முடிவல்ல.. துவக்கம்!
முடிவல்ல.. துவக்கம்!


டிசம்பர் 6, 2019
என் இருபத்து மூன்றாவது வயதில் இளங்கலை பட்டப் படிப்பை முடித்து விட்டு வேலைக்காக முயற்சித்துக் கொண்டிருந்தேன். அப்போது உள்ளூரிலேயே இரண்டு இடங்களில் வாய்ப்பு கிடைத்தது.
ஒரு இடம் ஒரு போக்குவரத்து அலுவலகம். கணக்கு வழக்குகள், தட்டச்சு, அலுவலக பணிகளை சரிவர கவனித்துக் கொள்ளுதல் போன்ற பொறுப்புகள்.
இன்னொரு இடம் ஜி.டி.நாயுடு அவர்களின் பல நிறுவனங்களில் ஒன்று. தொழில் நுட்ப வேலை. கால்குலேட்டர் போன்ற மின்னியல் கருவிகள் சம்மந்தப் பட்டது. அதில் பல விதமான programmable கால்குலேட்டர்களுக்கு நிரல்கள் (programs) உருவாக்குவது. விற்கபடும் மின்னியல் கருவிகளோடு சேர்த்து வெளியிட இயக்கப் புத்தகம் உருவாக்குவது. அப்போதுதான் வளரத் துவங்கியிருந்த கணிணிக்களம். கடினமான வேலை!
முதலிடத்தில் சம்பளம் சற்று கூடுதல். இரண்டாம் இடத்தில் சற்று குறைவு.
அப்போதைய கூட்டுக் குடும்ப நிலைத் தேவைக்கு பணமே பெரிதாக தோன்றியது. சிறிய தொகை கூட பெரிய தேவையாக இருந்த காலம். இருந்தாலும் மிகுந்த மனப் போராட்டத்திற்குப் பிறகு யோசனை செய்து ஜி.டி.நாயுடு நிறுவனத்தையே தேர்ந்தெடுத்தேன்.
ஆனால், இப்படி நான் தேர்ந்தெடுத்த முக்கியமான வாழ்க்கை முடிவு என் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. ஜி.டி.நாயுடு நிறுவனத்தில் என் வேலை அனுபவம் காரணமாக இந்தியாவின் மதிப்பு மிகு அணு மின் கழகத்தில் வேலை கிடைத்தது! மிகுந்த மனநிறைவான ஒரு வாழ்க்கையும் அமைந்தது!