Srija Venkatesh

Comedy Drama Others

4  

Srija Venkatesh

Comedy Drama Others

சிடி வாங்கலியோ சிடி....

சிடி வாங்கலியோ சிடி....

5 mins
229


"இடியாப்பம், புட்டு... நல்ல சூடான இடையாப்பம்மா! அரிசி, கேழ்வரகு இடியாப்பம்" டிவிஎஸ் 50இல் கத்திக்கொண்டே அந்த நெருக்கமான தெருவை வலம் வந்து கொண்டிருந்தான் காசி என்னும்ன் காசிராஜா. பெயர் வைக்கும் போது அவன் காசிக்கு ராஜாவாக வருவான் என எண்ணி அவன் தாய் வைத்திருப்பாளாக இருக்கும். ஆனால் பாவம் ஒரு சிறிய குடிசைக்குக் கூட ராஜாவாக வழியில்லாததால் தன் பெயரை காசி என்று சுருக்கிக் கொண்டான் அவன். 


"இடியாப்பாம்..புட்டு" என்ற அவது குரல் மற்றொரு வாகனத்தின் சிடி யில் பதிவு செய்து ஒலிக்கவிடப்பட்ட சத்தமான குரலில் அழுந்திப் போனது.


"கடலம்மா! கடலை! மூணு படி 50 ரூபா" என்று கத்தியபடியே தனது வண்டியை நகர்த்தினான் வேறொரு வியாபாரி. எரிச்சலில் அவனைத் திட்டலாம் எனத் தோன்றிய எண்ணத்தை மாற்றிக் கொண்டான் காசி.


"அவனும் யாவாரி தானே? இருக்கப்பட்டவன். அதான் சிடியில் பதிவு பண்ணி விக்கிறான். அவன் போன பிறகு நாம சத்தம் போடுவோம்? என எண்ணி ஒதுங்கி நின்றான்.


கடலை வியாபாரி போவதாகக் காணோம். அவனும் ஸ்டேண்டு போட்டு விட்டான். அது போதாதென்று பழைய கிழிந்த பட்டுப்புடவைக்கு பணம் என்ற பதிவு செய்த குரலும் அலறத் தொடங்கியது. 


"சை! நிம்மதியா யாவாரம் பாக்க விட மாட்றானுங்க. இனிமே நாமளும் இப்படி ஒண்ணை வாங்கி வெச்சுக்கிட வேண்டியது தான். கத்த முடியல்ல" என்று எண்ணியபடியே பீடி பத்த வைத்தான்.


"ஏ தம்பி! நெருப்பு குடேன்" என்றான் கடலை வியாபாரி. 


பதிப் பேசாமல் கொடுத்தான். கடலை வியாபாரி பாட்டுக்க பீடி குடிக்க சிடி பாட்டுக்க அலறிக்கொண்டே இருந்தது. கூட்டம் சேர ஆரம்பித்தது. கடலை வாங்குவோரை பொறாமையோடு பார்த்தபடி நின்றிருந்தான் காசி. அவன் மனதுள் தானும் சிடியில் குரலைப் பதிவு செய்து அதனை அலற விட்டால் அம்பானிக்கு அடுத்தபடி ஆகிவிடலாம் என்ற எண்ணம் வலுத்தது. அதனை செய்லபடுத்த என்ன செய்யலாம்? என யோசித்த போது எழுத்தாளர் முன்கோபி வீட்டிலிருந்து வெளியே வந்தார். ஆம்! நம் எழுத்துப் புலியே தான். 


"இடியாப்பம் குடுப்பா" என்று சொல்லி விட்டுப் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு கீழே வந்தார் நம் எழுத்தாளர்.


"என்னப்பா வியாபாரமெல்லாம் நல்லா நடக்குதா?" என்றார் முன்கோபி. காசியின் ஏழரை அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்தது. 


"என்னத்தை நடக்குது சார்? வழக்கமா வாங்குறங்க வாங்குறங்க. கடலைக்காரன் சிடி போட்டு சத்தமா வெச்சா புது கஸ்டமருக்கு என் குரல் எப்படி சார் கேக்கும்? என்றான் காசி.


"நீயும் சிடியில பதிவு பண்ணேன்." என்றார் எழுத்தாளர். 


"அது தான் சார் யோசிச்சுக்கிட்டு இருந்தேன். இப்படி சிடி பதிவு பண்ற யாரையாவது உங்களுக்குத் தெரியுமா சார்?" காசி இந்தக் கேள்வியைக் கேட்டபோது அவனது ஏழரை தலை விரித்து ஆட ஆரம்பித்து விட்டது. 


இப்போது கடலைக்காரன் வியாபாரத்தை முடித்துக்கொண்டு அடுத்த தெருவுக்குப் போய் விட்டான். பழைய பட்டுப்புடவைக்காரனின் சத்தத்தையும் காணவில்லை. காசியின் மனதில் திடீரென சந்தேகம். நாம் செய்ய நினைப்பது சரி தானா? சிடிக்கு நிறைய செலவு ஆகுமோ? யோசித்தான். 


"யோசிப்பது நல்ல விஷயம் தான் தம்பி! ஆனா யோசனையை செயலாற்ற வேண்டும். அப்போது தான் உன் வியாபாரம் பெருகும்." என்றார்.


காசியின் அதிர்ஷ்டம் அவனை எச்சரித்தது. 


"சரி! நான் அடுத்த தெருவுக்குப் போகணும்." என்று கிளம்பினான். 


இதுவே நம் எழுத்தாளருக்கு எழுதும் வேலை இருந்திருந்தால் சரி என்று சொல்லி அனுப்பியிருப்பார். அன்று அவருக்கு வேலை எதுவும் இல்லை. தன்னை மதித்துத் தன் பிரச்சனையைச் சொன்ன காசியின் மேல் அன்பு பெருக்கெடுத்து ஓடியது முன்கோபிக்கு. 


"போகலாம் தம்பி! சிடி பத்திக் கேட்ட இல்ல? வா! வீட்டுக்குள்ள வா பேசலாம்" என்று துணைவியார் இல்லாத தைரியத்தில் காசியை மாடிக்கு அழைத்துச் சென்றார். மிகவும் தயங்கினான் காசி. வற்புறுத்தி அழைத்துச் என்றார். 


படி ஏறும் போதே யோசனை ஓடியது எழுத்தாளருக்கு. 


என்னை மதித்து ஒருவன் யோசனை கேட்கிறான் என்றால் நான் சமூகத்தில் எத்தனை பெரியா ஆளாக இருக்க வேண்டும்? இவன் தனது முன்னேற்றத்தையும், எதிர்காலத்தையும் என்னை நம்பி ஒப்ப்டைத்திருக்கிறான் என்றால் என் எழுத்துக்கள் இவனை எவ்வளவு ஈர்த்திருக்க வேண்டும்? ஒரு மனிதனை மதிப்புமிக்கவனாக ஆக்கும் மிகப்பெரிய பொறுப்பு எனக்கு இருக்கிறது. அதை நான் சரியாக நிறைவேற்றவில்லயென்றால் எதிர்காலம் என்னைப் பார்த்துப் பழி போட்டுப் பேசும். 


"சார்! இப்ப எல்லாரும் சிடி வெச்சுக்கிட்டு சத்தமா யாவாரம் பண்றாங்க. அதை நானும் செய்யலாம்னு பாக்கறேன்."


நாற்காலியில் சற்றே முன்னுக்கு நகர்ந்து அமர்ந்தார் எழுத்தாளர். அவர் முகத்தில் அப்படி ஒரு அமைதி.


"நாம என்னவோ கேக்கறோம்? ஆனா இந்த ஆளு திருட்டு முழி முழிச்சுக்கிட்டு இருக்காரே? மூளை சரியானவரு தானா? இல்லை லூசா? பேசாமப் போயிருவோமா? அந்தக் கடலைக்காரண்ட்டயே கேட்டிருக்கலாம்" என்று எண்ணிக்கொண்டு எழுந்து நின்றான் காசி. 


"மரியாதையெல்லாம் எதுக்குப்பா! உக்காரு உக்காரு! உன்னோட மனநிலை எனக்குப் புரியுது. இவ்வளவு பெரிய எழுத்தாளருக்கு சமமா எப்படி உக்காருறதுன்னு பார்க்காதே! என்னைப் பொறுத்தவரி எல்லாரும் நண்பர்கள் தான்." என்றார் முங்கோபி.


"எழுத்தாளர்னா என்ன? ஏன் இந்த ஆளு உளறுறான்?" என யோசித்தபடியே நின்றான் காசி. அவனைத் தோள்களைப் பிடித்து அழுத்தி அமர வைத்தார் நம் எழுத்தாளர். முதல் முறைய பயம் வந்தது காசிக்கு. 


"இதைப் பாருப்பா தம்பி! குரல் பதிவுன்றது அவ்வளவு சின்ன விஷயம் இல்ல. நீ உன்னோட வியாபாரத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துட்டுப் போற. நீ விக்குறது உணவுப்பொருள், அது மக்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. இன்றைக்கு நம்ம நாட்டுல எத்தனை பேரு உணவே இல்லாம இருக்காங்க தெரியுமா?" என்று ஆரம்பித்தார்.


காசிக்கு அவர் பேசுவது ஒன்றும் புரியவில்லை. "இவரு என்ன சொல்ல வராரு? என்னால தான் நிறைய பேரு சாப்பிடாம இருக்காங்கன்றாரா? அப்படின்னா நான் இன்னும் கொஞ்சக் சீக்கிரமா வந்தா சரியா இருக்குமா?"


"சார்! நான் இப்ப 9 மணிக்கு வரேன். எட்டு மணிக்கு வந்தா சரியா இருக்குமா?"


"ஒன்பது மணியோ எட்டு மணியோ? உணவு என்பது பலருக்கு எட்டாக்கனியப்பா"


மீண்டும் குழம்பினான் காசி. சட்டெனப் புரிந்தது அவனுக்கு. 


"கனின்னா பழம்னு நெனக்கிறேன். இடியாத்தோட பழத்தையும் விக்கச் சொல்றாரு போல. நம்ம தெருவுல மலையாளத்தான் கடை போட்டிருக்கானே அவன் புட்டோட வேக வெச்ச வாழைப்பழத்தையும் குடுக்கறான். நல்லாத்தான் யாவாரம் ஆகுது." என்று யோசித்தான். 


காசியின் ஆர்வம் எழுத்தாளருக்குப் பரவசமூட்டியது.


"படிக்காதவன், அன்றாடம் பிழைப்புக்கு வியாபாரம் செய்பவன். ஆனால் இவனுக்குத்தான் இந்தியப் பொருளாதாரத்தில் எத்தனை ஆர்வம்?" உற்சாகமாக மேலும் தொடர்ந்தார்.


"நம்ம நாட்டுல எத்தனையோ கட்சிங்க இருந்தும் இன்னமும் வறுமையையும், வேலைவாய்ப்பின்மையையும் ஒழிக்க முடியல்ல. உன்னை மாதிரி இளைஞர்கள் சொந்தமா வியாபாரம் ஆரம்பிக்குறது எவ்வளவு நல்லது தெரியுமா? அதுவும் உன்னைப் போன்ற சிந்தனையாளர்கள் நம்ம நாட்டுக்குத் தேவை." என்று இளைஞர்களின் பங்களிப்புப் பற்றிப் பேசினார்.


எரிச்சலானான் காசி. 


"நான் என்ன கேட்டா இவரு என்ன சொல்றாரு? ஐயையோ! இது கொஞ்சம் லூசு போலயே? தெரியாத்தனமா மேல வந்துட்டோமே? வீட்டுல வேற யாருமே இல்ல! கழுத்தை நெறிச்சாக் கத்தக் கூட முடியாது. " என்று கலங்கியபடி சுற்று முற்றும் பார்த்தான். 


"ஆமாம்ப்பா! எழுத்தாளர்கள் நிலை பரிதாபம் தான். அதை விடு! நான் பேசப் பேச உனக்கு ஆர்வம் கூடுது இல்ல? இத்தனை நாள் பேசாமப் போயிட்டோமேன்னு தோணுது இல்ல?" என்றார் எழுத்தாளர். 


இப்போது காசி தீர்மானித்து விட்டான் எதிரில் அமர்ந்திருப்பவர் முற்றிய பைத்தியம் என்று. 


"தாயே மகமாயி! அடி வாங்காம, சட்டை கிழியாம உசிரும் போகாம நல்லபடியே வெளியே போயிட்டேன்னா எங்க ஆத்தாவை விட்டு உனக்குப் பொங்கல் வெக்கச் சொல்றேன் தாயே" என்று வேண்டிக்கொண்டான். 


"இது வரையில் நன்றாகப் புரிந்து கொண்டான் பாவம்! தஸ்தாஸ்வ்ஸ்கியின் தத்துவம் தான் புரியவில்லை போல. நம்மிடம் கேட்கத்தயங்குகிறான்." என்று எண்ணிக்கொண்டார் முன்கோபி.


"உனக்கு ஏதாவது கேக்கணும்னா கேளுப்பா" என்றார் பெருமையாக. 


"வந்து ஒண்ணுமில்ல சார்! நான் யாவாரத்துக்கு நாலு இடம் போகணும். பதினோரு மணிக்குள்ள வித்தாத்தான் வித்தது.....இப்ப மணி 9.45...." என்றான் தயங்கித்தயங்கி.


"உன் நிலைமை எனக்குப் புரியுதுப்பா! பெரிய பெரிய தத்துவங்களை எல்லாம் புரிஞ்சுக்கணும்னு நீ ஆசைப்படுற. ஆனா உனக்கு நேரம் இல்ல. நீ மதியம் நாலு மணிக்கு வாயேன். நாம பேசுவோம். உன்னை ஒரு சிறந்த சிந்தனையாளனா மாத்திடுறேன்." என்றார் எழுத்தாளர். 


அடிவயிற்றைக் கலக்கியது காசிக்கு. 


"இல்ல சார்! நான் வரேன்...இப்ப...வந்து யாவாரம்....வந்து சிடி...." என்று உளறினான். 


"ஓ! சிடி..சிடி...உம்ம்...அதைப் பத்தித்தான் நாம பேசிக்கிட்டு இருந்தோம். ஆனா பாரு உன் ஆர்வம் உன்னை எங்கியோ கொண்டு போயிருச்சு."


"சரி அப்ப நான் வரேன் சார்" என்று எழுந்தான். 


"உம் சரி! அப்ப இன்னைக்கு நாலு மணிக்கு வரியா?"


"எதுக்கு சார்?"


"அதான் சொன்னேனே? நாம தஸ்தாவ்ஸ்கி, வான் கா...இவங்களைய்ப் பத்திப் பேசலாம்." என்றார். 


"நாலு மணிக்கு வரேன்னு சொன்னா இப்ப என்னை விட்டுருவீங்களா சார்?"


மனம் நெகிழ்ந்து போனது எழுத்துப் புலிக்கு. 


"எங்கே நாம் இப்போது பேசுவதை நிறுத்தி விடுவோமோ? என்று கவலைப்படுகிறானே இந்த இளைஞன்? என்ன ஆர்வம்? என்ன ஆர்வம்? இவன் ஒரு உறங்கும் சிங்கம். இவனது மன உணர்வுகளைத் தட்டி எழுப்பினால் நம் நாட்டிற்கே ஒரு நல்ல தலைவன் கிடைக்கலாம். அதைக் கண்டெடுத்த பெருமை என்னையே சேரும். என்னை இவன் தன் அரசியல் குருவாக கொள்ளுவான். யாரையாவது பிடித்து சினிமாவில் நடித்து விடுவான். அடுத்து அரசியல் பிரவேசம் தான். அப்போது எனக்குக் காணிக்கைகளாகக் கொட்டுவான்." என்று கற்பனையில் மூழ்கினார். இவனைக் கட்டியணைத்து என் உரிமையை நிலை நாட்டிக்கொள்ள வேண்டும் என எண்ணினார் எழுத்தாளர்.


எதிர்ரே இருப்பவர் ஒரு மாதிரி விழித்து எங்கோ பார்ப்பதைக் கண்டு பயந்து போனான் காசி. ஓட ஆயத்தமாக எழுந்து நின்றான். அப்போது அவர் ஒரு மாதிரி நெருங்கி வரவே பயத்தில் குரலே வரவில்லை காசிக்கு. அவர் அருகில் வர ஆரம்பித்ததும் அவரை தள்ளிகொண்டு மாடிப்படிகளில் தட தடவென ஓடினான். கண்களில் நீரே வந்து விட்டது எழுத்தாளருக்கு. 


"எளிய மனிதன். தன் ஏமாற்றத்தை மறைக்கத் தெரியவில்லை. வியாபாரம் செய்ய வேண்டும் என்ற நெருக்கடி. என்ன செய்வான் பாவம்? சொல்லத்தெரியாமல் ஓடுகிறான்." என்று எண்ணிக்கொண்டார்.


"யப்பா! தம்பி! எங்கிட்ட இன்னமும் நிறைய விஷயங்கள் இருக்கு. நீ நாலு மணிக்கு வா! நான் எல்லாம் சொல்லித்தரேன்.." என்ற அவரது குரல் கேட்கக் கேட்க காசியின் கால்களுக்கு வேகம் அதிகமானது. டிவிஎஸ் 50ஐத் ஸ்டார்ட் செய்து தெருக்கடைசிக்குப் போய்த்தான் மூச்சே விட்டான். 


இரு நாட்கள் கழித்து "இடியாப்பம்! அரிசி, கேழ்வரகு இடியாப்பம் புட்டு.." என்ற குரல் சிடியில் ஒலிக்க கம்பீரமாக வந்தான் காசி. அவனுக்கு நல்ல வியாபாரம். அந்தத் தெரு பக்கம் வந்ததும் சற்றே தயங்கினான். மேன்மாடத்தில் எழுத்தாளர் நின்றிருந்தார். 


"தம்பி...நீ வரவேயில்லையே?" என்ற அவரது குரல் அவனை எட்டுமுன் சிட்டாகப் பறந்து விட்டான் காசி. அவன் மட்டுமல்ல இதர வியாபாரிகளும் ஏன் இப்படி தன் வீட்டை மட்டும் வேகமாகக் கடக்கிறார்கள் என எழுத்தாளர் முன்கோபிக்கு இன்று வரை புரியவே இல்லை. 



Rate this content
Log in

Similar tamil story from Comedy