Seetha Lakshmi R

Drama

4.5  

Seetha Lakshmi R

Drama

பணத்தின் பலம்

பணத்தின் பலம்

5 mins
660


"ஐயா பெட்டியை எங்க வெக்கிறது?" மாயன் கேட்ட கேள்விக்கு சற்றே காரமாக, "எப்பவும் போல நம்ம 'பாப்பா சாமி ஆஸ்ரமத்துல தான், என்ன கேள்வி?", என்றார். பயந்த மாயன்,"சரிங்கய்யா அப்படியே செய்யுறேன்", என்றான். வழியெங்கும் மழை. எங்காவது மாட்டிக்கொண்டு அவஸ்தை படாமலிருக்க கடவுளை வழி நெடுக கும்பிட்டுக் கொண்டே சென்றான். "ஏப்பா வண்டியை ரோட்ட பாத்து ஓட்டு, செல்ஃபோன அப்புறம் பாக்கலாம்!", என்று டிரைவரை ஓட்டினான். மனதில் மகள் மலர் சொன்னது நினைவிற்கு வந்தது. "அப்பா வேலைக்கு பஸ்ஸில் போகும் போது, ரெட்டேரி பஸ் ஸ்டாப் ல ரெண்டு பேர் ஏறி பெண்களை கிண்டல் பண்ணிட்டு வர்றாங்க. பயமாயிருக்கு. வண்டி வாங்கி கொடுத்தீங்கன்னா நிம்மதியா போவேன்." "சரிம்மா ஐயாகிட்ட பண ஏற்பாட்ட பத்தி இன்னிக்கு கண்டிப்பா பேசுறேன்." "போங்கப்பா, இப்படியே ஒரு மாசமா தட்டி கழிச்சிட்டே வர்றீங்க, உங்களுக்கு அடுத்த ஞாயிறு வரைக்கும் டைம், இல்லேன்னா நானே நேரா உங்க ஐயா வீட்டுக்கு வந்திருவேன்", எனவும், பதட்டத்துடன் தான் மறுத்ததும் மனத்திரையில் படம் போல வந்து போனது. 


துரை ஐயா நல்லவர் தான், ஆனால் பிள்ளை பாசம் ஜாஸ்தி. அவனோ தந்தையின் பாசத்தை தப்பாக பயன்படுத்துகிறவன். நம் மகள் பெரிய அழகியில்லை என்றாலும், நல்ல பளிச் தோற்றம். இவன் கண் அவள் மேல் படக்கூடாது, படவே கூடாது! ஆஸ்ரமத்தை எப்போது வந்தடைந்தோம் என்று அறியாமல் யோசனையில் இருந்தான் மாயன். "ஸார்! ஸார்! ஆஸ்ரமம் வந்திடுச்சு", என்று டிரைவர் சொல்லவே திடுக்கிட்டு இயல்புக்கு திரும்பினான்.


பாப்பா சாமியின் ஆஸ்ரமம் ஊருக்கு வெளியே மரங்கள் அடர்ந்த அழகான சூழலில், யோகா, தியானம், மூச்சு பயிற்சி, பிரார்த்தனை, தோட்டக்கலை, சிறிய அளவில் விவசாயம், இன்னபிற தோழில் பயிற்சிகள், என சுறுசுறுப்பாக இயங்கி கொண்டிருந்தது. மாயனை பார்த்த காவலாளி, எப்போதும் போல இன்னோர் சந்து வழியாக அவனை உள்ளே விட்டான். அங்கே அவனுக்கு பழக்கப்பட்ட சில ஆட்கள் அவன் கொடுத்த பெட்டியை வாங்கி அங்கிருந்த ஒரு இரும்பு ஸேஃப் இல் சில பொத்தான்களை அமுக்கி உள்ளே வைத்து பூட்டினர். எவ்வளவு தான் தெரிந்தவர்களாய் இருந்தாலும், அந்த எண்கள் வாரம் ஒருமுறை மாற்றப்பட்டு ஒரு குறிப்பிட்ட நபர் வசம் மட்டும் ஒப்படைக்கப்படும். உள்ளே வேளியே செல்வதற்கு முன் பரிசோதனையும் நடத்தப்படும். திருட்டும், மோசடியும் நடப்பதை தவிர்க்க இத்த முயற்சி. 


மாயன் துரை ஐயா வீட்டுக்கு போய்ச் சேர மணி மூன்றாகி விட்டது. உள்ளே கசமுசவென சத்தம். ஒரு பெண்ணின் அழுகுரல். மாயன் ஜன்னலோரமாக எட்டிப் பார்க்க அதிர்ச்சி காத்திருந்தது. 'அது ..... என் மலரே தான், என்ன ஆயிற்று?! காலையில் வீட்டை விட்டு வேலைக்கு தானே புறப்பட்டாள்! எப்படி இந்த அயோக்கியன் கையில் சிக்கினாள்??' தலைக்குள் கேள்விகள் தேளாய் கொட்டின. உள்ளே ஐயாவின் மகன் கோரமாக கத்திக் கொண்டிருந்தான், "அப்பா! நிம்மி என்ன பத்தி இவ கிட்ட சொன்னா, சும்மாயில்லாம இவ ஏன் போலீஸ் ல கம்ப்ளெயின்ட் தரணும்?‌ ஏண்டி?! ஒங்கப்பன் எங்கப்பாவுக்கு நெருக்கம் னா, அது அவங்களோட, நீ யார்?! ஒங்கப்பன், நீ, ஏன் என் அப்பா சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். ஒனக்கு அவ்ளோ திமிரா? ஒன்ன அடக்கறேன் பாரு!" அதற்குள் துரை அவனை வழிமறித்து, "வேண்டாம் பா! விட்டுடு! ஏதோ சின்னப் பொண்ணு, அறியா வயசு", கெஞ்சினார். துரை மலர் பக்கம் திரும்பி, "மன்னிப்பு கேட்டுட்டு இங்கிருந்து ஓடிடு", என சொல்லவே, மலர் மருட்சியுடன் பேச்சின்றி நின்றிருந்தாள். அவன் வேறியுடன், "இவள இப்படியே விட்டா இன்னும் கொழுப்பெடுத்து அலைவா!" எனச்சொல்லி, தன் ஆட்களை கூப்பிட்டு, "இவ தலையை மொட்டை அடிச்சு வேளியில தள்ளுங்கடா", என்று விட்டு மாடிக்கு ஏறி சென்று விட்டான். 


அத்தனை கொடுமையையும் பார்த்தும் ஒன்றிற்கும் உதவாத தன் கையாலாகாதனத்தை நினைத்து நொந்து கொண்டே வீடு திரும்பினான் மாயன். மலர் இரவு ஏழு தாண்டியும் திரும்பாததை கண்ட மனைவி சித்ரா புலம்ப ஆரம்பித்தாள். மாயனுக்கும் கவலை தொற்றிக் கொண்டது. மலர் எட்டு மணியளவில் தலைக்கு துப்பட்டாவும் கண்களில் கண்ணீருடனும் வருவதைக் கண்டு சித்ரா பெரும் குரலெடுத்து அழ ஆரம்பிக்கவே, அவளை கையமர்த்தி, "அக்கம் பக்கம் தெரிய வேண்டாம், உள்ள கூட்டிட்டு போ"என்று கறாராக சொன்னான். தாயும் மகளும் சாப்பிடாமல், இரவு முழுவதும் கட்டிக்கொண்டு அழுதார்கள். மாயன் மூளை துரிதமாக இயங்கியது. 'வேலையை விட முடியாது, அய்யாவின் பல ரகசியங்கள் தெரிந்ததால், விட மாட்டார்கள், மீறி எதிர்த்தால், உயிர் பிரிவது நிச்சயம், ஆனால் அதன்பின் சித்ராவும் மலரும் என்ன ஆவார்கள்? இந்த விஷயம் நமக்கு அவமானம் தான். பெண்ணாயிற்றே! வேளியே தெரிந்தால், காது, மூக்கு வைத்து திரித்து விடுவார்கள்! ஏதாவது செய்தே ஆகணும்!' ஒரு தீர்மானத்திற்கு வந்த பிறகே உறக்கம் வந்தது.


மறுநாள் மறுபடியும் ஒரு பெட்டியை துரை ஆஸ்ரமத்தில் சேர்க்க சொல்ல மாயனுக்கு அது தோதாக போனது. கூழை கும்பிடு போட்டு பெட்டியை வாங்கியவன் தன் மச்சினன் லிங்குச்சாமிக்கு ஃபோன் செய்தான், "லிங்கு! இத்தன வருஷம் நாயா உழைச்சேன், ஆனா நம்ம மலர அவங்க...", துக்கம் தொண்டையை அடைத்தாலும் நடந்தவற்றை ஒன்று விடாமல் லிங்குவிடம் ஒப்பித்தான். மறுமுனையில் லிங்கம், "மாமா! இப்பவே கிளம்பி நானும் ஆஸ்ரமத்துக்கு வரேன் எனவே, "இன்னிக்கு வீட்டுக்கு வா, ரெண்டு பேரும் பேசி ஒரு ஏற்பாட்ட செய்யலாம்", என்று வயதிற்க்கு ஏற்ற நிதானத்துடன் சொன்னான். அன்றிரவு இருவரும் வேகு நேரமாகியும் உறங்காமல் நடக்க போவதை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். 


மறுநாள் இருவரும் அவரவர் வேலைக்குச் சென்றனர். ஒரு வாரம் கழித்து துரை வீடு அமர்க்களப் பட்டது. மாயன் உள்ளே நுழையவே, துரை தவிப்புடன், "வாய்யா! நம்ம பாப்பா சாமியை யாரோ கடத்திட்டாங்களாம், கூடவே ஆஸ்ரமத்துல இருந்த பணத்தையும் எடுத்துட்டு போயிட்டாங்களாம்! என் இத்தன வருஷத்து சேமிப்பு, உழைப்பு எல்லாம் காலி!" சொல்லவே, துணுக்குற்றான் மாயன். 'இதென்ன அடுத்த சனிக்கிழமை தானே இது நடந்திருக்க வேண்டும், ஒருவேளை லிங்கு அவசரப்பட்டு விட்டானோ?! அன்றைக்கே அவன் அளவுக்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டான், அவனை மிகவும் கஷ்டப்பட்டு தான் கட்டுக்குள் கொண்டு வந்தேன்! பொறுமை என்பதே அவனுக்கு கிடையாது. இனி யோசித்து பயனில்லை.' "ஏன்யா! உனக்கு ஏதாவது தோணுதா?! மாயா?! யாராயிருக்கும்?" கமறும் தொண்டையுடன் துரை கேட்கும்போது பாவமாக இருந்தாலும், உள்ளூர மகிழ்ந்தான் மாயன்.


'பாவி! எத்தனை பேருடைய வாழ்க்கையை நீயும், உன் மகனும் கெடுத்திருப்பீர்கள்?! சின்னப் பெண் சிவக்யா, தோட்டக்கார தாத்தாவின் பேத்தி, பதினைந்தே வயது! அவளையும் நாசமாக்கி விட்டான் உன் பொறுக்கி மகன். நியாயம் கேட்ட தாத்தா மீது பணத்தை விட்டெறிந்து நஷ்டத்தை ஈடுகட்டிக் கொள்ள சொன்னாய். அவள் அண்ணனும் உன்னிடமும், உன் ஆட்களிடமும் அடி வாங்கி ஆஸ்பத்திரியில் சேர்ந்தது இத்தனை வருடம் கழிந்தாலும் நினைவில் நிற்கிறது. ஒரு குடும்பம் உன்னால் தொலைந்தே போனதே? உனக்கு உறுதுணையாக இருந்த குற்றத்திற்கு தான் நானும் இப்போது துன்ப படுகிறேன். அனுபவி! நன்றாக அனுபவி!' என மனதிற்குள் கொக்கரித்தான். 


அன்றிரவு லிங்குவை தனியாக கூப்பிட்டு, "ஏண்டா லிங்கு! ஏன் இப்படி செஞ்ச? அடுத்த சனிக்கிழமை தானே நம்ம பிளான்", என்று கேட்க, "மாமா நானும் பேப்பர்ல பார்த்தது ல இருந்து இதையேதான் யோசிச்சேன், ஒருவேளை நீங்க தான் செஞ்சிருப்பீங்க னு கேக்கல", என்றான். 'அப்போ யாராக இருக்கும்? எப்படியோ அவனுடைய பணத்திமிர் ஒழிந்தது.' யோசித்து கொண்டே இருவரும் நெடு நாட்களுக்கு பிறகு நிம்மதியாக உறங்கினர். 


ஊருக்கு வெளியே இருந்த இடிந்து போன ஒர் பாழடைந்த கட்டிடத்தில் பாப்பா சாமியை கத்தியுடன் நெருங்கினான் ஒருவன். ..... பின் அந்த கத்தியால் அவரை கட்டியிருந்த கயிற்றை அறுத்தெறிந்தான். பணிவாக, "சாமி எனக்கு எவ்வளவு நல்லது செஞ்சிருக்கீங்க? சோம்பேறியா இருந்த என்னை ஒரு ஆளாக்கி, வேலைய கொடுத்து, வாழ வழி காட்டினீங்க? ஆனா ஏன் ஆட்களை வெச்சு உங்கள நீங்களே கடத்திக்கிட்டீங்க?, என கேட்க, பாப்பா சாமியார் சொன்னார், "என்னோட குடும்பத்துல அம்மா, அப்பா ரெண்டு பேரையும் எனக்கு ஞாபகம் இல்லை. ஒரு விபத்துல அவங்க இறந்ததா தாத்தா சொன்னார். நான், என் தாத்தா, தங்கச்சி பாப்பாவோட சந்தோஷமா வாழ்ந்து வந்தேன். துரை அய்யா கிட்ட நல்லபடியா வேலை பார்த்தார் தாத்தா. தேவைக்கு மீறியே உழைச்சார். என் தங்கை, பாப்பா பாவம், சின்ன கொழந்த, அவள தயவு தாட்சண்யம் பார்க்காம கசக்கி எறிஞ்சிட்டான் அந்த மிருகம். நியாயம் கேட்டப்ப தாத்தா முகத்துல பணத்தையும், என் ஒடம்புக்கு அடி உதையும் பரிசா தந்தாங்க. இந்த ஊரு பிடிக்காம மறுபடி சொந்த ஊருக்கே திரும்பினோம். ஒரு பெண் தன் தப்பில்லாம கெடுக்கப் பட்டாலும், ஊர் அவள வாழ விடறதில்ல. சின்ன வயசுலயே ஒரு முதிர்ச்சி அவகிட்ட.


அப்படியே ஊருக்கு வெளியில இருந்த எங்க நெலத்து ல ஊர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லி தற்ரது, பெண்களுக்கு கை வேல சொல்லி தர ஆரம்பிச்சு தன் மனச திசை திருப்பிக்கிட்டா. அவளை பார்த்துக்க வேண்டி நானும் கல்யாணம் பண்ணல. கொஞ்ச நாள்ல தாத்தாவும் செத்துட்டாரு. என் தங்கை, பாப்பா நிம்மதி அடைஞ்சாலும் என் கோவம் அடங்கல. இவன போல பணக்காரங்க கிட்ட ஏராளமான கறுப்பு பணம் இருக்கும் னு தெரியம், பதுக்கி வெக்க ஒரு சாமியாரும் தேவை ன்னு தெரியும். அதான் உன்ன வச்சு அவங்க காதுக்கு என்னை பத்தின செய்தியை அடிக்கடி அனுப்பினேன். கொஞ்சம் கொஞ்சமா அவனை நான் விரிச்ச வலையில விழ வச்சேன். இருபத்தி அஞ்சு வருஷம் பொறுத்ததுக்கு இப்ப தான் பலன் கெடச்சிருக்கு. இனி இந்த பணம் அவனுக்கு உதவாது". ஒரு நீண்ட பெருமூச்சுடன் பாப்பா சாமி சொல்லி முடித்தார்.Rate this content
Log in

Similar tamil story from Drama