தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்
தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


இரவின் இருட்டில் காற்றை கிழித்துக் கொண்டு சென்றது தமிழ்நாடு எக்ஸ்பிரஸ். அன்றிரவு, அதாவது, இருபதாம் தேதி, பத்தரை மணிக்கு அது டெல்லியில் இருந்து சென்னை நோக்கி கிளம்பியிருந்தது. இனி அது இருபத்தியிரண்டு காலை சென்னையை சென்றடையும். இருபத்தி ஒன்று பெட்டிகளில், மூன்று பெட்களில்- 3.ஏ.சியும், இரண்டு பெட்டிகளில்-2 ஏ.சியும், ஒரு முதல் வகுப்பு ஏ.சி. தவிர மீதி பதினைந்தும் சாதாரண வகுப்புகள். ஐஸ்வர்யா-ரமேஷ் புதுமண தம்பதிகளுக்கே உரித்தான எதற்கும் சிரிப்பும், கிண்டலும், கிசுகிசுப்புமாய் இருந்தார்கள். சாதாரண குடும்பம் தான் என்றாலும், மாமனாரின் தயவில் ரமேஷ் புதுமண வாழ்க்கையை முதல் வகுப்பு ஏ.சி. இல் தொடங்க இருந்தான். வண்டி கிளம்பும் முன் ஐஸ்வர்யாவின் அத்தை வெட்கமின்றி, "அடடடடா! ஃபர்ஸ்ட் ஏ.சியா? உங்களுக்கு ரொம்ப வசதி" என்று கூறியதை கேட்டு ரமேஷ்-ஐஸ்வர்யா இருவருமே நெளிந்தனர். திருமணச் சடங்குகள் தந்த அசதியில் இருவருமே களைத்து உறங்கி விட்டனர். அவர்களுடன் மூத்த வயது தம்பதி முத்து வும் அன்னலட்சுமி யும் பயணித்தனர்.
அடுத்த கூபேயில் நடிகை ஸஞ்ஜனா தன் காதலன் விக்ரமுடன். இரவு ஓன்றை தாண்டியும் இருவரும் பேசிக் கொண்டே இருந்தனர். "விக்ரம் எனக்கு பயமாயிருக்கு! அந்த ஆளுக்கு நான் இணங்கி போகலைன்னு ஒரே எரிச்சல். நான் டெல்லி க்கு போகும் முன்னால் ஃபோனில் மிரட்டினான். அவனுக்கு மனைவியாக வரச்சொல்லி இருந்தாலும் யோசித்திருப்பேன், ஆனால் அவன்!" மேலே பேச முடியாது அழுதவளை விக்ரம் ஆதரவாக அணைத்து தட்டிக் கொடுத்தான். "நாளைக்கு எல்லாமே மாறிடும்! கவலைப் படாதே!" என்றான்.
மூன்றாம் கூபேயில் ஓரே கல்லூரியைச் சேர்ந்த நான்கு பேரான, ஆதித்யா, கௌதம், அனன்யா மற்றும் ருஷ்யா. ஒரு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றதற்காக இந்த சென்னை பயணம்.
பொழுது கூச்சலுடன் விடிந்தது. எல்லோரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். ஸஞ்ஜனா தன் இருக்கையில் வாயைப் பிளந்த படி இறந்து கிடந்தாள். கண்கள் அதிர்ச்சியில் உறைந்து கிடந்தன. மத்திய பிரதேசத்தின் ஜான்சி யில் நின்றிருந்தது. நான்கைந்து வடநாட்டு காவலாளிகள் விக்ரமை வளைத்துப் பிடித்திருந்தனர். அவன் அழகையினூடே, "ஸஞ்ஜனா! மை டார்லிங்! ஹூ டிட் திஸ் டு யூ", என்று கேவ, வடநாட்டு காவலாளிகள், "சுப் பே ஸாலே! அச்சி ஃகாஸி ஜவான் ஔரத் கோ மார்கர் மகர்மச் கே ஆன்ஸூ மத் பஹா" (வாயை மூடு! நன்றாக இருந்தவளை கொன்று முதலைக் கண்ணீர் வடிக்காதே), என்று இழுத்துச் சென்றனர். அதன் பிறகு தடயவியல் நிபுணர்கள் இரயில்வே போலீசுடன் வந்து ஸஞ்ஜனாவையும், அவளிருந்த பெட்டியையும் விதம் விதமாக படமெடுத்தனர். அதற்குள் இரயில் பெட்டி முழுதும் செய்தி தீயாய் பரவி, கூட்டம் முதல் வகுப்பை மொய்த்தது. "அடடா! எவ்வளவு அழகு, என்ன அபாரமான நடிப்பு. இந்த சின்ன வயசில எத்தனை அவார்ட், இப்படி அநியாயமாக கொன்னுட்டாங்களே" - ஐம்பதை தாண்டிய ஒருவர். "அட! முன்னாடியே தெரிஞ்சிருந்தா செல்ஃபி எடுத்திட்டிருப்பேன்" -அரை வேக்காட்டு பெண்ணொருத்தி. "போச்சு! எல்லாம் லேட்டாக போகுது!" - ஒரு சுயநலவாதி, இப்படி ஆளாளுக்கு பேசிக் கொண்டனர்.
எல்லா சட்ட ரீதியான சம்பிரதாயங்களும் முடிய காலை எட்டு மணி ஆகிவிட்டது. அதன்பின் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் சென்னையை நோக்கி தன் பயணத்தை மேற்கொண்டது. ஐஸ்வர்யா-ரமேஷின் மகிழ்ச்சி காணாமல் போயிருந்தது. இருவரும் பயத்துடனே பேசிக் கொண்டனர், "இவனெல்லாம் மனுஷனா, காதல் பேரால ஏமாத்தி ஸஞ்ஜனாவை கொன்னுட்டானே பாவி!" "விடுங்க தம்பி! ஒரு நடிகைக்கு போயி ஏன் அனுதாப படுறீங்க? தினமும் எத்தனையோ பேர் பலவிதமாக சாகறாங்க? ஏதோ ஒரு மூலையில் ஒரு நாள் பெட்டி செய்தி மட்டுமே அவங்களுக்கு. இத மாதிரி பிரபலங்களோட உயிர் மட்டும் பெரிசா?!" அலட்சியமாக சொன்னவரை முறைத்தான் ரமேஷ்! "பெரியவரே! அவங்க சாதாரண நடிகையில்ல, மக்கள் நெஞ்சுல ஆழமா பதிஞ்ச ஒரு அபிமான நட்சத்திரம்", மூச்சிறைக்கச் சொன்னான். விஷயம் விபரீதமாவதை அறிந்த அன்னலட்சுமி ரமேஷை சமாதானப் படுத்தினாள்,"தம்பி ஏதோ தெரியாம சொல்லிட்டாரு, விட்ருங்க
". "ஏதோ பெரியம்மா வுக்காக விடறேன், போங்க", என்று காரமாக சொன்னான். அதன்பின் ஜன்னலோர ஸீட்டில் உட்கார்ந்த படி புத்தகத்தை படிக்க துவங்கியவர் அதற்குள்ளேயே மூழ்கி விட்டார். அன்னலட்சுமி சாப்பிட கூப்பிட்டும் மறுத்து விட்டார். அன்னலட்சுமியும் சாப்பிடாமல் படுக்கவே, ஐஸ்வர்யாவுக்கு என்னவோ போலாகிவிட்டது. என்னவென்று விசாரித்ததில் அவர்கள் மகன் ஒரு விபத்தில் காலமானதிலிருந்து இப்படி அவ்வப்போது உணர்ச்சி வசப்படுவார் என்று தெரிய வந்தது.
கல்லூரி மாணவர்கள் கூபேயில் கொஞ்ச நேரம் ஸஞ்ஜனாவை பற்றி பேசிவிட்டு மீண்டும் குதூகலமாயினர். அனன்யா மட்டும் மவுனமாக இருந்தாள். எவ்வளவு எடுத்துச் சொல்லியும் கேட்காததால் அவளை விட்டுவிட்டு மூவரும் பாட்டு, குத்தாட்டம் என்றிருந்து விட்டு அவரவர் கைபேசியில் மூழ்கினர். அனன்யா மட்டும் கண்ணீருடன் தூக்கம் வராமல் தவித்துக் கொண்டிருந்தாள். 'திமிர் பிடித்தவள்! எத்தனை பெயரின் வயிற்றெரிச்சலில் கட்டிய புகழ் மாளிகை? வீட்டு வேலை செய்யும் தன் அக்கா மஞ்சுளா அவளுக்கு எவ்வளவு பணிவிடை செய்திருப்பாள்! எவனோ ஒருவன் ஸஞ்ஜனா முன் மஞ்சுளா வை புகழ்ந்து விட முன் பின் யோசிக்காமல், அவளை வேலையை விட்டு தூக்கி விட்டாளே! மிகுந்த துன்பத்திற்கு நடுவே அனன்யாவை படிக்க வைத்திருக்கிறாள், பிரச்சனைகள் வேண்டாமென்று திருமணமும் செய்து கொள்ளவில்லை. பாவம்! இவளைப் போன்றவர்களுக்கு இதுதான் முடிவு', இப்படி எண்ணிக்கொண்டே கண்ணயர்ந்தாள்.
இரவு ஐஸ்வர்யாவுக்கு திடீரென தலைவலி வரவே அன்னலட்சுமி துணிப்பையில் இருந்து சில இலைகளை எடுத்து ரமேஷ் கையில் கொடுத்து, "தம்பி இத கசக்கி பாப்பா மூக்கில் நாலே நாலு சொட்டு மட்டுமே விடுங்க", என்றாள். ரமேஷும் மிகுந்த கவனத்துடன் நான்கு சொட்டுகள் மட்டுமே ஐஸ்வர்யா மூக்கில் விட்டான். அரைமணியில் தலைவலி மாயமாகி ஐஸ்வர்யா சகஜநிலைக்கு திரும்பினாள். "அம்மா அது என்ன இலை? தலைவலி சட்டுன்னு போயிடுச்சே?" என, "எங்கப்பா சித்த வைத்தியர், சின்ன வயசுல அவர்கிட்ட கத்துக்கிட்டேன்", என்றாள் அன்னலட்சுமி அடக்கத்துடன்.
அடுத்த நாள் தமிழ்நாடு சென்னையை ஒன்பதரை மணிக்கு, இரண்டரை மணிநேரம் தாமதமாக வந்தடைந்தது. ஐஸ்வர்யாவும்-ரமேஷும் டாக்ஸி ஸ்டாண்டில் நின்றிருந்தனர். ஊர் முழுவதும் ஸஞ்ஜனா வை பற்றிய பரபரப்பான பேச்சு. எல்லா ஊடகங்களும் அவள் செய்தியையே ஒலிபரப்பின. திரையிலிருந்த பெண் செய்தி வாசிப்பாளர் தனக்குரிய பாணியில் அபிநயத்துடன் பேசிக் கொண்டிருந்தார், "ஸஞ்சனா கொலை வழக்கில் திடீர் திருப்பம்! பிரேத பரிசோதனையில் தெரிய வந்த உண்மை! அவர் கைக்குட்டையில் இருந்த மர்மமான திரவமே அவரின் மரணத்திற்கு காரணம்! விக்ரமின் கையிலும் அந்த திரவத்தின் திவலை சிதறல்கள் இருந்ததால் அவரே குற்றவாளி என ஊர்ஜிதமாகிறது!" அவள் சொல்லி முடிக்க ஒருவரையொருவர் அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டனர்.
அங்கே சென்னையின் இன்னோர் மூலையில் அன்னலட்சுமி முத்து உடன் வீட்டிற்குள் நுழைந்து நேராக பூஜையறைக்கு சென்றாள். மகனின் படத்திற்கு முன் விளக்கேற்றியவள் மனதில், 'விஷ்வா! குடித்துவிட்டு வண்டி ஓட்டி சும்மா சென்ற உன்மேல் வண்டியை ஏற்றிக் கொன்ற விக்ரம் ஸஞ்ஜனா உதவியுடன் சட்டத்திலிருந்து தப்பியிருக்கலாம், ஆனால் இந்த தாயின் தண்டனையிலிருந்து அவர்கள் தப்ப முடியவில்லை. விக்ரமைத்தான் குறி வைத்தேன், ஆனால் அந்த ஸஞ்ஜனா ஆண்கள் உபயோகிக்கும் கைக்குட்டையை வைத்திருப்பாள் என்று நினைக்கவில்லை! கையெழுத்து வாங்கும் சாக்கில், அவளை இடித்து, நிலைகுலைய வைத்தேன். கைபேசியுடன், கைக்குட்டையும் தவறியது. விக்ரமுடையது என்றெண்ணி எடுத்துக் கொடுக்கும் சாக்கில் மருந்தை தடவி கொடுத்து விட்டேன், விக்ரம் வாங்கி கொண்டான். அவன் சாவான் என்றுதான் நினைத்தேன், ஆனால் அவள் இறந்து விட்டாள். பரவாயில்லை! அயோக்கியனுக்கு உதவியதால் தான் அவளுக்கு இந்த கதி! எப்படியோ! அவளைக் கொன்றதாக அவனும் சிறையில். மகனே! உன் ஆத்மா அமைதி அடையட்டும்! என் மனமும் அமைதி ஆனது. உன்னிடம் நானும் விரைவில் வர, இனி தடையில்லை!'