பகை மறக்க தூது
பகை மறக்க தூது
உலகெங்கும் பாசத்தின்
பிடியில் உழன்று கொண்டிருக்க
கனிமங்கள் கிடைக்கும்
ஆசையினால் எல்லைக்கோடு
தாண்டி நாடு பிடிக்கும்
ஆசையில் அன்பே உருவான
புத்தர் கொள்கையை
மறப்பது சரியாகுமோ!
மின்னி மறையும்
மானிட வாழ்க்கையில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
காலங்களில் சுவாசிக்க
மரங்களைப் போல
வாழ்வது முறை என்பதை
உணர்வாரோ!
நிலமகளும் வான்மகளும்
சீற்றம் கொண்டு
சூரியனும் நிலவழகியும்
கண்ணை மூடினால்
விளையும் விபரீதம்
குறித்து அறிந்துமா
போர்மேகம் உருவாக்கி
மனித உயிர்களை
அழிக்க வேண்டுமா?
ஐந்து விரல்களின்
நீளம் வேண்டுமானால்
பணத்தினாலும் மதத்தாலும்
வேறுபட்டதாகி இருக்கலாமே
தவிர உள்ளங்கை அன்பு
உலகெங்கிலும் ஒன்றுபட்ட
புத்தரின் பண்புதானே!
பகையை மறந்து
பண்பு கொண்ட
மானிடராய் வாழும்
நாளை ஆவலுடன்
எதிர்பார்க்கும் மரம் வளர்த்துக்
காத்திருக்கும் தமிழ்மகள்!