DEENADAYALAN N

Classics

4  

DEENADAYALAN N

Classics

அத்தியாயம் பதினெட்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

அத்தியாயம் பதினெட்டுஒரு பாமரனின் அமெரிக்கப் பயண அனுபவக் குறிப்புகள்!கோவை என். தீனதயாளன்

5 mins
31


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம் பதினெட்டு


அமெரிக்க வீடுகள்!

பெரும்பாலான அமெரிக்க வீடுகள் மிகவும் லேசாகத்தான் இருக்கின்றன. வீடுகள் எப்படிக் கட்டப்படுகின்றன என்று விசாரித்த பொழுது, நமக்கு சொல்லப்பட்ட விவரங்கள் சுருக்கமாக என்னவெனில்:

பலவகைகளில் வீடுகள் கட்டப் பட்டாலும், பெரும்பாலும் மரமே பிரதான கட்டுமானப் பொருளாக இருக்கிறது. கான்க்ரீட்டில் அடித்தளம் அமைக்கப்படுகிறது. .. அதன் மேல் செங்கல் அடிப்படையாக வைக்கப்படுகிறது. அதன் மேல், சுவர்களாக மரச்சட்டங்கள்(wooden frame) அமைக்கப்படுகின்றன. அம்மரச்சட்டங்கள் சன்னல், கதவுகள் கொண்டவையாக இருக்கின்றன. சுவரின் இருமருங்கும் ப்ளைவுட் அல்லது ‘ஓரியண்டட் ஸ்டாண்ட் போர்ட்’ இணைக்கப் படுகின்றன. இடைவெளிகளில் ‘wooden plank (Lumber)’ மணல் போன்ற பொருள்கள் கொண்டு நிரப்பப்படுகிறது. தட்பவெப்ப நிலைகளை தாங்கக் கூடிய ரப்பர் அல்லது ப்ளாஸ்டிக் பொருள்களால் செய்யப்பட்ட ஒட்டும் தன்மையுடய - அழுத்தத்தை தாங்கக்கூடிய (rubber and plastic, pressure sensitive - adhesive-backed foam) சீட்டுகளைக் கொண்டு சுவர்கள் மூடப்பட்டு, வர்ணம் பூசப்படுகிறது. கூரையும் ஏறத்தாழ இப்படித்தான் அமைக்கப்படுகிறது. (இது புரிந்து கொள்வதற்காக கொடுக்கப்பட்ட விபரங்கள். ‘இது இப்படித்தான்’ என்று எடுத்துக் கொள்ள வேண்டாம். அமெரிக்க வீடுகள், கட்டிடங்கள் பற்றி ஒரு பொதுவான தகவல்தான்.)பகல் நேர சேமிப்பு (Day Light Saving)

உழைப்புக்கு பகல்! உறக்கத்திற்கு இரவு! சரிதானே! ஆம்! மனித இனம் பகலில் சுறுறுப்பாகவும் இரவில் ஓய்வாகவும் இருக்கப் பழக்கப்பட்டு விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் சூரியனின் உதயம் / அஸ்தமனத்தைப் பொறுத்து பகல் / இரவு நேரம் அமைகிறது. குறிப்பிட்ட காலங்களில் பகல் அதிகமாகவும், மற்ற காலங்களில் பகல் குறைவாகவும் அமையும்.


நிவேடா போன்ற சில அமெரிக்க மாநிலங்களில், நவம்பர் மாதம் இரண்டாம் தேதி துவங்கி, சூரியன் ஒரு மணி நேரம் முன்னதாக உதித்து, ஒரு மணி நேரம் முன்னதாக அஸ்தமிக்கும். இதை சரி செய்யும் வண்ணம், இங்கு எல்லா கடிகாரங்களிலும் ஒரு மணி நேரம் முன்னதாக தள்ளி வைத்து விடுவார்கள். இந்த நடைமுறைக்கு பகல் நேர சேமிப்பு (‘Day Light Saving’) என்று கூறுகிறார்கள். இவ்வாறு மாற்றி அமைப்பது எவ்வளவு அவசியம் என்பதையும் நேரிலேயே பார்த்தோம். நவம்பர் இரண்டாம் தேதிக்குப் பிறகு, மாலை நான்கு மணிக்கெல்லாம், இரவு ஏழு மணி போல் இருட்டிக் கொண்டு வந்து விடுவதைப் பார்த்தோம். நேரத்தை மாற்றி அமைப்பதன் அவசியத்தை உணர்ந்த்தோம்.


 

 ஆட்டோவா… அப்பிடீன்னா…!

ம் ஊர் ஆட்டோக்களைப் போல் இங்கு காண முடியவில்லை. அதற்கு பதிலாக நான்கு சக்கர வாகனங்களான ‘டேக்ஸி’கள் மிக அதிகம்! அதே போல் இங்கு இருசக்கர வாகனங்கள் மிகவும் குறைவுதான். விலையும், வடிவங்களும் வியப்பைத் தரும். ஆனால் கார்கள் இல்லாத நபரை இங்கு காண முடியாது என்றே நினைக்கிறேன். பேருந்து மிகக் மிகக் குறைவு. அவற்றை பயன்படுத்துபவர்களும் மிகவும் குறைவு.

 

இங்கே வாங்காதீங்க!

ரு முறை ஒரு பிரபல கடைக்கு முன்னால் ‘இங்கே தரம் மிகவும் குறைவு – இங்கே பொருள்களை வாங்காதீர்கள்’ என்கிற வாசகங்கள் அடங்கிய தட்டிகளை வைத்துக் கொண்டு மூன்று நான்கு பேர் திரிந்து கொண்டிருந்தார்கள். கடைக்காரர்கள் அவர்களை துரத்தவும் முட்படுவதில்லை. வாடிக்கையாளர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்வதைப் போல் தெரியவில்லை. அவ்வாறு திரிபவர்களும் தாங்கள் பாட்டுக்கு ஏதாவது புத்தகங்களைப் படித்துக் கொண்டு, எந்த வித ஒலியும் எழுப்பாமல் யாருக்கும் எந்த தொந்திரவும் தராமல் இருக்கிறார்கள்.


அளவுக்கு மிஞ்சினால்..!

நிர்ணயிக்கப் பட்ட ஒரு அளவிற்கு மேல் மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்தாகி விடும். அருந்திய மதுவின் அளவை எவ்வளவு என்று அளவிடும் கருவிகள் மதுக் கடைகளிலேயே வைத்திருப்பார்கள்.விதியை மீறினால் மதியால் (பரீட்சை எழுதி) வெல்ல வேண்டும்!

போக்கு வரத்து விதிகள் மிகவும் கடுமையாக இருப்பது மட்டுமல்ல. நடவடிக்கைகளும் உறுதியாகவும் துரிதமாகவும் எடுக்கப்படுகின்றன. நகரில் இருக்கும் அதே அளவு கண்காணிப்பு நெடுஞ்சாலைகளிலும் உண்டு. எல்லை மீறிய வேகம், சாலை விதி மீறல் போன்றவற்றிற்கு அபராதம் மட்டும் அல்ல. ‘டிக்கட்’ டும் (நம் பாஷையில் ஓலை என்று சொல்லலாம்) வழங்கப்படுகிறது. ‘டிக்கட்’டுகளின் தன்மைக்கு ஏற்ப புள்ளிகள் வழங்கப்படும். விதி மீறல்கள் மேலும் தொடர்ந்து, குறிப்பிட்ட புள்ளிகளை தாண்டினால் உரிமத்தைத் தொடர அதற்கான தேர்வு எழுதி தேறியே ஆக வேண்டும். அதிக பட்சமாக புள்ளிகளைக் கடந்தால் உரிமத்தையே இழக்க நேரிடலாம்.அதிசயம்.. ஆனால் உண்மை!

லைப் பிரதேசங்கள், தேசீய நெடுஞ்சாலைகள், குளிர்ப் பிரதேசங்கள், பாலைவனப் பிரதேசங்கள் இன்னும் சொல்லப் போனால் எந்த ஒரு இடத்திலும் ஒரு ஆள் கூட தெருவில் சிறுநீர் கழித்ததை நாங்கள் பார்க்க வில்லை. ஆங்காங்கே அதற்கான ‘ஓய்வு அறை’ வசதிகளை செய்து வைத்திருப்பதும் அவை பெரும்பாலும் மிக சுத்தமாக இருப்பதும் உண்மை. எத்தனை அவசரமாக இருந்தாலும் மக்கள் அவற்றைத்தான் உபயோகிக்கிறார்கள்.


‘டிப்ஸ்?’

ல இடங்களிலும் சேவை புரிபவர்கள் ‘டிப்ஸ்’ எனப்படும் சிறு அன்பளிப்பை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆனால் அதை எதிர்பார்த்து அவர்கள் இருப்பதில்லை. கொடுத்தவர்கள் / கொடுக்காதவர்கள் என்று எந்த பாகுபாட்டையும் அவர்களின் சேவைகளில் பார்க்க முடியாது.நுகர்வோர் நலன்!

டைக்கு செல்கிறீர்கள். ஒரு அழகான தொலை இயக்கி பொம்மையை காண்கிறீர்கள். வாங்கிச் செல்கிறீர்கள். வீட்டிற்கு சென்றவுடன் இயக்குகிறீர்கள். குறைபாடு தெரிகிறது. கவலை வேண்டாம். ‘பில்’ லுடன் கடைக்கு சென்று பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம். அல்லது வேறு பொம்மையை வாங்கிக் கொள்ளலாம். ஒரு மாதம் கழித்துக் கூட இவ்வாறு நாங்களே மாற்றிக் கொண்டிருக்கிறோம். பொம்மை மட்டும் அல்ல. ஏறத்தாழ எல்லா பொருள்களுக்குமே இது சாத்தியம். கடைக்காரர் முகத்தைக் காட்டுவதோ அல்லது முணுமுணுப்பதோ நாங்கள் பார்த்ததே இல்லை. பொருளை வாங்கும் போது காணப்படும் அதே முக மலர்ச்சியுடன் பொருள்களை மாற்றித்தருகிறார்கள் அல்லது பணத்தைத் திருப்பித் தருகிறார்கள். நுகர்வோரின் நலனுக்கு அளிக்கப்படும் இந்த முக்கியத்துவம் எங்களை மிகுந்த வியப்பில் ஆழ்த்தியது – மகிழ்ச்சியை வழங்கியது.


             

அவசர எண்!

911 என்னும் தொலை பேசி எண் அங்கு மிகவும் முக்கியமானது. போலீஸ்காரர்களை அழைப்பதற்கான பிரத்தியேக எண். ஒரு முறை நாங்கள் அங்கு இருந்த பொழுது, எங்கள் உறவுக் குழந்தை கைப்பேசியிலிருந்து தவறுதலாக அந்த எண்ணை இயக்கி விட்டது. உடனே போலீஸ்காரர் கைப்பேசியில் அழைத்து விசாரித்தார். குழந்தை தவறுதலாக இயக்கி விட்டது என்று சொல்லியும் ஒருவர் நேரில் வந்து மேலும் விசாரித்து, உண்மையிலேயே பிரச்சினை எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு, புன்னைகையுடன் அவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி விட்டு சென்றார்.


 

குழந்தைகள் பொழுதுபோக்கு

குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் பொழுதுபோக்கிற்கு, லாஸ்வேகாஸில் நிறைய இடங்கள் உண்டு. அவற்றில் ‘சர்க்கஸ் சர்க்கஸ்’ என்பது நாங்கள் பார்த்த மிகப்பெரிய அரங்கம் ஒன்று. இது ஒரு ஹோட்டல்-கேசினோ-பொழுதுபோக்கு என எல்லாம் நிறைந்த இடம்.


இங்கே எண்ணற்ற விளையாட்டுக்கள் உண்டு. ரோலர் கோஸ்டர், இடமிருந்து வலம், மெலிருந்து கீழ், பக்கத்திலிருந்து பக்கம், தலைகீழ், எசகுபிசகான அசைவு என சாகச விளையாட்டுக்கள் நிறைய உண்டு. இவை, வயிற்றப் பிசையும். உயிர் வலி உண்டாக்கும். மயக்கத்தை வரவழைக்கும். வாந்தி புரட்டும். தலை சுற்றும். உடம்பை முறுக்கும். ஓஓஓ… என்று உச்சஸ்தாயில் அலற வைக்கும்.


அதே போல, குழந்தைகள் – ஏன் – பெரியவர்களும் கூட விரும்பி விளையாடும் ‘திறன் விளையாட்டுக்கள்’ நூற்றுக் கணக்கில் உண்டு. ‘ஓரு ஓட்டைக்குள் பந்து போடுதல்’ வகையில் மட்டும் இருபது முப்பது வகை விளையாட்டுக்கள் இருக்கும். வளையம் போடுவது என்றால் அதில் ஒரு முப்பது நாற்பது வகை இருக்கும். பொம்மைக் குதிரைப் பந்தயம்! துப்பாக்கி சுடும் பலவிதமான விளையாட்டுகள்.


ஒவ்வொன்றும் டாலருக்கு ஒன்று/இரண்டு/நான்கு என வாய்ப்புகள் கிடைக்கும். இரண்டு/மூன்று டாலர்களுக்கு ஒரு வாய்ப்பு மட்டும் கொடுக்கும் விளையாட்டுக்களும் உண்டு. பரிசும் அதற்கேற்றவாறு அதிக மதிப்பு உடையதாக இருக்கும். விதவிதமான விளையாட்டுக்கள். பத்து டாலர் செலவு செய்தால், ஒரு ஐந்து டாலர் மதிப்புள்ள பொம்மைகளையாவது பெறக்கூடிய உற்சாகமூட்டும் வாய்ப்புகள்.


இலவசமாக, மாயாஜால சர்க்கஸ் காட்சிகள். உண்மையிலேயே வியப்பூட்டும் சர்க்கஸ் சாகச நிகழ்ச்சிகள். அரை மணிக்கு ஒரு முறை மாறும் வேறு வேறு சாகச நிகழ்வுகள்.


நிச்சயமாக அரை நாளாவது நம்மை தக்க வைத்துக் கொள்ளும் ஈர்ப்புக்கள்!எரிபொருள்!

ம் ஊரில் நாம் முதன்மையாக பயன்படுத்தும் எரிபொருள் ‘எரிவாயு’ LPG(Liquified Petroleum Gas). ஆனால் அமெரிக்காவில் மின்சாரம் தட்டுப்பாடு இன்றி கிடைப்பதாலோ என்னவோ பெரும்பான்மையோர் உபயோகிப்பது மின் அடுப்புகளே. பயன்படுத்த மிக எளிது. பாதுகாப்பானது. என்றாலும் உல்லாசப்பயணம் செல்லும் போது அல்லது ‘க்ரில் சமையல்’ போன்ற திறந்தவெளி சமையல் வேலைகளுக்கு எரிவாயு உபயோகிக்கிறார்கள். என்றாலும் இது மிகவும் குறைவுதான்.!குழந்தைகள் பராமரிப்பு!

குழந்தைகளைப் பேணிக்காப்பதில் தாய்மார்களுக்கு நிகர் இல்லை. இங்கும் குழந்தைகள் மீது மிகுந்த பாசமும் அக்கறையும் பெற்றோர்கள் வைத்திருக்கிறார்கள். குழந்தைகளை அழைத்து வந்து, பள்ளி வாகனங்களில் அவர்களை ஏற்றி விடுவதும் திரும்பும் சமயங்களில் அவர்களை அழைத்துக் கொள்வதும் – நம் ஊரில் பார்ப்பதைப் போலவே உள்ளது.


அதே போல அம்மாவோ அல்லது அப்பாவோ கார்களில் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து வருவார்கள். வாஞ்சையுடன் குழந்தைகளுக்கு முத்தமிடுவார்கள். குழந்தைகளும் பெற்றோரின் கழுத்தைக் கட்டிக்கொண்டு முத்தமிடும். பின் கைப்பிடித்து பள்ளியின் வாசல் வரை அவர்களை கொண்டு விட்டு ‘டாட்டா’ சொல்வார்கள்.


அதுமட்டும் இல்லாமல் குழந்தைகளுக்காக இருக்கும் பொழுது போக்கு மையங்களுக்கு அவ்வப்போது அழைத்துச் சென்று உற்சாகப் படுத்துவார்கள். பூங்காக்களுக்கு அழைத்துச் சென்று பல மணிநேரம் செலவழித்து மகிழ்ச்சியடைவார்கள். உடற்பயிற்சி நிலையம் மற்றும் நீச்சல் குளங்களுக்கு குழந்தைகளை அழைத்து வந்து அவர்களுக்கு அக்கறையுடன் பயிற்சி அளிக்கும் பெற்றோர்கள் நிறைய உண்டு.


நம் ஊரைப்போலவே, சிறு குழந்தைகளை, தங்களின் தோளின் மேல் ஏற்றி வேடிக்கை காட்டிக் கொண்டு வரும் அப்பாக்களை நிறையப் பார்த்தோம். ஒவ்வொரு குடும்பத்திலும் இரண்டு, மூன்று, நான்கு குழந்தைகள் வரை இருக்கிறது.


ஒருமுறை நீச்சல் குளத்தில் அடிபட்டுக் கொண்ட தன் நான்கு வயது குழந்தையை, நெடுநேரம், அது சமாதனம் அடையும் வரை, அன்புடனும் பாசத்துடனும் அரவணைத்துக் கொண்ட ஒரு தாயைப் பார்த்த பொழுது எல்லா நாடுகளிலும் தாய்மை என்பது ஒரே மாதிரிதான் என்று தெரிந்தது.


அமெரிக்கப் பயணத் தொடர் – அத்தியாயம்-19ல் ............. தொடரும்Rate this content
Log in

Similar tamil story from Classics