வழிகாட்டுவோம்
வழிகாட்டுவோம்


வழக்கத்தை விட அதிகாலையிலேயே எழுந்துவிட்டாள் அபி!
சில்லென்று வீசும் இதமான தென்றல் .... மேனியில் பட்டதும் சிலிர்த்து போக இதயமோ உற்சாகத்தில்! மனமோ ஆனந்த ராகம் மீட்டியது!மெல்ல திங்கள் மேற்கு திசையில் தன் ஒளிமுகம் மறைக்கும் நேரம் எங்கும் நிசப்தம்....பகலவன் வருகையை எதிர்நோக்கி!
வெள்ளிக்கிழமை வாசல் தெளித்து கோலம் போட துடைப்பத்தை கையில் எடுத்து தரையைக் கூட்டினாள்! ஏதோ ஒன்று மூலையிலிருந்து ஓடுவதைக் கண்டாள்! சிறிய பந்து ஒன்று இறக்கை முளைத்தாற்போல்! திடுக்கிட்டு லைட்டை போட்டாள்! சிறிய பறவைக்குஞ்சு! அருகிலிருந்த தென்னை மரத்திலிருந்து தடு(ட)மாறி கீழே வந்திருக்கிறது! எத்தனை அழகு! தன் பாதுகாப்பு கருதி ஓடி மூலையில் ஒளிந்து கொண்டது. கையில் பிடித்துக் கொஞ்சிட மனம் கெஞ்சியது! குஞ்சோ அஞ்சியது! ஆயினும் அப்படியே விட்டு விட மனம் துணியவில்லை! இருட்டில் பூனை நடமாட்டம் அதிகமென்பதால் ஓடிப் போய் மிக்சி ஜாரின் அட்டைப் பெட்டியை கொண்டு வந்து அடைக்கலம் கொடுத்தாள். குஞ்சியோ அஞ்சி ஒடுங்கி நின்றது!
சரி கோலம் போட்டு விடலாம் எனக் கருதி தன் பணியை ஆரம்பித்தாள்! சற்று நேரம் கழித்து திரும்பி வந்து பார்க்கும்போது நான்கு பறவைகள் இங்கும் அங்கும் ஓடி சுற்றி நின்று ஒலி எழுப்பின! பாவம் குஞ்சால் வெளிவரமுடியவில்லை... நிலையை உணர்ந்து அட்டைப்பெட்டியைக் கையில் எடுத்துக் கொண்டாள். அதற்குள் மற்ற பறவைகள் அலறித் துடித்தன! எத்தனைப் பாசம்..... பயம்.... இறைவனின் படைப்பில் தாய்மையுணர்வை எண்ணி திகைத்து நின்றாள்!
மெல்ல தாய் பறவை தன் சிறகை விரித்து அடித்தது. ஒருமுறை அல்ல பலமுறை....! தத்தி தத்தி சென்றது. சற்று நேரத்தில் குஞ்சுப் பறவை சிறகை விரித்து ஒலி எழுப்பியது. தாய் பறவை மீண்டும் ஒருமுறை சிறகடித்து தத்தி சென்றது. குஞ்சும் அதுபோல முயற்சித்து ஒரு அடிதூரம் பறந்தது. தாய் பறவை ஓடி வந்து தன் அலகை தன் குஞ்சின் அலகினுள் நுழைத்தது. சரியாய் செய்தாய் என்று முத்தமிட்டதோ? இருக்க வேண்டும் மீண்டும் ஒருமுறை அவ்வண்ணமே! தட்டிக்கொடுக்கும் தாய் நமக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் தான்! உருவங்கள் வேறாயினும் உணர்வுகள்
ஒன்றுதானே!
இப்படியே மெல்ல மெல்ல ஐந்து ஆறடி தூரம்.... சிறிது நேரம் கழித்து பெரிய பறவைகளைக் காணவில்லை... ஐயோ ! இப்படியே நிற்கிறதே இந்த குஞ்சு பரிதவித்தாள் அபி! எங்கிருந்தோ ஓடி வந்தன பறவைகள் ! குஞ்சின் வாயில் ஏதோ உணவை ஊட்டி விட்டன. திரும்பவும் இரண்டு முறை ஓடிப்போய் எதையோ கொண்டு வந்து ஊட்டின. சற்று நேரத்தில் கீச்... கீச்... கீச்சென அலறல் ஒலி! ஒலிக்கேட்டு ஓடி வந்தன நான்கு பறவைகள் . இங்கும் அங்கும் ஓடி குஞ்சினை சூழ்ந்து கொண்டன.
என்னவென்று ஓடிப்பார்த்தாள் அபி. பூனை ஒன்று அந்த வழியே கடந்து சென்றது. எத்தனை எச்சரிக்கை.... பாதுகாப்பு.... ! எண்ணி வியந்தாள்! என்னே! இறைவா உன் படைப்பு! மெய்யுருகி நின்றாள்!
இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பறக்க கற்றுக் கொடுத்து.... ஒரு நாள் .... இல்லை ஒரேமணிநேரத்தில் ஒரு சிறு மதிற்சுவரை தாண்டுமளவிற்கு முன்னேறிவிட்டது குஞ்சு! ஆம்! இயற்கை நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது!
பறவைகள் வழிகாட்டின.... உணவையளித்தன..... ஊக்கப்படுத்தின.... உற்சாகமூட்டின.... எச்சரிக்கை விடுத்தன.... பாதுகாப்பை வழங்கின... குஞ்சு முயற்சி செய்தது.... பயிற்சி எடுத்தது.... பெற்றோரின் வழி நடந்தது.... பெரியோரின் துணை கொண்டது! சிறகை விரித்தது..... சுதந்திர வானில் சிறகடித்துப் பறக்க!
பெற்றோரே,
உங்கள் குழந்தைகளுக்கு...
புதியதோர் உலகம் ...
புதியதோர் சூழல்....
பாதைகள் தவறலாம்...
பயணங்கள் மாறலாம் ...
ஊக்கப்படுத்துங்கள்...
உற்சாகமூட்டுங்கள்....
வாழ்க்கை நெறிகளை வகுத்துக் கூறுங்கள்....
வழித்துணையாய் நடந்து செல்லுங்கள்!
நம்பிக்கையை விதைத்திடுங்கள்
வாழ்க்கையை கடந்து செல்ல...
இந்த சின்னஞ்சிறு பறவை போல பயிற்சியை மட்டும் நீங்கள் கொடுங்கள்! முயற்சியை அவர்கள் எடுக்கட்டும்!
எண்ணங்கள் உயர்வானால் எல்லாம் உயர்வு பெறும் ! மனதிலே நம்பிக்கை விதையிடுங்கள்! தீய எண்ணங்களை சிதையிலிடுங்கள்...
வாழ்க்கை வசந்தமாகும் ....
அவர்கள் வசமாகும்! ....