DEENADAYALAN N

Inspirational

5.0  

DEENADAYALAN N

Inspirational

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்!

செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்!

5 mins
356



ஹை விவு, அவி, ரிஷி, வரதா, நசீர், பகத், வினி, அனி மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!



‘ஒரு காட்டுலே அண்டமாமுனிங்கிற ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு பணிவிடை செய்யறதுக்கு அவர் கூடவே நாலு சிஷ்யர்களும் இருந்தாங்க. மலர் பரிச்சிகிட்டு வர்றது, காட்டில் சுற்றித்திரிந்து உணவுக்கு வேணும்ங்கற பொருள்களை சேகரிச்சிகிட்டு வந்து சாப்பாடு தயாரிக்கிறது, சுற்றுப்புறத்தை தூய்மையா வெச்சிக்கிறது, முனிவர் தியானம் செய்கிற சமயங்கள்லே அமைதி பராமரிக்கிறது அப்பிடீன்னு எல்லா வேலைகளையும் பார்த்துகிட்டாங்க. முனிவரும் அப்பப்போ சிஷ்யங்களுக்கு கடவுளை அடைகிற வழிகள், நீதி போதனை, ஞாயம், தர்மம்னு பல பாடங்களையும் தத்துவங்களையும் போதனை செய்வாரு.


ஒரு முறை முனிவருக்கு, தன்னோட சிஷ்யர்கள் எல்லாம் தன்னோட போதனைகளை ஒழுங்கா புரிஞ்சிக்கிறாங்களா? அப்பிடி புரிஞ்சிகிட்டு, சமயம் வாய்க்கும் போது, அந்த போதனைகளை ஒழுங்கா கடைபிடிப்பாங்களா? – அப்பிடீன்னு ஒரு சந்தேகம் வந்துச்சி.


‘சரி! அதை சோதனை செஞ்சி பார்த்துருவோம்’ அப்பிடீன்னு முடிவு செஞ்சாரு. நாலு சிஷ்யர்களும் அவங்கவங்க கடமைகளை செய்ய வெளிலே போயிருந்தாங்க. அந்த நேரம் பார்த்து அந்த வழியா ஒரு பூனை வந்துச்சி. அந்த பூனையை முனிவர் கூப்பிட்டாரு.


 ‘ஆஹா.. எல்லாம் தெரிஞ்ச முனிவர் நம்மளை கூப்புடுறாரே’ன்னு அந்தப் பூனைக்கு ரொம்ப சந்தோஷம் ஆயிடுச்சி. முற்றும் தெரிஞ்ச முனிவரில்லையா அவரு. அதனாலே அந்த பூனைகிட்டே பூனை பாஷையிலே ஏதோ சில விஷயங்களை சொன்னாரு. முனிவர் சொன்ன எல்லாத்தையும் கேட்டுகிட்டு ‘அப்பிடியே செய்யிறேன் ஸ்வாமி’ அப்பிடீன்னு சொல்லி பூனை முனிவரை நமஸ்காரம் பண்ணிட்டு போயிருச்சி.


அன்னைக்கு ராத்திரி முனிவர் தூங்கற நேரம். முதல் சிஷ்யர் வழக்கமா கொண்டு வருகிற மாதிரி ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்தாரு. அதைப் பார்த்த முனிவர் தூங்குற மாதிரி பாவனைப் பண்ணிட்டு படுத்திருந்தாரு. முனிவர் தூங்குனா யாரும் எழுப்பக் கூடாது அப்பிடீன்னு ஒரு நடைமுறை இருந்துச்சி. அதனாலே அந்த சிஷ்யர் பாலை அவர் கால் பக்கத்துலே வெச்சிட்டு போயிட்டாரு. அந்த நேரம் பார்த்து அந்தப் பூனை (நம்ம முனிவர் சொன்ன பூனைதான்!) உள்ளே வந்து அந்தப் பாலை தட்டி விட்டு குடிச்சிட்டு வெளிலே ஓடிப்போயிருச்சி. முழிச்சிப் பார்த்த முனிவருக்கு பயங்கர கோவம் வந்துருச்சி! பயங்கரமா சத்தம் போட ஆரம்பிச்சாரு. சிஷ்யர்களெல்லாம் ஓடி வந்து பயத்தோட முனிவர் முன்னாடி நின்னாங்க!


‘யாரு பால் வெச்சிட்டுப் போனது?’ அப்பிடீன்னு கோவமா கேட்டாரு.


‘நான் தான் குருவே ‘ அப்பிடீன்னு பயத்தோட முதல் சிஷ்யர் வந்து நின்னாரு. கோவத்துலே அவரை திட்டு திட்டுன்னு திட்டி உண்டு இல்லைன்னு ஆக்கிட்டாரு. ‘ஒரு பூனை தட்டிவிட்டு குடித்து விட்டு போகும் அளவுக்கு அந்தப் பாலை யாராவது வைப்பார்களா? இத்தனை முட்டாளாக இருக்கிறாயே.. உனக்கு அறிவில்லை..?’ என்று கடுமையா கேட்டார். முதல் சிஷ்யர் ரொம்ப அவமானப் பட்டு வெளிலே வந்தார்.


அப்பொ அந்தப் பூனை அங்கே ஒரு திட்டு மேலே உட்கார்ந்துகிட்டு இருந்துச்சி. முதல் சிஷ்யர் அதுகிட்டே போயி, ‘அட அல்ப விலங்கே.. உனக்கு அறிவில்லே? நீ ஒரு அஞ்சறிவு ஜன்மம் அப்பிடீங்கறதை காண்பிச்சிட்டையே. குருநாதருக்கு வெச்சிருந்த பாலைத் தட்டி விட்டுட்டு அவரோட கோவத்துக்கு என்னை ஆளாக்கிட்டியே? கேவலம் ஒரு விலங்கு – உன்னாலே எனக்கு எவ்வளவு பெரிய அவமானம். இனி நான் அவரு முகத்துலே எப்பிடி முழிப்பேன்? உன்ன என்ன செய்கிறேன் பார்? ‘ அப்பிடீன்னு சொல்லி ஒரு பெரிய மரக்கட்டையை எடுத்து அந்த பூனை மேல் வீசினார். ஆனால் பூனை லாவகமாக அதிலிருந்து தப்பி ஓடி விட்டது. ‘என்றைக்காவது ஒரு நாள் என்னிடம் மாட்டுவாய்.. அப்போது உன்னை என்ன பாடு படுத்துகிறேன் பார்’ என்று ஆக்ரோஷமாக கத்தி விட்டு, கோவத்துடன் திரும்பினார் முதல் சிஷ்யர்.




அடுத்த நாள் ராத்திரியும் தூங்கற நேரம். இரண்டாவது சிஷ்யர் ஒரு டம்ளர் பாலைக் கொண்டு வந்தாரு. அதைப் பார்த்த முனிவர் தூங்குற மாதிரி பாவனைப் பண்ணிட்டு படுத்திருந்தாரு. முனிவர் தூங்குனாதான் யாரும் எழுப்பக் கூடாதே! அதனாலே அந்த இரண்டாவது சிஷ்யர் பாலை அவர் தலைக்கு பக்கத்துலே வெச்சிட்டு போயிட்டாரு. கொஞ்ச நேரம் கழிஞ்சது. நம்ம தலைவர் பூனையார் முதல் நாள் ராத்திரி மாதிரியே உள்ளே வந்து பாலை தட்டி விட்டு குடிச்சிட்டு வெளிலே ஓடிப்போயிட்டாரு. சத்தம் கேட்டு எழுந்திருச்ச முனிவருக்கு பயங்கர கோவம் வந்துருச்சி! காடே கதிகலங்கற மாதிரி சத்தம் போட ஆரம்பிச்சாரு. அன்னைக்கும் சிஷ்யர்களெல்லாம் ஓடி வந்து பயத்தோட முனிவர் முன்னாடி நின்னாங்க!


‘யாரு பால் வெச்சிட்டுப் போனது?’ அப்பிடீன்னு கோவமா கேட்டாரு.


‘நான் தான் குருவே ‘ அப்பிடீன்னு பயத்தோட இரண்டாவது சிஷ்யர் வந்து நின்னாரு. ‘எதுக்கும் லாயக்கில்லாத ஜன்மமே! நேத்து நடந்தது வெச்சாவது நீ பாடம் கத்துகிட்டு இருக்கோணுமில்லே. முட்டாளே..’ அப்பிடீன்னு கோவத்துலே அவரை கன்னாபின்னான்னு திட்டி முட்டிக்கால் போட சொல்லி தண்டனை கொடுத்திட்டாரு. தண்டனை முடிந்து இரண்டாவது சிஷ்யர் ரொம்ப மனபாரத்தோட வெளிலே வந்தார்.


அப்பொ அந்தப் பூனை அங்கே ஒரு மரத்து மேலே உட்கார்ந்துகிட்டு இருக்கறதப் பார்த்தாரு. அதுகிட்டே கோவமா போனாரு. ‘அட திமிரு புடிச்ச பூனையே. என்ன தைரியம் இருந்தா இன்னைக்கும் பாலை தட்டிவிட்டு குடிச்சிட்டு என்னை குருநாதர்கிட்டே மாட்டி விட்டுட்டுப் போவே. உன்னை என்ன செய்யறேன் பார்..’ அப்பிடின்னு ஒரு பெரிய கல்லை அந்த பூனை மேல் விட்டெறிஞ்சார். ஆனால் அதை எதிர்பார்த்திருந்த பூனை ஒரே தாவாக தாவி அந்த இடத்திலிருந்து தப்பி ஓடி விட்டது. ‘மறுபடியும் உன்னை இங்கே பார்த்தேன்னா தொலைத்து விடுவேன். அதோடு நீ உயிரிழந்து விடுவாய்’ என்று ஓவென்று குரலெடுத்து கத்தினார் இரண்டாம் சிஷ்யர்.


அடுத்த நாள் மூன்றாம் சிஷ்யருக்கும் இதைப் போலவே அனுபவம் ஏற்பட்டு குருநாதரிடம் பெரிய தண்டனை கிடச்சிது. அவரும் ‘பூனை வசமா மாட்டிச்சின்னா ஒரே போடாக போட்டுட வேண்டியதுதான்’னு நேரம் எதிர்பார்த்து காத்துகிட்டிருந்தார்.


நாலாம் சிஷ்யருக்கு ஒன்னும் புரியலே. என்ன நடக்குதுன்னும் தெரியவிலே. இருந்தாலும் அடுத்த நாள் அவர்தான் பால் எடுத்துட்டு வர வேணும். நல்லா யோசனை பண்ணினாரு. அப்புறம் தைரியமா அன்னைக்கு ராத்திரிக்கு குருநாதருக்கு பால் எடுத்துட்டு வந்தார். குருநாதர் நல்லா தூங்கிகிட்டிருந்தார். சில வினாடி யோசிச்சாரு. அப்புறம் தைரியமா, ‘குருநாதரே.. பால் கொண்டு வந்திருக்கேன்.. எழுந்து சாப்பிடுங்க’ அப்பிடீன்னு ஒரு குரல் கொடுத்தாரு. குருநாதர் அசையவே இல்லை. அப்புறம் மெதுவாக தொட்டு குருநாதரை எழுப்பினார்.


‘யாரடா அவன்’ அப்படீன்னு ரொம்ப கோவத்தோட தடால்புடால்னு முனிவர் எழுந்திரிச்சாரு. மூன்று சிஷ்யர்கள் பின்னாலே நிற்க, நாலாவது சிஷ்யன் பாலை வெச்சிகிட்டு குருநாதர் பக்கத்துலே நின்னுகிட்டிருந்தாரு. பின்னிருந்த மூனு சிஷ்யர்களும் நடுநடுங்கிப் போயிட்டாங்க.


‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். உங்கள்லே, யாராவது சொல்லுங்க பார்க்கலாம்.. - அதுக்கு அப்புறம் என்ன நடந்திருக்கும்? நாலாவது சிஷ்யன் ஏன் அப்பிடி நடந்துகிட்டாரு? குருநாதர் என்ன செய்திருப்பாரு? – நல்லா யோசிச்சு பொருத்தமா சொல்லி கதையை முடிக்கப் போறது யாரு?’ என்று நான் கேட்டேன்.


‘நானு’ என்று முன் வந்த விவான் தொடர்ந்தான்:

நாலாவது சிஷ்யர் மட்டும் குருநாதர் முன்னாடி பேசாம நின்னாரு. ‘அடேய் அற்பப் பதறே, என்ன தைரியம் இருந்தா நீ என்னை தூக்கத்திலிருந்து எழுப்பி இருப்பே? மத்தவங்களைப் போல நீயும் பாலை வெச்சிட்டுப் போக உனக்கு என்ன கேடு வந்தது?’ என்று கோவத்துடன் கத்தினார்.


‘மன்னிச்சிடுங்க குருநாதா.. மூனு நாளா பூனை வந்து பாலைக் குடிச்சிட்டுப் போயிருது. அதனாலே மற்ற சிஷ்யர்களெல்லாம் உங்களோட கோவத்துக்கு பயங்கரமா ஆளாகிட்டாங்க.. அதைத் தவிர்க்கனும்னுதான் உங்களை எழுப்பினேன்..’


‘அடேய்.. அப்பிடீன்னா நீயும் மத்தவங்களப் போலவே அந்தப் பூனை மேலதானெ கோவத்தைக் காட்டி அதைத் தண்டிக்கப் பார்க்க வேணும். என்னை எதற்காக எழுப்பினாய்?’ அப்பிடீன்னு இடி மாதிரி சத்தம் போட்டாரு.


நாலாவது சிஷ்யன்: ‘ மன்னிச்சிருங்க குருதேவா.. தன் வயிற்றுக்காக பாலைத் திருடி குடிப்பது பூனையோட இயல்பு. மேலும் நீங்களே எங்களுக்கு போதிச்சிருக்கிங்க... செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்’ அப்பிடீன்னு. ‘எங்கே நம் கோபம் செல்லுபடி ஆகுமோ அங்கே அந்தக் கோவத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே வீரம்’ அப்பிடீங்கறது நீங்கள் சொல்லிக் கொடுத்த பாடம்! பூனை நம்மை விட பலவீனமானது. அதனிடத்தில் நம் கோவத்தைக் காட்டுவது நமக்கு வீரமல்ல. அதே சமயம் உங்களித்தில் எங்கள் கோவம் செல்லுபடி ஆகாது என்று தெரியும். என்றாலும் எங்கள் உணர்வை உங்களித்தில் வெளிப் படுத்தினாலே – நீங்கள் கோவப்பட்டாலும் – இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு ஏற்படும். அதனால்தான் உங்களுக்கு கோவம் வந்தாலும் வரட்டும் என்று உங்களை எழுப்பினேன்’


நாலாவது சிஷயனின் விளக்கத்தைக் கேட்ட முனிவர் மிகவும் மகிழ்ந்தார். அவரை மிகவும் பாராட்டினார். கற்றுக் கொண்ட படி நீதி நெறியுடன் நடந்து கொண்ட அவரை அன்று முதல் தன் தலைமைச் சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்!

 

‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று அவி கேட்க, ரிஷி சொன்னான்:’செல்லிடத்துக் காப்பான் சினம் காப்பான்; அல்லிடத்து காக்கின் என் காவாக்கலென்’ என்பதே நாம் அறியும் நீதி! அதாவது சினத்தைக் காக்க வேண்டும் என்பது பொதுவான நீதி. அதிலும் எங்கே நம் கோவம் செல்லுபடி ஆகுமோ அங்கே சினத்தைக் காப்பதே உயர்வைக் குறிக்கும். அதை விடுத்து நம் கோபம் செல்லுபடி ஆகாத இடத்தில் அமைதியாக திரும்பி விடுவதால் அதை ஒரு நீதியான செயல் அப்பிடீன்னு எடுத்துக்க முடியாத. அதனாலே குருநாதருக்கு கோவம் வந்தாலும் பரவாயில்லை என்று அவரை எழுப்பியதே நீதியான செயல்’



குட்டீஸ்! சரியாச் சொன்னே ரிஷி. குழந்தைகளே உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, இந்தக் கதையப் பத்தி உங்க மனசுக்குப் பட்டதை எழுதி அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?




Rate this content
Log in

Similar tamil story from Inspirational