மெய்ப்படும் கனவு கண்ட பாரதி
மெய்ப்படும் கனவு கண்ட பாரதி
எட்டையாபுரத்தில் தோன்றி, தான்
கட்டிய தமிழ்க் கவிதைகொண்டு
பாட்டினாலே வெள்ளையனை
எட்டியுதைத்த தலைப்பாகை கட்டிய
எட்டாத உயரத்தை எட்டிய கவிஞன் ..
அமிழ்தினிய தமிழ்மொழியில்
கவிபடைக்கும் மொழிநடையில்
புழக்கத்திலும் வழக்கத்திலுமிருந்த
பழமையான கடின நடைதவிர்த்து
எளியோர்க்கும் பாமரர்க்கும்
எளிதாக புரியும் வண்ணம்
புதிய மொழிநடையில்
படைத்த கவிதைகளால்
குடிசைகள் தொடங்கி
மாளிகைகள் வரையிலும்
தடையின்றி தடம் பதித்தான்..
தடைகளை உடைத்தெரிந்தான்..
உள்ளங்களில் உட்புகுந்து
துள்ளலை துண்டிவிட்டு
சாதிக் கொடுமையை
வேரறுக்கும் கவிபடைத்தான்..
பெண்ணடிமை விலங்குடைக்க
எழுத்தாலே போர்தொடுத்தான்
எழுத்தின் வலிமை கொண்டு
எழுச்சியை உருவாக்கி
வேற்றுமையின் வேரறுத்து
ஓற்றுமைக்கு நீரிறைத்து..
தாய்நாட்டின் விடுதலை
பற்றி மட்டுமே மனதிலே
அல்லும் பகலும் ஓயாமல்
சிந்தித்த தமிழ்மக(கா)ன்.
உயிரான தமிழ்மண்ணின்
உயர்வான எதிர்காலக் கனவுகளில்
மூழ்கிப்போய் தன் வாழ்வின்
நிகழ்காலத்தைத் முழுவதுமாய்
தொலைந்து விட்ட பெருந்தியாகி..
சீரிய வழியமைக்க கவி படைத்த
கூரிய அவன் எழுத்தாணி முனை
கீறிய கீறல்களின் கவித்தடங்கள்
வீரிய பலங்கொண்ட ஆயுதங்கள்
தமிழ்த்தாயின் தலைப்புதல்வன்
அமிழ்தினிய தமிழ்க் கவிஞன்..
தமிழ் உலகம் இருக்கும் வரை
தமிழர்களின் இதயங்களில்...
தமிழோடு நிலைத்திருப்பான்..
முண்டாசு கவிஞன்..
முற்போக்குச் சிந்தனையாளன்
பாரதத் திருநாட்டின் சிறப்பான
எதிர்காலத்தை முன்கூட்டியே
பதிவுசெய்த தீர்க்கதரிசி..
பாரத்தின் விடுதலைக்கும்
பாருக்குள்ளே படர்ந்த மொழிகளுள்
உயர்ந்த மொழியாளும்
தமிழ்மண்ணின் உயர்வுக்கும்
அயராமல் ஓய்வின்றியுழைத்த
வரலாறு படைத்த பாரதிக்கு
வரும் எதிர்காலம் என்றென்றும்
அவன் புகழ் பேசும் நிகழ்காலமே...
இரா.பெரியசாமி..
