விடியலின் ஓசை...
விடியலின் ஓசை...
சளைக்காத சேவல்கள்
கூவிக்கூவிக் களைக்காமல்
விடியலை அழைக்க..
வேப்ப மரத்துக்குயில்
கூவிக்கூவி இசைபாட
கிழக்கில் அடிவானம்
சிவக்கத் தொடங்கி
இருளை கரைத்திட..
தூக்கம் கலைந்தும்
கலையாமலும்..
கலைந்த கூந்தலோடு
கலைந்த சேலையை
தூக்கிச் சொருகிய
புதிய மருமகள்
மண்குடத்திலிருந்து
பித்தளை சட்டியில்
ஊற்றிய தண்ணீரிலிட்ட
பசுஞ்சாணி உருண்டையை
கரைத்து ஒருகையால்
சட்டியை பிடித்து
சற்றே குனிந்து
மறு கையால்
சாணி க(ல)ரைந்த
தண்ணீரை அள்ளி அள்ளி
>
தெளித்திடும் போது
தண்ணீரை அள்ளிய கையின் கண்ணாடி வளையல்கள்
சட்டியில் உரசிய ஓசையும்..
தெளித்த நீர் முற்றத்து
மண்ணை முத்தமிட்ட சத்தமும்..
கால்களில் அணிந்த
புதுமகள் கால்களின் வெள்ளிக் கொலுசொலியின் சினுங்களும்
இணைந்து எழுப்பிய ஓசைகளின் கலவையில் அமைந்த
விடியல் முற்றத்தின் இசை...
இன்றும் என் மனதுக்குள்
ஆழமாய் பதிந்து கிடக்கிறது..
உயிருள்ள வரையிலும்
நினைவுகளை விட்டு நீங்காது
இளமைக்காலத்து கிராமத்து
விடியல் முற்றத்து இசையும்
அழகிய அழியாத கோலமும்..
இரா.பெரியசாமி...