DEENADAYALAN N

Inspirational

5  

DEENADAYALAN N

Inspirational

குறை ஒன்றுமில்லை!

குறை ஒன்றுமில்லை!

3 mins
312


கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! –ஐந்து

குறை ஒன்றுமில்லை!

(கோவை என். தீனதயாளன்)


ஹை விவு, அவி, ரிஷி, தனிஷா, காஷ்வி மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!




 

அம்மா, இனி மேல் நான் பள்ளிக்குப் போக மாட்டேன்!


கோவமாக வந்து ‘டமார்’ என்று பள்ளிப் பையை மேசையின் மேல் போட்டு விட்டு கட்டிலின் மேல் ஏறி படுத்துக் கொண்டான் அர்ஜுன்.


ஆனால் அம்மா பதட்டப் படாமல், ‘தங்கத்துக்கு இவ்வளவு கோவம் எதுக்கு..’ என்று சாதாரணமாகக் கேட்டாள்.


‘நான் வேற பள்ளிக்குப் போறேன்மா..’ – அர்ஜுன்


‘ஏன் இவ்வளவு படபடப்பா இருக்கே.. மொதல்லே இந்த பாலக் குடி..’ என்று பால் டம்ளரை நீட்டினாள் அம்மா.


முதலில் முரண்டு பிடித்த அர்ஜுன் பின் அம்மாவின் அன்புக்கு கட்டுப்பட்டு, பாலைக் குடித்தான்.


‘இப்பொ சொல்லு.. பள்ளியில் என்ன பிரச்சினை.. யாராவது திட்டினாங்களா?’


‘இல்லம்மா..’


நண்பர்கள் யாராவது உன் கூட சண்டை போட்டாங்களா..’


‘இல்லே..’


‘அப்பொ உங்க மிஸ் ஏதாவது சொன்னாங்களா..’


அர்ஜுன் பேசாமல் இருந்தான்.


‘சொல்லு அர்ஜுன்.. மிஸ் என்ன சொன்னாங்க?’


‘ஒன்னும் சொல்லலே அம்மா.. ஆனா அவங்க இப்போ எல்லாம் எங்கிட்டே ஆசையா இல்லே..’


‘ஏன்?’


‘போன வாரம் ‘மணி’ன்னு ஒரு பையன் புதுசா சேர்ந்திருக்கான்மா’


‘சரி’


‘மிஸ் எப்பொப் பார்த்தாலும் அவனையே ‘குட்’னு சொல்றாங்க. எழுதுறதுலே அவன் ஏதாவது தப்பு பண்ணாக்கூட அவனெ திட்டாமெ, நோட்டை வாங்கி சரி பண்ணி குடுக்கறாங்க.. நான் ஸ்பெல்லிங்லே தப்பு பண்ணா திட்டறாங்க.. அவன் தப்பு பண்ணா பொறுமையா சொல்லிக் கொடுக்கறாங்க. அவன் சின்னதா ஏதாவது பண்ணாக்கூட எல்லாரையும் கை தட்ட சொல்றாங்க. ஆனா நான் பெருசா ஏதாவது பண்ணாக்கூட அவங்க அப்பிடி சொல்றதில்லே.. போன வாரம் டெஸ்ட்டுலே அவன் அம்பதுக்கு நாற்பது வாங்கினதுக்கு பேனா பரிசா குடுத்தாங்க. நான் நாற்பத்தஞ்சி வாங்கி கூட அவங்க பரிசே குடுக்கலே.. ‘


‘அப்பிடியா.. ‘


‘ஆமாம்மா. நல்லா விளையாடறான்.. தினமும் கார்லேதான் வந்து போறான்.’


‘சரி.. நான் விசாரிக்கறேன்.. ‘ என்று அம்மா சொன்னாள். அதற்குப் பிறகும் இரண்டு மூன்று நாட்கள் அர்ஜுன் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தான்.


என்ன விசாரிப்பது எப்படி விசாரிப்பது என்று புரியவில்லை! இதற்கு என்ன செய்வது என அர்ஜுனின் அம்மா யோசித்துக் கொண்டிருந்தாள்.




சரி! அர்ஜுனின் ‘மிஸ்’ செய்தது சரிதானா? குழந்தைளுக்குள் வித்தியாசம் பார்க்கலாமா? இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?


‘நானு’ என்று முன் வந்த தனிஷா சொல்லத் தொடங்கினாள்:

அர்ஜுனின் அம்மா, தலைமை ஆசிரியையுடன் கைப்பேசியில் பேசினார். அனைத்தையும் கேட்டுக் கொண்ட தலைமை ஆசிரியை ‘சரி நாளை காலை பத்து மணிக்கு நீங்கள் பள்ளிக்கு வாருங்கள் பார்த்துக் கொள்ளலாம்.’ என்று சொல்லி போனை வைத்து விட்டார்.


அடுத்த நாள் அர்ஜுன் அம்மா பள்ளிக்கு வந்தார்கள். அவர் முன்னிலையில் அர்ஜுனையும், மணியையும் அழைத்து ஒரு புத்தகத்தை கொடுத்து ‘மிஸ்’ படிக்க சொன்னார்.


‘breakfast, dinner, come after 8 days… ‘ இப்படிய நிறைய வாக்கியங்களை அர்ஜுன் படித்தான்.


பின் அதையே மணியிடம் கொடுத்த போது ‘dreakfast, binner, come after B days…’ என்று படித்தான்.


மிஸ் அர்ஜுனிடம் சொன்னாள்:

‘அர்ஜுன், சில பேருக்கு காது கேட்கும் திறனில் குறைபாடு இருக்கும். சிலருக்கு, பேச்சுத் திறனில் குறைபாடு இருக்கும். ஆனால் மணி போல சில குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அப்பிடீங்கறதுலே குறைபாடு இருக்கும்.


உதாரணமா அவங்களுக்கு சில சமயம் d அப்பிடீங்கறது b போலவும் b அப்பிடிங்கிறது d போலவும் தோணும். Bங்கிறது 8 மாதிரியும், 8ங்கறது B மாதிரியும், தெரியும். இதை டிஸ்லெக்ஸியா ன்னு சொல்லுவாங்க.


இது ஒரு நோய் அல்ல. குறைபாடுதான். இந்தப் பிரச்சினைக்கும் பிள்ளைகளின் புத்திசாலித்தனத்துக்கும் சம்மந்தமில்லை. 



இப்படிப்பட்ட குழந்தைகளிடம் குற்றம் காணாமல், குறை கூறாமல், அதிகம் கடிந்து கொள்ளாமல் அன்போடு அரவணைத்துக் கவனிக்க வேண்டியது மிக முக்கியம்.


சோதனை முறையில் டிஸ்லெக்ஸியா குறைபாடு உள்ள மணியை பள்ளியில் சேர்த்து உதவ முயற்சிக்கிறோம். இது வெற்றியடைந்தால் இத்தகைய மாணவர்களுக்காகவே ஒரு தனி வகுப்பை துவக்க இருக்கிறோம்.


அர்ஜுனும் அம்மாவும் இதை கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். ‘இப்போது புரிந்ததா அர்ஜுன்?’ என்று ‘மிஸ்’ கேட்டார்.


அம்மாவுக்கு நன்றாக புரிந்தது. அர்ஜுனுக்கு ஒன்று நன்றாக புரிந்தது. தானும் இனிமேல் மணிக்கு உதவ வேண்டும் – அவனோடு கனிவாக இருக்க வேண்டும் என்று மனதில் உறுதி எடுத்துக் கொண்டான்!




‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று அவி கேட்க: ‘சிறு சிறு குறைபாடு உள்ளவர்களைப் பார்த்து நகைக்காமல், அவர்களுக்கு அவர்களின் குறைகள் நீங்கும் வண்ணம் உதவிகள் புரிய வேண்டும்!’ என காஷ்வி கூறி முடித்து வைத்தாள்.



குட்டீஸ்! இந்தக் கதையை, உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, இதைப் பற்றி உங்களுடைய கருத்துக்களை எழுதி, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.


மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்



 

 

 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational