அறம் செய விரும்பு
அறம் செய விரும்பு
“கடவுளே! எனக்கு சக்தி கொடு! எனது வாழ்க்கைச் சுமையைச் சுமக்கக் கூடிய அளவுக்கு வலிமையான சக்தியைக் கொடு!“ என கோவிலில் மனதிற்குள் வேண்டிக் கொண்டே சுவாமியின் கற்பூர ஆராதனையை தரிசனம் செய்தபடி நின்றிருந்தான் குப்புசாமி.
தரிசனம் முடிந்து வெளியில் வந்த குப்புசாமியை அவன் நண்பன் கோபால்சாமி சந்தித்து,“குப்புசாமி, என்னப்பா எப்படி இருக்க? உன்னை பாத்து ரொம்ப நாளாச்சி! உன் பொண்டாட்டி உடம்புக்கு சரியில்லாம இருந்தாங்களே இப்ப எப்படி இருக்காங்க?“ எனக் கேட்டான்.
“நான் நல்லா இருக்கேன் கோபால்சாமி. என் பொண்டாட்டியும் முன்னைக்கு இப்ப தேவல. இன்னும் முழுசா குணமாகல. அது சரி. நீ எப்படி இருக்க? உன் வீட்ல எல்லாரும் சௌக்கியமா?“
“நானும் எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்கோம். நீயும் உன் கிராமத்தில இரண்டு மூன்று வருஷமா மழை பெய்யாததால விவசாயம் பண்ண முடியாம இங்க பட்டணத்தில வந்து தங்கராசு அய்யா பங்களால தோட்ட வேலை பார்க்க உன் பொண்டாட்டியாடே வந்து செட்டில் ஆயிட்ட. தங்கராசு அய்யா எப்படி இருக்கிறார்? இப்பவும் அவரு எப்பவும் போல தான தர்மம் பண்றாரா?“
“ஆமாம். அதிலனெ்ன சந்தேகம். அவர் பேருக்கு ஏத்த மாதிரி தங்கமனசுக்காரர் தான். இல்லைன்னு யாரு வந்து கேட்டாலும் கொடுத்து உதவுறாரு. அவரைப் பார்த்து எனக்கு பொறாமையாத் தான் இருக்கு. நம்மளும் அவர மாதிரி மத்தவங்களுக்கு உதவ முடியலையேன்னு நினைக்கும் போது“.
“இதுக்கு ஏன் பொறாமைப்படணும். நீயும் நல்ல மனசோட ஒரு சின்ன உதவி செய்தாலும் அது தர்மம் தான். உன் குடிசை வாசல்ல ஒரு மண் பானைல குடிக்க தண்ணீர் வைத்து வழிபோக்கர்களோட தாகம் தீர்த்தாலும் அதுவும் தர்மம் தான். அதே தண்ணீரை ஒரு பாத்திரத்தில் வைத்து காகம், மைனா, குருவி, புறா போன்ற பறவைகளுக்கும், நாய், பூனை, ஆடு, மாடு போன்ற விலங்குகளுக்கும் தாகம் தீர்க்க உதவலாம். நீயும் 3 மாதத்திற்கு ஒரு முறை இரத்த தானம் செய்யலாம். ஒரு முறை நீ செய்யும் இரத்த தானத்தினால் குறைந்தது 2 பேர் உயிரை காப்பாற்றும் புண்ணியத்தைப் பெறலாம். அதே மாதிரி உன் காலத்திற்குப் பிறகு உன் கண்களையும் உடல் உறுப்புகளையும் தானம் செய்து பலரது வாழ்வில் ஒளியேற்றலாம். இவையெல்லாம் கூட அறங்கள் தான்“.
“கோபால்சாமி, உன்ன பார்த்ததில நல்ல பல விஷயங்களைச் சொல்லியிருக்க. நீ சொல்றபடி என்னால முடிஞ்சத செஞ்சு பிறருக்கு உதவி செய்கிறேன். நானும் கிளம்புறேன்பா....“
சில ஆண்டுகளுக்குப் பிறகு
இடம்: பெருந்தலைவர் காமராசர் நினைவரங்கம்
நாள்: 16 திசம்பர் 2018 ஞாயிற்றுக்கிழமை
நிகழ்ச்சி: வணிகப் பெருந்தகை திரு.தங்கராசு மற்றும் குருதிக் கொடை திரு. குப்புசாமி அவர்களுக்கு மாண்புமிகு மாவட்ட ஆட்சியர் தலைமையில் பாராட்டு விழா.
மாவட்ட ஆட்சியரின் உரை
அனைவருக்கும் வணக்கம். இங்கு விழா மேடையில் அமர்ந்திருக்கும் ஊர்ப் பெரியவர்களையும் மற்றும் இவ்விழாவிற்கு வந்துள்ள அனைவரையும் அன்புடன் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். நாம் இங்கு நம் நகர் வணிகப் பெருந்தகை திரு.தங்கராசு மற்றும் குருதிக் கொடை திரு. குப்புசாமி ஆகிய இருவரது நற்செயல்களுக்கான பாராட்டு விழா எடுக்கக் கூடியுள்ளோம். இவ்விருவரைப் பற்றி நான் சொல்லித்தான் நீங்கள் அறிய வேண்டும் என்பதில்லை. முதலில் வணிகப்பெருந்தகை திரு. தங்கராசு பற்றி சில வார்த்தைகள். நகரில் மொத்த காய்கனி மண்டி நடத்திவருகிறார். யார் இவரிடம் கஷ்டம் என்று வந்தால் முடிந்த அளவு உதவிகளைச் செய்து வருகிறார். சமீபத்தில் தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களைத் தாக்கிய கஜா புயலின் போது திரு. தங்கராசு அவர்கள் தன் சொந்த செலவில் 1000 பேருக்குத் தேவையான தார்ப்பாய், கொசுவலை, பாய், தலையணை, சமையல் பாத்திரங்கள், போர்வைகள், மண்ணெண்ணை அடுப்பு, வாளி,
போணி முதலியவைகள் கொண்ட நிவாரணப் பொருட்களை புயல் பாதித்த மாவட்டங்களில் தன் வீட்டு தோட்டக்காரர் திரு. குப்புசாமியுடன் நேரில் எடுத்துச் சென்று அங்கிருந்த நிவாரண முகாம்களில் தங்கியிருந்த புயல் பாதித்தோருக்கு வழங்கி உதவினார். அது மட்டுமல்ல அங்கு நிவாரண முகாம்களில் தங்கியிருந்தவர்களுக்கு சாப்பாடு செய்வதற்கு காய்கறிகள் தேவைப்படுவதை அறிந்து நம் நகர் காய்கறி வியாபாரிகள் சங்கம் மூலமாக 5 லாரிகளில் காய்கறி சேகரித்து முகாமுக்கு அனுப்பி வைத்தார். அதில் வியாபாரி சங்கத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் பங்கும் இருந்தது. காலத்தினால் செய்த உதவி சிறிது எனினும் ஞாலத்தினும் மாலப் பெரிது என்பதற்கு ஏற்ப செயல்பட்ட நம் நகர காய்கறி வியாபாரி சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. தங்கராசுவின் பொது நல சேவை மேலும் தொடர எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவருக்கு ஆண்டவன் நீண்ட ஆயுளையும் குறைவற்ற செல்வத்தையும் வழங்கிட பிரார்த்தனை செய்கிறேன்.
அடுத்ததாக திரு. குப்புசாமி பற்றி சில வார்த்தைகள். அவர் திரு.தங்கராசு வீட்டுத் தோட்டக்காராக பணி புரிந்து வருகிறார். பூவோடு சேர்ந்த நாரும் மணக்கும் என்பார்கள். அது போல் தங்கராசு அய்யா கூட சேர்ந்த குப்புசாமியும் தன்னலம் கருதாமல் பிறருக்கு சேவை செய்யும் மனப்பாங்கை கொண்டுள்ளார். அவரது இரத்த க்ரூப் அரிதான க்ரூப். இருந்தாலும் அவர் இது வரை 50 முறைக்கு மேல் இரத்ததானம் செய்து நம் நகர் அரிமா சங்கத்தால் பாராட்டுப் பத்திரம் பெற்றவர். எனவே அவரை நம் அனைவர் சார்பாக பாராட்டுகிறேன். மேலும் அவருக்கு குருதிக்கொடை குப்புசாமி என்ற சிறப்புப் பெயரையும் வழங்குகிறேன். இவருக்கும் ஆண்டவன் நீண்ட ஆயுளையும் குறைவற்ற செல்வத்தையும் வழங்கிட பிரார்த்தனை செய்கிறேன்.
அடுத்து திரு.தங்கராசு மற்றும் திரு. குப்புசாமி அவர்கள் ஏற்புரை வழங்குவர்.
தங்கராசுவின் உரை
எல்லோருக்கும் வணக்கம். என்னை கலெக்டரய்யா ரொம்ப புகழ்கிறார். நான் அதற்குத் தகுதியானவன் தானா? என எனக்கே சந்தேகம் உண்டு. நாம் பூமியில் பிறந்ததற்கு நாலு பேருக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறவன். அதனால என்னால முடிஞ்ச சின்ன சின்ன உதவிகள மக்களுக்கு செய்கிறேன். என்னுடைய வருமானத்தில கால் பங்கை அறம் செய்வதற்கு ஒதுக்கி ஆவன செய்கிறேன். எல்லாரும் அடுத்தவங்களுக்கு அவங்க சக்திக்கு தகுந்த மாதிரி உதவுனா அதுவே பெரிய புண்ணியமாகும். இங்க கலக்டர் அய்யா பாராட்டின என் வீட்டுத் தோட்டக்காரர் திரு. குப்புசாமி பண்ணின இரத்த தானத்த பத்திச் சொல்லணும்னா பல உயிர்கள காப்பாற்றியிருக்கிற புண்ணியத்தை அவர் சம்பாதிச்சிட்டார். இப்ப கஜா புயல் நிவாரணத்துக்கு வேதாரண்யத்துக்குப் போனப்ப கூட ஒரு கர்ப்பிணிப்பெண்ணுக்கு பிரசவ நேரத்துக்குத் தேவைப்பட்ட இரத்தத்தை கொடுத்து இரண்டு உயிர்கள காப்பாற்றியிருக்கார். அவரோட சேவை இந்த நாட்டுக்குத் தேவை. வாழ்க வளமுடன்
குப்புசாமியின் உரை
எனக்கு மேடையில பேசி பழக்கமில்லை. என் நண்பன் திரு. கோபால்சாமியை பல வருஷத்துக்கு முன்னாடி சந்திச்சிப் பேசினப்போ என்னால பிறருக்கு உதவ முடியலையேன்னு வருத்தப்பட்டேன். அவன் தான் இரத்த தானம் பத்தி எனக்குச் சொல்லி இப்படியும் உதவ முடியும்னு காண்பிச்சான். அவனும் இந்தக் கூட்டத்திற்கு வந்திருக்கான். அவனை மேடைக்கு அழைக்கிறேன்.
கோபால்சாமி மேடையில் ஏறியதும்,
குப்புசாமி,“நீ போட்ட சிறிய விதை இன்று பெரிய விருட்சமாக வளர்ந்து நான் என்னால முடிஞ்சப்ப இரத்ததானம் செய்துகிட்டுவர்றேன். இன்னொரு விஷயம் என் காலத்திற்குப் பின்னால் எனது உடலை நம் நகர் மெடிக்கல் காலேஜ் மாணவ மாணவியர் படிப்புக்கு பயன் படுகிற மாதிரி என் உடல் தானத்தையும் நான் செஞ்சி வச்சிட்டேன். எல்லாப் புகழும் உனக்கே!“ என் கோபால்சாமியை புகழ இருவர் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.