பஸ்
பஸ்


அரசு பஸ்சில் ஓட்டையை அடைக்க வத்தலக்குண்டில் போராடி சாதித்த பெண்
திண்டுக்கல் அருகே நந்தவனப்பட்டியைச் சேர்ந்தவர் டைசன் ஆபிரகாம் மனைவி உஷா 26. ஐ.டி., துறையில் பணியாற்றிவிட்டு, தற்போது இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். 3 வயது மகன் நிதின்பாண்டியுடன் திண்டுக்கல் - தேனி அரசு பஸ்சில் தேவதானப்பட்டி செல்ல ஏறி அமர்ந்தார். இருக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளியில் மகனை நிற்க வைத்தார். பகல் 12:00 மணிக்கு பஸ் கிளம்பிய சில நிமிடங்களில், நிதின்பாண்டியன் பஸ்சில் இருந்த ஓட்டைக்குள் கால் சிக்கி அலறினார். சுதாகரித்துக் கொண்ட உஷா, மகனை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார். கண்டக்டர் அனந்த ராமனிடம் பஸ்சை உடனடியாக நிறுத்துமாறு கூறினார்.
கண்டக்டர், அவர்களை வேறு இருக்கையில் அமரச் செய்து பஸ்சை கிளப்பினார். உஷா அலைபேசியில் இணைய தளம் மூலம் போக்குவரத்துக்கழக திண்டுக்கல் 2 கிளை மேலாளர் புகழேந்திரன், ஆர்.டி.ஓ., அலுவலகத்தின் போன் எண்ணை அறிந்து அவர்களிடம் பேசி பஸ்சை நிறுத்தும்படி கேட்டுக் கொண்டார். அழைப்பை ஏற்ற அதிகாரிகள் சரியாக பதில் கூறவில்லை. பஸ் வத்தலக்குண்டு வந்ததும் கண்டக்டர், டிரைவரிடம் உஷா வாக்குவாதம் செய்தார். உஷாவிற்கு மற்ற பயணிகள் ஆதரவு தெரிவித்தனர். வத்தலக்குண்டு பஸ் ஸ்டாண்டில் இருந்த ஒரு அலுவலரிடம் பஸ்சின் நிலை குறித்து முறையிட்டார். அவரோ, 'இது என் வேலை இல்லை' என பதில் கூறினார்.
ஆத்திரமடைந்த உஷா, ''ஓட்டை பஸ்சின் நிலையை யாரிடம் கூறினால் சரியாகுமோ அவர் வந்தால்தான், பஸ்சை எடுக்க அனுமதிப்பேன்,'' என பஸ்சிற்குள் ஏறி அமர்ந்து கொண்டார். டிரைவர், கண்டக்டர் செய்வதறியாமல் திகைத்தனர். உயர் அதிகாரிகளிடம் பேசினர். அவர்கள் உஷாவை சமாதானம் செய்தனர். அதற்கு இடம் கொடுக்காத உஷா, ''சம்பந்தப்பட்டவர்கள் இங்கு வராமல், பஸ்சை சரி செய்யாமல் நான் விடமாட்டேன்,'' என்றார்.
கண்டக்டர் மற்ற பயணிகளை வேறு பஸ்சில் பயணிக்க ஏற்பாடு செய்தார். வத்தலக்குண்டு டிப்போ மேலாளர் நாகபாண்டியன் வந்து சமாதானம் பேசியும் பலனில்லை. பகல் 2:30 மணிக்கு வத்தலக்குண்டு டிப்போவிற்கு பஸ் கொண்டு செல்லப்பட்டது. மாலை 4:30 மணிக்கு திண்டுக்கல் 2 கிளை மேலாளர் புகழேந்திரன் வத்தலக்குண்டு வந்து உஷாவுடன் பேசினார். பஸ் ஓட்டை சரி செய்யப்பட்டது. உஷாவின் போராட்ட குணத்தை அறிந்த போக்குவரத்துக்கழக திண்டுக்கல் பொது மேலாளர் கணேசன் பஸ்சின் அனைத்து பழுதுகளையும் உடனடியாக சரி செய்து
இரவுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதை உஷாவிற்கு டிப்போ மேலாளர்கள் காண்பித்த பிறகே உஷா சமாதானம் அடைந்தார்.
பின் உஷா அங்கிருந்து கிளம்பிச் சென்றார். தனி மனுஷியாய் போராடி அதிகாரிகளுக்கு பொறுப்பை உணர்த்திய உஷாவை பொதுமக்கள் பாராட்டினர். உஷா கூறுகையில், ''மகனை சுதாகரித்து துாக்கிவிட்டேன். இல்லாவிட்டால் கீழே விழுந்து இருப்பார். இந்த தவறை உடனடியாக சரி செய்யாவிட்டால் என் மகனுக்கு ஏற்பட்டது போல் பிறருக்கு ஏற்படும். அதிகாரிகளின் பொறுப்பையும், உயிரின் முக்கியத்துவத்தையும் உணர்த்தவே போராடினேன்,'' என்றார்.