இப்படித்தான் தொலைந்துபோனோம்...
இப்படித்தான் தொலைந்துபோனோம்...
தீப்பெட்டியில் மூடி வைத்த
வெல்வெட்டு பூச்சியை,
தடவி தடவிப் பார்த்து
உள்ளே தானிருக்கா என
ஒளிந்து பார்த்து
பருக்கை ரெண்டு
பகிர்ந்து தந்து...
பொழுதொடு திறந்து பார்க்க
பொட்டென செத்துப் போயிருக்கும்
அம்மா கடைக்கு
எப்போது போவாளெனக்
காத்திருந்து
அம்மாவின் புடவை
அணிந்து, கொசுவம் வைக்கையிலெ
குரல் கொடுப்பான் தம்பி
அம்மா வருது என.
ஆறு கஜம் புடவையை
அரை வினாடியில்
அனாயசமாய் மடித்து வைப்பாய்,
அம்மா வருமுன்.
மூத்திரம் சொட்டுமளவு
சிரித்து சிரித்து
பேசிக் களித்தவை
நிலா நாட்கள்!
அரை வேக்காடாய்
வடித்த சோறு
நாவெல்லாம் இனிக்குத
ு.
அரிசியும் பருப்பும் போட்டு
ஆக்கிய கூட்டாஞ்சோறு
தொட்டுக்க என்னவோ
உனக்கு நானும்
எனக்கு நீயும் தான்!
வாழ்க்கை நம் நட்பை எப்பொழுதும்
போல் தான் புரட்டிப் போட்டது...
முகபுத்தகத்தை சலித்து எடுத்து
உன்னை பிறிதொரு நாள்
கண்டெடுத்த போதும்...
உன் அலைபேசியில் அழைத்த போதும்
இதயம் ஏனோ துடித்து துடித்து
வாய்க்கு வந்து போனது...
குடும்பமாய் பார்ப்பதாய் முடிவெடுத்தோம்..
பார்த்த போதோ...பேச முடிந்தது
உன்னால் என் கணவனுடனும்
என்னால் உன் மனைவியுடனும் தான்...
பொதுவான ஏதொ ஒன்று
காணாமல் போயிருந்தது
கண்கூடு..
இப்படித்தானா
தொலைந்து போகிறது
நல்ல நட்பு?