தாயை இருட்டில் விட்டுச் செல்லும் பிள்ளைகள்
தாயை இருட்டில் விட்டுச் செல்லும் பிள்ளைகள்


ரோட்டுல கிடந்தாங்க! தாயை இருட்டில் விட்டுச் செல்லும் பிள்ளைகள்:காரணம், கொரோனா வந்து விடுமோ என்ற பயம்!கோவை:இந்த கொரோனா காலத்தை போன்ற, ஒரு கொடூர காலத்தை, இனி இந்த உலகம் சந்திக்கப் போவதில்லை என்றே தோன்றுகிறது. பின்னே...பெற்ற தாய்க்கு கொரோனா வந்து விடுமோ என பயந்து, அவரை ஆதரவற்றோர் இல்லத்தின் முன், நள்ளிரவில் இறக்கி விட்டு, தப்பி ஓட துாண்டும் இந்த காலத்தை, என்னவென்று சொல்வது!
குழந்தை பாக்கியம் வேண்டி, கோவில் கோவிலாக ஏறி இறங்கி, வேண்டாத சாமியை எல்லாம் வேண்டி, பார்க்காத வைத்தியம் எல்லாம் பார்த்து, குழந்தைகளை பெற்றெடுக்கும் பெற்றோர், அந்த குழந்தையை கண்ணும் கருத்துமாக வளர்த்து, கடன் பட்டு, கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி, சொத்துக்கள் சேர்த்து வைத்து, அவர்களுக்கு கல்யாணம் செய்து அழகு பார்க்கின்றனர்.அவர்களின் இறுதி ஆசை எல்லாம், தன் பிள்ளைகளோடும், பேரக்குழந்தைகளோடும் சேர்ந்து வாழ்ந்து விட்டு, போய் சேர வேண்டும் என்பது மட்டும்தான். அதை தவிர, அவர்கள் வேறு எதையும் தங்கள் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பதில்லை.
ஆனால் அப்பேர்ப்பட்ட பெற்றோரை, இன்று பல பிள்ளைகள், வேண்டாத சுமையாக நினைத்து, தெருவில் துாக்கி வீசும் கல்நெஞ்ச மனநிலையில் உள்ளனர்.கொரோனா தொற்று பயம்!'கொரோனா நோய் தொற்றால், அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முதியவர்கள்' என்ற தகவல் பரவி வருவதால், வீட்டில் உள்ள முதியவர்களை, கொண்டு போய் முதியோர் இல்லங்களில், சேர்த்து வருகின்றனர்.
சிலர் முதியவர்களை, ஈவு இரக்கமின்றி பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் முதியோர் இல்லங்கள் உள்ள பகுதிகளில், விட்டுச் செல்லும் அவலம் நடக்கிறது. தொலை துார ரயிலில் ஏற்றி விட்டு, அடுத்த ஸ்டேஷனில் இறங்கி வந்து விடுவோரும் உள்ளனர்.நோயுடன், முதுமையின் பிடியில் சிக்கி தவிக்கும் அந்த முதியவர்கள், திக்கு எது, திசை எது என, தெரியாமல் ரோட்டோரங்களில் பிச்சைக்காரர்களை போல், ஒரு வாய் சோற்றுக்கு தவிக்கும் நிலை அதிகரித்துள்ளது.
சுடுகாட்டில் விட்டுச்சென்றனர்
கோவையில் சமீபத்தில் ஒரு மூதாட்டியை, உயிருடன் சுடுகாட்டில், விட்டுச் சென்ற சம்பவம், பலரின் இதயங்களை பதைபதைக்க வைத்தது.இது போல், தமிழகம் முழுவதும், கொரோனா நோய் பரவலுக்கு பிறகு, முதியோர் இல்லங்களில், சேர்க்கப்பட்ட முதியோர் எண்ணிக்கை, அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.
ஆர்.எஸ்.புரத்தில் உள்ள, 'ஈர நெஞ்சம்' மாநகராட்சி பெண்கள் முதியோர் காப்பக வாசலில், கடந்த மாதம் அனாதையாக விடப்பட்டார், பீபீ ஷானு என்ற, 80 வயது மூதாட்டி. இப்போது, அவர் பாதி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில், காப்பகத்தில் உள்ளார்.''நீங்க யாரும்மா...வீடு எங்க இருக்கு?'' என்ற நம் கேள்விக்கு, ''என் மகன் வந்து கண்டிப்பா கூட்டிட்டு போவான். நான் வீட்டுக்கு போயிடுவேன்,'' என்று மட்டுமே திரும்ப, திரும்ப சொல்கிறார் இவர். மகன் மீது அத்தனை நம்பிக்கை!ஆனால், எந்த மகனும் இதுவரை இவரை தேடி வரவில்லை. இன்னும் சிலர், தாங்கள் எங்கு இருக்கிறோம் என்ற சுயநினைவு கூட இல்லாமல், மலங்க மலங்க விழித்தபடி உள்ளனர்.
இந்த காப்பகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இருக்கும் அமுதா என்ற மூதாட்டி, ''நான் ஏன் இங்க இருக்கேன்னு, அந்த கடவுளுக்குதான் வெளிச்சம். அதுக்கு மேல நான் எதப்பத்தியும் சொல்ல விரும்பல. என்னய விட மோசமான நிலையில, மனசு பித்தாகி பல பேரு இங்க இருக்காங்க. அத நினச்சாத்தான் வருத்தமா இருக்கு. வயதானவங்க யாரு, இளையவங்க யாருன்னெல்லாம் கொரோனாவுக்கு தெரியாது. விதி வந்தா எல்லாரும் போய் சேர வேண்டியதுதான்,'' என தெளிவாக பேசுகிறார்.
இறுதியில், 'ஈர நெஞ்சம்' காப்பக நிர்வாக அறங்காவலர் மகேந்திரனிடம் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் ஒவ்வொன்றும், இதயத்தை இரண்டாக அறுக்கும் ரகம்.''கோவையில் மாநகராட்சி முதியோர் காப்பகம் நான்கு உள்ளது. தனியார் காப்பகங்கள், 80க்கும் மேல் உள்ளன. வசதியானவர்கள், தனியார் காப்பகங்களில் பணம் செலுத்தி சேர்த்து விடுகின்றனர்,''''கொரோனா வைரஸ் பரவல் துவங்கிய நாளில் இருந்து தினமும், முதியவர்களை காப்பகத்தில் சேர்த்துக்கொள்ள சொல்லி, 100க்கும் மேற்பட்ட போன் கால்கள் வருகின்றன.
மாதம்தோறும் பணம் தருகிறோம் என்கின்றனர்,''''முன்பெல்லாம் இப்படி யாரும் அழைக்க மாட்டார்கள். இங்கு ஆதரவற்ற முதியவர்களை மட்டும் தான் சேர்க்க முடியும். அதனால் சிலர், நடுராத்திரியில் முதியவர்களை வாகனத்தில் கூட்டி வந்து, காப்பக வாசலில் அனாதையாக, விட்டு விட்டு போய் விடுகின்றனர்,''''சிலர் தன் சொந்த அம்மாவையே, அழைத்து வந்து, ''இவங்க யாருன்னு தெரியல சார். அனாதையா தெருவுல படுத்து இருந்தாங்க,'' என, இஙகே கூட்டி வந்து விட்டு செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், இப்படி விட்டுச்செல்லப்பட்ட, ஆறு முதியவர்கள் இங்கு உள்ளனர்,''''கொரோனா நோய் தொற்று காலத்தில், இப்படி செய்வது மிகவும் கொடுமையானது.
முதுமை என்பது எல்லோருக்கும் வரும் என்பதை, பலர் மறந்து விடுகின்றனர்,'' என்கிறார் கண்கள் கசிய!இன்று, ஐ.நா.உலக முதியோர் அவமதிப்பு விழிப்புணர்வு தினம்!''சிலர் தன் சொந்த அம்மாவையே, அழைத்து வந்து, ''இவங்க யாருன்னு தெரியல சார். அனாதையா தெருவுல படுத்து இருந்தாங்க,'' என, இஙகே கூட்டி வந்து விட்டு செல்கின்றனர். கடந்த இரண்டு மாதங்களில், இப்படி விட்டுச்செல்லப்பட்ட, ஆறு முதியவர்கள் இங்கு உள்ளனர்,''''நீங்க யாரும்மா...வீடு எங்க இருக்கு?'' என்ற நம் கேள்விக்கு, ''என் மகன் வந்து கண்டிப்பா கூட்டிட்டு போவான். நான் வீட்டுக்கு போயிடுவேன்,'' என்று மட்டுமே திரும்ப, திரும்ப சொல்கிறார் இவர். மகன் மீது அத்தனை நம்பிக்கை!