தம் மனத்துயரை நீக்க சாத்திரத்தில் மார்க்கம் தேடுவதாக மந்திரி அவர்கள் எம்மை இங்குவர பணித்தார்... என்றனர் மறையாளர்கள்..

தூரத்தில் சிற்பகளை உளிகள் மேவும் ஓசை ஒலித்துக் கொண்டிருந்தது.. இரவுபகலாக மக்கள் இக்கோயிலுக்கு உழைப்பதை எண்ணி கருவூரார் ஆனந்தம் கொண்டிருந்தார்..


ஆம் மறையோரே, இப்பேராலயம் என்றன் நெடுநாள் கனவு மட்டுமன்று இதோ மக்களின் பெரும் உழைப்பும் அவர்தம் ஞானமும் திறனும் புலனாகும் கோட்டமும் கூட... ஆகவே எதிர்காலத்தில் இது யாராலும் அழிந்துபடாத வண்ணம் காத்துவைக்க ஏதேனும் மார்க்கம் உள்ளதோவென வினவினேன்.. மார்க்கமானது உள்ளதன்றோ..?..

சற்றுநேரம் தயக்கத்தினால் அமைதி நிலவ தொலைவில் பணியாட்களின் கூச்சலும் உளியோசையும் யானைகளின் பிளிறலும் ஒலிக்க.. தன் குரலை கனத்துக் கொண்டு சோழன் வினவ..

மார்க்கம் உண்டு எம் மன்னவா எனினும் ...

எனினும் யாது மறையோரே ... என்ன தயக்கம்..

எனினும் எந்தலைவா அது அத்தனை எளியதல்ல ...


என்ன மறையோரே இந்த சோழனை கோழை என்றெண்ணினீரோ.. அலையாடு வங்கமதை ஏரியென்று மொழியும் படி கடற்படை கண்டு .. வாணிபம் வளர்த்த ராஜராஜனுக்கு அரியது மொழிந்தீரோ... அப்பாலுள்ள சப்பானியரையும் மேல்நாட்டு மேதைகளையும் கண்ட ராஜராஜனால் ஆகாத காரியமா?.. என்று பொருமினான் சோழன்..

மன்னித்தருள் மன்னவா.. நான் அப்பொருள் தருமாறு மொழியவில்லை... இங்குள சங்கடம் வேறு மன்னவா.. அதை மொழியவே அச்சமுறுகிறேன் ஆண்டவா..


சோழன் முன் அச்சமும் ஐயமும் தேவையில்லை தெளிவுர கூறும் .. என்றான் சோழன்..

மன்னவா மறைநான்கு என்பதை நாமும் நானிலமும் நன்கறிந்ததே.. அவற்றுள் நான்காம் மறையாம் அதர்வனத்தில் ஒரு மார்க்கமுண்டு... அஃது கொடூரமானது... திக்குக்கு ஒன்றாய் இவ்வாலய பிரகாரத்தில் பலிபீடமொன்று அமைத்து அர்த்தசாம வேளையில் தேவிக்கும் திக்கு பைரவருக்கும் பீடமொன்றுக்கு நூறுபேர் வீதம் பலியிட வேண்டும் அக்குருதியினை அள்ளி இவ்வாலயத்தை சுற்றி ஊற்றவேண்டும்.. மேலும் .. என்று அங்கம் அதிர சொல்லி முடித்தார் மறையாளர்...

இதனை செவியுற்ற சோழன் யாவும் சோர்ந்து துடித்தான்.. தம் மக்களை தானே பலியிடுவதா?.. என்று அழுது கரைந்தான்...

மறையாளர்களை அனுப்பி வைத்த மந்திரி மன்னரை அணைத்து தாங்கினார்..


கருவூரார் எழுந்தார்.... மகனே என்னிடம் ஒருதிட்டம் உண்டு.. சுற்றுபுற கிராமத்தில் இருந்து இங்கு பணிக்கு வரும் மக்களை அந்தந்த திக்குக்கு பலியிடலாம்..இது எளிது.. என்றார்..

குருவே தாமா இப்படி உரைப்பது அவர்களும் என் மக்களல்லவா .. மன்னன் என்கிற மட்டில் நான் அவர்தம் தந்தையல்லவா. எப்படி இப்படி ஒரு கொடும் எண்ணம் உங்களுக்குள் தோன்றிற்று... என்று வினவினான் ராஜராஜன்...

கேள் மகனே நாம் போர்தனில் பல வீரர்களை இழந்துதான் வெற்றி பெறுகிறோம் அதுபோலவே இங்கும்.. சிந்தித்து பார் இது உன்னுடையது மட்டுமல்ல இத்தனை மக்களின் அயரா உழைப்பு... என்று தன் மாய சொற்களை ஏவினார். ...

நாளைக்காலை வரை என்னை இதுபற்றி சிந்திக்க விடுங்கள் நான் காலை என்மனங்கொண்ட கயிலையானிடம் இதுபற்றி வேண்டுகிறேன். அவனது மனம்படி எதுவாயினும் நடக்கட்டும்.. என்றான் ராஜராஜன்..

அவ்வாறே ஆகட்டும் மகனே ... பொறுமையாக சிந்தி.. இறைவன் உமக்கு நல்வழிகாட்டட்டும்.. என்று இருள்விழுங்க விலகிச்சென்றார் கருவூரார்..


மறுநாள் சாமம் ... மறையாளர் உரைத்ததுபோல பீடங்கள் வைக்கபட்டது... மக்கள் கதறக் கதற மன்னனின் ஆணைப்படி பலியிட பட்டனர்.. திக்கொன்றுக்கு நூறு விதம் எண்ணூறும் உபதிக்கினுக்கு நூறாய் ஆயிரத்து அறநூறு பேரினை பலியிட்டது சோழப்படை... மனதின் துயரது நன்று தீர்ந்ததென மகிழ்ந்தான் சோழன்..


அன்று தொடங்கி ஆலயத்தில் இரவினில் யாரும் பணிசெய்ய முடிவதில்லை பல்வேறு விசித்திரங்கள் துர்செயல்கள் என மக்களை துன்புறுத்தின.. பிரதிஷ்டை செய்யவும் பல்வேறு தடைகள் வந்து தொல்லை தந்தன.. தகவலறிந்த மன்னனும் கருவூராரை அகவலுற .. மீண்டும் மறையாளர்கள் அங்கே துர்ஆன்மாக்கள் நிறைந்திருப்பதாக மொழிந்து அங்கோர் காளியின் சந்நிதி வைத்து அந்த துர்சக்திகளை கட்டுபடுத்தி ஆலயத்தின் காவலாக வைக்க சிறப்பு யாகங்களை புரியுமாறு அறிவுருத்த .. அவ்வண்ணமே யாவும் நிகழ்ந்தது.. எனினும் மன்னவனால் நிம்மதியடைய இயலவில்லை.. ஆகமங்களின படி புனித நீராட்டும் நடத்த இயலவில்லை.. தன் தவறை உணர்ந்த மன்னனும் தற்கொலை செய்துகொள்ள...

அவ்விரவு பலிதந்த வீரர்களும் கோபுரத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்ள.. மனமுடைந்த கருவூரார் யோகத்தில் தன்னுயிர் துறக்க. யாவும் போனது....


இத்தனையும் படித்த எனக்கு அங்கம் நடுங்கிட தடுக்க இயலவில்லை... அடுத்த கல்வெட்டில்... பாவம் சோழனும் சித்தனும் செய்த வஞ்சகம் சங்கணமாண்டி காத்து நிற்பதாய் வாக்குத் தந்த மக்களெல்லாம் பலியானதால் குற்றவுணர்ச்சி கொண்டு தனக்கான பூசைகளை தானே வெறுத்து தன்னை தானே இக்கோயிலுக்குள் பூட்டிக்கொண்டார் சங்கணமாண்டிச்சாமி...

மேலும் தொடர்ந்தேன்.. அன்று நடந்ததற்கு பதில் படையலாக இன்றும் ஒரு பலிபூசை நடக்கப் போகிறது.. அக்கோயில் முன்வாசலில் ....


ராசராசன் செய்த ராசவஞ்சம் தனக்கு

பூசக்கீடு செய்ய பிறந்தொருவன் வருவான்

நீசவாண்டு் ஆயவே நீசன்குலக் கருத்து

வீசவரு வான்தனை விலைதரு ராசனே....


என்றோ ஒருநாள் ராஜன் தான் சோழர் வம்சம் என்று சொன்னது நினைவுக்கு வந்தது.. ராஜன் பலியாக போகிறானா?.. அய்யோ.. எப்போது .. நீசவாண்டு நீசம் ... நீசம் ... விசம் விசவாண்டு விசவருடம் ... அய்யயோ இந்த வருசம் தான் .எப்படியாவது தப்பிச்சி அவன காப்பாத்தனுமே .. வெளியேற போராடினேன் .. இயலவில்லை.. வேறுவழியின்றி இருக்கும் ஒரே வேலையான கல்வெட்டினை படிக்கத் தொடங்கினேன்.. அதிலேனும் ஏதேனும் வழியுள்ளதா என்று...

உடனொருவன் இருப்பன் உயிரழிந்தார் வழியினன்

உடன்பாடு தன்னால் ஈண்டுவந் தடைவன்

உடனேக முயல்வன் உண்மையறிய தேடுவன்

உடன்படு ஆணையால் உயிர்பிழைப் பனே..


கடவுளே... நான் இந்த வம்சமா.. அதனாலதான் என்னால இங்க வரமுடிஞ்சதா?.. என்ன காப்பாத்த தான் இந்த சாமி என்ன அடைச்சி வெச்சிருக்கா?.. திடீரென்று சங்கணமாண்டி மீது பக்தி பெருகியது..

தன் சனத்த சத்தியத்த காப்பாத்த முடியலனாலும் இன்னைக்கி என்ன காப்பாத்தி அந்த சத்தியத்த காப்பாத்த நினைச்சிருக்கு...

இருள் சூழ்ந்தது என் அச்சம் இப்போது இல்லை.. நம்பிக்கை வந்திருந்தது சங்கணமாண்டி மேல்.. என்றாலும் ராஜனை எண்ணி கவலை வந்தது..


பலியான ஆவி ஒன்று ராஜனை பிடிக்கும் அது ராஜனை பலிகொள்ளும் அந்த பலியினால் அத்தனை துர்சக்திகளும் விடுதலையாகும்... அதர்வன வேதத்தின் குறிப்பிது..

தஞ்சை கோயில் இத்தனை காலம் கும்பாபிசேகம் ஆகாததின் உண்மையான காரணம் இன்று புரிந்தது...

வலசை பதினாறு வளவன் படிய என்ற பாடலின்பொருள் இப்போது புரிந்தது..

பலியிட்ட பதினாறு திக்கு மக்களின் குலதெய்வத்திற்கும் மன்னிப்பு வேண்டி படையலிட்டு அந்த ஆத்மாக்களை சாந்தி செய்த ஒருவனே இக்கோயிலினை கும்பாபிசேகம் செய்ய இயலும்...


பலி... வேதங்கள் நல்லதை மட்டுமே போதிப்பதில்லை... மன்னர்களுக்கும் மக்கள் பொருட்டாக தோன்றவில்லை...

அந்த விடியலில் சங்கணமாண்டி கோயிலே மிளிர்ந்தது.. கதவு திறந்து வழிவிட்டது... சங்கணமாண்டி தன் குற்றவுணர்வை சரிசெய்து கொண்டது... நானும் அந்த பொய்யான அரசானையை கிழித்தெரிந்தேன்...

எனக்குள் ஒரு பலியை தடுக்க முடியாத குற்றவுணர்வு நிறைந்திருந்தது.. அன்று ராஜன் சொன்னது போல் முன்னோர்கள் கல்வெட்டுகள் ஒருவித வரலாற்று முன்னறிவிப்புகளே...



Rate this content
Log in

More tamil story from பவித்ரன் கலைச்செல்வன்

Similar tamil story from Horror