Seetha Lakshmi R

Drama Crime

4.0  

Seetha Lakshmi R

Drama Crime

உண்மை

உண்மை

2 mins
791


மழை கொட்டும் ஒரு காலை பொழுது. அதோ அவளை மறுபடியும் பார்க்கிறேன், கையில் ஒரு சிறு மூட்டையுடன். எங்கே செல்கிறாள்? இளம் வயது, பாவமாக தோன்றினாள். அழுக்கடைந்த ஆடை, ஆங்காங்கே கிழிசல். சாப்பிட்டு எத்தனை நாள் ஆயிற்றோ?! ஒருவன் அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். மஞ்சள் நிற மேல் சட்டை, முகத்தில் அடர்ந்த தாடி, சே! என்ன மனிதர்கள்? எல்லோரும் பார்க்கிறார்களே தவிர உதவிக்கு யாரும் முன்வர மாட்டேன் என்கிறார்களே! 


மெல்ல மெல்ல தளர் நடை போட்டு நடந்து வந்தவளை மஞ்சள் சட்டை பின்தொடர ஆரம்பித்தான். அவள் தன் பரட்டை தலையை சொறிந்து கொண்டே அலைபாயும் கண்களுடன் நடக்க தொடங்கினாள். மஞ்சள் சட்டை நெருக்கமாய் பின் தொடர்ந்தது. சே! இப்படியும் ஒருத்தனா?! பாவம் ஏழை! இருக்க இடமில்லை, கிழிந்த உடை, பட்டினியால் பஞ்சடைந்த கண்கள், காமவெறி பிடித்தவன். இவனையெல்லாம்!


அந்த பெண்ணை காப்பாற்றியே ஆகவேண்டும். எப்படி?! யோசித்து கொண்டிருக்கும் போதே, அவள் கூட்டத்தில் மறைந்தாள். அய்யோ! எங்கே அவள்?! அதோ மஞ்சள் சட்டை! அய்யோ அந்த சிகப்பு நிற வண்டியில் ஏறுகிறானே, ஆ! அவளும் அதிலிருக்கிறாளே?! என்ன கொடுமை?! பட்ட பகலில், இத்தனை பேர் எதிரில்! என்ன துணிச்சல்?! என் பைக்கை அந்த வண்டி பின் விரட்டினேன். அதோ அந்த சந்துக்குள் வண்டி நுழைகிறதே! 


கொஞ்சம் ஜாக்கிரதையாக இருப்போம்! அவர்கள் ஏதாவது ஆயுதம் வைத்திருந்தால்?! அவளை பத்திரமாக காப்பாற்ற வேண்டும். அதோ அவளை இரு பக்கமும் பிடித்து இழுக்கிறார்கள். அவள் எவ்வளவோ திமிறுகிறாள், ஆனால் பயனில்லை. அவர்கள் மிகவும் வலிமை வாய்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவள் கதறல் நெஞ்சை பிழிந்தெடுத்தது. திடீரென எல்லாம் ஓய்ந்தது. அய்யோ என்னவாயிற்றோ? 


மெள்ள எட்டிப் பார்த்தேன், அந்த வண்டி மட்டும் அங்கே! யாரையும் காணவில்லை! சுற்றும் முற்றும் பார்த்தேன், பயனில்லை. கைபேசியில் '100' ஐ அழுத்தினேன். 'ஹல்லோ! மேடம் இங்க ஒரு பெண்ணை கடத்திட்டாங்க! ஆமாம் மேடம், அனாதை பெண், கரேக்ட்! கிழிஞ்ச ட்ரெஸ். மேடம் அவளை கடத்திட்டாங்க! மஞ்சள் சட்டை போட்ட ஒருத்தன், வண்டியில கடத்தி, ஆமா, ஆமா மேடம், ரெட் கலர் வண்டி, உங்களுக்கெப்படி?! 


மறுமுனையில் அந்த பெண் காவலர், "அட! என்ன சார், 'பெண் பாவம் பொல்லாது' சீரியல் ஷூட்டிங் அது! சொன்னாங்க, யாரோ ஒரு வயசானவர் ஃபாலோ பண்றார், நெச்சுரலா இருக்கட்டும், அப்படியே விட்டுறலாம் னு! நீங்க வீட்டுக்கு போங்க!" 


ஆத்திரமாக வந்தது! சே! நேச்சுரல் எஃபெக்ட் என்று இப்படியெல்லாமா?! இன்றைக்கு இதற்கு ஒரு முடிவு கட்டுகிறேன்! இந்த கண்றாவி பிடித்த சீரியலிலிருந்து எல்லோரையும் காப்பாற்றுகிறேன்! என் பைக்கில் இருந்து பெட்ரோலை பாட்டிலில் பிடித்து அந்த வண்டி மீது ஊற்றி பற்ற வைத்தேன். அது திகுதிகு வென எரிய தொடங்கியது. ஆர்பாட்ட சிரிப்புடன், "ஒழி! போய் தொலை! எரிஞ்சு நாசமா போ! இனி உன்னால யாருக்கும் கேடு வராது!" என‌ கூறினேன்! எங்கிருந்தோ திமு திமு வென ஆட்கள் ஓடி வந்து, "அய்யோ பெரியவரே! என்ன வேலை செஞ்சீங்க?! போச்சே! மொத்த ஃபுட்டேஜும் பாழாயிடுச்சே!" என புலம்பினார்கள். நான் அவர்களை ஏளனமாக பார்த்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டேன். அப்பாடா! ஒரு எபிசோட் வராமல் தடுத்தோம்! நிம்மதியுடன் வீட்டுக்கு திரும்பினேன்.


அடுத்த நாள் மாலை ஏழு மணிக்கு என் மனைவி ஆர்வத்துடன் டீ.வி. முன் உட்கார்ந்திருப்பதை பார்த்து மனதிற்குள் சிரித்தேன்! அட! 'பெண் பாவம் பொல்லாது' சீரியல் டைட்டில் ஸாங்க்?! என்னத்தை ஒலிபரப்பு வார்கள்? எல்லாம் தான் எரித்தாயிற்றே?! பார்த்த எனக்கு தலைசுற்றியது! அதோ! திரையில் தெரிவது நான் தான்! அன்று நான் செய்த அனைத்தும் இன்று திரையில், குரல் மட்டும் வேறு யாரோ! டீ.வி இல் அந்த குரல், "ஒழி! போயிடு! இனி எல்லா பெண்களும் ஸேஃப்!" ஹைய்யோ! எப்படி தனக்கேற்ற படி மாற்றி இருக்கிறார்கள்?! மயங்கி விழுவதற்கு முன் மனைவியின் குரல் காதில் கேட்டது, "ஸூப்பருங்க! எப்படி இவ்வளவு தத்ரூபமாக நடிக்கிறீங்க?! உங்களுக்கு சீரியல் னாலே பிடிக்காதே? அப்புறம் எப்படி?! மெதுவாக கண்கள் இருள பொத்தென கீழே சரிந்தேன்.



Rate this content
Log in

Similar tamil story from Drama