நீயே என் ஜீவனடி 7
நீயே என் ஜீவனடி 7
"ஆனந்தி.... சீக்கிரம் கீழே வாம்மா... சாப்பிடலாம்.." என பர்வதத்தின் குரல் கேட்க, மாடியிலிருந்து கீழே எட்டிப் பார்த்தாள்.
அடியாட்கள் மட்டும் அங்குமிங்குமாக நிற்க 'நல்லவேளை அந்த ரவுடி இங்க இல்ல.' என தைரியமாக இறங்கினாலும் 'எங்கு போய் இருப்பான்' என பார்வையை அலையவிட்டாள். ஆனந்தி அவனைத் தேடிக் கொண்டே எதிரே வந்த அரவிந்தின் மேல் மோத நிலைதடுமாறி அவனை பிடித்துக் கொண்டாள்.
அவனும் அவள் விழுந்து விடக்கூடாது என இடையில் கைவைத்தவன் அவளை கண்களால் பருகினான்.
ஏதோ கீழே விழுந்த சத்தத்தில் தன் நிலையை அடைந்தவன் அவன் கையை எடுத்து,அவளை பார்க்க அவள் இன்னும் அரவிந்தின் கண்களை தான் ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
' என்ன' என்பது போல் அவன் புருவம் உயர்த்தி கேட்க,
" என்னை கொஞ்சம் விடுகிறீங்களா?" எனக் கேட்டாள்.
"என்ன....?"
" அதான் நான் கீழ விழலேல.இப்பயாவது விடலாம்ல.இன்னும் ஏன் புடிச்சு இருக்கீங்க."
" பிடிச்சுருக்குறது நானா ...? நீயா.... ?" என அவன் தோள்களை அழுத்தி இருந்த அவளது கையினை பார்த்து கேட்க,
அப்போது தான் உணர்ந்து,இரண்டடி பின் நகர்ந்து 'அசிங்கப்பட்டியேடி ஆனந்தி' என பொறுமி கொண்டே 'ஈஈஈஈ...'என இளித்தவள், ' எஸ் ஆகிடலாம்' மென டைனிங் டேபிளை வந்தடைந்தாள்.
அவன் தோள்கள் அவள் தொடுதலில் இன்னும் லயத்திருக்க மனதில் சிரித்துக் கொண்டு அவள் அருகில் அமர்ந்தான்.
'இவன் ஏன் இங்க உட்கார்றான். ஓ.... கெஸ்ட்டோ...' என எண்ணியவள், 'இப்ப என்ன செய்யலாம். சரி நம்ம கெஸ்ட். நாம தானே கவனிக்கணும்.' என சிரித்தாள்.
"என்னாச்சும்மா. சாப்பாடு ஏன் இன்னும் வச்சுக்கல." என மருதமுத்து கூற,
"ஐயோ ..... அப்பா... என்ன நீங்க. கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம."
" ஏன்...? என்னாச்சு...?"
" என்னப்பா..... நீங்க சொல்லி கொடுத்தத நீங்களே மறந்துட்டீங்க. வீட்டுக்கு கெஸ்ட் வந்தா அவங்களை தானே மொதல்ல கவனிக்கணும்."
"என்ன கெஸ்டா...?" அரவிந்த் குழப்பமாக ஆனந்தியை பார்த்தான்.
" என்ன சார் பெக்க பெக்க ன்னு முழிக்கிறீங்க. என் அப்பா தான் சொன்னாரு நீங்க கெஸ்ட்ன்னு. கெஸ்ட நம்ம வீட்டுக்கு வர மாப்பிள்ளை மாதிரி பாத்துக்கணும்னு அப்பா அடிக்கடி சொல்லுவாரு. அதான் உங்கள மாப்பிள்ளை மாதிரி பாத்துக்க போறேன்."
(( ஒருவேளை கரு நாக்கா இருக்குமோ பழிக்கும்னு தெர்ஞ்சிருந்தா அவ அப்படி சொல்லியிருக்க மாட்டா.))
இருந்தாலும் அவள் மாப்பிள்ளை என்று கூறிய வார்த்தையில் மெய் மறந்து போனான்.
" ஹலோ பாஸ்..... மாப்ளன்னு சொன்னதும் கனவுக்கு போயிட்டீங்களா. அதெல்லாம் உங்க ஆள் கரெக்ட் டைம்க்கு வந்துருவா. நீங்க சாப்பிடுங்க." என தட்டை கண்காட்ட , அதை பார்த்ததுமே வயிறு நிறைந்தது.
"என்ன அப்படி பார்க்கிறீங்க. சாப்பிட ஆரம்பிங்க. விருந்தாளிங்க தட்ட ஃபுல்லா சாப்பிடலைன்னா அவங்களுக்கு நம்ம உபசரிப்பு பிடிக்கலன்னு அர்த்தமா."
' உன்னை கனவில நினைச்சதுக்கா இந்த தண்டனை. குடும்பமே உட்கார்ந்து சாப்பிடற சாப்பாட்ட என் தட்டுலயே வச்சா நான் எப்படி சாப்பிட' என நினைத்தவன் பாவமாக மருதமுத்துவை பார்த்தான்.
அவன் நிலைமையை புரிந்தவர்,
" என்ன பண்ற ஆனந்தி."
" நம்ம கெஸ்ட்ட தான்ப்பா கவனிச்சேன்."
" உன் வால கொஞ்சம் சுருட்டி வச்சுக்க. முதல்ல அந்தத் தட்டை எடுத்துட்டு வேற தட்டில பரிமாறு." என அதட்ட,
' மவனே தப்பிச்சட்டன்னு மட்டும் நினைக்காதே. என் அப்பாவ கோபப்படுத்த கூடாதுன்னு இப்ப சும்மா விடறேன்.' என நினைத்தவள்,
வேறு தட்டில் அவனுக்கு பரிமாறி விட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டாள்.
அவள் அரவிந்தை முறைத்துக்கொண்டே சாப்பிட்டு கொண்டிருக்க அரவிந்தின் கழுத்தில் இருந்த தாலி அவன் சட்டையிலிருந்து வெளியே வந்ததை பார்த்தாள்.
அது அவள் கண்ணை உறுத்த,
"நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா...?" என ஆனந்தி அரவிந்தை பார்த்து கேட்க,
' அடுத்து என்ன பண்ண போறாளோ' என மருதமுத்து ஆனந்தியை பார்த்தார்.
அரவிந்த் ஆனந்தியை பார்த்து "கேளுங்க" என்றான்.
" இல்ல ஆம்பளைங்க தாலி கட்டி நான் பார்த்தது இல்ல. நீங்க மட்டும் ஏன் அத கழுத்துல கட்டி இருக்கீங்க." எனக்கேட்க,
அவனுடைய கழுத்தில் இருந்த தாலியை வருடியவன் கண்களில் நீர் கோர்த்தது.
நிலைமையை புரிந்துகொண்ட மருதமுத்து,
" அத தெரிஞ்சு நீ என்ன பண்ண போற. பேசாம வாய மூடிட்டு சாப்பிடு." என ஆணையிட அதற்கு மேல் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிட்டாள்.
அவள் அமைதியாக சாப்பிட்டாலும் அவள் எண்ணங்கள் அனைத்தும் அவன் கட்டியிருக்கும் தாலியை பற்றி தான் இருந்தது.
அப்போது தான் ஞாபகம் வந்தவளாய்,
" அம்மா ஸ்வீட் எங்க..?"
" ஐயோ மறந்துட்டேன் ஆனந்தி."
" என்னமா நீ .... சரி இரு. நான் எடுத்துட்டு வரேன்." என ஆனந்தி சமையல் அறைக்கு செல்ல,
மருதமுத்து சற்று தயங்கியே அரவிந்திடம் பேச ஆரம்பித்தார்.
" தம்பி மன்னிச்சுருப்பா . ஆனந்தி பண்ணினதா பேசினத எதையும் மனசுல வச்சுக்காதீங்க. ஏதோ விளையாட்டுத்தனமாக பண்ணிட்டா."
" புரியுது." என்றவன் மனதிற்குள்
' என்கிட்ட தானே மாமா விளையாடறா. சொல்லப்போனால் உரிமையோட அவ என்கிட்ட இப்படி நடந்தக்குறது தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இந்த உரிமையை எப்ப சுதந்திரமா அனுபவிக்கப் போறேனு தான் தெரியல.' நினைத்துக் கொண்டிருக்க,
'டன்டடான்' என கையில் ட்ரேயுடன் ஆனந்தி வந்தாள். பௌலில் இருந்த அல்வாவை அவரவர் தட்டின் அருகில் வைத்துவிட்டு அரவிந்தை நோக்கினாள்.
"அம்மா செஞ்ச அல்வா சூப்பரா இருக்கும். என்ன டெக்கரேஷன்ல தான் அம்மா கொஞ்சம் வீக். அதான் என் கையாலேயே பாதாம் முந்திரி பிஸ்தா என எல்லாத்தையும் க்ரஸ் பண்ணி தூவிருக்கேன். சாப்பிடுங்க. சாப்ட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க." என அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஆனந்தியின் விருப்பப்படி பௌலை கையில் எடுத்து அதிலிருந்த அல்வாவை சிறிது எடுத்து சாப்பிட்டான்.
அதை சாப்பிட்டவன் உதடுகள் சிறிது மலர ஆனந்தியை ஏறிட்டான்.
' உப்பிட்ட தமிழ் பெண்ணை நீ மறக்க மாட்டாய் அப்படின்னு பாட சந்தானம் இல்லப்பா. நீ என்ஜாய் பண்ணு.' என நினைத்தவள் டைனிங் டேபிளில் சாய்ந்து கைகளை டேபிள் தாங்க, கன்னங்களை தாங்கியது அவள் கைகள்.
முகத்தில் புன்னகையுடன் அரவிந்தை பார்க்க, அந்த பார்வை ஏதோ ஒரு உணர்வைத் தர அதை அப்படியே மனதில் பதித்துக் கொண்டான்.
" என்னாச்சு ஆனந்தி....? ஏன் அரவிந்த் தம்பிய அப்படி பாக்குற."
" அது ஒன்னும் இல்லப்பா. சாப்பிடும்போதும் அவரு எவ்ளோ அழகா இருக்காருன்னு பாத்துட்டு இருக்கேன்." என ஆனந்தி கூற அரவிந்த் சிரித்தான்.
' பார்ரா இந்த ரௌடிக்கு சிரிக்கக்கூட தெரியுமா'
" என்ன பாக்கறீங்க சாப்பிடுங்க." என அவள் கண்களை மூடி முகத்தை அசைத்த விதத்தை ரசித்தவன் தொடர்ந்து அல்வாவை ருசித்தான். அதுவும் புன்னகையோடு.
அவன் முகம் கோணாமல் அல்வாவை சாப்பிட பவுல் மாறி இருக்குமோன்னு சந்தேகம் வர மருதமுத்துவும் பர்வதமும் அல்வாவை சுவைத்து சாப்பிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தாள்.
' ஒருவேளை நம்ம பவுலும் அவனோட பவுலும் மாறியிருக்குமோ. நம்ம plan நமக்கே ரிவீட் ஆயிருச்சா' என யோசித்தவள் அவள் அல்வாவை சிறிது கிள்ளி எடுத்து பயத்தோடு நாக்கில் வைத்தாள்.
அவள் அல்வா இனிப்பாக இருக்க, அரவிந்தை பார்த்தாள்.
அவன் அல்வாவை ருசித்து சாப்பிடுவதை பார்த்தவள், 'ஒருவேளை உப்புக்கும் சீனிக்கும் வித்தியாசம் தெரியாமல் மாத்தி கலந்துட்டோமோ' என யோசித்தவள் மீண்டும் அவனை பார்க்க,
அவன் மருதமுத்துவிடம் பேசிக்கொண்டிருந்தான்.
" என்னாச்சுப்பா. கண்ணு கலங்கி இருக்கு."
" ஒன்னுமில்லை. இந்த அல்வாவ சாப்பிட்டதும் என் மனசுக்கு பிடிச்ச ஒருத்தவங்க திரும்ப கிடச்ச ஒரு உணர்வு ஏற்படுது. ரொம்ப நன்றி ஆனந்தி." என ஆனந்தின் கண்களை பார்த்து சொல்ல ஆனந்தி என்ன சொல்வதென்று தெரியாமல் சிறு புன்னகையை உதிர்த்தாள்.
" கவலைப்படாதீங்க தம்பி. உங்க மனசுக்கு எல்லாம் நல்லதே நடக்கும்." என பேசிக் கொண்டிருந்தார். எல்லோரின் கவனமும் அரவிந்தின் மேல் இருக்க, டேபிள் மீது இருந்த அவன் அல்வாவை சிறிதளவு யாரும் பார்க்காத வண்ணம் கண்களை உருட்டி, பதுங்கி பதுங்கி அதை எடுத்தாள்.
எடுத்து வாயில் வைத்த அடுத்த வினாடி இரும்ப ஆரம்பித்தாள்.
அரவிந்த் பதறி அடித்துக் கொண்டு திரும்பினான்.
" என்னாச்சு ..." என்று அவன் இடது கையால் அவள் தலையை தட்டி கொண்டே, வலது கையால் அருகிலிருந்த தம்ளரில் நீர் ஊற்றி அவளுக்கு புகட்டிவிட்டான்.
ஓரக்கண்ணால் அவனை பார்த்துக் கொண்டே தண்ணீர் குடித்தாள்.
அவள் இருமல் சிறிது சிறிதாக நின்றதும் தட்டிக்கொடுத்த கைகளால் தலையை மெல்ல வருடினான்.
அரவிந்தையும் ஆனந்தியையும் அவ்வாறு பார்க்க , ஏதோ ஒன்று மருதமுத்துவின் உணர்ச்சியை கிள்ளிவிட இந்த உணர்வு யாரும் அறிவதற்குள் கலைக்க எண்ணி தொண்டையைச் செருமினார்.
அவர் செருமலில் நினைவிற்கு வந்த அரவிந்த் ஆனந்தியின் கண்களை பார்த்து,
" இப்போ நல்லா இருக்கியா..." என காதலுடனும் தாயின் அக்கறையுடனும் கேட்க,
அவள் தலையை மட்டும் மேல் கீழாக ஆட்டினாள்.
அதில் மன நிம்மதி அடைந்தவன் அவள் தலையிலிருந்து கையை எடுத்துவிட்டு, வலக்கையிலிருந்த தண்ணீரை டேபிள் மீது வைத்து விட்டு நிமிர்ந்து நாற்காலியில் தன் நிலையை சரி செய்து விட்டு மீண்டும் அல்வாவை ருசித்தான்.
அவனுடைய திடீர் தொடுதல் , அக்கறை அவளுக்குள் ஏதோ செய்ய,மீண்டும் அல்வாவை ருசிக்க தொடங்கியவனை பார்த்து கண்கள் இரண்டையும் அகல விரித்தாள்.
'என்ன இவன் எந்த ரியாக்ஷனும் இல்லாமல் இவ்வளவு உப்பு போட்டா அல்வாவ இப்டி சாப்பிடுறான். இனிமே இவன பார்த்து யாரும் சூடு சுரணை இல்லாதவன்னு சொல்ல முடியாது.' என அவனையே பார்த்துக் கொண்டிருக்க, அவன் அல்வா முழுவதையும் சாப்பிட்டு பவுலை டேபிள் மீது வைத்து விட்டு எழுந்து சென்றான்.
💖💖💖
'இவன புரிஞ்சுக்கவே முடியலையே. அன்னைக்கு காலேஜ்ல பார்க்கவே அவ்ளோ டெர்ரரா , கண்ணுமண்ணு தெரியாம பிரகாஷ அடிச்சான்.
இன்னைக்கு ரொம்ப அமைதியா அக்கறையா இருக்கான். ரௌடி ஃபீலே வரல.
அதுவும் அந்த அல்வாவ என்னமோ அமிர்தம் சாப்பிடுற ரேஞ்ச்க்கு பீல் பண்ணி சாப்பிடுறான்.
என் அப்பா கிட்ட கூட போட்டு கொடுக்கல.
ஆனா இவன் கிட்ட என்னமோ இருக்கு. இவன் கண்ணு என்னமோ சொல்ல வருது.
நமக்கு வாயால சொன்னாலே புரியாது. கண்ணு சொல்றதா புரியும்.
அவன் கண்ணயும் புரிஞ்சுக்க முடியாது. அவனயும் புரிஞ்சுக்க முடியாது.
ஆமா இப்ப அவன புரிஞ்சுகிறது தான் ரொம்ப முக்கியம். அவன துண்ட காணோம் துணிய காணோம்ன்னு ஓட வைக்கனும்.
அதுக்கு முதல்ல வழிய பார்ப்போம்.' என அவளயே கடிந்து கொண்டாள்.
அரையின் குறுக்கே நடந்தவள் அப்படியே பால்கனிக்கு சென்றாள். பால்கனியில் இருந்து தோட்டத்தை பார்த்தவளின் புருவங்களில் முடிச்சு விழுந்தது.
தோட்டத்தில் மருதமுத்துவும் அரவிந்தும் பேசிக்கொண்டிருந்தனர். பேசிக் கொண்டிருந்தனர் என்பதை விட வாதாடிக்கொண்டிருந்தனர் என்றே கூறலாம்.
அவர்கள் பேசியது எதுவும் அவள் செவிகளுக்கு எட்டவில்லை. அவளால் ஊமை படத்தை மட்டுமே காண முடிந்தது.
மருதமுத்து ஆவேசமாக பேசிக்கொண்டு இருந்தார். அதை அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த அரவிந்த் திடீரென சீற ஆரம்பித்தான்.
கையை நீட்டி மருத முத்துவை எச்சரித்தான். மருதமுத்து எதையும் யோசிக்காமல் அரவிந்தின் கால்களில் விழுந்தார்.
அதற்கு மேல் ஆனந்தி அங்கு நிற்கவில்லை. தோட்டத்தை நோக்கி ஓட ஆரம்பித்தாள்.
" எனக்கு ஆனந்தி வேணும். அவ்வளவுதான்." என அரவிந்த் கூறியது மட்டும் ஓடி வந்து கொண்டிருந்த ஆனந்தியின் காதுகளில் விழ, அவள் அப்படியே நின்றாள்.
ஆனந்தியை பார்த்த மருதமுத்து அரவிந்திற்கு கண் காட்டிவிட்டு,
" என்னம்மா... இங்க நிக்கிற...." என கண்களில் இருந்து வழிந்த நீரை துடைத்து விட்டு ஆனந்தின் அருகே சென்றார்.
" என்னப்பா நடக்குது இங்க." என அரவிந்த்தை பார்த்துக்கொண்டே மருதமுத்துவிடம் கேட்டாள்.
அரவிந்தும் ஆனந்தியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
" அது ஒன்னும் இல்ல மா. நீ உள்ள போ." என கூற,
அரவிந்த் அங்கிருந்த தன் ஆட்களை கூட்டி கொண்டு சென்றுவிட்டான்.
ஆனந்தி எவ்வளவு கேட்டும் மருதமுத்து எதற்கும் பிடி கொடுத்து பேசாமல் அவளின் கேள்விகளை தவிர்த்து கொண்டே வந்தார்.
இதற்கு மேல் கேட்டு எதுவும் ஆக போவதில்லை என அறிந்தவள் தன் அறைக்கு சென்றுவிட்டாள்.

