படுத்த படுக்கை
படுத்த படுக்கை


படுத்த படுக்கையில் கணவரும், புற்றுநோய் பிடியில் மனைவியும் சிக்கியதால், இரண்டு குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
சேலம் மாவட்டம், காகாபாளையம், ஸ்டாலின் நகரைச் சேர்ந்தவர் கோபால கண்ணன், 42; மனைவி மஞ்சுளா, 31. இவர்களது மகள் சாதனா, 9, மகன் ரோகித், 7. கரட்டுப்பாளையம் அரசு பள்ளியில் நான்கு, இரண்டாம் வகுப்பு படிக்கின்றனர். சென்னை, போரூரைச் சேர்ந்தமஞ்சுளா, துணிக்கடையில் பணிபுரிந்த நிலையில், அதே கடையில் பணியாற்றிய, கோபால கண்ணணை காதலித்தார்.
மஞ்சுளாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவிக்க, சென்னையில் திருமணம் செய்த அவர்கள், ஸ்டாலின் நகரில், கோபால கண்ணன் வீட்டுக்கு வந்து விட்டனர். கட்டட பணியில், 'சென்ட்ரிங்' வேலையில் ஈடுபட்டு வந்த கோபால கண்ணன், 2014ல், சேலத்தில் பணியில் இருந்தபோது, தலையில், 'பிளைவுட்' விழுந்து அடிபட்டது. அதை கண்டுகொள்ளாமல் விட்டார்.ஐந்தாண்டுகளுக்கு பின், தற்போது, நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கையானார். இதனால், குடும்ப வருவாய் முற்றிலும் தடைபட்டது.
அதே பகுதியில் உள்ள பள்ளியில், துப்புரவு பணியாளராக மஞ்சுளா சேர்ந்தார்.அதில், மாதம், 1,500 ரூபாய் மட்டும் கிடைக்கும் நிலையில், குடும்பத்தை நடத்த முடியாமல், வறுமையின் பிடியில் சிக்கி தவிக்கிறார்.இதற்கிடையில், மஞ்சுளாவுக்கும் தொண்டையில் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டு, சாப்பிட முடியாமல், 'டியூப்' மூலம், கூழ் உள்ளிட்ட நீராகாரங்களை மட்டும் அருந்துகிறார்.மகள் சாதனா, அடிக்கடி வலிப்பு நோயால் அவதிப்படுகிறார். மகளுக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல், மஞ்சுளா கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளார்.
வறுமை மறுபுறம் மஞ்சுளா கூறியதாவது:காதல் திருமணம் செய்ததால், என் குடும்பம் கைவிட்டது. கணவருக்கு, மூன்று வேளை மருந்து, மாத்திரை கொடுத்த நிலையில், தற்போது ஆறு வேளையாக அதிகரிக்கப்பட்டுள்ளது.வறுமையால், தொடர்ந்து சிகிச்சை பெற முடியவில்லை. எனக்கும் புற்றுநோய் தாக்கம் உள்ளதால், குழந்தைகளை யார் கவனிப்பர் என்பது தான், ஒரே கவலையாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
நோய் ஒரு புறம், வறுமை மறுபுறம் என வாட்டுவதால், குழந்தைகளின் கல்வி, அவர்களது எதிர்காலம் மிகவும் கேள்விக்குறியாகி உள்ளது.