Uma Subramanian

Inspirational

4.6  

Uma Subramanian

Inspirational

யாரிடம் வேண்டும் மாற்றம்

யாரிடம் வேண்டும் மாற்றம்

2 mins
513


ஏங்க அவங்கள பாத்தீங்களா? வேர்க்க விறுவிறுக்க.... நெஞ்சு படபடக்க வழிந்தோடும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே வழிநெடுகிலும் தேடி...... காணாமல் போகவே ஓடி வந்து கேட்டாள் குணவதி! காணாமல் போனது தன் கணவனாயிற்றே! 

இல்லீங்க! என்ற வார்த்தையோடு உள்ளே சென்று விட்டான் மருமகன் முத்து. ஏனோ.... பேசுவது கிடையாது! முதுமை எவ்வளவு கொடியது. நாம் யாருக்கும் பாரமாக இருந்து விடக்கூடாது என்று தான் ஆசை... ஆனால் இறைவன்? இந்த உலகமே ஒன்று மற்றொன்றை சார்ந்ததுதானே? என்ன செய்ய? நாம் ஒரு கணக்கு போட்டால் மேலே இருந்து கொண்டு அவன் போடும் கணக்கிற்கு யாரும் தப்ப முடியாது அல்லவா?

உடைந்து போன இடுப்பு.... தேய்ந்து போன மூட்டுகள்! ஒடிந்து போன மனம்! நலிந்து போன உடல்! குலைந்து போன குடும்பம்! என்னால் முடியாது! என்று எந்த உறவை வேண்டுமானாலும் உதறி விடலாம்! ஆனால் கணவன் மனைவி? தள்ளாத நிலையிலும் தள்ளி வைத்து பார்க்க முடியாதே? என்ன செய்ய? குலம் கோத்திரம் அங்காளி பங்காளி அவ்வளவு ஏன்? ஊருக்கே படித்து உத்தியோகம் பார்க்கும் ஒரே ஆள்! கந்தன்... ஊருக்கே நாட்டாமை... கணக்கு வழக்கு நல்லது கெட்டது அத்தனையும் அவர் தலைமையில் தான்! அத்தனை நேர்த்தி! கை மட்டுமல்ல அவரது மனமும் அத்தனை வெள்ளை! 

அப்படி கவுரமும் மரியாதையும் நிறைந்த மனிதர்! விதி யாரை விட்டது? தனது ஒரே மகனுக்கு பார்த்து பார்த்து திருமணம் செய்து வைத்தது வேதனையை தந்திடவே தன் கவுரவம் கனவு அத்தனையும் பாழாய் போனதை எண்ணி எண்ணி மனம் பாதிக்கப் பட்டவராய்.. மனம் பேதலித்து... ஆறுதலுக்குக் கூட ஆள் இல்லை!மனம் மாறுதலுக்கு வழியில்லை. தனிமை தன்னிலை மறக்க முடியாத சூழல்! அதிக நட்பு வட்டமும் இல்லை! கோயில் குலம் விசேஷ நாட்களில் மட்டும் சுற்றம் சூழ அமைதியாய் அமர்ந்திருப்பார். 

ஆனாலும் காணாமல் போன.... கூட்டத்தை விட்டு விலகிப் போன... தன் குட்டியைத் தேடும் தாயைப் போலவே.... அவர் கண்களில் அந்த ஏக்கம் தெரியும் ! ஆயினும் என்ன செய்ய? மகன் எங்கு இருந்தால் என்ன? நன்றாக வாழ்ந்தால் போதும் என அனுப்பி வைத்தவர் அவர்! ஆயினும் வயது கூட கூட ஏக்கம் கவலை! இதன் விளைவு மறதி! அந்த கொஞ்ச நேரம்! மனதில் என்ன மாற்றம் நிகழுமோ? பதட்டம் படபடப்பு எல்லாம் தொற்றிக் கொள்ளும்! 

அன்றும் அது போலத் தான்... செருப்பை காலில் போட்டுக் கொண்டு வெளியில் நடந்தவர் .... எங்கே சென்றார்? தெரியவில்லை! யாரைத் தேடச் சொல்வேன்? எங்கு தேடிச் செல்வேன்? 

அவரை விட்டால் எனக்குத் துணை யார்? வெளியே சென்ற மகளையும் இன்னும் காணவில்லை! ஒடிந்து போன இடுப்பின் வலி ஒன்றும் பெரிதாய் தோன்ற வில்லை! கால்கள் நடந்த திசை நோக்கி.... மனம் போன போக்கில்! வழி நெடுகிலும் விழி ஆறுப்பெருகி ஓடியது கண்இமைகள் தாண்டி கரங்களாலும் அணையிட்டுப் பார்த்தாள்! அணை உடைந்தது! இயற்கையின் சீற்றத்தை யார் தடுக்க முடியும்? கயல்விழிகள் செங்காந்தளாய் ! உள்ளம் எரிமலையாய்! துன்பங்கள் மனதை இறுக்கியது! 

வேண்டாத தெய்வங்கள் இல்லை! கண்டு பிடித்தாக வேண்டுமே! ஓடினாள்.... கூட்டத்தின் நடுவே தேடினாள். பார்த்தவர்களிடம் எல்லாம் அடையாளம் சொல்லிக் கேட்டாள்! அனைவரும் கையை விரித்து விட்டனர். கடைசியில் உடைந்து போன கட்டிடங்களுக்கு நடுவில் மனம் உடைந்து போய் உட்கார்ந்து இருந்தார். கண்களில் வழிந்த நீரைத் துடைக்க மனமில்லாமல் வெறுத்துப் போய் நின்றாள்! இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்த போராட்டம்? 

யார் செய்த குற்றம்? யாரை நோவது? ஆவதும் பெண்ணாலே! மனிதன் அழிவதும் பெண்ணாலே! எங்கிருந்தோ ஒலிக்க மனம் வலித்தது! மனதினுள் ஒரு கேள்வி எழுந்தது யாரிடம் வேண்டும் மாற்றம்? 

 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational