Deviprasath Arunachalam

Tragedy Crime Thriller

5.0  

Deviprasath Arunachalam

Tragedy Crime Thriller

காட்சிப் பிழை

காட்சிப் பிழை

6 mins
456


கோபம், அழுகை கலந்த வெறி, கொலைவெறி, ரத்த தாகம், கொடூரம், கொந்தளிப்பு, ஆத்திரம், வேகம் என சொல்லிக்கொண்டே போகலாம். கண்களில் இருந்து நீர் வழிகிறது. அவர் ஒன்றும் அழவில்லை. அவரது கண்களில் இருந்து நீர் வரும் அளவிற்கு அவருக்கு ஆத்திரம். கொல்ல வேண்டும் என்கிற ஆத்திரம். 


இமைகளுக்குள் பதுங்கி இருக்கும் இந்த வெள்ளை கருப்பு கலந்த உருண்டையில் இருக்கும் வெள்ளையில் எரிமலையைப் போல சிகப்பாக வெடித்து இருந்தது, அந்த வெடிப்புகள் படபட வென பிளந்து அந்த சிறிய கருப்பு வட்டத்தில் வந்து சேர்ந்திருக்கிறது. 


புருவங்கள் இரண்டும் இனைந்து அதன் பாணியில் இந்த ஆக்ரோஷத்தைத் தெரிவிக்கிறது. வியர்வைத் துளிகள் நெற்றியில் விரிந்து காணப்படும் அந்த சுருக்கங்கள் மூலமாக வழிந்து வந்து மூக்கை அடைகின்றன. பற்கள் நறநறப்புடன் நாக்கை உள்ளே சிறைவைத்தபடி இறுக்கமாக மூடிக் கிடக்க, நாசி உள்ளே எரியும் நெருப்புக்கு உதவும் வகையில் அதன் அனலையெல்லாம் வேகமாக வெளியேற்றுகிறது. 


முகம் உதற ஆரம்பிக்கிறது. இரு கன்னங்களும் துடிப்பது போல வேகமாக உதறுகின்றன. கண்கள் மேலே போகின்றன. அதை காத்துக்கொண்டிருக்கும் இமைகள் அவற்றை மூடுகின்றன. அவரது இடது கை ஒருவரின் தலையில் இருக்கக்கூடிய முடியை இறுக்கப் பிடித்து இழுக்கிறது. இவரது பிடியில் இருக்கும் அவரது வாயில் இருந்து வழியும் அந்த சிகப்பு நிற திரவத்திற்குத் தெரியும், இவர் இன்னும் கொஞ்ச நேரம் கூட தாக்குப்பிடிக்க மாட்டார் என்று. 


அவரது தலைமுடியைப் பிடித்துக் கொண்டு இருப்பவரின் வலது கை இடது இருந்து வலது மெதுவாக நகருகிறது. இடது இருந்து வலது மெதுவாக நகரும் பொழுது, அவரது உள்ளங்கையில் சிக்கி இருக்கும் அந்த சிறு கத்தி, அதன் கூர்மையை வெளிப்படுத்தும் விதமாக தொண்டையைக் கிழிக்கிறது. ப்ரோக்ராம் செய்யப் பட்டதைப் போல மெதுவாக இயக்குபவருக்கு மதிப்பு கொடுத்து மெதுவாக அருக்கிறது. ரத்தம் வழியவில்லை. பீய்த்து அடிக்கிறது. 


ஒரு நீர் போகும் பைப்பில் இருக்கும் சிறு ஓட்டையில் இருந்து பிரஷரில் பீய்த்து அடிப்பதைப் போல ரத்தம் பீய்த்து அடிக்கிறது. தொண்டையில் ஒரு மெலிசான ஆழமான கோடு, ரத்த வெள்ளத்தில் அவ்வளவாகத் தெரியவில்லை. இவரது கையை அவரதுத் தலையில் வைத்துத் தள்ளினார்.  


அனாதையான ரோடு. அவ்வளவாக மக்கள் நடமாட்டம் இல்லாத இடம் போலதான் தெரிகிறது. அருகே இருக்கும் ஓரிரண்டு கடைகள் கூட அதன் கதவுகள் மூடப்பட்டு காணப்படுகின்றன. ஞாயிற்றுக் கிழமையாக இருக்கலாம். 


கொலை செய்தவருக்கு நல்ல நேரம் என்று தான் சொல்லவேண்டும். இந்த இடத்தைக் கடந்து ஒரு வண்டி கூட போகவில்லை வரவில்லை. அருகில் இருக்கும் வீடுகள் எல்லாம் உம்மென்று கலகலப்பில்லாமல் இருக்கின்றன. மக்கள் அனைவரும் வீட்டுக்குள் அடைந்திருக்கின்றனர். ஞாயிற்றுக் கிழமையை ரசித்துக் கொண்டிருக்கின்றனர் போல. 


இப்படி ஒரு சம்பவம் அவர்களதுத் தெருவில் நிகழ்ந்திருக்கிறது ஆனால் அதை வேடிக்கைப் பார்ப்பதற்கு கூட கூட்டம் இல்லை. அந்த கொலைக்குத் தான் பெருத்த அவமானம்.


அவரது மூடியக் கண்களால் வெய்யிலில் வெளுத்துப் போய் ஓரிரண்டு மேகங்களை ஆங்காங்கே கொண்டு இருக்கும் அந்த வானத்தை பார்த்தபடி இருக்கிறார் அவர். கீழே செத்துக்கிடப்பவர் மண்ணோடு படுத்துக் கிடக்க, அவரை சூழ்ந்து ரத்த நிற திரவம் மண்ணில் காய்ந்த நிலையில் இருக்கிறது. 


மதியநேர வெய்யிலிலும் மனதை லேசாக்குவதற்க்கென்றே வீசுகின்ற இந்த காற்று குளுமையாக இருக்கிறது. பிணத்திற்கு அருகில் நின்று கொண்டு இருப்பவரின் சட்டை காற்றில் படபட என்று அடித்துக் கொள்கிறது. அவர் தலையைக் கீழே இறக்கி செத்துக் கிடப்பவரைப் பார்ததுவிட்டு, அவரது கையில் இருந்த கத்தியை அங்கேயே போட்டுவிட்டு அங்கிருந்துத் திரும்பினார். அவர் முகத்தில் இப்போது சோகமும் இல்லை கோபமும் இல்லை. மெதுவாக அவரது கால்களை இயக்கி அங்கிருந்து நடக்கிறார்.  


அரைக்கால் டவுசரும், நீல நிற முழுக்கை சட்டையின் கைகளை முடித்துவிட்டும், இடது புறத்தில் வகுடு எடுத்து வழித்து சீவியத் தலையும், என்னை வடியும் முகமும் கொண்ட அவர், அவரது வலது கையில் இன்னும் அதே சூட்டுடன் வழிந்து கொண்டிருக்கும் அங்கே செத்துக் கிடப்பவரின் ரத்தத்தை அவரது டவுசரில் துடைத்தார்.  


ஆளில்லாத ஆட்டோ, ஆளில்லாத கார்கள், ஆளில்லாத தட்டுவண்டி, என வெறிச்சோடி காட்சியளிக்கும் இந்த ரோடில் இப்போது இவரை நோக்கி குறைக்கும் நாயின் சத்தம் காது ஜவ்வுகளை கிழிக்கிறது. அது 'கொலைகாரன் கொலைகாரன்' என்பது போல 'வவ் வவ்' என்று குறைத்துக் கொண்டிருக்கிறது. இவரும் அதனைக் கண்டுகொள்ளாமல் முன்னே நடந்து செல்கிறார். 


ஒரு வறண்டு போன நதியைப் போல காட்சியளிக்கிறது அவரது முகம். முகத்தில் எந்த ஒரு உணர்வும் இல்லை. எப்படி இருக்கும்? இவரை ஒரு கொல்லும் கருவியாக வைத்துக் கொண்டு இருக்கிறான் சங்கர். இவருக்கு ஹிப்னோடைஸ் செய்து, இவரது மூளையில் இவருக்கு தெரிந்தே புகுந்து, இவரிடம் மற்றவர்களைக் கொல்லும்படி சொல்லிவிட்டான். 


இவரும் அசராமல் அனைவரையும் ஒரு சிறு தவறு கூட இல்லாமல் கொன்றுவிட்டார். ஆனால், இப்பொழுது தான் அவரது கையில் வைத்திருந்த கத்தியை, அவரது கை ரேகையுடன் விக்டிமிற்கு அருகிலேயே போட்டுவிட்டு போய்க் கொண்டிருக்கிறார்.


 என்னதான் சங்கர் இவரை ஹிப்னோடைஸ் செய்து தன்வசப் படுத்திக் கொண்டாலும், இவரது ஆழ்மனது இந்த வேலையை மனதார வெறுக்கத் தான் செய்கிறது. என்ன செய்ய, ஒரு முறை பிழைப்பிற்காக இந்த வேளையில் சங்கரிடம் சேர்ந்துவிட்டார், இப்பொழுது பல கொலைகளுக்கு இவர் தான் காரணமாக இருக்கிறார். காவலர்களும் இவரை வலை வீசித் தேடிக்கொண்டு தான் இருக்கின்றனர். 'பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பதை போல இவரும் ஒரு முறை மாட்டுவாரா?


அவருக்குப் பின்னால் குறைத்தபடி வந்து கொண்டிருந்த நாயிடம் திரும்பினார். அதுவும் அதன் ஒட்டுமொத்த வீரத்தையும் காண்பித்து குறைக்கிறது. சற்று நேரத்துக்கெல்லாம் அவரை குறைத்தபடி நெருங்குகிறது. சுதாரித்துக் கொண்டார். மறுமுறை குறைத்தது. இவர் வலது கையை ஓங்கி அதன் உச்சந்தலையில் அடித்தார். 'பட்' என்று ஒரு சத்தம் கேட்டது. நாய் படுத்துவிட்டது. அநேகமாக இறந்திருக்கலாம். அப்படி ஒரு அடி.


நாயைப் பார்த்துவிட்டு அவரது பாதைக்குத் திரும்பினார். இவரால் இப்பொழுதுதான் கழுத்து அறுபட்டு செத்துக்கிடக்கும் நபர் இவருக்கு முன்னால் இருந்து தூரத்தில் நடந்து வந்து கொண்டிருப்பது தெரிகிறது. இவருக்கு ஆச்சர்யம் பின்னேத் திரும்பி அவர் செத்துக் கிடைக்கும் இடத்தை பார்த்தார் ஆள் இல்லை. அவர் செத்துக் கிடந்த இடத்தில் கொட்டிக்கிடந்த அவரது ரத்தமும் இல்லை. 


இவர் அவருக்கு அருகில் போட்டுவிட்டு வந்த அந்த கத்தியும் இல்லை. இவரது கையில் ஒட்டியிருந்த ரத்தமும் இல்லை. கத்தி இவரது கையில் அதேபோல பத்திரமாக இருந்தது. பயத்தில் கொஞ்ச நேரம் அப்படியே மூச்சை நிறுத்தி நடந்து வந்து கொண்டிருப்பவரின் பக்கம் வேகமாகத் திரும்பினார். 


இவருக்கு முன்னால், ஒரு ஐம்பது மீட்டர் தூரத்திலேயே அவர் நின்றுவிட்டார். இவரது கண்களுக்கு அவர் நன்றாகத் தெரிகிறார். நிச்சயமாக அவர்தான். மறுமுறை எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு இரண்டு முறை முன்னே நிற்பவரின் செத்துக் கிடந்த இடத்தைப் பார்த்தார். அங்கே அவர் நிச்சயமாக இல்லை. அவரைப் பார்த்துக் கொண்டே பெரு மூச்சு விட்டார்.


முன்னே நின்று கொண்டிருந்தவர் சற்று நேரம் இவரைப் பார்த்து நின்றுவிட்டு மெதுவாக திரும்பி நடந்தார். அவர் நடந்து போய்க்கொண்டே இவர் அவரை பின்தொடர்கிறாரா என்று திரும்பி பார்த்தார். இவர் இருந்த இடத்திலேயே மலைத்து போய் நின்று கொண்டிருந்தார். அவரும் இவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு, மறுபடியும் திரும்பி நடக்க ஆரம்பித்தார்.


 மெதுவாக முன்னே போய்க்கொண்டிருந்தவர் வலது பக்கம் இருந்த ஒரு சந்தில் மறைந்தார். இவர் திடீரென உணர்வு வந்தவரைப் போல அவரது கையில் இறுக்கமாக பிடித்திருந்தக் கத்தியை கீழே போட்டுவிட்டு அவர் போய் மறைந்த இடத்தை நோக்கி ஓடினார்.


இவரது நாசியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருந்த காற்றை சற்று அடக்கிக் கொண்டு, அதோடு கொஞ்சம் எச்சிலையும் விழுங்கியபடி முன்னே அவரைத் தேடினார். அவர் அங்கே இல்லை. ஆனால் இவர் தேடக்கூடிய ஆளை தவிர வேறு நிறைய ஆட்கள் அங்கே இருந்தனர். அதற்காக அங்கே இருப்பவர்கள் எல்லாம் இவரோடு தொடர்பில் இல்லாமல் இல்லை. 


அவர்கள் எல்லோரும் ஒரு முறை இவரால் இவரது கையால் கொல்லப் பட்டவர்கள் தான். இவர் அந்த சந்தில் போய் மூச்சிரைக்க நின்று அவரைத் தேடிக்கொண்டிருந்தார். ஆனால் அங்கிருந்த அனைவரும் இவர் அங்கே வந்ததும் சட்டென ஒரே மாதிரி இவரைத் திரும்பிப் பார்த்தனர். பின், அவர்கள் அனைவரும் இவரை நோக்கி நடந்து வர ஆரம்பித்தனர். இந்த ஒரு மயான அமைதியிலும் எந்த வித சத்தமும் இல்லாமல் இவரை நோக்கி நடந்து வருகின்றனர்.  


இவரை நோக்கி நடந்து வந்து கொண்டிருக்கும் ஒருவரை கூட இவருக்கு ஞாபகம் இல்லை. ஒவ்வொரு முறையும் ஹிப்னோடைஸ் செய்யப் பட்டு கொலைசெய்வதால், இவருக்கு யாரையும் ஞாபகம் இல்லை. தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள திரும்பி ஓட ஆரம்பித்தார். ஆனால் பயனில்லை. அந்த கூட்டம் அனைத்தும் இப்பொழுது இந்த பக்கம் இருக்கிறது. பயத்தில் என்ன செய்வதென்றுத் தெரியாமல் அப்படியே பின்னே நகர்ந்து செல்கிறார். 


திடீரென இவருக்கு முன்னே இருந்த கூட்டத்தில் இருந்து சலசலப்பு வந்தது. ஒருவர் கோட்சூட் அணிந்து, பரட்டைத் தலையுடன், மாநிறத்தில் அந்த கூட்டத்தைப் பிளந்து கொண்டு முன்னே வந்து நின்றார். இப்பொழுது, இவரைப் பார்த்து சிரிக்கிறார் அவர். அவருக்குப் பின்னே இருந்த கூட்டத்தில் இருப்பவர்களுக்கு உணர்வு என்றால் என்ன என்று தெரியாது போல. ஆனால் முன்னால் நிற்பவரோ சிரிக்கிறார்.  

பயந்து பின்னே போய்க் கொண்டிருந்த அவரது கால்கள் நின்றன. 


உதடுகள் கோபத்தில் கொப்புளித்தன. 'சங்கர்' என்று இறுக்கமாக இருக்கும் பற்களின் உள்ளே இருந்து கஷ்ட்டப்பட்டு வார்த்தை வெளியே வந்தது. படக்கென முதுகில் வைத்திருந்த துப்பாக்கியை எடுக்க முயற்சி செய்யும் பொழுது. சங்கர் மறுபடியும் கூட்டத்தை பிளந்து கொண்டு உள்ளே ஓடினார். இவரும் அவரைத் துரத்திக் கொண்டே அந்தப் பிளந்திருக்கும் கூட்டத்திற்குள் ஓடினார். ஆனால் தோல்வியே. கீழே கிடந்த கல் ஒன்று தடுக்கி கீழே விழுந்தார். 


அவரது கையில் இருந்து துப்பாக்கி நழுவி சென்றுவிட்டதை பார்த்து மறுபடியும் எடுத்துக் கொண்டார். எழுந்தார். வானம் அனைத்தும் கருப்பாக இருட்டாக இருக்கிறது. அனேகமாக பொழுது சாய்ந்திருக்கலாம். ஆனால் இவ்வளவு எளிதில், இவ்வளவு சீக்கிரத்தில் இரவு வந்துவிடாது.  


ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை அம்மாக்கள் கவனத்துடன் பாதுகாப்புடன் நோக்கிக் கொண்டிருந்தனர். இவரது கைகளில் இருக்கும் துப்பாக்கி, இவர் நடக்கும் பொழுது இருபக்கமும் வளர்ந்து இருந்த கெட்டியான புதர்களில் உரசியது. உடனே சுற்றிப் பார்த்து விட்டு துப்பாக்கியை முதுகில் வைத்தார். 


அவரது கால்கள் இவருக்கு முன்னால் கொஞ்ச தூரத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பெண்மணியை நோக்கியே நகர்ந்தன. இந்த இரவு நேரத்தில் வீசும் தென்றல் காற்றையும், குலுங்க குலுங்க சிரித்துக்கொண்டே விளையாடிக் கொண்டிருக்கும் சிறுபிள்ளைகளையும் பார்த்தும் உணர்ந்தும் இவரது மனது லேசானது. அதே உணர்வோடு அந்த பெண்மணியை அடைந்தார். அந்தப் பெண்மணி மெதுவாக இவரைத் திரும்பிப் பார்த்துத் புன்னகைத்தாள். இவரும் கூட முதன்முதலாக புன்னகைத்தார்.  


"நீ அந்த நாட்களை எல்லாம் நியாபகம் வச்சிருக்கியா பிரசாத்...?" அவரது குரல் தழுதழுத்தது. அந்த பெண்ணுக்கு ஒரு என்பது வயது இருக்கும். சொல்லப்போனால் அவர் இளம் பெண்ணல்ல. முகத்தில் ரேகையைப் போல அவ்வளவு சுருக்கங்கள். 


பதிலுக்கு இவர் பதில் சொல்லுவதற்கு முன்னர் அந்த பெண்மணியின் பார்வை இவரையும் தாண்டி பின்னே சென்றது. இவர் அந்த பெண்மணி பார்க்கும் திசையில் திரும்பிப் பார்த்தார். சங்கர் முதுகைக் காட்டியபடி நின்றுகொண்டு யாரிடமோ பேசிக்கொண்டு இருக்கிறான். மீண்டும் திரும்பி அந்த பெண்மணியைப் பார்த்தார். அவர் சிரித்தபடி மெல்ல வீசும் தென்றல் காற்றில் பனித்துளியைப் போல கரைய ஆரம்பித்தார்.  


"லைலா லைலா...." இவரது கை அந்த பெண்மணியின் கையைப் பிடித்து இழுக்கும்படி நீண்டது ஆனால் பயனில்லை. அந்த பெண்மணி காற்றில் கரைந்து விட்டார். அப்படியே அந்த பெண்மணி உட்கார்ந்து இருந்த இடத்திலேயே உட்கார்ந்து அழத்தொடங்கினார்.  


மும்முரமாக அழுதுகொண்டு இருந்தவர், திடீரென ஒரு விலங்கை போல பாய்ந்து, ஆக்ரோஷத்தில் சங்கரை நோக்கி கர்ஜனை செய்தபடி ஓடினார். அருகே இருந்த மக்கள் எல்லாம் அப்படியே அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். மக்கள் யாரும் இவரின் ஆக்ரோஷ செயலுக்கு பணிந்து பயப்படவில்லை. ஆனாலும் இவர் சங்கரை நோக்கி பயங்கரமாக ஓடுவதை நிறுத்தவில்லை.


சங்கர் திரும்பினார். சிரித்தார். அவரை நோக்கி ஓடி வந்து கொண்டிருக்கும் இவரைப் பார்த்து, கையில் இருந்தத் துப்பாக்கியை தூக்கி இயக்கினார். தோட்டா இவரதுத் தலைக்குள் போய் வெளியே வந்து கொஞ்ச தூரம் பயணம் செய்தது. அப்படியே சரிந்து கீழே விழுந்தார் இவர்.


இப்பொழுது இவரை நோக்கி சுட்ட சங்கரின் உருவம் மெல்ல கரைந்தது. இன்ஸ்பெக்டர் தங்கராசுவின் உருவம் தெரிகிறது. இவரை நோக்கி சுட்ட அந்தத் துப்பாக்கியை திரும்பவும் உள்ளே வைத்தார்.  


"நமக்கேத் தண்ணி காமிக்கிறான். பிரெஸ்ஸக் கூப்புடுங்கய்யா... இன்னையோட இந்தத் தொல்லை ஒழிஞ்சுது..." இன்ஸ்பெக்டர் இதுவரை கொலைகள் செய்துவந்த கொலையாளியைப் பிடித்துவிட்டதை எண்ணி, அவர் மேல் பட்டிருந்த கரையை ஒரே அலசலில் கழுவிவிடுவதைப் போல கான்ஸ்டபிளைப் பார்த்து உரக்க சொன்னார்.  


"ஐயா... இவன் வெறும் அம்பு தான் யா... வீசுனவன புடிக்கணும்..." இன்ஸ்பெக்டரின் காதில் வந்து முனகினார் சப்-இன்ஸ்பெக்டர். இருவரும், கண்கள் திறந்தபடி விட்டத்தைப் பார்த்துக் கொண்டு நெற்றியில் சிகப்பு நிற திரவம் வழியும் பொட்டுடன் மல்லாக்க படுத்துக் கிடக்கும் 'பிரசாத்'ஐ பார்த்துக் கொண்டு நின்றனர். ரோட்டில் மக்கள் கூட்டம் விருவிருவென்று கூடியது...  Rate this content
Log in

Similar tamil story from Tragedy