Punitha V Karuppaiya

Abstract Romance

4.8  

Punitha V Karuppaiya

Abstract Romance

முதல் சந்திப்பு

முதல் சந்திப்பு

7 mins
901


  அழகான மாலை நேரம். நீண்ட நாள் காத்திருப்பு ஒருவருக்காக. அவள் நினைத்து கூட பார்த்ததில்லை அப்படி ஒரு அழகான நிகழ்வை. அலுவலகத்தில் அரை நாள் லீவ் கேட்டு முன்னதாகவே ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள். பொய் பேசவே பிடிக்காத இன்னும் கூட சொல்லப் போனால் பொய் பேசத் தெரியாதவள் அன்று மேனஜரிடம், "சார், இன்னைக்கு பெரியப்பா உடம்பு சரியில்லை ஹாஸ்பிடல் போகனும், டாஸ்க் கம்ப்ளீட் பண்ணிட்டேன், கிளையண்ட் அப்டேட்ஸ் செண்ட் பண்ணிட்டேன்" என்று கூறி விட்டு விறுவிறு என நடை மிளிர பேருந்தும் சரியாக நிறுத்தத்தில் நின்றது.


     பேருந்தில் ஏறியவள் முந்திக்கொண்டு டிக்கெட்டை வாங்கிக்கொண்டு தனக்கான இருக்கையில் அமர்ந்தாள். மனது மெல்ல அசை போடத் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்னர் தனது காதலை பற்றியும் காதலனை பற்றியும் நண்பனிடம் உடைத்து விட்டாள். யாரிடமும் பகிர்ந்து கொள்ள விருப்பம் இல்லாத தனது மற்றொரு மனதை தனது நெருங்கிய நண்பன் இடம் பகிர்ந்து கொண்டாள். ஆம் அவன் தான் சுகன் என்றதும் வியப்பில் ஆழ்ந்தான் நண்பன் அஜித்.


நண்பரின் துணைகொண்டு தனது காதலனிடம் பேசும் வாய்ப்பைப் பெற்றாள். பள்ளியில் தொடங்கிய காதல் இன்றுதான் வெளிப்பட்டிருக்கிறது நண்பனின் மூலமாக. அந்தப் பொண்ணு நல்லா படிக்கிற பொண்ணு ஆச்சே, உண்மையிலேயே அந்த பொண்ணுக்கு என்ன புடிக்குமா என்று சுகன் அஜித்தை கேட்டான். இருவரின் பின்புலத்தை பற்றியும் நன்றாக தெரிந்தவன் அஜித். அவன் மூலமாகவே ராகினி மற்றும் சுகன் முதல் சந்திப்பு நிகழ்ந்தது.


நண்பனின் மூலமாக காதலை சுகன் இடம் தெரிய படுத்தினாலும் அவளே வெளிப்படையாக கூற வேண்டும் என்பதுதான் அவளது ஆசை. பல்வேறு எதிர்காலக் கனவுகளோடு இந்த முதல் சந்திப்பிற்காக காத்துக் கொண்டிருந்தாள். திடீரென மனதுக்குள் பல குழப்பங்கள் ஊசலாடிக் கொண்டிருந்தன. ஒரு பெண் நானே அவனிடம் என் காதலை சொல்லி இருந்ததால் ஒருவேளை என்னை தவறாக நினைத்து இருப்பானோ? மனதில் பட்டதை தானே சொன்னோம். தவறு ஒன்றும் இல்லைதானே ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி நம் மனதுக்கு பிடித்தவரை பிடித்திருக்கிறது என்பதை சொல்லவே தைரியம் வேண்டும் தான்.


நமக்கு பிடிச்சவங்க கூட நாம வாழ்வதற்காக இந்த ரிஸ்க் கூட எடுக்கலைன்னா எப்படி என்று ஓரளவுக்கு சமாதானப் படுத்திக் கொண்டாள் மனதிற்குள். பேருந்து நிறுத்தம் வந்தவுடன் படபடவென அவள் கால்கள் ஹாஸ்டலை நோக்கி சென்றது சிறிது நேரத்தில். ஏதாவது குறுஞ்செய்தி அனுப்பி இருக்கிறானா என்று பார்த்துவிட்டு, சரி கால் பண்ணி பாப்போம் என்றாள். சுகனுக்கு போன் பண்ணினாள். அவன் அழைப்பை ஏற்கவில்லை. மறு முறை அழைத்தாள் அவள் அழைப்பு துண்டிக்கப்பட்டு விட்டது. சமாதானம் அடைந்த மனது திரும்பவும் அலைபாய தொடங்கியது. இன்டர்வியூ மதியமே முடிந்துவிடும் என்று சொல்லி இருந்தானே இன்டர்வியூ முடியலைன்னா ஒரு மெசேஜ் இல்ல சொல்லியிருக்கலாமே நான் வரதுக்கு லேட்டாகும் அப்படின்னு எந்த ரெஸ்பான்ஸ் பண்ண மாட்டேங்கிறானே.. சரி அவனுக்கு நம்பள பாக்க பிடிக்கல போல.


சிறிது அழுகையும் சிறிது கோபமும் மனதுக்குள் ஒளிர் விட்டுக் கொண்டிருந்தன. அழுதுகொண்டே தன்னையறியாமல் உறங்கி விட்டாள். அவனைப் பார்க்கும் ஆர்வத்தில் நேற்று தூங்காமல் கண் விழித்து கொண்டிருந்ததுதான் இன்று அவள் அறியாமல் வந்த தூக்கத்திற்கு காரணம் போல. குட்டித் தூக்கத்திற்கு அப்புறம் எழுந்தவள் நேரம் என்ன என்று செக் பண்றதுக்காக மொபைல் போனை எடுத்தாள். தவறிய அழைப்புகள் என்று அவளது மொபைலில் நோட்டிஃபிகேஷன் ஆக வந்திருந்தது. அதைப் பார்த்ததும் அப்படி ஒரு எக்சைட்மென்ட் அவளுக்கு. திரும்பவும் அவள் சுகன்-ஐ அழைக்க அவனும் முதலிலேயே எடுத்து விட்டான்.


சாரி ராகினி இன்டர்வியூ முடிஞ்சு ரிசல்ட் சொல்ல ரொம்ப டிலே பண்ணிட்டாங்க அதனாலதான் என்னால எந்த மெசேஜும் பண்ண முடியல. நீ கால் பண்ணும் போது மேனேஜர் கிட்ட பேசிட்ட இருந்ததால கால் கட் பண்ணிட்டேன். ரிசல்ட் நாளைக்கு தான் வருமாம். அதனால இப்ப தான் கிளம்பினேன். நீ எந்த ஏரியால இருக்க அட்ரஸ் சொல்லு நான் உன் ஸ்டாப்பில் வந்து நிற்கிறேன் என்றான். அந்தப் பதட்டத்திலும் அவள் தெளிவாக அட்ரஸை சொல்லி முடிக்க, இன்னும் முக்கால் மணி நேரத்திற்குள் நான் அங்கே வந்து விடுவேன் என்று கூறி அழைப்பை துண்டித்தான். அவன் அப்படி சொன்னதும் அவள் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. இத்தனை வருடங்களாக காத்திருக்கிறேன் அவன் முகத்தைப் பார்க்க... சிறு வயதில் பள்ளிக்கூடத்தில் அவனைப் பார்த்தது அதுதான் கடைசி இன்று தான் பார்க்கப்போகிறோம் 21 வயதில்.


தனது அறையில் இருந்த நிலைக் கண்ணாடியில் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் அந்த கருமைநிற பவித்ரமான பெண். அப்படி ஒன்றும் அவ்வளவு மேக்கப் இல்லை. ஒரு ஐ லைனர் சிறிது மை இட்டுக் கொண்டாள் அவள் அழகு விழிகளில். நடுத்தர உயரமும் கொண்டவள் ராகினி அவளுக்கு அழகுசாதன பொருட்கள் மீது ஆர்வம் இல்லை ஆனால் அந்தக் கண் மையில் உள்ள ஆர்வம் எப்பொழுதும் குறைந்ததில்லை. அந்த வசீகரமான முகத்திற்கு அந்த மை எப்பொழுதுமே எடுப்பாக இருக்கும்.


சுகனிடம் இருந்து அழைப்பு வந்தது. நான் பஸ் ஸ்டாப் வந்துட்டேன் நீ எங்க இருக்க செமையா மழை பெய்து நின்ன வாட்டி வா நான் வெயிட் பண்றேன் என்றான் சுகன். அவளால் பொறுமை காக்க முடியவில்லை. தனது குடையை எடுத்துக்கொண்டு அவனுக்கான பொய்த்து கொட்டிய மழையின் நடுவில் நடந்து சென்றாள்.


    நன்றாக பொழிந்து கொண்டிருந்த மழையின் சாரலில் நனைந்து விட்டாள். பஸ் ஸ்டாப்பிற்கு செல்வதற்கு முன்னதாகவே அவள் கண்கள் அங்கும் இங்கும் சுகனை தேடிக்கொண்டே இருந்தன. மழைக்கு ஒதுங்கிய மக்கள் அதிகமாக இருந்ததால் அந்தக் கூட்டத்தில் அவன் தென்படவே இல்லை. பேருந்து நிறுத்தத்திற்கு வந்தடைந்தாள் அங்கு இருந்த அனைவரையும் பார்த்து விட்டாள், ஆனால் அங்கு சுகணைக் காணவே இல்லை. திரும்பவும் சுகணை போனில் அழைத்தாள். எங்கடா இருக்க பஸ் ஸ்டாப்ல உன்னை காணமே வேற ஸ்டாப்ல ஏதாச்சும் மாத்தி இறங்கிட்டயா என்றாள்.


நீ இவ்வளவு தூரம் நடந்து வரணும்னு தான் நான் பக்கத்துல இருக்க பூக்கடை கிட்ட வந்து நின்னுட்டேன். சரி அங்கேயே இருந்து திரும்ப வராத எவ்வளோ மழை பெய்து... மழை நின்னு வாட்டி நானே அங்க வரேன் என்றான் ராகினியிடம். அவளோ அவன் சொல்லுவது ஒன்று கூட காதில் கேட்காமல் விறுவிறு என்று பூ கடையை நோக்கி நடந்தாள். ஆனால் அங்கும் மழைக்கு ஒதுங்கிய மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவனை காண முடியவில்லை.


சுகன் அவள் போனிற்கு அழைத்தான் நான் சொல்வது ஒன்று கூட கேட்க மாட்டாய் இங்கு ஆண்கள் அதிகமாக இருக்காங்க அதனால நீ அங்கேயே நில்லு.. அந்த பிரவுன் கலர் சுடிதார் போட்டு, குட்டியா ஒரு பொண்ணு நின்னுட்டு இருக்குதே அது நீதானா என்றான் சிரித்துக்கொண்டே.. ஐந்து நிமிடம் கூட பொறுமை காக்க முடியாமல் திரும்பவும் நடந்து சென்றாள். ஒரு வழியாக அவனை பார்த்து விட்டாள்.


இருவரும் புன்னகைத்துக் கொண்டு மௌனம் காத்தனர். இன்டர்வியூ எப்படி போச்சு என்று பேச ஆரம்பித்தாள் ராகினி. ரிசல்ட் நாளைக்கு சொல்றேன்னு சொல்லி இருக்காங்க இன்னிக்கு நைட் டீம் டின்னர் எட்டு முப்பதுக்கு நான் அங்க ஜாயிண்ட் பண்ணிடனும் என்றான் சுகன். இப்பதானே பாக்குறோம் அதுக்குள்ளே கிளம்புவதை பத்தி சொல்ற என்றாள் ராகினி.


அதற்கு ஒரு அசட்டுச் சிரிப்பை கொடுத்துவிட்டு மழையில் நனைந்த அவள் மொபைல் போனை அவனது பாக்கெட்டில் வாங்கி வைத்துக்கொண்டான். மழை நிற்கும் வரை அவர்களது குடும்பத்தைப் பற்றியும் பணியைப் பற்றியும் நலம் விசாரித்து கொண்டிருந்தனர். ஒருவழியாக மழையின் அடர்த்தி குறைந்து தூறல் போட்டுக்கொண்டிருந்தது..


   சரி ராகினி எங்கு போலாம்னு சொல்லு இந்த ஏரியா எனக்கு புதுசு உனக்கு தெரிஞ்ச இடம் என்ன போலாம் என்றான் சுகன். அந்தப் பேருந்து நிறுத்தத்தை ஒட்டியே அமைந்துள்ளது ஒரு பாரம்பரிய பண்டையகால சிவன் தலம். ராகினிக்கு பிடித்த இடங்களில் ஒன்று அந்த சிவன் கோவில்.இங்க பக்கத்துல ஒரு கோவில் இருக்கு அங்க போலாமா என்றாள். சரி வா போகலாம் என்றான். சிறிது கூட கடவுள் நம்பிக்கை இல்லாதவன் முதன்முறையாக அவள் கேட்கும் போது மறுப்பு தெரிவிக்காமல் கோவிலுக்குள் நுழைந்தான். அவள் பக்தியுடன் கடவுளை வணங்க இவனோ சிலைகளின் நடுவிலுள்ள கலை நயத்தை ரசித்துக்கொண்டிருந்தான். விபூதி வாங்க மறுத்து விட்டான் ஆனால் பிரசாதத்திற்காக வரிசையில் நின்று கொண்டிருந்தான். நல்ல வேளை நமக்கு பிரசாதம் கிடைச்சது என்றான்.


இன்டர்வியூ முடிச்சுட்டு வர லேட் ஆயிடுச்சு அதனால நான் மதியம் சாப்பிடல இப்போ ஈவினிங் டைம் ஆயிடுச்சு அதான் பசிக்குது என்றான். சரி சாப்பிட போகலாமா என்று ராகினி கேட்டாள். இல்லை இப்பொழுது சாப்பிட்டால் டின்னரில் சாப்பிட முடியாது அதனால் வேண்டாம் என்று மறுத்து விட்டான் சுகன். இருவரும் பிரசாதம் சாப்பிட்டு முடித்துவிட்டு கோயிலிலிருந்து கிளம்ப ஆரம்பித்தனர் ஆனால் எங்கு போவது என்று தான் தெரியவில்லை. அடுத்து எங்க போலாம் ராகினி என்றான்.


இப்போ எனக்கு புடிச்ச இடத்துக்கு வந்தோம் இல்ல அடுத்தது உனக்கு பிடிச்ச இடத்துக்கு என கூட்டிட்டு போ என்றாள். இப்ப ஏழு மணி ஆயிடுச்சு எனக்கு பிடிச்ச இடம் எல்லாம் ரொம்ப தூரமா இருக்கு உன்னை இந்த நைட்ல நான் கூட்டிட்டு போக மாட்டேன் இன்னொரு நாள் டைம் கிடைக்கறப்ப கண்டிப்பா கூட்டிட்டு போறேன் என்றான். அவனது கரிசனம் கண்டு திரும்பவும் காதலில் விழுந்தாள் ராகினி. அப்படினா சரி ஆப்போசிட் ல இருக்க சிறுவர் பூங்காவில் தாமரைக் குளம் இருக்குது அது பக்கத்துல ஒரு வாக்கிங் போகலாம் என்றாள்..


மழை திரும்பவும் தூரல் போட ஆரம்பித்துவிட்டது. இந்த அக்காவோட பானிபூரி சூப்பரா இருக்கும் சாப்பிடலாமா என்றாள். அவனும் மறுக்காமல் கண்டிப்பா ட்ரை பண்ணலாம் வா என்றான். இருவரும் மசால் பூரி ஒன்று காளான் ஒன்று வாங்கி இருவரும் ஷேர் செய்து சாப்பிட்டனர். சாப்பிடும்பொழுது தூறல் அதிகமாக வரவே இருவரும் ஒரு குடைக்குள் நின்று சாப்பிட்டனர். அந்த நிமிடம் அவளுக்கு காலம் முழுவதும் அவன் அருகிலேயே இருந்து விட வேண்டும் என்று தோன்றியது. ஆனால் அவனோ எந்த ஒரு ரியாக்ஷனும் காட்டாமல் நின்று கொண்டிருந்தான். அந்த மழைக்கு சூடான பானிபூரி தொண்டைக்கு இதம் அளித்துக் கொண்டிருந்தது.


அடுத்ததாக அந்த சிறுவர் பூங்காவினுள் இருவரும் நடக்க ஆரம்பித்தனர். எப்பொழுதும் குழந்தைகளின் சத்தத்துடன் ஆரவாரத்துடன் இருக்கும் அந்த பூங்கா அன்றுதான் பசுமை எழில் கொஞ்சும் இலைகளுடனும் பூச்சிகளின் சத்தத்துடன் ரம்மியமான இரவு ஒளியில் உறங்கி கொண்டு இருந்தது. பல வருடம் காதல் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கூட இப்படி ஒரு சூழ்நிலையை இயற்கை அமைத்து தராது.


மழை, குடை, பசுமையான சூழல், யாருமற்ற இடத்தில் இருவரின் நடை.... இத்தனை அழகான இடத்தில் இவர்களின் முதல் சந்திப்பு நிகழ இறைவன் அமைத்து வைத்து கொடுத்திருப்பான் போல. இருவரும் பேசிக்கொண்டே எத்தனை முறை அந்தக் தாமரைக் குளத்தை வலம் வந்தார்கள் என்று அவர்களுக்கு தெரியவில்லை. கடிகாரத்தை பார்க்க மறந்தனர். சுகன் போனிற்கு அழைப்பு வந்தது நண்பனிடமிருந்து. இங்கதாண்டா பிரண்டு கிட்ட பேசிகிட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்தில் அங்கு வந்து விடுவேன் என்றான் சுகன். ராகினியின் முகமோ வாட்டம் கண்டது. அமைதியாக காத்திருந்தாள்.


போன் பேசி முடித்தவுடன் ராகினி இடம் ஏன் என்னாச்சு என்றான். நான் உனக்கு பிரண்டா என்றாள். சிறிது நேரம் அமைதி காத்தவன் பேச ஆரம்பித்தான். இங்க பாரு ராகினி நமக்குள்ள எப்பவுமே காதல் செட் ஆகாது. நீ எனக்கு எப்பவுமே நல்ல ஃப்ரெண்ட் ஸ்கூல்ல நீ நல்லா படிச்ச பொண்ணு அதனால உன் மேல எனக்கு நிறைய மரியாதை இருக்கு ரொம்ப வருஷம் கழிச்சு பார்க்க வரேன்னு தான் இன்னைக்கு வந்தேன். நீ வீணா காதல் பண்ணிக்கிட்டு இருக்காத. எனக்கு காதல் மேல எப்பவுமே நம்பிக்கை வந்ததில்லை.


இப்ப நல்ல பிரண்ட்சா வே இருப்போம் நீயும் உன் பேமிலிய பாரு நான் என் ஃபேமிலி பார்க்கிறேன் நம்ம அப்பா அம்மாவோட சந்தோஷம் தான் நம்ம சந்தோஷம் ஒத்துவராத ஒரு விஷயத்துக்காக போராடுவது என்கிறது ஒரு மிகப் பெரிய முட்டாள்தனம் அதை நான் செய்ய விரும்பல நீ மாறிவிடு இனி பிரண்ட்சா இருக்கலாம் அப்படின்னா ஓகே அப்படி இல்லன்னா நீ பண்ற போன் கால்ஸ் மெஸேஜஸ் எதுக்குமே ரிப்ளை பண்ண மாட்டேன் சரியா என்றான் தெளிவாக.


கண்களில் நீர் ததும்ப நின்றுகொண்டிருந்தாள் ராகினி. இப்ப இந்த விஷயம் கேக்குறதுக்கு உனக்கு கஷ்டமா இருந்தாலும் நாளைக்கு இதுதான் சரினு உணக்குத் தோணும். காதல் ஒன்னும் வந்து நமக்கு சாப்பாடு போட போறது இல்லை கெரியர் தான் முக்கியம். இதுதான் பிராக்டிகல். லவ் அப்படிங்கறது ஒரு இல்யூஷன் என்று பேசிவிட்டு நாளைக்கு ஹைதராபாத் போறேன் ஆபீஸ ஹைனர் ட்ரெய்னிங் குடுக்குறாங்க இந்த த்ரீ மன்த்ஸ் மறக்க ட்ரை பண்ணிட்டு என் கிட்ட ஃபிரண்டா பேச முடியுமான்னு பாரு என்றான். உன் கூட கடைசி வரைக்கும் நல்ல பிரண்டா இருப்பேன். 3 மன்த்ஸ் அப்புறமும் நீ இப்படியே இருந்தா எப்பவுமே நான் உன் கூட பேச மாட்டேன் என்றான்.


   தன் காதல் கனவு புயலடித்து அழிந்து விட்டதை எண்ணி அழுது கொண்டே அவனிடம் ஆல் த பெஸ்ட் சொன்னாள். அவன் பேருந்து நிறுத்தத்தை நெருங்கிக் கொண்டிருந்தான். ராகினி விறுவிறுவென்று அழுகையை அடக்க முடியாமல் ஹாஸ்டலுக்கு சென்று விட்டாள். அவன் பேருந்தில் ஏறி பின் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் மனது பதைபதைக்க மனசாட்சியுடன் போராட்டம் செய்து கொண்டிருந்தது. உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும் ராகினி உன்னை நான் எப்படி வேண்டாம்னு சொல்லுவேன். நான் தேடி காதலித்து இருந்தாலும் இப்படி ஒரு நல்ல பொண்ணு கிடைத்திருக்க மாட்டா. நான் காலேஜ் முதல் வருஷம் ஜாயின் பண்ண உடனே அப்பா இறந்துட்டார் தாய்மாமனுடைய தயவில்தான் காலேஜ் முடிக்க முடிஞ்சது என்னையும் என் தங்கச்சியையும் அவர்தான் படிக்க வைத்தார். படிப்பு முடிந்தவுடன் என் தங்கச்சியையும் அம்மாவையும் அவருடைய பாதுகாப்பில் அவருடைய வீட்ல விட்டுட்டு தான் இங்கே வந்து வேலை பார்த்துட்டு இருக்கேன்.


அவரை மீறி என்னால ஒரு விஷயம் கூட எதிர்க்க முடியாது. அதனால தான் என்னால ஃபால்ஸ் ஹோப் கொடுக்க முடியல. கொஞ்சநாள் கஷ்டமாத்தான் இருக்கும் பழகிக்கலாம் அப்டினுதான் இப்படி பேசிட்டேன். நீ கூட நடந்த இந்த நடை பயணம் இன்னும் கொஞ்ச தூரம் இருந்திருக்கக் கூடாதான்னு மனசுல தவிக்கிறேன்.


உன் கண்ணில் பார்த்த அந்த காதலை என்னால அனுபவிக்க முடியலைன்னு துடிக்கிறேன். என்னை மட்டுமே நினைச்சுட்டு இருந்த. இத்தனை வருஷம் கழிச்சு என் கிட்ட காதலை சொன்ன உன்னை எப்படி மறக்க போறேன்னு எனக்கு தெரியல. என்று மனதுக்குள் குமுறி கொண்டு முதல் காதலை நினைத்து கொண்டே பயணித்தான். மறுக்க பட்டாலும் மறைக்கப் பட்டாலும் முதல் காதல் என்றுமே அழகானது.

    

     

    

    



Rate this content
Log in

Similar tamil story from Abstract