Uma Subramanian

Inspirational

4  

Uma Subramanian

Inspirational

நன்றிகள் கோடி!

நன்றிகள் கோடி!

2 mins
238


பரந்த சோலைவனம் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பசுமை கொஞ்சும் வயல் வெளிகள்... ஆர்ப்பரிக்கும் அலைகடலின் ஓசை... இதமான தென்றல் காற்று... எங்கும் முழங்கிடும் பறவைகளின் ஒலிக்கீற்று... சோலைகளின் நடுவே ஆங்காங்கே கட்டிடங்கள்.... அதன் நடுவே அழகிய குளம்.... குளத்தைச் சுற்றிலும் தென்னை மரங்கள்.... பூத்துக் குலுங்கும் மல்லிகைச் செடிகள்... கொடிகள், காகிதப் பூ மரங்கள்! ஓங்கி உயர்ந்த நாகலிங்க மரம்! மகிழ மரங்கள்... நாவல் மரங்கள்..... சப்போட்டா மரங்கள்.... பாதாம் மரங்கள்.... படர்ந்து விரிந்த பெரிய ஆலமரம்..... பக்தியை வளர்த்திடும் தேவ ஆலயம்.... எட்டி குதித்தாலும் எட்ட முடியாத உயர்ந்த மதிற் சுவர்கள்!

நடுவிலே அந்த பயிற்சிப் பட்டறை! கல்வியியல் பாடம் ஒருபுறம்... வாழ்வியல் பாடம் ஒரு புறம்..... ஆன்மீக பாடம் ஒருபுறம்.... எண் திசைகளில் இருந்தும் பயிற்சிக்கு வந்த பட்சிகள் வருடத்திற்கு மூவாயிரம்! நினைத்தாலே மனதில் தோன்றிடும் ஓராயிரம் பாயிரம்! 

காலை தோறும் வாழ்வியல் பாடம்! சுற்றுப்புறத் தூய்மை உட்பட அனைத்தும்! மூன்று தண்ணீர் தொட்டிகள்! 56 கழிவறைகள்... இரண்டாயிரம் மாணவிகள்! போட்டி.... சகிப்புத் தன்மை சகோதரத் தன்மை விட்டுக்கொடுத்தல்..... விழிப்போடு இருத்தல்! கால நேரத்தை கடைபிடித்தல்... உணவு மேலாண்மை! நீர் மேலாண்மை! சிக்கனம் எத்தனை எத்தனை பண்புகள் இன்று நினைத்தாலும் எட்டாக்கனியாய் அந்த நினைவுகள்! அன்றோ எட்டிக்காயாய் கசந்தது!  

பகலெல்லாம் பள்ளிப் பாடம்! பகல் முடிந்ததும் வீட்டுப் பாடம்... விடுதியில்! அடடா! அன்பைக் கொட்டிடும் ஆசிரியர்கள்! அறிவைப் புகட்டிடும் ஆசிரியர்கள்! ஒரு கூட்டுப் பறவைகளாய் உணவு.... உறக்கம்.. உபதேசம்...! கோடையிலும் குளிர்ச்சி! நித்தம் காலை வழிபாடு... மாணவர்களின் நலன் வேண்டி! இம்மண்ணில் கால் வைத்தவர் யாரும் கெட்டுப் போனதாய் கேட்டதில்லை! அங்கிருந்த கட்டுப்பாடு.... கட்டுக்கோப்பு... வாழ்வை நரகமாய் உணர வைத்தது அந்தக் காலம் ! இன்றோ சொர்க்கமாய்...!

அந்தக் கருவறையில் தெய்வங்களை தரிசிக்கும் பாக்கியம் மீண்டும் வாய்க்குமோ?

நெருப்பில் இட்டால் மட்டுமே தங்கமானாலும் உடலிலே தரிக்க முடியும்! 

அனலில் காய்ச்சினால் தானே பாலின் மதிப்பு உயரும்!

உளியிடம் அடிபடும் கல்தானே அழகிய சிலையாகும்! 

எங்களின் வாழ்வை வளப்படுத்தவே...  கட்டுப்பாடுகளை வலுப்படுத்தி உள்ளீர்! 

வீடானாலும்... நீங்கள் கற்றுக் கொடுத்த பண்புகளே எங்களை வழிநடத்துகின்றன!

வெளியில் அலுவலகம் ஆனாலும் நீங்கள் கற்றுத் தந்த ஒழுக்கங்களே எங்கள் பணிகளை அழகாக குறித்த நேரத்தில் செய்து எங்களுக்கு பெருமை சேர்க்கின்றன! 

களிமண்ணாய் உங்கள் கைகளில் வந்த எங்களை அழகிய பாத்திரங்களாய்ப் படைத்து நாடும் வீடும் போற்ற வாழச் செய்த உங்களுக்கு நன்றிகள் கோடி!!!

  



Rate this content
Log in

Similar tamil story from Inspirational