Srija Venkatesh

Comedy Drama Others

4.5  

Srija Venkatesh

Comedy Drama Others

பாம்பாட்டிக் கதை...

பாம்பாட்டிக் கதை...

4 mins
346


வாசலில் மகுடிச் சத்தம் கேட்டது. முருகன் தான் வருகிறான் என எழுத்தாளர் முன் கோபிக்கு நன்றாகவே தெரியும். இது போன்ற சமயங்களில் அவர் வெளியில் வருவதை தவிர்த்து விடுவார். ஆனால் இன்றைக்கு அது முடியாது போலிருக்கிறதே என எண்ணிக் கொண்டார். காரணம் அவரது துணைவி கையில் ரூபாயோடும் பையோடும் வந்து கொண்டிருந்தாள். 


"என்னங்க! கீழே காய்கறி வண்டி வந்திருக்கு. கீரை பச்சை பசேல்னு வெச்சிருக்கா. ரெண்டு கட்டுக் கீரையும், கொஞ்சம் உருளைக் கிழங்கும் வாங்கிட்டு வந்துருங்களேன்" என்றாள் பையைக் நீட்டியபடி.


அது விண்ணப்பம் அல்ல கட்டளை என்பது அனுபவத்தில் தெரியும் முன் கோபிக்கு. ஆகையால் மறு பேச்சுப் பேசாமல் வாங்கிக்கொண்டார்.


"என்னங்க நின்னுக்கிட்டு இருக்கீங்க? போங்க! காய்கறிக்காரி போயிடப் போறா"


"அவ போனாப்போகட்டும். நான் மார்க்கெட்டுல போயி வாங்கிட்டு வரேன்"


"இது என்ன லூசுத்தனமா இருக்கு? வாசல்ல வந்தவளை விட்டுட்டு இவுரு 3 கிமீ மார்க்கெட்டுக்கு நடக்கப் போறாராம். உங்களால முடியலைன்னா சொல்லுங்க, கதிரு போய் வாங்கிட்டு வருவான்" என்றாள்.


ஏற்கனவே தன்னை எதற்கும் லாயக்கில்லாதவன் என மறைமுகமாகவும் நேரிடையாகவும் பேசி வரும் துணைவியார் இதையும் செய்யவில்லையென்றால் கீரை வாங்கக் கூட துப்பில்லாதவன் என முத்திரை குத்தி விடுவாள் என்பதால் பையை எடுத்துக்கொண்டு மாடிப்படிகளில் விரைந்தார்.


நல்ல வேளை அவர் தெருவில் கால் வைக்கும் நேரம் முருகன் தெருவைக் கடந்து விட்டான் போல. அவனைக் காணவில்லை. நிம்மதியாக காய் வாங்கிக்கொண்டு படியேறினார்.


"ஏங்க! எப்பப் பார்த்தாலும் எதையோ பறி குடுத்தா மாதிரி இருக்கீங்களே என்ன விசயம்?" என்றாள் துணைவி.


"அது ஒண்ணுமில்லம்மா! கதை எழுத ஐடியா ஒண்ணும் கெடைக்க மாட்டேங்குது. அதான் யோசிக்கறேன்."


"ஹூம்! நான் பொண்ணாப்பொறந்து உங்களுக்கு வாக்கப்பட்டு சீரழியுற கதையை எழுதுங்களேன். அதுவே பெரிய நாவல் மாதிரி வரும்?" என்று நக்கலாகச் சொல்லி விட்டு போய் விட்டாள். இனி ஒரு மணி நேரத்துக்கு இந்தப் பக்கமே வர மாட்டாள். தைரியமாக தன் மேஜையில் போய் அமர்ந்து சிந்தனையில் ஆழ்ந்தார் கதாசிரியர்.


"சே! என்னை யாருமே புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க. கேவலம் ஒரு பாம்பாட்டி! அவனுக்கு பயந்து கிட்டு நான் வெளிய போகாம இருக்கேன். எல்லாம் அந்த பிரபல வாரப் பத்திரிகையின் ஆசிரியர் செஞ்ச வேலை. கதை அனுப்பினா பிரசுரிக்க வேண்டியது தானே? அதை விட்டுட்டு அது சரியில்லை! இது சரியில்லை என்று பிரசுரிக்க மாட்டேன்றாரு. நல்லவேளை இப்ப எல்லாமே சாஃப்ட் காப்பி தான். இல்லேன்னா என் கதைகள் திரும்பி வரதைப் பார்த்து இவளுக்கு இன்னமும் இளக்காரம் ஆகியிருக்கும். அந்தக் கதை எழுதி ரெண்டு மாசம் இருக்குமா? இருக்கும்! இருக்கும்! அன்னைக்குத்தானே முருகனை பார்த்தேன்."


எண்ணம் ஜிவ்வென இரு மாதங்கள் முன்னால் போய் நின்றது.


அன்றைக்கு எழுத்தாளருக்கு நல்ல மூட். எதையாவது எழுத வேண்டும், சாதிக்க வேண்டும் என்ற வெறி மிக அதிகமாக இருந்தது. துணைவியாரும் மகன் கதிரும் வழக்கம் போல ஆபீஸ்/கல்லூரி போய் விட்டார்கள். இது போன்ற தனிமையில் தான் முன் கோபி தன்னை ஒரு படைப்பாளியாக உணர்வார். அன்றும் அப்படித்தான் யோசித்தபடி பால்கனியில் நின்றிருந்தார்.


"நான் ஒரு சாமானிய மக்களின் நாயகன். என் எழுத்தை கீழ் நடுத்தட்டு அல்லது நடுத்தட்டு மக்கள் தான் வாசிக்கிறார்கள். அவர்களது துன்பியலை நான் எழுத்துக் காட்டுகிறேன் என அவர்களுக்கு என் மேல் அளவு கடந்த மரியாதை இருக்கிறது. அதைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். ஏதாவது விளிம்பு நிலை மனிதர்கள் பற்றி எழுதினால் நன்றாக இருக்கும். யாரைப் பற்றி எழுதலாம்? குப்பை கூட்டும் பெண்மணி? ஸ்டேஷன் வாசலில் பிச்சை எடுக்கும் அந்த ஆள்?" அவர் யோசிக்கும் போது தான் மகுடிச் சத்தம் கேட்டது. பல ஆண்டுகளாக கேட்ட சத்தம் தான் என்றாலும் அன்று அவருக்கு புதிய யோசனையை அளித்தது அந்த நாதம்.


"பாம்பாட்டி? இந்தக் காலத்தில் பாம்பை வைத்துப் பிழைக்கிறான்! என்ன பெரிய வருமானம் வந்து விடப் போகிறது? இவனது குடும்பம் எங்கே? எப்படி வாழ்கிறார்கள்? இவற்றையெல்லாம் எழுதினால் என்னைக் கொண்டாடுவார்கள் நிச்சயம்" என முடிவு செய்து கொண்டு அவசரமாகக் கீழே இறங்கினார் எழுத்தாளர்.


"யப்பா! கொஞ்சம் நில்லு"


"என்னைங்களா சாமி?"


"ஆமாம்ப்பா! இந்தா 10 ரூவா"


பாம்பாட்டி அதைக் கண்களில் ஒற்றிக்கொண்டு பையில் வைத்துக்கொண்டான். எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது எனத் தெரியாமல் விழித்தார் எழுத்தாளர்.


"சாமி! வாசிக்கட்டுமா?" என்றான் அவன் தயாராக மகுடியை வைத்துக்கொண்டு.


உதறல் எடுத்து விட்டது முன் கோபிக்கு. இவன் மகுடி வாசிக்கப் போய் எங்கிருந்தாவது பாம்பு வந்து தொலைத்தால் என்ன செய்ய?


"இல்லப்பா! வேண்டாம்! வாசிக்க வேண்டாம். ஆமா உன் பேரு என்ன?"


"முருகன் சாமி! என் பொஞ்சாதி வள்ளி" என்றான்.


கிண்டல் செய்கிறானோ என ஒரு நிமிடம் எண்ணிக் கொண்டார் எழுத்தாளர். பிறகு அப்படி எதுவும் இருக்காது. கணவன் மனைவி அப்படி தங்கள் பெயரை மாற்றிக் கொண்டிருக்கலாம் என முடிவு செய்து கொண்டார்.


"எங்கிருந்திப்பா வரே?"


"திருமால்பூர் சாமி! அதுக்குப் பக்கத்துல கணபதிபுரம் கிராமம். 5 மைலு நடந்து வந்து வண்டியேறுவேன். டிக்கெட் எடுக்கவும் மாட்டேன். ஹிஹி! ஏதோ ஓடுது" என்றான்.


"உம்! நீ ஏன் இந்தத் தொழிலுக்கு வந்த?"


"எங்க அப்பான், பாட்டன் எல்லாருமே இதே தொழில் தான் சாமி! இங்க பாரு" என்று தனது தோளில் தொங்கிய ஐயை எடுத்தான்.


"ஐயையையோ! பாம்பெல்லாம் எடுக்காதேப்பா! எனக்கு பாக்க வேண்டாம்" என அலறினார் முன்கோபி.


"என்ன சாமி நீங்க? எங்கிட்ட ஏது பாம்பு? நான் ஃபோட்டோ தானே எடுத்தேன்" என்று சொல்லி விட்டு அழுக்கடைந்த ஒரு ஃபோட்டோவைக் காட்டினான். அதில் வெளி நாட்டவர் இருவர் நின்றிருக்க இளமையான முருகன் மிகப்பெரிய நல்ல பாம்பை பிடித்தபடி காட்சி தந்தான். 


அடுத்த அரைமணி நேரம் எழுத்தாளர் முன்கோபியின் தலை தொங்கிப் போனது. முருகன் பேசினான் பேசினான் பேசினான் அப்படிப் பேசினான். அக்கம் பக்கத்தவர் இப்போது முன் கோபியை ஒரு மாதிரி பார்க்கத் தொடங்கி விட்டார்கள். இவர்கள் துணைவியாரிடம் போட்டுக்கொடுக்காமல் இருக்க வேண்டுமே என்ற அடுத்த அச்சம் தொற்றிக்கொண்டது அவருக்கு. 


ஏறத்தாழ முக்கால் மணி நேரம் பேசி விட்டு ஓய்ந்தான் முருகன்.


"சாமி! என்னைப் பத்தி எதுக்கு இவ்வளவு விவரம் கேக்குறீங்க சாமி?" என்று ஒரு போடு போட்டான். 


"அடப்பாவி! நானாடா கேட்டேன்? நீயா எல்லாத்தையும் சொல்லிட்டு இப்ப காரணமா கேக்குற?" என்று மைண்ட் வாய்சில் சொல்லிக்கொண்டார். ஆனால் அவரது எழுத்தாளர் என்ற கர்வம் வேறு மாதிரி பேசியது.


"நான் ஒரு எழுத்தாளர்ப்பா! நிறைய கதைகள் எழுதியிருக்கேன். நிறைய விருதும் வாங்கியிருக்கேன். (நல்லவேளை யாரும் கேட்கவில்லை). உன் கதையை எழுதப் போறேன். அதுக்குத்தான்" என்றார். அன்று அவர் நாக்கில் சனி தான் குடியிருந்திருக்க வேண்டும். 


"எந்த பத்திரிக்கையில வரும் சாமி?"


பிரபல வார இதழின் பெயரைச் சொன்னார். 


"எப்ப வரும்?"


"எப்படியும் இன்னும் ஒரு மாசத்துக்குள்ள வந்துரும். நானே கூப்பிட்டு உங்கிட்ட காமிக்கறேன்" என்று சொல்லி விட்டுத் தப்பித்தோம் பிழைத்தோம் என வீட்டுக்குள் வந்து விட்டார். ஆனால் முருகன் விடவில்லை. தெருவுக்கு வரும் போதெல்லாம் இவர் வெளியில் நின்றிருந்தால் "கதை வந்திருச்சா சாமி?" என்று வெறுப்பேத்தி விட்டுப் போனான். 


முன் கோபி என்ன முயற்சி செய்யாமலா இருந்தார்? பாம்பாட்டிகளின் வறுமை நிலை, அவர்களது சாதனை, சமூகத்தில் அவர்களது தேவை என அந்தச் சிறுகதையைக் காவியமாக எழுதி அனுப்பினார் தான். ஆனால் அந்த வார இதழின் ஆசிரியர் "நாங்கள் இது போன்ற கட்டுரைகளை வெளியிடுவதில்லை" என்று சொல்லி விட்டார். வெளியில் சொன்னால் அவமானம் என பேசாமல் இருந்து விட்டார் முன் கோபி. நாளாக ஆக முருகன் மறந்து விடுவான் என எண்ணினார். ஆனால் அப்படி நடக்கவே இல்லை. எழுத்தாளரைப் பார்க்கும் போதெல்லாம் ஏதோ கேட்க வந்தான் அவன். முன் கோபி பார்த்தும் பார்க்காதது போல வீட்டுக்குள் தலை குனிந்தபடியே வந்து விடுவார். அவமானமாக இருந்தது அவருக்கு. இனி அடுத்த முறை அவனைப் பார்க்கும் போது உண்மையைச் சொல்லி விட வேண்டியது தான் என ஒவ்வொரு முறையும் நினைத்துக் கொண்டார். இன்றும் எப்படியோ அவன் பார்வையிலிருந்து தப்பித்தாகி விட்டது என எண்ணமிட்டபடி அமர்ந்திருந்தார். 


"அந்தச் சாமி! அன்னைக்கு நல்லாப் பேசி 10 ரூவா குடுத்தாரு. ஏதோ கதைன்னு சொன்ன மாதிரி ஞாபகம் புள்ள! ஆனா அதுக்கு அப்புறவு அவரு என்னை பார்க்கவே மாட்டேங்குறாரு! அந்தம்மா நல்ல நல்ல சேலை கட்டும். பழைய சேலை கேக்கலாம்னு போனா அந்த சாமி என்னைப் பார்த்ததும் ஓடுதாரு. அவரை நான் என்ன செய்யப் போறேன்? கொஞ்சம் பைத்தியம் போல" என்று வீட்டில் முருகன் தன் மனைவி வள்ளியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy