DEENADAYALAN N

Classics

5  

DEENADAYALAN N

Classics

ஞாயம்தானா? – 18 (பிஞ்சுமனசு)

ஞாயம்தானா? – 18 (பிஞ்சுமனசு)

2 mins
629அன்பு வாசக நண்பர்களே! வணக்கம்!


உலகத்திலேயே மென்மையானது எது?


‘மலர்கள்’ என்று சொல்லலாமா? அதற்குள் ஒரு காதல் ஜோடி ‘காதல்’தான் உலகிலேயே மென்மையானது என்கிறது-அப்படியா! ‘இறகுகள்’ என்று சொல்லலாமா? ஏன்? ‘பஞ்சு மிட்டாய்’ இல்லையா என சில ‘குட்டீஸ்’ சிரிக்கின்றன! சிந்தித்துப் பார்த்தால் ‘மேகம்’ கூடத்தான் மென்மை! ‘அப்படிப் பார்த்தால் மெல்லிய மேகத்தில் இருந்து பொழியும் நான் அதனினும் மென்மையாயிற்றே’ என்று எட்டிப் பார்க்கிறது ‘தண்ணீர்’!


ஒரு நிமிடம் வாசகர்களே! வாசிப்பை சற்றே நிறுத்தி விட்டு, நீங்களும் சிந்தியுங்கள். ‘உலகத்திலேயே மென்மையானது எது’ என்று, உங்களுக்கு தோன்றுவதை சொல்லுங்கள்!


‘உலகத்திலேயே மென்மையானது பிஞ்சுக் குழந்தைகளின் மனசு’ என்று நீங்கள் யாராவது சொல்லியிருந்தால் உங்களை வணங்குகிறேன்.


ஆம்! என்னைப் பொறுத்த வரை பிஞ்சுக் குழந்தைகளின் மனசுதான் இந்த உலகத்திலேயே மிக மென்மையாது! குழந்தைகளின் மனசு கள்ளம் கபடு அற்றவை. உயர்வு தாழ்வு அறியாதவை. ஏழை பணக்காரர் வித்தியாசம் தெரியாது. சாதி மத பேதம் புரியாது. உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசத் தெரியாது. 


சரி! இத்தகைய பஞ்சு போன்ற மனமுடைய குழந்தைகளுடன், பெரியவர்களாகிய நாம் எப்படி பழகுகிறோம்?


இதுவே என் கவலை!


“குழந்தைகள் கேட்பதையெல்லாம் கொடுத்து விடக்கூடாது. ‘இல்லை’ என்பதையும் குழந்தைகளுக்கு சொல்லிப் பழக்க வேண்டும்’ என்னும் கூற்று சரிதான். ஆனால் அதற்காக, சில பெற்றோர், ஒரு பென்சில் கேட்டால் கூட, ‘நாளை வாங்கித் தருகிறேன்’ என்று சொல்லிவிடுவார்கள்!. கேட்டால், ‘எதுவும் கேட்ட உடனே கிடைத்து விடும் என்று அவர்கள் எதிர்பார்க்கக் கூடாது’ என்று ஞாயப்படுத்துவார்கள். ஆனால் வகுப்பில், பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் ஒரு குழந்தையிடம் இருக்கும் ஒரு முழு பென்சிலைப் பார்த்து அந்தப் பிஞ்சு நெஞ்சில் ஒரு சிறிய ஏக்கம் உருவாகாதா?


சாப்பிடும் போது சில குழந்தைகள் விழுங்காமல், வாயிலேயே வைத்திருக்கும். ‘திருட்டுப் பயல் அப்பிடியே வைத்திருக்கிறான் பார்..’ என்று அந்த மழலைக்கு ஒரு திருட்டுப் பட்டம் கிடைக்கும். சில குழந்தைகள் எதற்காகவாவது அழும் போது, ‘எல்லாம் சும்மா.. இப்பிடி அழுது மாய்மாலம் பண்ணாதான் கேட்கிறது கிடைக்கும்னு ‘ட்ராமா’ போடுது’ என்று ஒரு சிலர் அக்குழந்தைக்கு ‘ஏமாற்றுப்பேர் வழி’ப் பட்டம் கொடுப்பார்கள். சில சமயம் குழந்தைகளை தாங்கள் சொல்வதை செய்ய வைக்க “இரு ‘பேய் மாமா’ வைக் கூப்பிடுறேன் பாரு” என்று மிரள வைப்பார்கள். பக்கத்து வீட்டு குழந்தைகளோடு ஒப்பிட்டு அந்தப் பிஞ்சுகளின் பஞ்சு மனதில் காயங்களை ஏற்படுத்துவார்கள். இன்னும் சிலர் ‘இன்னொரு தடவை இரண்டாம் வாய்ப்பாட்டை தப்பா சொன்னே, இருட்டு ரூமுக்குள்ளே வெச்சி கதவை பூட்டிருவேன் பாரு’ என்று ஒரு அழுத்தத்தைக் கொடுத்து, அந்த பிஞ்சு மனசில் ஒரு பயத்தை உருவாக்குவார்கள். சில சமயம் தண்டனைகளுக்கு பயந்து, தப்பித்து, குழந்தைகள், தங்களைக் காப்பாற்றச் சொல்லி, தங்கள் தாத்தா பாட்டிகளை நோக்கி ஓடும். மேலும் ஒரு சில அப்பாவும் அம்மாவும் சேர்ந்து நின்று கொண்டு, ‘உனக்கு அப்பாவைப் பிடிக்குமா இல்லேன்னா அம்மாவைப் பிடிக்குமா’ என்று ஒரு கேள்வி கேட்பார்கள். அந்த இறகு போன்ற மனதில் ஒரு போராட்டம் நடக்கும்.. அம்மாவை சொன்னால் அப்பாவின் ஆதரவு போய் விடும். அப்பாவை சொன்னால் அம்மாவின் ஆதரவு போய் விடும். அந்த சின்னஞ்சிறு மனது குழம்பி தவிக்கும்.


மேலே குறிப்பிடப்பட்டிருப்பவை எல்லாம் சிலருக்கு சாதாரண நிகழ்வாக தோன்றலாம். இன்னும் சிலருக்கு, ‘என்ன இந்த ஆள் இதைப் போய் இப்படி ‘சீரியஸ்’ஸாக எடுத்துக் கொள்கிறார்.’ என்றும் தோன்றலாம். ஆனால் அந்தப் பிஞ்சுக் குழந்தைகளின் மன நிலையில் இருந்து இதைப் பார்க்க வேண்டும். என்னவென்றே சரியாகப் புரியாது. ஆனால் மனம் புண்பட்டிருக்கும்.


பெற்றது முதல், நன்கு விவரம் தெரிகிற வரை, ஒரு குழந்தை கடவுளுக்கு சமம். அதன் மனதை புண்படுத்துவது என்பது கடவுள் மனதைப் புண்படுத்துவதைப் போன்றதுதான்.


குழந்தைகளை, குழந்தைப் பருவத்தில், குழந்தைகளாகவே வாழ விட வேண்டும். எக்காரணம் கொண்டும் விவரம் தெரிகிற வரை, குழந்தைகள் மனதை புண்படுத்தக் கூடாது அவர்களுக்கு விவரம் தெரிந்த பிறகு, நாம் ஒழுக்கமாக நடந்து அவைகளுக்கு வழிகாட்டினாலே எந்தக் குழந்தையும் கெட்டுப் போகாது.


நிறைய அன்பர்கள் என் இந்தக் கருத்தில் இருந்து மாறுபடலாம். உங்கள் கருத்தை சொல்லுங்களேன்.

Rate this content
Log in

Similar tamil story from Classics