DEENADAYALAN N

Inspirational

4  

DEENADAYALAN N

Inspirational

ஞாயம்தானா? பனிரெண்டு(drinks)

ஞாயம்தானா? பனிரெண்டு(drinks)

2 mins
36



அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


சமீபத்தில் என் பால்ய கால சினேகிதன் ஒருவனை சந்தித்தேன். குசலம் விசாரித்து விட்டு, “சமீபத்தில் ‘ஞாயம்தானா?’ என்று தலைப்பிட்டு நீ வெளியிடும் சில படைப்புகளை படித்தேன். நான் இப்போது சொல்லும் இந்த சம்பவம் இதில் அடங்குமா என்று பார்” என்றான்.


‘சொல்’ என்றேன்.


அவன் சொல்லத் தொடங்கினான்:

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முந்தைய காலம். மதுவிலக்கு அமலில் இருந்த சமயம் அது! அதாவது அப்போதெல்லாம் மது அருந்துவது சட்டப்படி குற்றம்! மது அருந்தியவர்களைப் பார்ப்பது என்பது மிக அரிது. இன்னும் சொல்லப்போனால் அந்த வயதில் அதன் அர்த்தமோ விளைவோ கூட எனக்கு சரியாகப் புரியாது.


தெருவில், ஒரு குடிகாரர், ஒரு நிலையில் இல்லாமல் தள்ளாடிக் கொண்டு போனால் எல்லோரும் ‘டக் டக்’ என்று கதவுகளை சாத்திக் கொள்வார்கள்.

குடித்தவர்களைக் கண்டால் குழந்தைகளும், பெண்களும் - ஏன் சில ஆண்களும் கூட மிகவும் பயப்படுவார்கள்.


அப்படி இருந்த காலத்தில் என் அப்பா இறந்து விட்டார். அப்பா இல்லாததால் என் மாமா அவ்வப்போது வெளியில் போகும்போது என்னையும் அழைத்துச் செல்வார். என் சந்தேகங்களை தீர்த்து வைப்பார். வேர்க் கடலை வாங்கி சாப்பிட்டுக் கொண்டே நடப்போம்.


என் மாமாவிற்கு எந்த கெட்ட பழக்கமும் இருந்ததில்லை. அவர் புகை பிடித்தும் நான் பார்த்ததில்லை. நல்ல குணவான் என்று குடும்பத்தில் கருதப்பட்டவர்.


ஒரு நாள் மாலை ஏழு அல்லது ஏழரை மணி இருக்கலாம். நானும் எனது மாமாவும் ஒரு இடத்திற்குப் போய்விட்டு திரும்பி வந்து கொண்டிருந்தோம். வழக்கம் போல் அவர் கையில் ஒரு வேர்க்கடலைப் பொட்டலமும் என் கையில் ஒரு வேர்க்கடலைப் பொட்டலமும் இருந்தது.


ஒரு திருப்பம் வந்த போது ‘ஆஜானுபாகு’வாக இருந்த இரண்டு பேர் கைகளை குறுக்காக வைத்து எங்களை தடுத்தி நிறுத்தினர். (பிற்பாடு அவர்கள் மஃப்டி போலீஸ்காரர்கள் என்று தெரிந்தது!)


‘எங்கே போயிட்டு வர்றே..?’ என்று சற்று அதிரும் குரலில் கேட்டனர். என் மாமா சொன்னார்.


‘எங்கே வாயை ஊது…’ என்று வாயை ஊதச் சொன்னார்கள்.


என் மாமாவுக்கு அதிர்ச்சி. என்றாலும் அவர்கள் சொன்னது போல் செய்தார்.


‘சரி போ..’ என்று சொல்லி விட்டு சென்று விட்டார்கள்.


நான் சிறு பையன் என்பதால் என்னை அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.


நடந்தது இவ்வளவுதான். ஆனால் இதற்காக என் மாமா அடைந்த சோகமும் வருத்தமும் சொல்லில் அடங்காது! இரண்டு நாட்கள் சரியாக சாப்பிடக் கூட இல்லை. ‘என்னைப் போய் வாய் ஊதச் சொல்லிட்டாங்களே… ‘ என்று சொல்லி சொல்லி வருத்தப்பட்டார்.


ஒரு வழியாக அவரை சமாதானம் செய்ய இரண்டு நாட்கள் ஆனது.


ஆம்! அப்போது பெரும்பாலான மக்கள் அப்படித்தான் இருந்தார்கள். தவறு செய்யக் கூடாது என்பது மட்டுமல்ல. தான் தவறு செய்ததாக யாரும் சந்தேகம் கூட கொள்ளக் கூடாது என்று கருதினார்கள்.


ஆனால் காலம் மாறியது. சில வருடங்கள் உருண்டோடின. ‘மதுவிலக்கு’ என்பது விலக்கிக் கொள்ளப் பட்டது. அப்படிப் பட்ட அந்த மாமாவே பிற்காலங்களில், அதாவது ‘மதுவிலக்கு’ விலக்கிக் கொண்ட காலத்தில், அவ்வப்போது அந்த பழக்கத்தைக் மேற்கொண்டார்.


இந்த கொரோனா ஊரடங்கின் போது மது இன்றி தளர்ந்து போய் மிகவும் சிரமப்பட்டார். ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, மது கிடைத்த பின் தான், ஓரளவு நிம்மதி அடைந்தார்.


இந்த மாற்றத்திற்கு யார் அல்லது எது காரணம்?


‘எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்!’ என்ற விவேக்கின் ஜோக் போல எப்படி இருந்த அவர் இப்படி ஆயிட்டாரே..!


யார் மீது குற்றம் சொல்வது?


மதுப் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட அவரைக் குற்றம் சொல்வதா அல்லது அந்த பழக்கம் ஏற்படும்படி மதுவை எளிதாக கிடைக்கச் செய்த இந்த சமுதாயத்தைக் குற்றம் சொல்வதா..?

என நண்பன் கேட்கிறான்.


இதோ! என் நண்பனின் கேள்வியை உங்கள் முன் வைத்து விட்டேன்!




Rate this content
Log in

Similar tamil story from Inspirational