தோல்விகள் உனக்கேது
தோல்விகள் உனக்கேது


வாழ்க்கைப் பாதை இவ்வளவு கடினமாக இருக்கும் என கஙகா நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. அப்பா சக்திக்குமீறி படிக்கவைத்து திருமணம் செய்தே பாதி கடனாளியாக நிற்பதை எண்ணி கலங்கினாள். மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்கிறாள் என்றதும் மாமியார் உடனே திருமணத்திற்கு சம்மதித்ததும் நினைவுக்கு வந்தது. இப்போ குழந்தை பிறந்ததால் தொடர்ச்சியாக வேலைக்குப் போக முடியவில்லை. கடனுக்கு வாங்கி வைத்த தவணை வீடு பயமுறுததியது. அம்மா! அம்மா! என குழந்தை கட்டிலில் இருந்து கூப்பிட ஓடி வந்து தூக்கினாள்.
பணம் இல்லை என்றதும் பாகற்காய் முகம் காட்டிய கணவன் ரவீந்தரை நினைத்து மனம் கசங்கியது.
அடுத்த குழந்தை இனி வேண்டாம்..நீ அதுக்கும் லீவு போட்டுட்டு வீட்டில் இருந்து விடுவாய் என்றதும் அவளது ஆண்குழந்தை கனவு சுக்குநூறாகியது.
அப்புறம் எதுக்கு ஒரே பெட்டில் படுக்கணும் என வெறுப்பைக் கொட்டினாள்.
உடனே லேப்டாப்பில் வேறு இடம் வேலை தேடிச் சென்ற கணவனை நினைத்து அழுவதா! சிரிப்பதா! என வருந்தினாள்.
அப்பாவிடம் சொல்லிவிடலாம் எனப் பலமுறை நினைத்து அவர் நிம்மதியைக் கெடுக்கவேண்டாம் என மௌனமானாள்.
தான் சம்பாதித்த பணத்தில் எதையும் கை வைக்காமல் ஜெண்டில்மேனாக வளையவரும் அப்பாவை ஒருகணம் பெருமையாக நினைத்தாள்.
செய்தித்தாளை சன்னல்வழியாக வீசி எறிந்த பேப்பர் பையனை ஒருகணம் பார்த்தபடி தம்பி! நீ என்ன படிக்கிறாய்?
எனக்கு படிப்பு சொல்லித்தர ஆளில்லை. அதனால 12 எழுதலை…….
சரி! நான் உனக்கு சொல்லித் தர்றேன்.வர்றியா?
அதிகமான ஃபீஸ் கேட்பீங்களா?
இல்லை..குறைந்த அளவு கொடுத்தால் போதும்.
கங்காவின் பாடஅறிவிற்கு ட்யூஷனுக்கு அவளிடம் மாணவர்கள் கற்றுக்கொள்ள குவிந்தனர். இரண்டு உயிருக்கு போதுமான பணம் சேர்ந்தது.
இடையில் மகளும் பள்ளி செல்லும் பருவம் வந்தாள். அருகில் இருக்கும் பள்ளியில் கங்காவும் தனது பயோடேட்டாவைக் கொடுத்து ஆசிரியரானாள்.
பயோடேட்டாவில் திருமணமானவரா என்ற வினாவிற்கு விடை எழுதாமல் அப்படியே அனுப்பினாள்.
அறைக்குள் இருந்து கங்காவை அழைப்பதாக ஆயா சொன்னவுடன் உள்ளே சென்றாள்.
கழுத்தில் மஞ்சள்கயிறு இருக்கிறதா எனத் தேடிய முதல்வரின் பார்வையை உணர்ந்த கங்கா திருமணம் ஆகிவிட்டது மேடம். ஆனால் கணவர் வேலை காரணமாக வேறொரு இடத்தில் பணி செய்கிறார். திருமணமானவரா எத்தனை குழந்தைகள்,உங்கள் சாதி,மதம் இதுபோன்ற கேள்விகள் எனக்கு முக்கியமாகப் படவில்லை என்றாள்.
ஏன்?
பள்ளி என்பது கோவில். அதைக் கற்பிக்கும் ஆசிரியர் குரு. அந்த குரு குறித்த குடும்ப விஷயங்கள் பள்ளிக்குத் தேவை இல்லை. ஒழுக்கம் தொடர்பான கேள்வி இருந்தால் போதுமானது இல்லையா மேடம் என்றாள். அதை யாருமே கேட்பதில்லை மேடம் என்றாள்.
சிரித்தபடி முதல்வர் அடுத்த அண்டில் சேர்க்கலாம்.இப்போது நீங்கள் எப்போது வேலையில் சேர்கிறீர்கள்? என்றார்.