சந்திரயான்!
சந்திரயான்!


ஒரு காலத்தில் இந்தியக் குழந்தைகள் பத்து பதினைந்து வயதுக்கு மேல்தான் புகை வண்டிப் பயணம் செய்யும் வாய்ப்பு பெறுவார்கள். ஆனால் இன்று அப்படி அல்ல. கணினி உலகை கலக்கிக் கொண்டிருக்கும் நம் இந்திய இளைஞர்களின் ஆதிக்கத்தால் இப்போதெல்லாம் விமானப் பயணம் என்பதும் அயல்நாட்டுப் பயணம் என்பதும் நடுத்தர / கீழ்நடுத்தர மக்களுக்குக் கூட மிக மிக சாதாரணமான ஒன்றாகி விட்டது. அவர்தம் பெற்றோரும் அதில் அடக்கம்! கணினி உலகின் உச்சைத்தைத் தொட்டிருக்கும் நம் மதிப்புமிகு இந்தியர் சுந்தர்பிச்சை அவர்களைப் பற்றி அறியாதோரும் இருக்க முடியுமா?
இந்திய விண்வெளி சாதனையின் மற்றொரு பெருஞ்சாதனை சந்திரயான் – 2. பிரதான நோக்க அளவில் மிகப் பெரிய வெற்றி பெற்ற சந்திரையான்-2. அதிலிருந்து தரையிறங்கியானது, நிலவில் தரை இறங்குவதில் ஏற்பட்ட ஒரு சிறு குறைபாட்டின் காரணமாக ஒரு தடுமாற்றத்தைப் பெற்றது. ஒரு குழந்தை போல் கலங்கிய இஸ்ரோ தலைவரை அரவணைத்து பிரதமர் ஆறுதல் கூறிய செயல் இந்திய மனித நேயத்தின் உச்சம்! அந்த தடுமாற்றத்தை தவிடுபொடி ஆக்கும் பணிகள் தொடர்கிறது. எனது இந்தியா இந்தக் குறைபாட்டை களைவது உறுதி!
கபடி விளையாட்டில் எவ்வளவு பேர் சுற்றி வளைத்து அடக்கி வெளியேற்றப் பார்த்தாலும் திமிறிக் கொண்டு வெடித்தெழுந்து ஒன்றுமே நடவாதது போல் ‘கெத்தாக’ கோட்டைக் கடந்து தன் எல்லைக்குத் திரும்பும் ஒரு சிறந்த கபடி வீரனைப் போல - மொகாலயர், போர்ச்சுகீசியர்கள், டச்சுக்காரர்கள், என எத்தனையோ பேர் வந்து முட்டி மோதிப் பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாமல் திரும்ப - இன்றும் தன் சுய தன்மைகளோடு சிறந்து விளங்குவது நம் இந்தியா.
ஆம். இவைகளோடு நாம் திருப்தி அடைந்து விட முடியாதுதான். ஒருவர் பசித்திருக்க நாம் மட்டும் உண்ணும் அவலத்தை ஒழித்து பசிப்பிணி போக்க எவ்வளவோ உழைக்க வேண்டியிருக்கிறது அதற்கான தடைகளை கடக்க வேண்டி இருக்கிறது. உழைப்போம். நம் இந்தியா சாதிக்கும்!
( நமது இந்தியாவை மேலும் காண்போம்)