Seetha Lakshmi R

Drama Thriller

3  

Seetha Lakshmi R

Drama Thriller

காதலும் க (ட)சந்து போகும்

காதலும் க (ட)சந்து போகும்

5 mins
864


பர்வீன் கண்ணாடியில் தன்னை இன்னோரு முறை பார்த்துக் கொண்டாள். 'உனக்கென்ன‌ குறைச்சல்? நீ அழகு தான்! ஜுனைத்துக்கு உன்னை பிடிக்கவில்லை என்றால் அது அவனுக்கு தான் நஷ்டம், உனக்கில்லை!, மனதிற்குள் எண்ணியவாறே சமையலறைக்குள் நுழைந்தவள் அன்றைய காலை சிற்றுண்டிக்கான ஆயத்த பணிகளில் இறங்கினாள். எவ்வளவு முயற்சி செய்தும் முன்னிரவு தனக்கும், தன் கணவன் ஜுனைத்துக்கும் நடந்த உரையாடலை மறக்க முடியாது கண்கள் கண்ணீரை சிந்தின. 


பர்வீன்: இன்னிக்கு சாயந்திரம் அஞ்சு மணிக்கு உங்கள யாரோ ஒரு பொண்ணு கூட பார்த்ததா நிஷா சொன்னா,"


கோபத்தில் திரும்பினான் ஜுனைத், "ஒ! அவ உன்கிட்ட சொன்னாளா? அவ அங்க என்ன செஞ்சிட்டு இருந்தாளாம்? அவளோட இருவத்தி அஞ்சாவது பாய் ஃப்ரெண்டோட அங்க என்ஜாய் பண்ணிட்டு இருந்தாளா? ஏண்டி அவளோட‌ ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ண சொன்னா அவ குடுத்த புகார் ல என்னை கேள்வி கேக்குறியா?"


பர்வீன் அவன் கத்தலில் லேசாக அதிர்ச்சியாகி மெல்லிய குரலில், "ஏங்க குழந்தைங்க தூங்குது, கொஞ்சம் கத்தாம பேசுங்களேன்", என்றவுடன் மேலும் ஆத்திரமடைந்த ஜுனைத் அவளை சுவற்றில் தள்ளி தன் கையால் நகர முடியாமல் தடுத்தான். "ஏண்டி நீ ஒழுங்கா பெண்டாட்டி மாதிரி நடந்து இருந்தீனா நான் எதுக்கு கண்டவ பின்னாடி சுத்துறேன்? கல்யாணத்ப்ப பச்ச மொளகா மாதிரி ஒல்லியா, ஃப்ரெஷ்ஷா இருந்தவ இப்ப பூசணி மாதிரி குண்டா இருக்க! ஒன்கிட்ட வர்றதுக்கே அருவருப்பா இருக்கு. ஆனா என்னால சும்மா இருக்க முடியல, அதான் இன்னோர் ஃப்ரேஷ், பச்ச மொளகா வ சைட் டிஷ் ஆ சேத்துகிட்டேன்? இதுல என்ன தப்பு? ஒன்னையும் கொழந்தைகளையும் வச்சி காப்பாதுறேனே, ரோட்டுல விடலயே? போ! போ! ஒனக்கு கிடைச்சிருக்கிற வாழ்க்கைய நெனச்சி சந்தோஷப்படு. இல்லனா இருக்கவே இருக்கு தலாக்", என்று நக்கலாக சொல்ல, பர்வீனால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. "ஆ ஊ ன்னா எல்லாத்துக்கும் அழுகை! போ! போய் தொல. ஐயா இன்னிக்கு நடந்த அந்த அழகான சம்பவத்த அச போட்டுகிட்டே தூங்கணும். டோன்ட் டிஸ்டர்ப்!", என்று அவளை அந்த அறையிலிருந்து வேளியே துரத்தினான்.


"அம்மீ! அம்மீ! இன்னிக்கு பர்ன்ட் ஸான்ட்விச் ஆ?", என்று குழந்தைகள் கோரஸாக கேட்க நிகழ்காலத்திற்கு திரும்பினாள் பர்வீன். "ஆ! இல்ல கண்ணுகளா, இதோ வேற நல்ல சான்ட்விச் செய்து தர்றேன்", என்றாள் பரபரப்புடன். "பரவால்ல மா! நீ தான் சொல்லுவியே, காந்தலே ருசின்னு, நாங்க சாப்டறோம்", எனச் சொல்ல கஷ்டப்பட்டு கண்ணீரை மறைத்து, அவர்கள் கையில் கோடுத்து பள்ளிக்கு அனுப்பி வைத்தாள். 


எல்லா பணிகளையும் முடிக்க பகல் பதினோரு மணி ஆகிவிட்டது. பிள்ளைகளை அழைத்து வர ஐந்து மணி நேரங்கள் இருந்ததால், வீட்டை பூட்டி கொண்டு வேளியே கிளம்பினாள். வீட்டிலிருந்தால் மண்டை வெடித்து விடும் போலிருந்தது. வேளியே வந்து பக்கத்திலிருந்த பூங்காவில் இருந்த இருக்கை ஒன்றில் அமர்ந்தாள். கொஞ்ச நேரம் சென்று கைபேசி ஒலித்தது. அதில் நிஷா,"ஏய் பர்வீன், எங்கயிருக்க?", என்றாள். "இங்க பக்கத்துல இருக்கிற பார்க் ல இருக்கேன், ஏன் என்ன விஷயம்?", என்றாள். "நீ பார்க் ல சுத்து, ஒன் புருஷன் இங்க 'அவளோட' ஹீரா ஹோட்டல் ல லஞ்ச் என்ஜாய் பண்றான். அடுத்ததா ஸ்வான் மல்டிபிளக்ஸ் ல லேட்டஸ்ட் மூவி வேற, பேசிக்கிட்டாங்க!", என்று சொல்ல, அழுத பர்வீன்,"இல்ல அவர்கிட்ட பேசினேன், என் மேலயும் பிள்ளைங்க மேலயும் அடிச்சு சத்தியம் பண்ணிருக்காரு! இனி தப்பு பண்ண மாட்டேன் ன்னு சொல்லிருக்காரு", என்றாள். "முட்டாள்ததனமா பேசாத! அவன் தினமும் கண்டபடி சுத்தறான், நீ என்னமோ அவன் சொன்னான்னு ஈஸியா நம்பிட்ட?! முழிச்சுக்க! அவன் ஒனக்கு சரியில்ல! அவன விட்டு விலகிடு!", எனச் சொல்லி தொடர்பை துண்டித்தாள். பர்வீன் சிறிது நேரம் பூங்காவில் இருந்து விட்டு வீட்டுக்கு கிளம்பினாள். 


இரவு ஏழு மணியளவில் செல் ஒலித்தது, அதை எடுத்து ஹலோ என்றவள் முகத்தில் பலவித பாவங்கள் வந்து போயின. "இதோ இப்பவே புறப்பட்டு வர்றேன்", என்றவள், குழந்தைகளை பக்கத்து ஃப்ளாட்டில் இருந்த அம்மாளிடம் பார்த்துக் கொள்ள சொல்லிவிட்டு டாக்ஸியை பிடித்து கொண்டு கிளம்பினாள். டாக்ஸி கிளம்பி நேரே அவள் வீடிருந்த இடத்திலிருந்து ஐந்து கி.மி. தள்ளியிருந்த காவல் நிலையத்தின் முன் நின்றது. 


பர்வீன் உள்ளே செல்ல முயற்சிக்க, ஒரு காவலாளி அவளை வழிமறித்து, "இரும்மா! யார் நீ? என்ன வேணும்? யாரை பாக்கணும்?", என்றார். தயங்கியபடி பேசாமல் பர்வீன் நிற்க, காவலாளி மறுபடியும் தன் கேள்வியை கேட்டான். அதற்குள் உள்ளிருந்து ஒருவர் எட்டிப் பார்த்து, "யாருங்க, பர்வீனா", என்றார். பர்வீன் மெல்ல, "ஆ ஆமாம்", என்றாள். "உள்ள வாங்க", என்றது அந்த குரல். அவளை "உக்காருங்க", என்றவனுக்கு சுமார் நாற்பத்தி ஐந்து வயதிருக்கும். அவன் பர்வீனை பார்த்து ஒரு பெருமூச்சுடன்,"உங்க கணவர்", என்று ஆரம்பிப்பதற்குள், "என்ன? என்னாச்சு அவருக்கு?", என்று பதறினாள். "அவர் நல்லாத்தான் இருக்கார், அவர் கூட இருந்த பொண்ணுதான் செத்துருச்சு, உங்க கணவர் தான் கொன்னுருக்காரு", எனச் சொல்ல பர்வீன் அவசரம் அவசரமாக,"இருக்காது ஸார்! அவர் அப்படி பட்டவர் இல்ல", என்றாள். "அட! நீ வேற! அவர் அந்த பொண்ண கொல செஞ்சத நேர்ல பார்த்த நெறைய சாட்சிகள் இருக்கு! ஒரு துணிய வெச்சு மூக்கை அடைச்சிருக்கான். மூச்ச திணறியே அந்த பொண்ணு செத்துருச்சு. சும்மா பொலம்பாத! அடுத்து என்ன ஆகணுமோ கவனி!, என்றார், கொஞ்சம் கறாராக. "ச சரி ஸார்", என்றாள் பர்வீன் பயத்துடன். நேரே உள்ளே செல்லில் இருக்கும் ஜுனைத்தை பார்க்க சென்றாள். இவளைப் பார்த்தவுடன்,"பர்வீன்! என்னை காப்பாத்து! எனக்கு ஒண்ணும் தெரியாது", என்றான் கலவரத்துடன். பர்வீன் அழுதுகொண்டே,"ஸார் நான் அவர்கூட பேசணும், தனியா", என்றாள். "சரி மூணு நிமிஷம் அவ்ளோதான்", என்றார் இன்ஸ்பெக்டர். ஜுனைத் மறுபடியும்,"பர்வீன் எனக்கொண்ணும் தெரியாது! என்னை எல்லாம் தப்பா புரிஞ்சிட்டிருக்காங்க, நான் அந்த கர்சீஃபால அவ மொகத்துல பட்ட ஐஸ்கிரீம் ஐ தான் தொடச்சேன், கொல எல்லாம் செய்யல, காபாத்து. வெளில கொண்டு வா", என்று கதறினான்.


பர்வீன அவனைப் பார்த்து,"ஹய்யோ! என்னங்க இப்டி ஆயிடுச்சே! இனி நானும் கொழந்தைகளும் என்ன செய்வோம்? எப்பிடி வாழுவோம்?", என்றாள் கதறியபடியே.

"பர்வீன் எனக்கு தைரியம் சொல்லாம, நீயே இப்படி", என்று துவண்டான். பர்வீன் சுதாரித்தவளாய், "சிட்டிலயே பெஸ்ட் வக்கீலா புக் பண்ணி ஒங்கள கூடின சீக்கிரம் விடுதலை செய்யறேன், பொறுமையா இருங்க", என்றுவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள்.


வரும் வழியில் தன் செல்லில் ஒரு செயலியை தட்டி மும்பைக்கு மூன்று டிக்கெட்களை வாங்கினாள். மும்பையில் இருக்கும் சிநேகிதி சுஷ்மாவிற்கு ஃபோன் செய்தாள், "ஹலோ சுஷ்மா!எனக்கு நீ வேலை பாக்குற காலேஜ் ல வேலை வாங்கி தர்றியா? நான் மும்பை ஷிஃப்ட் ஆகலாம் னு இருக்கேன்", என்றாள். "ஏய்! என்னடி ஆச்சு? என்ன திடீர்னு", என்று கேட்டாள் சுஷ்மா. "ஒண்ணுமில்லடி. எனக்கும் ஜுனைத்துக்கும் ஒத்து வரல அதான் ரீஸன், மிச்சத்த நேர்ல பேசிக்கலாமே", என்று சொல்ல, சுஷ்மா அத்துடன் விட்டு விட்டாள். வீட்டுக்கு திரும்பியவள் பக்கத்து ஃப்ளாட் அம்மாளிடம் தன் அம்மா வீட்டுக்கு, பெங்களூருக்கு செல்வதாக சொன்னாள். 


மறுநாள் காலை எட்டு மணி மும்பை விமானத்தில் ஏறியவள், வழி நெடுக யோசித்து கொண்டே வந்தாள். அவளும் ஜுனைத்தும் கல்லூரியில் சந்தித்தது, கொஞ்சம் கொஞ்சமாக அவன் அவளை கரைத்து தன் வசமாக்கியது. இருவர் வீட்டிலும் அந்தஸ்து வித்தியாசம் பார்த்ததினால் பதிவு திருமணம் செய்து கொண்டது, எட்டு வருடங்கள் இணைந்து வாழ்ந்ததற்கு சாட்சியாய் ஆணொன்றும், பெண்ணொன்றும் பெற்றது, எல்லாம்.


கார் கல்லூரியை நோக்கி போய் கொண்டிருந்தது. 'ஜுனைத்! நம் இருவருக்கும் ஒரே படிப்பு தகுதி, இருந்தும், வேலைக்கு போகாமல், நீயும், நம் குழந்தைகளுமே உலகமென்று வாழ்ந்தேன். உன் உடலும் முன் போல இல்லையே?! நீயும் தான் சற்று பெருத்திருக்கிறாய். இரண்டு குழந்தைகளை பெற்றதில் தானே என் உடல், என் இடை பெருத்தது. என்னை தாயாக்கியது நீ தானே? பெற்று இருக்காவிட்டாலும் உடல் வயது ஏற ஏற மாறத்தானே செய்யும். மடையன் நீ! திருமணம் வெறும் கலவிக்காக அல்ல என்பது உனக்கு தெரியவில்லயே? 


அந்த நிஷா! அவள்தானா கிடைத்தாள் உனக்கு? அவளுக்கு என்றுமே என் மேல் பொறாமை. நான் சந்தோஷமாய் இருப்பது அவளுக்கு பிடிக்கவில்லை! உன் சபல புத்தியை எனக்கெதிராக நன்றாக பயன்படுத்தினாள். அவளை பள்ளி காலத்திலிருந்தே எனக்கு தெரியும். தனக்கு கிடைப்பதை விட்டு விட்டு மற்றவரின் பொருள் மீதே அவளுக்கு கண், ஆசை, இல்லையில்லை, பேராசை.  நீ அவளுடன் சுத்த ஆரம்பித்து கொஞ்ச காலத்திலேயே எனக்கு தெரிந்து விட்டது. நீயும் அவளும் எவ்வளவு தூரம் போகிறீர்கள் என்று பார்க்கத்தான் சும்மாயிருந்தேன். அவள் ஷோக்கு பேர்வழி. அவள் பயன்படுத்தும் சென்ட் வாசனை எனக்கு தெரியாதா? அவள் உபயோகிக்கும் வார்த்தைகள் உன் பேச்சில் அடிபட்டதை நான் கவனிக்க தவறவில்லை. எனக்கு தெரியும், நீ இன்றும் அவளுடன் ஊர் சுற்ற செல்வாய் என்று. அவளுக்கு பிடித்த லேடிபக் பர்ஃப்யுமை நீ அலமாரியில் ஒளித்து வைத்ததை நான் கண்டுபிடித்து விட்டேன். உன்னுடன் சேர்த்து அவள்‌ கதையும் இன்றுடன் முடிந்தது'. 


கல்லூரியில் நுழைந்தவள் தனக்கு கொடுக்கப்பட்ட வகுப்பில் நுழைந்தாள். "குட் மார்னிங்! ஐம் யுவர் நியூலி அப்பாயின்டெட் கெமிஸ்ட்ரி புரோஃபஸர். மை ஸ்பெஷலைஸேஷன் லைஸ் இன் வினம் ஸ்டடீஸ்", என்று சுருக்கமாக முடித்து கொண்டாள்.



Rate this content
Log in

Similar tamil story from Drama