கற்றுக்கொடுத்த கொரோனா
கற்றுக்கொடுத்த கொரோனா
மகேஸ்வரனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை; அக்னி நட்சத்திர வெயில் தகித்துக் கொண்டிருந்தது; வெயிலின் கொடுமை கூட அவனுக்கு உறைக்கவில்லை. கொரோனா செய்த கொடுமையை தான் அவனால் தாங்க முடியவில்லை. அவன் மனைவி அலமேலு கொரோனாவால் காலமானார். சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மனைவியை சேர்க்கும்போது லாக்டவுனால் அவனது வேலையும் பறிபோனது. கையில் காசில்லை.
திருமண வாழ்க்கையின் நினைவாக ஐந்து வயது பெண் குழந்தை ஆரத்தியை அவனிடம் ஒப்படைத்து விட்டு கண் மூடினாள் அலமேலு. மனைவியை ஆஸ்பத்திரியில் சேர்த்த பின் வீட்டின் நிலைமையை பார்க்கச் சென்றபோது தான் பிரச்சனை பூதாகரமாக நின்றது. வீட்டு சொந்தக்காரர் அலமேலுவுக்கு கொரோனோ என்றதுமே வீட்டுச் சாமான்களை வெளியே எடுத்து வைத்து விட்டு வீட்டை பூட்டி விட்டு போய்விட்டார். தட்டுமுட்டு சாமான்களை பிளாட்பாரத்தில் ஒரு ஓரமாக வைத்துவிட்டு தன் மகளை அழைத்துக்கொண்டு மருத்துவமனை வந்தபோதுதான் அலமேலு இறந்த செய்தியை சொல்லி இறுதிக் கடன்களைச் செய்ய யாரையும் அனுமதிக்காமல் அரசு மருத்துவமனை ஊழியர்களே அலமேலுவை அமரர் ஊர்தி மூலமாக மயானத்திற்கு அழைத்துப் போய் விட்டனர்.
மனைவியை மயானம் அழைத்துச்சென்ற பின்தான் மகேஸ்வரனுக்கு சுயநினைவு வந்தது போல் தோன்றியது. மகள் மதிய நேரம் ஆனதால் பசியால் வாடிப் போய் நிற்பதைக் கண்டான்.அவளைத் தோளில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தான். வால்டாக்ஸ் ரோட்டில் நடக்கும் போது இடது புறத்தில் ஒரு பங்களா தென்பட்டது. பங்களாவின் வாசலின் முன் போர்டிகோவில் நாற்காலி போட்டு ஒரு அம்மாள் அமர்ந்து இருந்ததைப் பார்த்தான். அவர்கள் கையில் ஒரு மொபைல் போன் இருந்தது.
மெதுவாக கேட்டைத் திறந்து தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அந்த அம்மாள் அருகில் சென்றான் மகேஸ்வரன். அந்த அம்மாளின் பெயர் மீனாட்சி அம்மாள். அவர்களுக்கு 60 வயது இருக்கும். பணக்காரக்களை அவர்கள் முகத்தில் தெரிந்தது. மகேஸ்வரன் அருகில் வருவதை பார்த்ததும்," யார் நீ ? என்ன வேண்டும்?" எனக் கேட்டார்கள். மிகப் பணிவாக மகேஸ்வரன்," அம்மா, இவள் என் பெண்;அவளுக்குப் பசி ; கையில் காசு இல்லை. எனக்கு லாக்டவுனால் வேலையும் இல்லை. தயவு செய்து ஏதாவது பழையது இருந்தால் கொடுத்து உதவுங்கள் ."அவன் குரலில் பணிவு தான் இருந்ததே தவிர யாசிக்கும் பாவனை சிறிதளவும் இல்லை.
அதை கவனித்த மீனாட்சி அம்மாள் உடனே வீட்டின் உள் பக்கம் குரல் கொடுத்தார்," செல்வி, ஒரு தட்டில் கொஞ்சம் சாப்பாடு போட்டுக் கொண்டு வா." செல்வி என்று அழைக்கப்பட்ட வேலைக்காரப் பெண் சாப்பாட்டு தட்டுடன் வெளியே வந்தாள். தட்டை சிறுமியிடம் கொடுக்கச் சொன்ன மீனாட்சி அம்மாள்," இவள் அம்மா?" எனக் கேட்கவும் ,மகேஸ்வரன் தன் மனபாரத்தை எல்லாம் அவரிடம் கொட்டித் தீர்த்தான். அவனை முதலில் சந்தேகமாக பார்த்த மீனாட்சி அம்மாள் இப்போது அவனை நம்பத் தொடங்கினார்.செல்வியிடம், "இன்னொரு தட்டு சாப்பாடு கொண்டு வா " என்றார். சாப்பாட்டுத் தட்டை வாங்கி மகேஸ்வரனும் பசியாறினான். இப்போது அவனுக்குள் நம்பிக்கை ஒளி விட ஆரம்பித்தது.
தன் கிராமத்திற்கு போனால் வயல் வேலை கிடைக்கும்; அதைக் கொண்டு தானும் தன் மகளும் பசியின்றி வாழ முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட, மீனாட்சி அம்மாளிடம்," அம்மா, என் சொந்த ஊர் செங்கல்பட்டுக்கு பக்கத்து கிராமம். ட்ரெயின் போகும் என்று சொன்னார்கள். டிக்கெட் காசு 10 ரூபாய் ஆகும். கிராமம் போய்விட்டால் வயல் வேலை பார்த்து பிழைத்துக் கொள்வோம்." என்றான். மீனாட்சி அம்மாள் கருணை உள்ளம் கொண்டவர். அவன் நிலைமை புரிந்ததால் வீட்டினுள் சென்று சிறிது நேரத்தில் திரும்பி வந்தவர் மகேஸ்வரன் கையில் பத்து ரூபாயைத் திணித்தார். மகேஸ்வரன் நன்றியோடு விடைபெற்றுக் கிளம்பிச் சென்றான். மீனாட்சி அம்மாளுக்கு ஒரு துக்கம் நிறைந்த மனம் தற்போது நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் சிறந்த எதிர்காலத்தை எண்ணி போவதைப் பார்க்கும்போது மனதில் நிறைவு ஏற்பட்டது.
