anuradha nazeer

Tragedy

4.8  

anuradha nazeer

Tragedy

விசாரணை

விசாரணை

2 mins
24


கொப்பல் அருகே இரும்பு கம்பியால் தாக்கி தந்தை மற்றும் தாயை கொன்ற மருந்து விற்பனை பிரதிநிதியை போலீசார் கைது செய்துள்ளனர்.


கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கனககிரி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் கிரியப்பா(வயது 65). இவரது மனைவி அக்கம்மா(59). இந்த தம்பதியின் மகன் ராமு என்ற ரமேஷ்(28). இவருக்கும், கொப்பல் டவுன் பகுதியை சேர்ந்த தனுஜா என்பவருக்கும் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்திருந்தது. இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. ராமு மருந்து விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வந்தார். ஊரடங்கு காரணமாக அவர் கடந்த 2 மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார்.

இந்த நிலையில், ராமுவுக்கும், தனுஜாவுக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் ராமுவுடன் வாழ பிடிக்காமல் தன்னுடைய பெற்றோர் வீட்டுக்கு தனுஜா சென்று விட்டார். தன்னுடன் வந்து குடும்பம் நடத்தும்படி மனைவி தனுஜாவை பலமுறை ராமு அழைத்துள்ளார். ஆனால் அவர் மறுத்து விட்டு பெற்றோர் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அதிகாலை 3.30 மணியளவில் ராமுவுக்கும், அவரது தந்தை கிரியப்பாவுக்கும் இடையே திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த ராமு வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து தந்தை என்று கூட பார்க்காமல் கிரியப்பாவை கண்மூடித்தனமாக தாக்கியதாக தெரிகிறது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்மா கணவரை காப்பாற்ற முயன்றுள்ளார். இதனால் தாய் அக்கம்மாவையும் இரும்பு கம்பியால் ராமு தாக்கியதாக தெரிகிறது.

இதனால் தலையில் பலத்த காயம் அடைந்த அக்கம்மா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிர் இழந்தார். கிரியப்பா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். ஏதோ சத்தம் கேட்பதை உணர்ந்து அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்த போது அக்கம்மா கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக கனககிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து கிரியப்பாவை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கிரியப்பாவும் இறந்து விட்டார். அக்கம்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்ததும் உயர் போலீஸ் அதிகாரிகள் கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது ராமுவுடன் வாழ பிடிக்காமல் தனுஜா பிரிந்து விட்டதால், அவர் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

மேலும் தன்னுடைய மனைவியை சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வரும்படியும், தன்னுடன் சேர்த்து வைக்கும்படியும் பெற்றோரிடம் ராமு கூறியுள்ளார். இதுதொடர்பாக தனது தந்தையுடன் ஏற்பட்ட தகராறில் கிரியப்பாவை கொலை செய்ததுடன், தாய் அக்கம்மாவையும் ராமு தீர்த்து கட்டியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கனககிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமுவை கைது செய்தார்கள். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் கங்காவதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Rate this content
Log in

Similar tamil story from Tragedy