தத்வமசி
தத்வமசி
மறைந்துபோகும் குமிழ்தான்
என்றாலும் என்றும்
மறையா அறிவுச் சுடர் எனக்குள்ளே...
நித்தியமாய்...சத்தியமாய்...
பேரறிவாய்...சாட்சியாய்...
தவம் கிடக்கிறது...நானும்
தவம் செய்து
தனை அறிய மாட்டாயா என்று....
கண்ணுக்குத் தெரியாமல் என்னைக் களவாடும் மனம்...
காணும் பஞ்சபூதங்களில்
கரைந்தே அலைக்கழிக்கும்...அறிவை
சுருங்கச் செய்து
மழுங்கச் செய்யும்...
மாய விளையாட்டில்
மயங்கி நானும்
மரணம் தழுவும் வரை
மதி தெளியேன்...
விதி அறியேன்...
விறகிலோ
மண்ணிலோ
மின்சாரத்திலோ
கரைந்து போவேன்...
கண்ணிமைக்கும் நேரத்தில் தான்
கடந்து கலைந்து செல்கிறது
கனவென்னும் நிஜமான
மூச்சிலே உள்ளது சாவி...
முயற்சி திருவினையாக்கும்...
திருவினை ஆகும் வித்தை
முயற்சியால் வருவது என்பதை
புரியவைப்பதற்கு...
பயணம் நெடிது என்றாலும்
எடுத்து வைக்கும் அடி ஒவ்வொன்றும்
மரணமிலாப் பெருவாழ்வை நோக்கிய
மகத்தான நிகழ்வு...எனக்குள் இருக்கும் அந்த
அழிவற்ற சொரூபம்
ஆனந்தப் பேரொளி
அணைத்துக் கொள்ளக்
காத்திருக்கிறது...
நான் மெல்லவே இறக்கிறேன் எனக்குள்...உயிருடன்...
தூரத்தில் ஒரு ஒளிக்கற்றை
சுடர் விட்டுப் பிரகாசிக்கிறது...
தத்வமசி ! தத்வமசி! தத்வமசி!
