நீயே என் ஜீவனடி 13
நீயே என் ஜீவனடி 13
மருத்துவரை வண்டியில் அனுப்பி வைத்து விட்டு திரும்பிய அரவிந்த்க்கு, ஆனந்தியிடம் பேசுவதே சரி என தோன்றியது.
ஆனந்தியின் அறைக்கு சென்றபோது அவள் எதையோ வெறித்தபடி படுத்திருந்தாள்.
அரவிந்த் கட்டிலின் அருகே உள்ள ஸ்டூலில் அமர்ந்து அவளது வலது கையை தன் இரு கைகளால் பற்றினாள்.
அது தெரிந்தும் எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் இருந்தாள். அவள் பார்வை அவனை தீண்டவில்லை.
அவள் அமைதி அவனை வறுத்தெடுக்க, "ஆனந்தி" என்றான், உடைந்த குரலில்.
எந்த ஒரு சலனமும் இல்லாமல் தன் எதிரே கலங்கிய கண்களுடன் அமர்ந்திருந்த அரவிந்தை ஏறிட்டாள்.
ஆனந்தி தான் பேசுவதற்காக காத்திருப்பதை உணர்ந்தவன், மெதுவாக ஆரம்பித்தான்.
" ஆனந்தி..... உனக்கு இங்க என்ன குறை இருக்கு. உனக்கு என்ன தான் பிரச்சனை. உள்ளுக்குள்ளேயே எல்லாத்தையும் வச்சிருந்தா எப்படி. சொல்லு ஆனந்தி. என்கிட்ட சொல்லு. மனசுவிட்டு பேசு. சொன்னா தான் உன் மனசுல என்ன இருக்குன்னு எனக்கு தெரியும்.தயவுசெஞ்சு சொல்லு ஆனந்தி."
அவன் குரல் முற்றிலும் உடைந்து இருந்தது. அவன் வார்த்தைகளிலேயே அவன் வலிகளை அவள் உணர்ந்தாள்.
" என்ன சொல்ல சொல்றீங்க...." அவளின் முகத்திலும் குரலிலும் எந்த சலனமும் இல்லை.
" உனக்கு என்ன பிரச்சனை...."
" நீங்கள் தான் பிரச்சனையே...."
" நானா ..."
"ஆமா... நீங்க தான். நீங்க மட்டும்தான்."
" நான் என்ன பண்ணுனேன் ஆனந்தி...."
" ப்ளீஸ் நடிக்காதீங்க..... நான் அப்பா அம்மா அண்ணன் னு எவ்வளவு சந்தோசமா இருந்தோம் தெரியுமா.
எல்லாம் உங்கள பாக்குறதுக்கு முன்னாடி வர. என்னைக்கு உங்களை பார்த்தேனோ அன்னைல இருந்து என் வாழ்க்கை எப்படி போகுதுன்னு எனக்கே தெரியல.
திடீர்னு எங்கிருந்து நீங்க வந்தீங்க, எங்கிருந்து அந்த பிரகாஷோட அப்பா வந்தாரு தெரியல.
என் வாழ்கை அப்படியே தலைகீழா மாறிடுச்சு. உங்க எல்லாருக்கும் என்னதான் வேணும்.
பிரகாஷுக்கு கல்யாணத்துல விருப்பம் இல்லாத போதும் ஏன் அவர் என்னை கட்டாயப் படுத்தினாரு.... நீங்க எதுக்கு என் கழுத்துல தாலி கட்டணும்.... எதுவுமே தெரியாம.... என் தலையே வெடிச்சிடும் போல இருக்கு...." ஆனந்தி தலையில் கைவைக்க பதறினான், அரவிந்த்.
" நான் உன்னை அந்த சிதம்பரத்துட்ட இருந்து காப்பாத்த தான் இப்படியெல்லாம் பண்ணினேன்."
" ஓஓ... ரியலி..." என்றவள் இம்முறை கோபத்தில் இருந்தாள்.
" என்னை காப்பாத்த என் கழுத்துல தாலி கட்டுனீங்களா....?
வாட் ரப்பிஸ்....யார் காதுல பூ சுத்த நினைக்கிறீங்க. ஒரு கட்டாய கல்யாணத்தை நிப்பாட்ட நீங்க ஒரு தாலி கட்டினேன் னு சொல்றது எப்படி இருக்குன்னு தெரியுமா....
'அவன் உன்னை கொலை பண்ண வந்தான். அதான் அவன் உன்னை கொலை பண்றதுல இருந்து காப்பாத்த, நானே உன்னை கொலை பண்ணிட்டேன்னு சொல்ற மாதிரி இருக்கு.' "
" அது அப்படி இல்லை."
" போதும். நீங்க எதுவும் சொல்ல வேணாம். அந்த பிரகாஷ் அப்பா என்னை கட்டாயப்படுத்தி இருந்தாலும் எனக்கு தெரிஞ்சு தான் கல்யாணம் நடக்க இருந்தது.
உங்களுக்கு தெரியுமா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லைன்னு தெரிஞ்சதுக்கு அப்பறம் பிரகாஷ் என்கிட்ட எத்தனை தடவை சாரி கேட்டேன்னு...
ஆனா நீங்க..... நான் கண்ண மூடி திறக்கிறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சிருச்சு.
எந்த ஒரு பெண்ணுக்கும் இந்த நிலைமை வந்திருக்காது. என் கழுத்துல தாலி ஏறுனதுக்கு அப்புறம் தான் எனக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னே தெரிஞ்சது.
உங்கள விட அந்த சிதம்பரம் எவ்வளவோ பரவாயில்ல.
ஆனா... இது எதுவுமே உங்களுக்கு தப்பா தெரியல.... இவ்வளவு நேரம் நான் பேசியும் எந்த பிரயோஜனமும் இல்லன்னு எனக்கு தெரியும்.
நீங்க என்னை என்னைக்குமே புரிஞ்சுக்க மாட்டீங்க.
இப்ப கூட நீங்க செஞ்சது தான் உங்களுக்கு சரின்னு தோணும்.
இந்த தாலியை வைச்சு தானே என்னை இப்படி அடக்கி வச்சு இருக்கீங்க.
தயவுசெஞ்சு என்னை புரிஞ்சுக்கோங்க. என்னால முடியல.
இந்த மாதிரி ஒரு நாலு சு
வத்துக்குள்ள இருக்கிறது எனக்கு பழக்கமில்லை.
மூச்சு முட்டுது.
பைத்தியம் பிடிச்சுடும் போல இருக்கு."
என வெடித்தவளின் தேம்பல் அதிகமாகி முகத்தை மூடிக்கொண்டு அழ தொடங்கினாள்.
அவளுக்கு எப்படி புரியவைப்பது, எப்படி சமாதானம் படுத்துவது, என குழம்பியவன், அவளை தேற்ற அவள் தோள்களைப் பற்றினான்.
அதனை உதறியவள் அழுகையுடன் குளியலறைக்குள் புகுந்து கதவை தாளிட்டு கதவில் சாய்ந்து அழுதாள்.
அவள் அழுகை அதிகமாவதை அவன் உணர்ந்தான்.
தன்னால் தான் தன் ஆனந்திக்கும் இத்தனை வலி என்பதை அறிந்த போது அவன் மேலே அவனுக்கு ஒரு வெறுப்பு வந்தது.
என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தான்.
உண்மையை கூறினால் அதனை ஏற்றுக்கொள்ளும் மன நிலையிலும் அவள் இல்லை.
அவளுடைய சந்தோஷத்திற்காக அவளை விடுவித்து விட்டாலும் அவளுடைய உயிருக்கு ஆபத்து உண்டு.
அவனால் அப்படி விடுவிக்கவும் முடியாது.
என்ன செய்வது. எப்படி புரிய வைப்பது என்று தெரியாமல் குழம்பினான்.
குளியலறை அருகில் சென்றவன் அதன் கதவில் சாய்ந்து கைகளை கதவில் படரவிட்டான்.
" ஆனந்தி.... தயவுசெஞ்சு அழாத.... நீ ஏற்கனவே வீக்கா இருக்க. நான் சொல்றத மட்டும் கொஞ்சம் கேளு...."
அவளிடம் இருந்து எந்த ஒரு பதிலும் வரவில்லை. மாறாக அவளுடைய அழுகை சற்று குறைந்திருந்தது. அவள் தன்னை கவனிக்கிறாள் என புரிந்து கொண்டவன்,
" எனக்கு தெரியும் நான் பண்ணுன எல்லாம் தப்பு தான். உன் அனுமதி இல்லாம தாலி கட்டி இருக்க கூடாது தான்.
ஆனால் அந்த நிலைமையில என்ன பண்றதுன்னு எனக்கு தெரியல.
நான் பிரகாஷ் கிட்டேயிருந்து காப்பாத்தணும்னு நினைக்கல. அந்த சிதம்பரத்திட்ட இருந்து தான் காப்பாத்தணும்னு நெனச்சேன்.
உனக்கு அவனை பத்தி எதுவும் தெரியாது. அவன்.... அவன்..... அவனால.... உன் உயிருக்கு ஆபத்து இருக்கு ....
அதான்....
தயவு செஞ்சு ஏன் என்னன்னு காரணம் மட்டும் கேட்காத. அத இப்ப என்னால சொல்லமுடியாது.
எனக்கு ஒரு ரெண்டு மாசம் டைம் கொடு.அதுக்குள்ள சிதம்பரத்தோட எல்லா பிரச்சினையும் முடிச்சுடுவேன்.
அதுவரை நீ இங்க இருக்குறது மட்டும் தான் உனக்கு பாதுகாப்பு.
இந்த ரெண்டு மாசத்துல எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடு ஆனந்தி.
உன்னை பொருத்தவரை தாலியை ஒரு கயிறா நினைக்கலாம். ஆனால் அது என்னை பொறுத்தவரை ரொம்ப பெருசு.
அந்த தாலியை எத்தனை வருஷமா பொக்கிஷமா பத்திரப்படுத்தி வைத்திருந்தேன்னு உனக்கு தெரியாது ஆனந்தி.
உன் கழுத்துல தொங்குற தாலிய என் உயிர்க்கும் மேல நெனச்சிகிட்டு இருக்கேன்.
அதுக்காக நீ என்னை ஏத்துக்கோன்னு கட்டாயப் படுத்தல.
இந்த ரெண்டு மாசத்துல எனக்கு ஒரே ஒரு வாய்ப்பு கொடுத்து பாரு. எனக்காக இல்லைனாலும் உன் கழுத்துல தொங்குற தாலிக்காகவும். நம்ம ரெண்டு பேருக்கும் நடுவுல இருக்கிற இந்த புனிதமான உறவுக்காகவும்.
நான் அவ்வளவு கெட்டவன் இல்ல ஆனந்தி. கொஞ்சமாவது என்னை புரிஞ்சுக்க முயற்சி பண்ணு.இந்த ரெண்டு மாசத்துக்கு அப்புறம் நீ என்ன முடிவெடுத்தாலும் நான் அதை ஏத்துகிறேன்.
உன்னை எந்த கட்டாயமும் பண்ண மாட்டேன்.
நான் இதையும் கட்டாயப்படுத்தல. ஒரு தடவை யோசிப்பார்.
உன்னால முடிஞ்சா, உனக்கு எந்த பிரச்சனையும் இல்லன்னா மட்டும் இந்த வாய்ப்ப எனக்கு தா.... இல்லனா கூட பரவாயில்லை, ஆனந்தி.
நீ எப்பவும் போல இரு. நீ நீயா இரு. இந்த ரெண்டு மாசம் மட்டும் கொஞ்சம் பொறுத்துக்கோ. நான் உன்னை தொந்தரவும் பண்ண மாட்டேன். பிரச்சனையெல்லாம் சீக்கிரம் முடுச்சுருவேன்.
அதுக்கப்புறம் நானே உன்னை உன் அப்பா அம்மா கிட்ட போய் விட்டுர்றேன்." என்றவன் அவன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை கூட பொருட்படுத்தாமல் சென்று விட்டான்.
அவன் குரல் , அவன் வார்த்தையில் இருந்த வலி, அவன் கண்ணீர் எல்லாம் ஆனந்தியை
வதைக்க துவங்கியது.
அவளுடைய கண்ணீர் இருந்த இடம் காணாமல் போனது. அவன் கூறிய ஒவ்வொரு வார்த்தைகளையும் திரும்பத் திரும்ப அசை போட்டாள்.