ஞாயம்தானா?பதினொன்று(service)கோவைஎன். தீனதயாளன்
ஞாயம்தானா?பதினொன்று(service)கோவைஎன். தீனதயாளன்


அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
என் நண்பர் ஒருவரின் வீட்டு உபயோகப் பொருள் ஒன்று பழுதடைந்து இருந்தது. கொரானா–லாக்டவுன் காரணத்தினால் சில நாட்கள் அதை சரிப் படுத்த முடியவில்லை. அதனால் சற்று சிரமமாக இருந்தது.
எனவே, லாக்-டவுனில் சற்று தளர்வு அறிவித்த சமயத்தில், வீட்டு உபயோகப் பொருட்கள் பராமாரிக்கும் ஒரு நிறுவனத்திற்கு தெரியப் படுத்தினார். அதன் பணியாட்கள் வந்து ஆராய்ந்து பார்த்து விட்டு, அதை அவர்களது பணிமனையில் வைத்துதான் சரி செய்ய முடியும் என்று கூறினார்கள். நண்பரின் அனுமதி பெற்று எடுத்துக் கொண்டு சென்றார்கள். பிரச்சினை நீக்கி, நல்ல பணி புரியும் நிலையில் அதை எடுத்துக் கொண்டு வரும்படி அவர்களிடம் நண்பர் சொல்லி அனுப்பினார்.
இடையில் தொலை பேசியில் அழைத்து, அதில் ஏதோ ஒரு உதிரி பாகம் மாற்ற வேண்டும் என்றார்கள். விவரம் கேட்டு, உதிரி பாகத்தின் விலையை தெரிந்து கொண்டு, மாற்றுவற்கு சம்மதம் சொன்னார் நண்பர்.
பின்பு, அன்று மாலை அந்த வீட்டு உபயோகப் பொருளை சரி செய்து கொண்டு வந்து விட்டார்கள். பணம் செலுத்த ஸ்வைப்பிங் மெஷின் கொண்டு வரச் சொல்லி இருந்தார் நண்பர். ஆனால் மறந்து விட்டதாகச் சொன்னார்கள். பின்பு குறிப்பிட்ட தொகையைக் கேட்டார்கள். பில்லைப் பார்த்தால் அதில் அந்த உதிரி பாகத்திற்கான குறிப்பு எதுவும் இல்லை. (ஒரு பொருளைக் காண்பித்து, மாற்றப்பட்ட உதிரி பாகத்தின் பழைய உதிரி என்று ஒன்றைக் காட்டினார்கள்.) ஆனால் அதற்கான பணம் மட்டும் கேட்டார்கள். காரணம் கேட்டதற்கு ஏதோ ஒன்றைச் சொன்னார்கள். நண்பரும் சிறிது தயங்கி விட்டு, பணத்தைக் கொடுத்து அனுப்பி விட்டார்.
ஓரிரு நாட்கள் கழித்து அந்த நிறுவனத்திலிருந்து, ‘செய்த பணியில் திருப்தி நிலை’ (service feedback) பற்றி பின்னூட்டம் கேட்டு தொலை பேசி வந்தது.
என் நண்பர் என்னிடம் சொன்னார்: பின்னூட்டம் கேட்டு தொலை பேசி வந்தவுடன், உதிரி பாகத்தை ஏன் பில்லில் இணைக்க வில்லை என்று கேட்கலாம் என்று நினைத்தேன். ஆனால் கேட்கவில்லை.
‘ஏன்?’ என்றேன் நான்.
அவர்கள் உண்மையிலேயே உதிரி பாகத்தை மாற்றினார்களா இல்லையா என்று எனக்குத் தெரியாது. ஒரு வேலை அவர்கள் மாற்றாமல் என்னிடம் பணம் வாங்கியிருந்தால், அந்த பணியாட்கள் மீது நடவடிக்கை எடுக்கப் படலாம். அதன் பின் ‘பணியிடை நீக்கம்’ அல்லது ‘பணிநீக்கம்’' என்று ஏதாவது செய்து விட்டால் சம்மந்தப்பட்டவர்கள் பாதிக்கப் படுவார்கள். இந்த கொரோனா கால கட்டத்தில் அவர்களுக்கு வேலை போய் விட்டால், இன்னொரு வேலை தேடி அவர்கள் மிகவும் சிரமப் பட நேரிடும். எனவேதான் ‘நான் ஏமாற்றப் பட்டிருக்கலாம்’ என்கிற சந்தேகம் எனக்கிருந்தாலும் கூட கண்டு கொள்ளாமல் இருந்து விட்டேன்’.
நண்பரின் இந்த விளக்கத்தைக் கேட்டேன். என் நண்பரின் மனிதாபிமானமுள்ள இந்த செயல் பாராட்டுக்குரியதா அல்லது இளித்தவாய்த்தனமானதா?