ஞாயம்தானா? - ஒன்று
ஞாயம்தானா? - ஒன்று
அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!
நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் வரை பிரச்சினை இல்லை. எங்கேயாவது தேங்கி நின்றாலோ, ஏதோ காரணத்திற்காக ஓட்டம் தடை பட்டாலோ, திடீரென்று அதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டாலோ பிரச்சினை தொடங்குகிறது.
அதே போல, நம் வாழ்க்கையும் இயல்பாக ஓடிக் கொண்டிருக்கும் வரை பிரச்சினை இல்லை. சில சமயம் நம் மனதை பாதிக்கும் வண்ணம் நம் வாழ்க்கை ஓட்டத்தில், சில நிகழ்வுகள் நிகழ்ந்து விடுகின்றன.
சில நிகழ்வுகளை இது ஞாயமில்லை என்று கூறி விடுகிறோம்
சில நிகழ்வுகளை இது ஞாயம்தானே என்று ஏற்றுக் கொள்கிறோம்.
சில நிகழ்வுகளை இது ஞாயம்தானா என்று கேட்கிறோம்.
சில நிகழ்வுகளை இது ஞாயம்தானோ என்று யோசிக்கிறோம்.
ஒரு உதாரணம்:
ஒரு நாள் ரேஷன் கடை வரிசையில் நின்றிருந்தேன். (இது கொரோனாவிற்கு முந்தைய காலம்) வரிசை ஒழுங்காகவே நகர்ந்து கொண்டிருந்தது. பில் போடும் இடத்தை நெருங்கும் சமயம் வயதான மூதாட்டி ஒருவர் தயங்கித் தயங்கி என் அருகில் வந்தார்.
‘தம்பி.. நீ பாமாயில் வாங்கறயா..?’ என்று கேட்டார்.
முதலில் புரியவில்லை. சற்று யோசித்து, ‘இல்லை பாட்டி’ என்றேன்.
‘எனக்கு வாங்கி குடுத்திடேன் தம்பி நான் அதுக்கான காசு தந்தர்றேன்’ என்று பரிதாபமாக கேட்டார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ரேஷனில் வழங்கும் ஒரு பொருளை, அது தேவைப் படாத பட்சத்தில் வாங்காமல் இருப்பதுதான் ஞாயம். வேறு யாராவது தேவைப் படுகிறவர்களுக்கு அது போய்ச் சேரும்.
l-align-justify">
நான் பாட்டியிடம் சொன்னேன்: ‘அது ரொம்ப தப்பு பாட்டி.. ரேஷன் அப்பிடீங்கறதே எல்லாருக்கும் பங்கு போட்டு குடுக்கறதுதான்.. அதுலே ஏதாவது எனக்கு வேண்டாம்னா நான் விட்டுடனுமே தவிர இன்னொருத்தருக்கு வாங்கிக் கொடுக்கறது, அடுத்தவங்களுக்கு துரோகம் செய்யற மாதிரியாகும்..’ என்று எடுத்துச் சொன்னேன்.
பாட்டிக்கு எதுவும் புரியவில்லை. தயங்கிய படியே நகர்ந்து விட்டார்.
ரேஷனில் சர்க்கரையும் துவரம் பருப்பையும் மட்டும் வாங்கிக் கொண்டு திரும்பி வரும்போது என் மனதில் ஒரே போராட்டம்! பாட்டிக்கு வாங்கிக் கொடுத்திருக்கலாமோ? நான் செய்தது ஞாயம்தானா?. அந்த பாட்டியின் கெஞ்சும் தோற்றம் என் மனதை விட்டு அகல மறுத்தது. மன உளைச்சலுடனேயே வீட்டிற்கு திரும்பினேன்.
அன்று மாலை செய்தித்தாளில் ஒரு செய்தியைப் பார்த்தேன். அதில், ‘ரேஷன் பாமாயில் பறிமுதல்.. கடத்த முயன்ற இருவர் கைது!’ என்று வந்திருந்தது. எனக்கு மனம் சுரீரென்றது.
அந்த மூதாட்டிக்கே பாமாயிலை வாங்கிக் கொடுத்திருக்கலாமோ என்று என் மனம் என்னை உறுத்தியது!
சரி நீங்கள் சொல்லுங்கள்! அந்த பாட்டிக்கு நான் பாமாயில் வாங்கிக் கொடுக்காதிருந்தது ஞாயம்தானா? அல்லது அந்தப் பாட்டிக்கு நான் பாமாயில் வாங்கிக் கொடுத்திருக்கத்தான் வேண்டுமா?
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்!
இது மட்டும் அல்ல. வரவிருக்கும் நாட்களில் மேலும் பல ‘ஞாயம்தானா?’ நிகழ்வுளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன். ஒவ்வொரு நிகழ்வுகளையும் படிக்கப் போகும் நீங்கள் அந்த நிகழ்வுகள் ‘ஞாயம்தானா?’ என்பதைப் பதிவு செய்ய வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். அந்தப் பதிவுகள் மனித மனங்களின் ஒட்டு மொத்த உணர்வை பிரதிபலிக்கிறதா பார்ப்போம்!
அடுத்த ‘ஞாயம்தானா?’ பதிவேற்றம் ஓரிரு நாளில்!