நீயே என் ஜீவனடி 26
நீயே என் ஜீவனடி 26
"மயிலம்மா ஆனந்தி ஏன் இன்னும் சாப்பிட வரல"
" தம்பி தாயி காலேலியே வந்து சாப்பிட்டு போயிடுச்சுபா"
" ஓ...." என யோசனையோடு அவள் அறையை வெறித்தவன் தனது அறைக்குள் புகுந்து கொண்டான்.
எப்போதும் கண்கொட்டாமல் அரவிந்த் பின் தொடர்ந்தவள் கடந்த இரு நாட்களாக அவன் கண்களில் படவில்லை. அவன் சாப்பிடுவதற்கு முன்னதாகவே எழுந்து சாப்பிட்டு விட்டு அவள் அறையில் முடங்கி கொள்கிறாள்.
அரவிந்த் வெளியே செல்லும் நேரங்களில் ஹாலில் மணியோடு சீண்டி விளையாடி அரட்டை அடிப்பது என இருப்பவள் அரவிந்தின் வண்டி சத்தம் கேட்டதும் 'தூக்கம் வருது' என தனது அறைக்குள் புகுந்து கொள்கிறாள்.
எப்பொழுதும் அரவிந்த் இல்லாத நேரங்களில் மணியை அவளுக்கு காவலாக வைத்து விட்டு செல்வான். அவளின் சிறு சிறு அசைவுகளையும் அவனுக்கு மணி கூறிவிடுவான்.
அதிலேயே அவளின் மனநிலையை அறிந்து கொள்வான். ஆனால் தற்போது மணி இடமும் பாராமுகமாக இருப்பதால் அவள் எண்ண ஓட்டத்தை கணிக்க முடியாமல் அவளை தரிசிப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்து காத்திருந்தான்.
ஆனால் அன்றும் அவனால் ஆனந்தியை பார்க்க முடியாமல் போனது.
மறுநாள் காலையில் எழுந்தவுடன் இதற்கு மேல் தாங்காது என உணர்ந்தவனாய் தன்னவள் அறை நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
அங்கு பால்கனியில் நின்று வானத்தை வெறித்துக் கொண்டிருந்தாள், ஆனந்தி.
' ஏன் கடவுளே எனக்கு மட்டும் இப்படி டுவிஸ்ட் அடிக்கிற. நானே இப்பதான் லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கேன். அதுக்குள்ள இப்படி ஒரு கோப முகத்தை பார்த்ததும் எனக்கு கை காலெல்லாம் உதறல் எடுக்குது. இதுக்கு முன்னாடி நான் அரவிந்த கோபமா பார்த்து இருக்கேன்.
பிரகாஷ அடிக்கும்போது, எங்க கல்யாணத்தப்ப கோவில்ல, ஏன் அன்னைக்கு அந்த பிஎம் ஓட பையன் கிட்ட பேசும் போது கூட, ஆனால் மணி கிட்ட கோபப்படும்போது அவனோட முகம் பார்க்க பயங்கரமாக இருந்தது.
மணி எவ்வளவு கெஞ்சி கேட்டும் அவனைப் பார்க்கக் கூட இல்லை. இத்தனை வருஷமா கூட இருக்குற அவனுக்கே இந்த நிலைமைனா அப்ப நமக்கு... அப்பாடியோ..... நினைச்சு பார்க்கவே முடியல ....
நாம வேற ஏதாவது லூசுத்தனமா பண்ண போய் ஆரு கோபம் என் பக்கம் திரும்பிச்சுருச்சுனா....
அது தாங்கற சக்தி நமக்கு இல்லப்பா.... அருவ பார்க்கும்போதெல்லாம் வர வெட்கம் கூட இப்போ வராம கைகள்தான் உதறல் தான் எடுக்குது. இதுல நான் வேற சந்தேகப்பட்டு சிஐடி வேலையெல்லாம் பார்த்தது தெரிஞ்சா நான் கைமாதான் போல.
ஆருவை எப்படி ஃபேஸ் பண்றதுன்னே எனக்கு தெரியலையே' என நினைத்துக் கொண்டிருக்கும்போதே அறைக்கதவு தட்டப்பட வாசலை பார்த்தவளின் விழிகள் விரிந்தன.
தன்னை மருண்ட விழிகளால் பார்க்கும்ஆனந்தியை பார்த்ததும் அவளுடைய பயம் அவனுக்கு புரிய 'இதுக்கு தான் நம்மளை இப்படி தவிக்க விட்டலா...' எங்கேயாவது போய் முட்டிக் கொள்ள லாம் போலிருந்தது அரவிந்துக்கு.
ஒரு மந்தகாச சிரிப்புடன் அவள் அருகில் வர அந்த சிரிப்பில் ஆனந்தி கொஞ்சம் ஆசுவாச பட, அவள் கைகளைப்பற்றி அவளை கட்டிலில் அமர வைத்து அவள் அருகில் தானும் அமர்ந்து அவள் கைகளை அவன் கைகளுக்கு இடையே பத்திரப்படுத்திக் கொண்டு, அவள் கண்களை ஏறிட்டான்.
" ஆனந்தி... ஒரு பொண்ணுங்குறவ பூ மாதிரி மென்மையானவ. உடலளவிலும் சரி மனதளவிலும் சரி.
ஆண்கள் இரும்பு மாதிரி வலிமையானவங்க. உடல் அளவிலும் சரி மனதளவிலும் சரி.
ஒரு பெண் உடலளவில் சோர்வடையும் பொழுது அவளை பாதுகாக்கிற அரணாகவும் மனதளவில் சோர்வடையும் பொழுது அவன் மனசுக்கு ஆறுதல் அளிக்கவும் தான் ஆண்கள் அவங்களோட வலிமைய காட்டனுமே தவிர,
அவங்கள மேலும் உடலாளயும் மனதாளயும் பலவீனப்படுத்த இல்ல.
உடலளவில் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக நான் வெளியில போராடிக்கிட்டு இருக்கும்போது, என் தம்பியா நினைக்கிற ஒருத்தன் மனதளவில் ஒரு பொண்ண பாதிச்சது எனக்கு கஷ்டமா இருந்தது.
அவனுக்கு அவனுடைய தவறுகள் புரிய தான் அவன் மேல கோபப்பட்டேன். நீ சொல்லு அவன் அந்த பொண்ணு கிட்ட அப்படி பேசினது தப்பில்லையா..."
"தப்புதான். ஆனா..."
"ஆனா என்ன..."
" அவன் அந்த பெண்ணுக்காக தானே அப்படி பேசினான்."
" அந்த பொண்ணை பத்தி நீ யோசிச்சு பார்த்தியா, ஆனந்தி. ஒருவேளை உன்னை பார்த்து நான் இந்த மாதிரி கேட்டால்...." அவன் முடிப்பதற்குள் அவன் இதழ்களை தன் விரல் கொண்டு மூடினாள். அவன் கண்களைப் பார்த்து 'செத்திருப்பேன்' என மனதினுள் கூற, அவள் கண்களிலிருந்து நீர் துளி எட்டிப்பார்த்தது.
தன்னவளை காயப் படுத்தி விட்டோமே என உணர்ந்தவன் அவளை நெருங்கி அமர்ந்து அவள் கண்ணீரை துடைத்து தன் நெஞ்சில் சாய்த்துக் கொண்டான்.
" நான் உன்னை கஷ்டப்படுத்த சொல்லல. நீ என்னோட மனைவி. உனக்கு என் மேல எல்லா உரிமையும் இருக்கு. உனக்கு மட்டும் தான் இருக்கு. அப்படி இருக்கும்போது உனக்கே இப்படி இருக்கும்பொழுது அந்தப் பெண்ணை நினைத்துப்பார்...
மணியும் அந்தப் பெண்ணை விரும்புறான். சில காரணங்களுக்காக அவளிடம் இருந்து விலக நினைக்கிறான். அந்தப் பொண்ணுக்கு புரியறமாதிரி எடுத்துச் சொன்னால் அவ புருஞ்சுப்பா. அப்படி இல்லைன்னா அவளோட காதல எடுத்து சொல்லி புரிய வச்சிருப்பா. ரெண்டு பேரும் நிம்மதியாவாவது இருந்து இருப்பாங்க. இப்ப பாரு.
அதனால தான் அவன் மேல கோபப்பட்டேன். இதுல நீ பயப்படுற அளவுக்கு எதுவும் இல்லை. இதுக்கு ஏன் இப்படி ஓடி ஒளிஞ்சுக்குற." என்றான் அக்கறையாய்.
" நான் ஒன்னும் ஓடி ஒளியலை." என்றால் சிணுங்கியவாறே.
அதை ரசித்தவன் அவள் இடது கன்னத்தை தன் வலது கையில் ஏந்தி, "ஆனந்தி நான்
இந்த உலகத்தில யாரு மேல் வேணா கோபப்படுவேன். ஆனா உன் மேல எனக்கு எப்பவும் கோபமே வராது."
அவனை காதலாய் பார்த்தவள்,
" நெஜமாத்தான் சொல்றியா ஆரு. என் மேல கோபமே பட மாட்டியா..." என கேட்க, தன் தலையை இட வலமாக ஆட்டினான்.
" நான் சேட்டை செஞ்சாலும்...."
" நீ சேட்டை செஞ்சாலும்."
" நான் உன்னை திட்டினாலும்..."
" நீ என்னை திட்டினாலும்."
" நான் உன்னை வாடா போடானு மரியாதை இல்லாம கூப்பிட்டாலும்...."
" வாடா போடா மட்டுமில்ல. காட்டுப்பன்னி ன்னு கூப்பிட்டா கூட...." என கண்ணில் குறும்பு மின்ன பார்க்க,
அவளோ கண்களை அகல விரித்து,
" உனக்கு எப்படி தெரியும்."
" தெரியும்."
" அதான் எப்படி...???"
"நம்ம கல்யாணம் ஆன அன்னைக்கு நீ தூக்கத்துல எனக்கு வாழ்த்து மடல் வாசிச்ச. அது இந்த காதுல விழுந்தது."
ஈஈஈஈஈஈஈ
" அது அப்போ...."
" அப்போ இப்போ..."
" அது.... என அவள் கன்னங்கள் சிவக்க,
' காதல் மடல் வாசிக்கவே ராத்திரி ஃபுல்லா பத்த மாட்டேங்குது' என மனதில் நினைக்க ,அவளின் நிலையை உணர்ந்தவன்,
" சரி இப்ப ஓகே தானே. இனிமேல் என்ன பார்த்து பயப்பட மாட்டேல. இப்போ எப்பவும் போல இரு.
நான் கீழ போறேன்." என அவள் கன்னம் தட்டி செல்ல,
' தேங்க்ஸ் இரு. என்னோட எல்லா தேவைகளும் எனக்கு முன்னாடியே உனக்கு தெரிஞ்சுருது. என்னோட உள் உணர்வுகள் கூட .....
அய்யோ....கேட்க மறந்துட்டேனே' என அவன் பின்னே செல்ல, அவன் ஹாலில் சோபாவில் உட்கார்ந்து இருந்தான்.
அவன் அருகில் அமர்ந்தவாறு.
"மணி அந்த பொண்ணை லவ் பண்றான்னு உனக்கு எப்படி தெரியும்."
" உன் சிஐடி மூளை எதுவும் சொல்லலையா..."
' சிஐடி 'ஆ
"அது என்ன சிஐடி மூளை" என கேட்க, அவளை ஆராயும் பார்த்தவன் "என்னை பத்தி தெரிஞ்சுக்க நம்ம ரூம் கதவை திறக்க முயற்சி செஞ்சேல."
"நா …நா… நான் எதுக்கு உன் ரூமை...." என இழுத்தவள், பின் "உனக்கு எப்படி தெரியும்" என கேட்டாள்.
அவள் கேள்வியில் சத்தமிட்டு சிரித்தவன்,
"அன்னைக்கு நம்ம ரூம்ம உன்னோட ஹார்பின் வச்சு திறக்க முயற்சி பண்ணுனியே அப்போ உன்னோட ஹேர் பின்ன அந்த கீ ஹோல்லயே மறந்துட்ட."
' அடக்கடவுளே ஹோல்ல இருந்த பின்ன மறந்திட்டோமே...' என எண்ணியவள் அதை சமாளிக்க எண்ணி இளித்து வைத்தாள்.
" நீ வேணும்ன்னே பேச்சை மாத்துற ஆரு. ஒழுங்கா சொல்லு உனக்கு எப்படி மணி லவ் பண்றான்னு தெரியும்... மணி உன் கிட்ட மட்டும் சொன்னானா..."
" இல்ல. அவன் கண்ணை பார்த்து தெரிஞ்சுக்கிட்டேன்."
" கண்ண பார்த்தா எப்படி தெரியும்."
" நமக்கு புடிச்சவங்க என்ன நினைச்சாலும் அவங்க கண்ணுலயே அது தெரிஞ்சிடும்."
" அப்போ உனக்கு என்ன பிடிக்குமா ஆரு."
"ரொம்ப பிடிக்கும்."
"உனக்கு பிடிக்கும்னு எனக்கும் தெரியும். அப்போ நான் என்ன நினைச்சாலும் நீ கண்டுபிடிச்சுடுவியா... அப்போ நான் இப்போ என்ன நினைக்கிறேன்னு சொல்லு..."என்றவள் மனதில்
"ஆரு செல்லம்... ஐ லவ் யூ டா..." என நினைக்க அவள் எண்ணங்களை அவள் கண்களில் படித்தவன் சிரித்துக்கொண்டே,
" ஆனால் பொண்ணுங்க மனச புரிஞ்சிக்கிறது ரொம்ப கஷ்டம்னு யாரோ சொல்லி கேள்விப்பட்டிருக்கேன்" என குறும்புடன் சொன்னவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான்.
'லூசு ஆரு... ஊர்ல உலகத்துல இருக்கிற எல்லாரோட லவ்வயும் புரிஞ்சிக்க தெரியும். ஆனா என்னோட லவ்வ மட்டும் உன்னால புரிஞ்சுக்க தெரியலையே.
போடா நானும் எவ்வளவு தான் வெயிட் பண்றது. பேசாம நானே உன்னை ப்ரபோஸ் செய்ய போறேன். நீ புடிச்சாலும் பிடிக்கலினாலும் ஒத்துக்கிட்டு தான் ஆகணும். என் ப்ரபோசலை அக்சப்ட் பண்ணித்தான் ஆகணும்.' என நினைத்தவள் மீண்டும் அரவிந்தை தேடி சென்றாள்.
அரவிந்த் டைனிங் டேபிள் அருகே நின்று தண்ணீர் குடித்துக் கொண்டிருக்க, "ஆரு..." என தயங்கி நின்றாள், ஆனந்தி.
" சொல்லு ஆனந்தி மா... என்ன வேணும்..."
" அது வந்து ..."என இழுக்க அவளின் வார்த்தைகளுக்காக அவன் காத்திருந்தான்.
" என்னை நைட் டின்னருக்கு கூட்டிட்டு போறியா... ப்ளீஸ்..." என கண்களால் கெஞ்சிக் கொண்டு நிற்க அரவிந்த்தால் எப்படி மறுக்க முடியும்.
" எனக்கு ஒரு சின்ன வேலை இருக்கு. நான் அத முடிச்சதும் ஒரு எட்டு மணிபோல கூட்டிட்டு போறேன்." என கூற சந்தோசத்தில் துள்ளி குதித்து அவள் அவனை கட்டி அணைத்து, அதை உணராமலே அவள் அறைக்கு சென்றுவிட்டாள்.
அரவிந்த் தான் பனி மழையில் நனைந்து கொண்டிருந்தான்.
இரவு டின்னருக்கு செல்ல மயில் கழுத்து நிறத்தில் ஒரு சல்வாரை அணிந்து எப்போதும் செய்வதை விட சற்று அதிகமாகவே ஒப்பனைகள் செய்து கொண்டு, காதலை சொல்ல போகும் பூரிப்பில் கன்னம் ரெண்டும் சிவக்க கண்ணாடிமுன் நின்று அவளை, அவளே திருஷ்டி கழித்து கொண்டாள்.
' கடவுளே எதிலேயும் சொதப்பாமல் நீ தான் பார்த்துக்கனும். ஆரு கிட்ட லவ்வ சொல்லி பத்து பதினைந்துபிள்ளைகளை பெத்து எல்லோருக்கும் உன் குடும்பத்தில் உள்ளவங்க பேரையே வச்சுருவேன். இதெல்லாம் நடக்கணும்னா ஆரு எனக்கு
ஓகே சொல்லணும். அது உன் கையில தான் இருக்கு.' என வேண்டிக் கொண்டு கீழே வர எப்பொழுதும்போல் வேஷ்டி சட்டையில் அரவிந்த் நின்றிருக்க, அவன் பார்வையில் பெண்ணவள் நாணம் கொண்டு தரையை நோக்கினாள்.
" ஆனந்தி ரெடியா...? போலாமா..?" என கேட்க, அவள் வெட்கத்துடன் தலையை மட்டும் அசைத்தாள்.
" சரி நீ வண்டியில வெயிட் பண்ணு. நான் இப்ப வந்துர்றேன்." என அவன் அறையை பூட்ட சென்றுவிட, அவள் வெளியே வந்தாள்.
வாசலில் நின்றிருந்த சேகர் என்ன கூறினானோ அவள் கோபத்துடன் வீட்டிற்குள் நுழைய, அவள் எதிரே வந்த அரவிந்த்,
" என்னாச்சு...." என கேட்க அவனை அனல் பார்வை பார்த்தவள், அவனை தாண்டி உள்ளே சென்றாள்.
மாடிப்படி அருகே அலங்காரத்திற்காக வைக்கப்பட்டிருந்த பூஜாடியை வேண்டுமென்றே காலால் எட்டி உதைத்தவள் திரும்பி அரவிந்தை பார்த்து முறைத்து விட்டு விறுவிறுவென படிகளில் ஏறி அவள் அறைக்குச் சென்று டமாரென கதவை சாத்த, ஆனந்தியின் கோபத்தின் அளவு எல்லோருக்கும் தெரிந்தது.
ஆனந்தியை சமாதானம் செய்ய அவள் அறைக்குச் சென்று கதவை தட்ட உள்ளே ஏதோ உடையும் சத்தம் கேட்டது.
" ஏன் ஆனந்தி மா இவ்வளவு
கோபம் ...."
"அம்மா நொம்மான்ன அவ்வளவுதான். உன் மேல கொலைவெறில இருக்கேன். வெளிய வந்தேன்னு வச்சுக்க கடித்து குதறிடுவேன். ஒழுங்கா ஓடிப் போயிடு." என்றவள் மனதிற்குள் புலம்ப ஆரம்பித்தாள்.
' காட்டுப் பன்னி... காட்டுப் பன்னி... இவனெல்லாம் எப்படி ஆனந்தி லவ் பண்ணுன.
தனியா வச்சு லவ்வ சொல்லலாம்னு நினைச்சு டின்னர் கூட்டிட்டு போக சொன்னா, கிளம்பி வர்றான் என்னவோ படையெடுக்க போற மாதிரி ......
இதில இந்த சேகர் பயபுள்ள வேற
' நேரம் ஆச்சு சீக்கிரம் வண்டில ஏறுங்க அண்ணின்னு' அந்த வண்டில எங்கடா இடம் இருந்தது. எல்லோரும் தடிமாடு மாதிரி உட்கார்ந்து ஹவுஸ் ஃபுல்லா வச்சிக்குட்டு.....
எனக்கு வர்ற ஆத்திரத்துக்கு அரவிந்த் முடிய பிடிச்சு ஆயனும் போல இருக்கு.
சரி பாவமே புருஷனா போயிட்டானே லவ் பண்ணிட்டோமேன்னு ஃபிரியா விட்டது தப்பா போச்சு.
மொதல்ல இவனுக்கு பொண்டாட்டி கொடுமை னா என்னனு காட்டணும்.' என பொருமிக் கொண்டிருக்க,
" நீதானே டின்னர் போகனும்னு சொன்ன" என அரவிந்த் குரல் அவளை மேலும் கோபப்படுத்தியது.
" ஆமாம் நான் தான் சொன்னேன். அதான் எனக்கு முன்னாடி ஒரு பட்டாளத்தை ரெடி பண்ணி வச்சிருக்கீயே... அவங்கள கூட்டிட்டு போயி டின்னர் டேபிள் சுத்தி கும்மியடி...
என்கிட்ட பேசாத... இங்கிருந்து போய்ரு...." என கத்தினாள்.
"……"
" போயிரு…"
"……"
" போ…"
' என்னடா இது நாம தான் போ ன்னு கத்துக்கிட்டு இருக்கோம்.அங்க ஒரு ரியாக்சனையும் காணோம். ஒருவேளை அழுகிறானோ... ஐயோ பாவம் என் ஆரு. ரொம்ப திட்டிட்டேன். முன்ன பின்ன லவ் பண்ணி பழக்கம் இல்லேல. அதான்.
நான் அவனை சமாதானம் செய்றேன்.' என கதவை திறக்க அங்கே யாரும் இருந்ததற்கான அடையாளம் இல்லை.
சுற்றி முற்றிப் பார்த்தவள் அங்கு யாரும் இல்லாததால் மாடியில் இருந்தே ஹாலை பார்க்க அங்கும் யாரும் இல்லை.
உள்ளே இருந்து மூச்சை இழுத்து விட்டு "டேய் மகனே நீ மட்டும் இப்ப என் கண்ணு முன்னாடி வந்த கண்டிப்பா கைமா தாண்டா... கோவமா இருக்குறவளை சமாதனம் செய்யாமல் போயிட்டான்... உனக்கு லவ்வு தான் ஒரு கேடு.
இனி உனக்கு நான் தாண்டா எதிரி. என் பக்கம் வந்து பாரு. அப்புறம் இருக்கு.' என்றவள் குறுக்கும் நெடுக்குமாக அழைந்தாள்.
கோபம் ஆத்திரம் காதல் ஏமாற்றம் என எல்லா உணர்வும் கலவையாகஅவளை தாக்க அமைதியாய் கட்டிலின் ஓரத்தில் அமர்ந்து இருந்தாள்.
ஒரு மணி நேரம் கடந்திருக்கும் வேலையில் சேகர் அவள் அறைக்கு வந்து திறந்திருந்த கதவை தட்ட அவனை முறைத்துக் கொண்டே,
" என்ன…?" என்றாள்.
" அண்ணி, உங்களை அண்ணன் மொட்டை மாடிக்கு வரச் சொன்னாங்க …"
"ஏன் அவர் வரமாட்டாராமா…"
" இல்லை அண்ணி. ஏதோ சர்ப்ரைஸாம் நீங்கதான் வந்து பாக்கணுமா," எனக் கூற,
' சர்ப்ரைஸா .... நமக்காக.... ஒரு வேளை அவனே ப்ரபோஸ் பண்ண போறான்னோ... ச்சே ச்சே ... அதெல்லாம் அவனுக்கு வராது.
ஒரு வேல செஞ்ச தப்புக்கு கால்ல விழுந்து மன்னிப்பு கேட்பானோ...
இப்போ என்ன பண்ண நாம வேற பயங்கர கோபமா இருக்கோம். நாம எப்படி போறது.
ஆனந்தி, என்ன நீ காதலுக்கு ஃபர்ஸ்ட் ரூல்லே வெட்கம் மானம் சூடு சொரணை குழிதோண்டி புதைப்பது தானே.
அதுவும் சர்ப்ரைஸ்னு வரும்போது இதெல்லாம் கூடாது.' என்று எண்ணியவளை சேகரின் குரல் கலைத்தது.
" அண்ணி..."
" நீ போ நான் வரேன்..." என்றவள் அவன் சென்றதை உறுதி செய்துவிட்டு கண்ணாடியின் முன் நின்று சிறிது டச்சப் செய்து விட்டு வெளியேறினாள்.
அவள் மாடிக்குச் செல்ல படி ஏற போக கீழ் மாடிப் படியின் அருகே பேச்சுக்குரல் கேட்டு நின்றாள்.
" அண்ணன் அண்ணிகிட்ட மனசு விட்டு பேச போறாங்களாம். அதனால யாரும் தொந்தரவு பண்ண வேணாம்னு நம்ம எல்லாரையும் தோட்டத்து வீட்டுல இருக்க சொன்னாங்க."
" எனக்கு பயமா இருக்குடா."
" ஏண்டா உனக்கு என்ன பயம்".
" ஒருவேளை அண்ணன்தான் அண்ணியோட சித்தப்பாவை கொலை பண்ணினார் ன்னு தெரிஞ்சா அண்ணி எப்படி எடுத்து பாங்களோன்னு"என கூற, ஆனந்திக்கோ தலை சுற்றுவதுபோல் இருந்தது.
தன் சித்தப்பாவுடன் பேசி சிரித்து விளையாடிய நாட்கள் கண் முன் நிழலாட இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு விபத்தில் இறந்தது கண்முன் வர கண்ணீரும் வெளிவந்தது.
தன்னை சமன் செய்து கொண்டு இறுகிய மனதுடன் படியேறி அரவிந்தை காணச் சென்றாள்.
மேலே முழுவதும் இருட்டாக இருக்க அங்கு அரவிந்த் இருப்பது போல் தெரியவில்லை.
கீழே செல்லலாம் என திரும்ப ஒளி பரவ தொடங்கியது.
வண்ண வண்ண விளக்குகள் மாடியில் தோரணமாய் தொங்கிக்கொண்டிருக்க, பிளாஸ்டிக் ஒளி விளக்குகள் பாதை அமைத்து இருக்க,ஆனந்தி அந்தப் பாதையில் நடந்து செல்ல, அங்கு நிலத்தில் பூக்களால் "ஐலவ்யு ஆனந்தி" என அலங்கரிக்கப்பட்டிருக்க, ஆனந்திக்கு சந்தோசத்திற்கு பதிலாக துக்கம் தொண்டையை அடைக்க, கண்ணீர் அவள் கன்னத்தை தழுவிச் சென்றது.
இந்த நிலைமையில் தான் காதலை உணர வேண்டுமா என இருக்க,
திடீரென தன் காலை யாரோ தொடுவது போல் உணர குனிந்து பார்த்தாள்.
ஒற்றை காலை மடக்கி ஒற்றைக் கால் ஊன்றி அவள் பாதத்தை தன் முழங்காலில் வைத்து, அந்த நிறை சலங்கை கொண்ட தங்க கொலுசை அவள் காலில் அணிவித்தான், அரவிந்த்.
அவளோ பிரம்மை பிடித்தவள் போல் நிற்க, அவன் கொலுசு அணிவித்து விட்டு எழுந்தவன்,
" இந்த உலகத்துல நான் விரும்பின ஒரே விஷயம் நீதான், ஆனந்தி.
இந்த அரவிந்துக்கு எதுவுமே தேவை இல்லைன்னு இந்த உலகமே நினைக்கலாம்.
ஆனா உன்னோட அன்பு பாசத்தை இழந்து நான் தவித்த தவிப்புக்கு உன்னால மட்டும்தான் ஆறுதல் தர முடியும்.
இந்த உலகத்துல எனக்கு நீ மட்டும் போதும், ஆனந்தி.
உன்னோட அருகாமையே எனக்கு போதுமானது. அதுக்காக நான் என்ன வேணா செய்வேன்.
அதுக்கு சிலஉயிர்களை எடுத்தாதான் ஆகணும்னா நான் அதுக்கும் தயார்.... நீயும் உன் காதலும் மட்டும்தான் என்னை உயிர்ப்போடு வைத்திருக்கு, ஆனந்தி.
நான் உன்னை அளவுக்கதிகமாக காதலிக்கிறேன். ஐ லவ் யூ சோ மச் " என அவன் காதலை கூறி அவள் நெற்றியில் முத்தமிட நெருங்கினான்.
அரவிந்தை தன் கை கொண்டு தடுக்க, அரவிந்த் அவள் விளையாடுகிறாளா என புரியாமல் விழித்தான்.
ஒரு பெரு மூச்சை இழுத்து விட்டு அவள், "காதலுக்காக வெட்கம் மானம் சூடு சொரணைய இழக்கலாம் .
ஆனா அன்பு பாசம் உறவுகளை இழக்க முடியாது, அரவிந்த்."
அவளுடைய ஆரு அரவிந்த் ஆனதிலேயே அவள் விளையாடவில்லை என உணர்ந்தவன்,
" ஆனந்தி.."என ஏதோ சொல்ல வர, அவனை கையால் அமைதிப்படுத்தி தொடர்ந்தாள்.
" நான் கேட்டதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க.
நீங்க தான் என் சித்தப்பாவ கொலை செய்தீர்களா..." என கேட்க, அவளுக்கு எப்படி தெரிந்தது என குழம்பியவன் அவள் பதிலுக்கு காத்து இருப்பதை உணர்ந்து,
" ஆமாம்" என தலையசைத்தான்.
" நோ……"என கத்திக்கொண்டே பின்னே சென்றவள்,
" நீ என்னை ஏமாத்திட்ட அரவிந்த்.
நீ என்னை ஏமாத்திட்ட……
ஐ ஹேட் யூ……
எனக்கு உன்னை பார்க்கவே பிடிக்கல....." என்று அவள் அங்கிருந்து ஓடினாள்.
வாழ்வில் மறக்க முடியாத அழகான தருணமாக இருக்க வேண்டிய சூழலில் தன்னவளின் கண்ணில் தனக்கான வெறுப்பை சுமந்து சென்றதை எண்ணி அவன் அங்கேயே மடிந்து உட்கார்ந்தான். அவன் கண்களிலும் நீர் அருவி என ஓடிக் கொண்டிருந்தது.
அவள் அறைக்குச் சென்ற ஆனந்தி இனிமேல் அரவிந்துடன் ஒரே இடத்தில் இருப்பதுமுடியாத காரியம் என அங்கிருந்து வெளியேறினாள்.
அரவிந்த் மாடியில் அழுது கரைய, அவனின் தம்பி படைகள் தோட்டத்து வீட்டில் அடைக்கலம் எடுக்க, காவலாளி சாப்பிட சென்றிருக்க, ஆனந்தி வெளியேறியதை யாரும் அறியாமல் போயினர்.
💖💖💖💖

