சித்தி
சித்தி
சித்தி சின்னத்திரையில் மிக முக்கியமான நெடுந்தொடர். அனைவர்க்கும் மிக மிக பிடித்தமான கதை. சித்தி என்றாலே அன்பு தானாக வரும் அல்லவா
இன்று உங்களுக்காக என் சித்தியை கொண்டுவந்துள்ளேன்.
சக்தி பிறந்ததில் இருந்து அவளுக்கு சித்தியிடம் பிரியம் அதிகம். எப்பொழுதும் சித்தியிடமே ஒட்டிக்கொள்வாள். அவளுக்கு 3 வயது ஆன போது சக்தியின் அப்பாவிற்கு வெளிநாடு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சக்தியின் அம்மாவையும் அழைத்துக்கொண்டு வெளிநாடு சென்றுவிட்டார். சக்தி சித்தியிடம் வளர தொடங்கினாள்.
அவளுக்கு 8வயது நடந்துகொண்டிருக்கும் பொழுது அவளுடைய சித்திக்கு திருமணம் முடிவு செய்யப்பட்டது. சக்தியின் அப்பா அம்மா தாயகம் திரும்பிவிட்டனர். திருமண கொண்டாட்டங்கள் ஒரு பக்கம் போய் கொண்டிருந்தாலும் ஒருத்தரை ஒருத்தர் பிரிய போகிறோம் என்ற வருத்தம் சித்தி மற்றும் சகியின் மனதில் இருந்தது. திருமணம் முடிந்து சித்தி அவள் வீட்டிற்கு சென்றுவிட்டாள். அம்மா அப்பா அருகில் இல்லாதபோது உணராத தனிமையை இப்பொழுது உணர்ந்தாள்.
அவளுடைய சுறுசுறுப்பு ஆர்வம் என அனைத்துமே குறைந்துபோனது. சில நேரம் வருத்தத்தில் அழுததும் உண்டு. அம்மா அப்பாவை விட சக்திக்கு சித்தி என்றால் ஒரு படி மேல் தான். இதை அனைவரும் அறிவர்.
அனைவரையும் பிரியக்கூடாது என்றால் ஒரு சிலரை பிரிந்து தான் ஆக வேண்டும் என்று சொல்வது உண்மை போலும்.
சக்தி தனக்குள் பல மாற்றங்களை கொண்டுவந்தாள். எல்லாரிடமும் சற்று விலகியே இருந்தாள். மற்றவர்கள் அவளுக்கு இதை கூறினாலும் சிறு புன்னகையோடு அதை அப்படியே முடித்து கொள்வாள்.
கல்லூரியில் அவள் விரும்பிய பாடப்பிரிவை வீட்டினர் மறுத்தாலும் சித்தி தலையிட்டு அனைவரையும் ஒப்புக்கொள்ள வைத்து அவளுக்கு பிடித்தமானதை செய்தாள்.
சக்தி காதல் வயப்பட்டபோது முதலில் கூறியது அவளின் சித்தியிடமே. அவளின் காதலை வீட்டில் உள்ளவர்கள் எதிர்த்தாலும் அவர்களை சம்மதிக்க வைத்து அவளுக்கு என்றும் துணையாக இருந்து அவளுக்கு திருமணத்தை நடத்தி வைத்து அகமகிழ்ந்தாள் அவளின் சித்தி.
வாழ்க்கையில் அவள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளுக்கும் உடன் நின்றாள் அவளின் சித்தி.
நாம் நேசிப்பவர்கள் நம்மை விட்டு எவ்வளவு தூரம் சென்றாலும் நம் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் ஒருபோதும் குறைவதில்லை. அனைத்து பிரிவுகளும் வலியை தருவதில்லை. சில பிரிவுகள் வாழ்க்கையில் முக்கியமானதே...
சித்தி என்பவள் அம்மா என்பவளுக்கு சற்றும் குறைந்தவள் அல்ல பெறாமலே தாய்மை உணர்வை உணர்ந்தவள் அவள். தனக்கென்று பிள்ளைகள் வந்துவிட்டாலும் கூட அவள் தூக்கி வளர்த்த குழந்தையையே முதல் குழந்தையாக கருதுவாள். சிறிதும் பிரதிபலனை எதிர்பார்க்காமல் நம் மேல் அன்பை பொழிபவள் தான் சித்தி. அம்மா அப்பாவை விட குழந்தைகள் தோழமை பாராட்டுவது சித்தியிடமே!
