உயிர் பெற்ற தாய்
உயிர் பெற்ற தாய்
.“ உயிர் பெற்ற தாய் “
பிரசவ வார்டின் கட்டிலிலிருந்து மெல்ல எழுந்த முனியம்மா சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுப் பக்கத்தில் இருந்த தன் மூன்று நாள் பெண் குழந்தையைப் புடவைத் தலைப்புக்குள் மறைத்தவளாய் .. அந்த ஆஸ்பத்திரியின் பின்கேட் வழியே நைஸாய் நழுவினாள்.
பிறந்த குழந்தை பெண்ணாகப் பிறந்துவிட்டதே ... மனசுக்குள் பாரம் ஒருபுறம் .
அதைவிடப் பிறந்து மூணுநாள் ஆகியும் தன் குடிகாரக் கணவன்
காளி வந்து பார்க்கவில்லையே... என்ற வேதனை மறுபுறம்
ஆஸ்பத்திரிக்கு வந்து போன பக்கத்து வீட்டு, எதிர்வீட்டு ஜனம் கூட
" சே.. போயும் போயும் பொட்டையைத்தானா மறுபடியும் பெத்தே ? ஏற்கனவே பிறந்த இரண்டோட படற கஷ்டம் போறாது ? என்று பேசிவிட்டுப் போக
உள்ளுக்குள் உடைந்து போனாள் முனியம்மா
அதிலும் “ நித்தம் உன் குடிகார புருஷன் கிட்ட நீ படற உதை போதாதா ? இதில் இதையும் சேர்க்கப் போறியா ? " அந்த கடைசி வார்த்தைகள் காதுக்குள்ளேயே ரீங்காரமிட
இப்போது வெளியேறிவிட்டாள்
" ஐயோ.. வேணாம் சாமி . என் கஷ்டம் என்னோட போகட்டும் . இதுவும் உசிரோட என்கிட்ட ஒண்டிகிட்டுப் பசியால கிடந்த புழுவா துடிக்கணுமா ?
தனக்குத்தானே தேற்றியவாறு எட்டி நடை போட்டவளாய் ,
புடவைத் தலைப்பை விலக்கிப் பார்க்க குழந்தை உறக்கத்தின் சுகத்தில் உதட்டோரமாய்ச் சிரித்தபடி இருந்தது .
பொங்கிய பாசத்தை அடக்க முடியாமல் ஆசையாய் அணைத்து முத்தமிட்டவள்
குழப்பமாய் எதிர்ப்பக்கம் பார்க்க . . . ஒரு குப்பைத் தொட்டி
' விறுவிறு’ வென நடைபோட்டு , யாரும் பார்க்கவில்லையென உறுதிப்படுத்திக் கொண்டாள்
குழந்தையை அதனுள் கிடத்தினாள் . தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கிக் கொண்டு எதிர்பக்கம் கிராஸ் செய்ய , “ பட் போட்டிருந்த செருப்பின் வார் அறுந்தது
“ சே! தரித்திரம்..” கோபமும் வெறுப்புமாய்ப் பிய்ந்த செருப்புடன் நூறு அடி நடந்து , ஒரு செருப்பு தைப்பவளை அடைந்தாள்
" இந்தாம்மா . . செருப்பு அறுந்திடுச்சு . . சீக்கிரம் தைய் “
“ கொடு தாயீ . இதோ நிமிஷத்தில. .” என்றாள் அவள்
பக்கத்தில் மூளை வளர்ச்சியில்லாமல் ஒரு ஏழு எட்டு வயசுப் பையன் விரல் சூப்பிக் கொண்டிருந்தான்
எச்சில் வாயிலிருந்து வடிய உடம்பெல்லாம் அழுக்காய் அவன்
" அம் . . மே .. அம் ..மே . " இலேசாய் குரல் கொடுத்து அவன் அழவும், அவசரமாய் முனியம்மாவின் செருப்பை ஓரங்கட்டிவிட்டு
“ என் ராசா .. இருடா.. இதோ .. இந்த தாயீ காசு தந்ததும் காபி வாங்கியாறேன்
செருப்பு தைப்பவள் கொஞ்சுவதைப் பார்த்த முனியம்மாவிற்குச்
' சுருக் ' என மனம் தைத்தது
அருவருப்பூட்டும் நிலையிலுள்ள பிள்ளையைக் கூட தன் ராசாவாய் கொண்டாடும் இவள்தான் தாய் . நான் எப்படி
விநாடிக்கு விநாடி ஏறிய தாய்ப்பாசத்தில் குப்பைத் தொட்டியை நோக்கி ஓடினாள் முனியம்மா.