முன்மாதிரி
முன்மாதிரி


அரிச்சந்திரன் நாடகம் மகாத்மாவின் வாழ்வில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மகாபாரதக் கதைகள் மணிக்கர்ணிகாவின் வாழ்வில் வீர உணர்வைத் தூண்டியது. அதுபோல நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு தாக்கத்தை உண்டாக்கி செல்கின்றனர்.
அந்த வகையில் சுப்பிரமணியன் என்றொரு ஆசிரியர் நேர்மைக்கும்.. காலந்தவறாமைக்கும்.. உழைப்பிற்கும்.... எதைச் செய்தாலும் நேர்த்தியாக செய்தல்.... என பல நல்ல பண்புகளை கொண்டிருந்தார். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட பள்ளிக்கு வருவார். கேட்டால் 30 நாட்களும் தானே சம்பளம் என்பார். விளையாட்டு மைதானங்களைச் சுற்றி மாணவர்களின் துணையோடு வேலிக் கட்டுவார் அவர் செய்வதைப் பார்த்து .சக ஆசிரியர்களும் உடன் சேர்ந்து கொள்வர்.
சரியாக 8.50 மணிக்கே தினமும் பள்ளிக்கு வந்து விடுவார்.. அவரது மகளும் ... அவரும் ஒரே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தனர். அவர் தலைமை ஆசிரியர்
... மகள் உதவியாசிரியர்!ஒருநாள் பொது ஸ்ட்ரைக்! பேருந்து ஏதும் ஓடாததால் எப்படியோ 10.45க்கு வந்து சேர்ந்தார் அவர்மகள். அவருக்கு முற்பகல் தற்செயல் விடுப்பு என வருகைப் பதிவேட்டில் பதிந்து விட்டார். அவரது மகளுக்கு கடுத்த கோபம்!
கேட்டதற்கு நீ தாமதமாக வந்தாய்..... விருப்பம் இருந்தால் பணியைத் தொடர். இல்லையெனில் வீட்டிற்கு சென்று விட்டு பிற்பகல் பள்ளிக்கு வா! என்று கூறிவிட்டார். இவ்வாறாக பாரபட்சம் பார்க்க மாட்டார்.
அவரது பள்ளியில் பதிவேடுகள் அனைத்தையும் முறையாக அதே சமயம் அழகாகவும் இருக்கும். கடமையுணர்வுக்கும் நேர்மைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய அவரே எனது வாழ்க்கையின் முன்மாதிரி என்று சொன்னால் மிகையில்லை!
ஒரு விளக்கு தொடர்ந்து எரிந்து கொண்டிருந்தால் தான் ஒளி கொடுக்க முடியும்! ஆசிரியர்கள் விளக்கினை போன்றவர்கள். அவர்களே இச்சமூகத்தில் ஒளியேற்றி இருள் நீக்குகின்றனர்.