Seetha Lakshmi R

Drama Fantasy

4  

Seetha Lakshmi R

Drama Fantasy

காலம்

காலம்

7 mins
875


 முதற் பகுதி


மேதாவிலாசம்


'இன்றிரவு கௌசி நம்மை லவர்ஸ் பாயிண்ட்டில் சந்திக்கும்படி கூப்பிட்டிருக்கிறாள்! ரொம்ப நாட்களாக இதை ஊண் உறக்கம் தவிர்த்து (குறைத்து) எதிர்பார்த்து காத்து கிடந்தோம். காதலைச் சொல்ல போகிறாளா?! அவள் சொல்லவில்லை என்றால் என்ன, நாம் துணிந்து விட வேண்டியது தான்.' பலவாறாக யோசித்த வண்ணம் அருண் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு சென்றான். கௌசி அவனுடைய கல்லூரியின் இயற்பியல் பேராசிரியர் மேதாவின் மகள். அவருடைய மகள் கௌசி, மகன் கௌதம், மனைவி சரஸ்வதி என்று சிறிய குடும்பம். கௌசி, கௌதம் இருவரும் அருணுடன் ஒன்றாக படித்தவர்கள். மேதா பாடம் எடுக்கும் விதம் அபாரம். அவர் ஐன்ஸ்டீன் இன் கோட்பாடுகளை விளக்கும்‌போது, மூவரும் தன்னை மறந்து சிலை போல இருந்த இடத்தில் உறைந்து விடுவது வழக்கம். 


ஒரு நாள் இவ்வாறு ஐன்ஸ்டீன் ஐ புகழ்ந்து மேதா எப்போதும் போல பேசி, அனைவரையும் இன்னோர் உலகத்திற்கு கூட்டிச் சென்றார். அனைவரும் கல்லூரி முடிந்து 

வீட்டுக்கு செல்லும் வழியில், மேதா யாருடனோ கைபேசியில் ப்ளூடூத் வழியாக பேசிக் கொண்டிருந்தார். அவருடன் பேசிக் கொண்டே செல்வதில் மூவருக்கும் ஏக மகிழ்ச்சி, ஆனால் அவர்கள் வந்ததை அவர் கவனியாமல் பேச்சிலேயே கவனமாக இருக்க, மூவரும் தத்தம் வீட்டிற்கு செல்ல முடிவெடுத்தனர். 


அன்றிரவு மணி ஒன்பதை தாண்டியும் பேராசிரியர் மேதா வராமல் போகவே பதட்டமடைந்த வீட்டினர் பக்கத்து காவல் நிலையத்தில் புகாரளித்தனர். பல நாட்களாகியும் பலனில்லாமல் போகவே, அவரை தேடும் முயற்சியை கைவிட வேண்டிய நிலை. அதன்பின் கௌதம், கௌசி, அருண், மூவரின் உறவு இன்னும் மேம்பட்டது. சித்ராவுக்கு ஆறுதலாக அருணின் குடும்பமும் கை கொடுத்தது. இதோ கல்லூரி வாழ்க்கை முடிய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் இன்று கௌசி அவனிடம் பேச வேண்டும் என்றிருக்கிறாள், அதுவும் லவ்வர்ஸ் பாயிண்ட்டில்?! 


வழியில் மேம்பாலத்தை கடக்கும் போது போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க வண்டியிலிருந்து இறங்கி நடைபாதையில் வண்டியை தள்ளிக் கொண்டு நடந்தான். தூரத்தில் ஓர் லாரி நிறைமாத கர்ப்பிணி போல் தள்ளாடியபடி வந்து கொண்டிருந்தது. 'சே! இதையெல்லாம் நம் அரசு கண்டுகொள்ளாதா?!' நினைத்துக் கொண்டு இருக்கும் போதே ஒரு சிறிய வண்டி அவனை உரசி சென்றது! "ஏய்! கண்பார்வை சரியா இருக்கா இல்ல என் கை உதவி தேவையா?", சொல்லி முடிக்கும் முன் அந்த வண்டி ஓட்டுனர் அவனைப் பார்த்து, "ஹேய்! என்ன தெரியுதா?" என்றான். 'யார் இந்த கிறுக்கன்? தாறுமாறாக வண்டியை ஓட்டி, கிட்டத்தட்ட இடிக்கிறார் போல் வந்து, தெரியுமா ஆஆஆ வேறு! இவனை உதைத்தால் தான் என்ன?' அதற்குள் அவன் அருண் அருகில் வந்து, தோள் மேல் கை போட்டு,"வா காஃபி ஹவுஸ்" இல் காஃபி அருந்திய படியே பேசலாம்", என கூறினான். பதிலுக்கு காத்திராமல் நடந்தவனை ஒருவித ஆச்சரியத்துடன், பின் தொடர்ந்தான். காஃபி ஹவுஸ் இல் நுழைந்து இருவருக்கும் சேர்த்து காப்புச்சினோவை அவனே ஆர்டர் செய்ய, அந்த அதிகப்பிரசங்கித்தனம் துளி கோபத்தை கொடுத்தது. மௌனத்தின் ஊடே காஃபி அருந்தினார்கள். "இதை நினைவு இருக்கிறதா?*, என்றபடியே அவன் வைத்த பொருளை பார்த்த அருண், சற்றே ஓங்கிய குரலில, "ஓ ஒஒஒஒஒ", எனவே, அங்கிருந்த அனைவரும் திடுக்கிட்டனர்.


தொடரும்........


காலம் - இரண்டாம் பகுதி.


கால சுழற்சி


"இது.... இது..." அருண் தடுமாற்றத்துடன் உளறுகையில் அந்த வண்டி ஓட்டிய நபர் அவனிடம், "ஆம் அருண் 'காலசுழற்சி பரிமாற்ற' இயந்திரமே தான்." கேட்டவுடன் அருண், "உனக்கெப்படி?! இது பேராசிரியர் மேதா எப்போதோ எனக்கு, விளக்கியதல்லவோ?!", பேசி முடிப்பதற்குள், "நான் மேதாவின் நண்பன் ஜார்ஜ்.‍ இருவரும் கல்லூரியில் ஒன்றாக படித்தோம். ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளால் மிகவும் ஈர்க்கப்பட்டு கால பயணத்தில் அக்கறை கொண்டோம். எங்களுக்கென தனி ஆராய்ச்சி கூடமும் இருந்தது. பல மாதங்கள் ஊண் உறக்கமின்றி உழைத்ததின் பலனே, இந்த'காலசுழற்சி இயந்திரம்' ", ஜார்ஜ் சொல்லி முடிக்கவே, வியப்பின் விளிம்பிற்கு சென்றான் அருண். அருண் மனதில் எண்ணியதை புரிந்து கொண்டவராய், "மேதாவின் நன்பணான நான் எப்படி இளைமையுடன் இருக்கிறேன், இதுதானே உன் வியப்பிற்க்கு காரணம்?! எல்லாம் காலசுழற்சி இயந்திரத்தின் வேலை. ஆக்கமும், அறிவும் நிறைந்த மேதா எப்படி கல்லூரி பேராசிரியர் ஆனார் என்று தெரியுமா?" 


"எங்கள் ஆராய்ச்சியின் முடிவுகள் எப்படியோ உலகத்தின் வலிமை வாய்ந்த பெரும் புள்ளிகளை எட்டியது. அதில் பெரும் பணக்காரர்கள், அரசியல் தலைவர்கள், நாட்டின் பாதுகாப்பு துறையைச் சேர்ந்த பெரும் புள்ளிகள், சமூகத்திற்க்கு ஊறு விளைவிக்கும் தீய சக்திகள் என எல்லோரும் அடக்கம். காலசுழற்சி இயந்திரத்தின் வாயிலாக நாம் காலத்தில் பின்னோக்கியும், முன்னோக்கியும் செல்லலாம். அதை வைத்து பல வரலாற்று மற்றும் வாழ்க்கை சம்பவங்களை தனக்கு ஏற்றார்போல மாற்றிக் கொள்ள முயன்றனர். " அன்று எங்களிருவரிடமும் கெஞ்சியும், மிரட்டியும் பலனில்லாமல் போகவே ஆட்களை விட்டு இயந்திரத்தை அபகரிக்க பார்த்தார்கள். அதை காப்பாற்றும் முயற்சியில் நான் மயக்கமடைந்தேன். மேதா என்னை 'காலம்நிற்க' பெட்டியில் கால சுழற்சி இயந்திரத்துடன் போட்டு காப்பாற்றி விட்டார், அதுதான் இருபத்தி ஐந்து வருடங்களுக்கு முன் இருந்தது போலவே இருக்கிறேன்", என்று முடித்தார்.


அருண், "பேராசிரியர் மேதா எங்கே" என வினவ, ஜார்ஜ், "அவனைத்தான் நானும் தேடிக் கொண்டிருக்கிறேன்", என பெருமூச்சுடன் சொன்னார். அருண் அவரிடம் பேராசிரியர் காணாமல் போன தேதி, அவரை காவல் அதிகாரிகள் உதவியுடன் தேடியது என எல்லாவற்றையும் சொல்லி முடித்தான். ஜார்ஜ் உடனே,"நாங்கள் ஒன்றாக வேலை செய்த ஆராய்ச்சி கூடம் என்னவோ தீக்கிரையாகி விட்டது. என்னிடம் கால சுழற்சி இயந்திரத்தை கொடுத்து இத்தனை நாள் காப்பாற்றி ஆயிற்று, ஆனால் அதை இயக்கும் முறையில் இப்போது கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. மேதா கிடைத்தால் இருவரும் சேர்ந்து சரி செய்து விடுவோம். உனக்கு மேதா எங்கு போயிருப்பான் என்று ஊகிக்க முடிகிறதா?", என ஏக்கத்துடன் கேட்டார்.

அருண், "இல்லை ஜார்ஜ்! இந்த ஆறு மாதங்களும் அவரை தேடாத இடமே கிடையாது. முயற்சி செய்து நானும் அவர் குடும்பமும் ஓய்ந்து விட்டோம்" என்றான்.


திடீரென்று சைரன் ஒலி பெரும் சத்தத்துடன் ஒலித்தது. ஜார்ஜிடம் ஒரு பரபரப்பு தெரிந்தது. அவர் சட்டென்று, "அருண், இது 'அவர்கள்' ஆகத்தான் இருக்கும். எப்படியோ நான் இருக்கும் இடத்தை தெரிந்து கொண்டு விட்டார்கள் போலிருக்கிறது! என்னை கொன்று கால சுழற்சி இயந்திரத்தை கைப்பற்றி விடுவார்கள். சாவை பற்றி நான் கவலைப்படவில்லை. இந்த இருபத்தி ஐந்து வருடங்களில் எத்தனையோ இழந்தாயிற்று. ஆனால..... இந்த இயந்திரம் தப்பானவர் கைகளில் சிக்க கூடாது. ஏதாவது பாதுகாப்பான இடத்திற்கு என்னை அழைத்து செல்", என கெஞ்சினார். அருணின் மூளை துரித கதியில் செயல்பட்டது. உடனடியாக தன் தலை கவசத்தை ஜார்ஜுக்கு கொடுத்து மாட்டிக் கொள்ள சொன்னவன், அவரை தன் பைக்கின் பின் அமர்த்திக் கொண்டு பேராசிரியர் மேதா வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


அங்கே அவன் கண்டது?! ....


தொடரும் ........



காலம் - மூன்றாம் பகுதி.


இறைவனின் அமைப்பு


அங்கே! மேதா வீட்டு வாசலில், சித்ரா, கௌதம் மற்றும் கௌசி பதட்டத்துடன் நின்று கொண்டிருந்தனர். பக்கத்திலேயே காடு போல் வளர்ந்த தலைமுடி, தாடியுடன் ஓர் உருவம்! அழுது கொண்டிருந்த சித்ரா, அந்த உருவத்தின் தோளை உலுக்கிக் கோண்டிருந்தாள், "மேதா! மேதா! உங்களுக்கு என்னவாயிற்று?! இங்கே பாருங்கள்! ஏன் பேச மாட்டேன் என்கிறீர்கள்?!", என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருந்தாள். கௌசி மிகவும் முயற்சி செய்து கண்ணில் இருந்து எட்டிப் பார்க்கும் கண்ணீரைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாள். அருண் கவலையுடன் மேதாவிடம் சென்று, "ஸார்! ஸார்! அருண் வந்திருக்கேன்! உங்க ஃபிரண்ட் ஜார்ஜ் வந்திருக்கார், பாருங்க", என சொல்ல, மேதா கண்களில் ஒருவித ஒளி! பட்டென்று எழுந்து, "ஜார்ஜ்! ஜார்ஜ்! வந்து விட்டாயா?! அரக்கர்கள்! அக்கிரமக்காரர்கள்! நம் உழைப்பை, இந்த உன்னதத்தை, அழிவுக்கும், சுயநலத்திற்க்கும் பயன்படுத்தி இருப்பார்கள். நீ மட்டும் அன்று இந்த தியாகத்தை செய்திருக்கா விட்டால்! நினைப்பே நடுங்க வைக்கிறது!", என்றபடியே ஜார்ஜை கட்டிக் கொண்டார். இருவரும் பல வருடங்கள் கழித்து சந்தித்த மகிழ்ச்சியை கண்ணீரின் வாயிலாக வெளிபடுத்தினர்.


இருவரும் வீட்டிற்க்குள் சென்று சிறிது நேரம் பழைய கதைகளை பேசி தீர்த்தனர். அதன்பின் ஜார்ஜ் மெதுவாக, "மேதா இந்த கால சுழற்சி இயந்திரம் பழுதாகி விட்டது போலிருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். இன்று அருணுடன் இருக்கும் போது, அந்த அரக்கர்களின் வண்டி சைரன் ஒலி கேட்ட நான், மிகவும் பயந்து விட்டேன். அவர்கள் கையில் சிக்காமல் இதை பாதுகாக்க வேண்டும்!", என்றார். மேதா மெதுவாக, "இறைவன் அனைத்துக்கும் ஓர் காரணம் வைத்திருக்கிறார். இந்த இயந்திரத்தின் பின்னால் இவ்வளவு சூழ்ச்சியும் சோகமும் நடந்த பின்னரே இந்த அறிவும், முதிர்ச்சியும் எனக்கு கிட்டியது. இந்த இயந்திரத்தை பழுது பார்க்க வேண்டாம் ஜார்ஜ். இது இப்படியே தொலந்து போகட்டும்", எனவே திடுக்கிட்ட அனைவரும், "அய்யோ! எத்தனை அரிய கண்டுபிடிப்பு?! ஆம் தீயவர்கள் கையில் சிக்கினால் அழிவு நிச்சயம், ஆனால் நல்லவர்கள் கையில்?! எத்தனை விபத்துக்களை, இழப்புகளை சரி செய்து விடலாம்?! ட்வின் டவர் தகர்ப்பு, தீவிரவாத தாக்குதல், இயற்கை பேரழிவு, பல உயிர்களை காப்பாற்ற முடியுமே?!", என்று ஆளாளுக்கு புலம்பினர். பலவாறாக யோசித்த பின் எல்லோரும் மேதாவிடம், "ஒரே ஒரு முறை அதை உயிர்ப்பித்து விட்டு, பின் அழித்து விடலாம்", என்றனர். மேதா ஒரு பெருமூச்சுடன், "இல்லை இது எனக்கு சரியென்று தோன்றவில்லை", என சொல்லியும் யாரும் ஒப்புக கொள்ளவில்லை. முடிவில் வேறு வழியின்றி, "ஜார்ஜ், அந்த டூல் கிட், மடிக் கணினி இரண்டையும் கொண்டு வா. மற்றும் உன் உடம்பிலிருந்து ஒரு அரை பாட்டில் ரத்தம் வேண்டும்", எனவே அனைவரும் திடுக்கிட்டனர். "என்ன ஜார்ஜ் மறந்து விட்டதா?! இது செயல்பட ஏ நெகடிவ் ரத்தம் தேவை ஆயிற்றே! மறந்து விட்டாயா?! உனக்கு ஏ-நெகட்டிவ் தானே", எனச் சொல்ல, "ஆங்! ஆமாமாம்! இதோ தருகிறேன் என்று சொல்லி, தன்னிடம் இருந்த பழம் வெட்டும் கத்தியை எடுக்க, அவனை கையமர்திதிய மேதா, "விஞ்ஞானம் எவ்வளவோ முன்னேறி விட்டது, ஒரு ஊசி வழியாக எடுத்து விடலாம், இந்த மேசை மீது படு", என்றார்.


ஜார்ஜ் மேசை மீது படுக்கவே அதன் பக்கவாட்டில் இருந்து இரண்டு உலோக பட்டைகள் உடம்பை சுற்றிக் கொண்டன. மிரண்டு போன ஜார்ஜ்,"மேதா! என்ன இது? ஏன் என்னை கட்டி விட்டீர்கள்?", என்றான். அவனை நோக்கி முன்னேறிய மேதா,"நீ யார்?!" என்றார். ஜார்ஜ் சற்றே குழப்பத்துடன்,"என்ன பேத்தல்?! உன் நண்பன் ஜார்ஜ்", எனவே, மிரட்டலாக கத்திய மேதா, "இருக்கவே முடியாது", என்றார். "ஏன் மேதா உனக்கு என்ன ஆச்சு? நான் உன் ஆருயிர் நண்பன், ஜார்ஜ். இருவரும் ஒன்றாக கால சுழற்சி இயந்திரத்தை கண்டுபிடித்து, அதை காப்பாற்ற எவ்வளவு முயற்சிகள்! மறந்து விட்டாயா?! எனறார். "இல்லையில்லை நீ ஜார்ஜ் கிடையாது! நீ ஜார்ஜ் ஆக எப்படி இருக்க முடியும்?! அவன் இறந்து விட்டான். நான்தான் அவனை கொன்றேன்", என்று சொல்ல அங்கே ஓர் அமானுஷ்ய அமைதி நிலவியது. அருண், "ஸார்! நீங்களா? கொலையா?!" என்று நம்ப முடியாதவனாக கேட்டான். 


தன்னை சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்ட மேதா பேசத் தொடங்கினார்,"ஆமாம்! இருவரும் ஒன்றாக படித்தோம்! ஐன்ஸ்டீனின் கோட்பாடுகளை ஆழ்ந்து படித்தோம். மனித வாழ்வின் துயரத்தை போக்க கால சுழற்சி ஐ உருவாக்கினோம். பலர் அதை கவர முயற்சி செய்யவே அதை காப்பாற்ற பெரும்பாடு பட்டோம். ஆனால் பணத்தாசை யாரை விட்டது. ஜார்ஜ் ஓர் பெரும் புள்ளி காட்டிய பணத்தாசையில் விழுந்தான். எவ்வளவு கெஞ்சியும் கேட்கவில்லை. அன்று அந்த பெரும் புள்ளியின் ஆட்கள் ஆராய்ச்சி கூடத்தை அடைய அவனே உதவி செய்தான். கடைசி முறையாக கேட்டு பார்த்தேன், பலனில்லாமல் போகவே, அவனை கால சுழற்சி இயந்திரத்துடன் ஆராய்ச்சி கூடத்தோடு எரித்து விட்டேன். நான் என் பெட்டியுடன் தப்பி ஓடுவதை கண்ட ஆட்கள் இயந்திரம் என்னிடம் உள்ளதாக தப்பு கணக்கு போட்டு விட்டனர். ஆம்! கால இயந்திரம் ஜார்ஜுடன் அழிந்து விட்டது."


"இவன் ஜார்ஜ் இல்லை என்று எனக்கு முன்னமே தெரியும். என்ன நோக்கத்துடன் வந்திருக்கிறான் என்று அறிந்து கொள்ளவே அவனுடன் சேர்ந்து நடித்தேன்", என்றார். மேசை மீதிருந்த போலி ஜார்ஜ் இடிபோல் சிரித்தான், "ஆம் மேதா, நான் ஜார்ஜ் இல்லை! அவன் மகன் ஆன்ட்ரூ! என் தந்தையுடன் கடைசிவரை இருந்த ஒரே நபர் நீதான். அன்று என் தந்தை என் தாயிடம் நிறைய பணத்துடன் திரும்பி வருவதாகச் சொன்னார். ஆனால் அவர் திரும்பவில்லை. எத்தனையோ வருடங்கள் ஏழ்மையில் கழிந்தன. என்ன ஆனார் என்றே தெரியாத நிலை. அப்படி இருக்கும் போதுதான், மிஸ்டர்.எக்ஸின் தோழமை கிடைத்தது. அவர் என் தந்தையுடன் நடத்திய பேச்சு வார்த்தை தெரிய வந்தது. அப்போது தான் உன் மேலிருக்கும் சந்தேகம் வலுத்தது. அன்று உன்னிடம் பேசியது நான் தான். அதில் பயந்த நீ, ஊரை விட்டு ஓடினாய். என் குடும்பம் பட்ட அவதியை ஒரு ஆறு மாதத்திற்கு உன் குடும்பமும் பட்டதை கண்டு மகிழ்ச்சி அடைந்தேன். மிஸ்டர். எக்ஸிற்க்கு உதவி செய்தால் 420 கோடி கொடுப்பதாக சொன்னார். என் தந்தை செய்ய தவறியதை நான் செய்ய துணிந்தேன். இதோ என் கையில் இருப்பது கால சுழற்சி இயந்திரம் இல்லை ஆனால் உயிரை அழிக்க வல்லது. இப்போதே இதை இயக்கி உன்னையும், உன் குடும்பத்தையும் காலி செய்து விடுகிறேன்", என்றான். 


மேதா பெரிதாக சிரித்து,"நீ உயிருடன் இருந்தால் தானே. இந்த உலோக பட்டைகள் உன் உடம்பில் கரைய தொடங்கி விட்டது பார். அவை சாதாரண உலோக பட்டைகள் அல்ல, உயிரை குடிக்கும் ஸார்த்தீனியா உலோகம். இப்போது உன் இதயத் துடிப்பு மெள்ள மெள்ள குறைய ஆரம்பிக்கும். பத்தே நிமிடத்தில் நீ க்ளோஸ்!", என்றவர் அறையிலிருந்த மற்றவர்களிடம்,"நான் செய்தது, செய்து கொண்டிருப்பது உங்களுக்கு கொலையாக தோன்றலாம், ஆனால் என்னைப் பொறுத்தவரை, இது மானிடத்திற்க்கு நான் செய்த மிகப்பெரிய உதவி. இவன் உடலை பற்றி கவலை வேண்டாம். ஸார்த்தீனியா அவன் உடலை முழுதுமாக அழித்த பின் ஆவியாகி விடும்" எனச்சொல்லி, அருண், கௌதம், கௌசி மூவரையும் பார்த்து,"நாளை வகுப்பிற்கு கட்டாயமாக வரவேண்டும்", என சொல்லி விட்டு போனார்.


நிறைவுற்றது.




Rate this content
Log in

Similar tamil story from Drama