மாற்றம் காணும் மாந்தர்கள்
மாற்றம் காணும் மாந்தர்கள்
வீடு முழுவதும் உறவினர்கள் சூழ, திருமண வேலைகள் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைத்து சொந்தங்களையும் ஒரே இடத்தில் பார்க்கும் சந்தோசம் மீனாட்சி அம்மாளுக்கு. கணவன் தன்னை விட்டு போன பிறகு, இவ்வளவு சொந்தங்களை விட்டு, வெளியூர் சென்று தன் ஒற்றை மகளுக்கென தனி ஆதரவாக நின்று சாதித்த பெண்.
இன்று தனது ஆசை மகளின் திருமணத்திற்கு வேலைகள் அனைத்தும் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்க, பல தவிப்புகளுடன், தனது மகளை ஒரு ஓரமாய் நின்று ரசித்துக் கொண்டிருந்தார். திருமணக் கலை யுகாவின் முகத்தில் சேர்ந்து கொள்ள, அது அழகுக்கு மேலும் அழகு சேர்த்தது. தங்கத் தாரகையாக மின்னினாள் யுகா. அதிகாலை வேளையில் சுப நேரத்தில், கெட்டிமேளம் நாதத்துடன், திருமணம் முடிந்தது. ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்த மீனாட்சி அம்மா, துணி தைத்து வியாபாரம் செய்து, தனது மகளை மென்பொருள் பொறியியல் படிப்பை முடிக்க வைத்து, ஒரு பெரிய கம்பெனியில் வேலை பார்க்கும் அளவிற்கு தன் மகளை உயர்த்தி விட்ட வீர மங்கை.
அம்மாவின் அன்பையும் கண்டிப்பையும் மட்டுமே பார்த்த யுகாவிற்கு புகுந்த வீடு பெரும் சவாலாக இருந்தது. ஏனெனில், அங்கு அவளது கணவனைத் தவிர, அனைவருமே படிப்பைப்பற்றி கூட யோசித்ததே இல்லை. அதுவும் கிராமம். திருமணம் நடந்த இரவு, தனிமையில் இருக்கையில், யுகாவும், அவளது கணவர் ராஜூவும் ஒருவருக்கொருவர் தங்களைப்பற்றி பகிர்ந்து கொண்டனர். திருமணத்திற்கு பிறகே இப்பொழுதுதான் இருவரும் பேசிக் கொள்கின்றனர். அவளது கணவர், "யுகா, சாரிங்க.. நம்ம கலயணத்துக்கு முன்னாடி உங்ககிட்ட என்னால க்ளோஸ் ஆக முடியல... பிகாஸ் உங்களுக்கு என்ன பிடிக்குதா இல்லையான்னு தெரியல, கால் பண்ணி பேசலாம் அப்டின்னு பார்த்தா, நீங்க கால் அட்டெண்ட் பண்ணவே மாட்டிகிரிங்க... அதனாலதான் இந்த கலயானத்த கூட நிருத்திடலாம்னு நினைச்சேன். இப்போ சொல்லுங்க.. உங்களுக்கு என்ன பிடிச்சிருக்கா??"
முதல் முறையாக அவரின் கண் பார்த்து, "நான் உங்ககிட்ட, நெறய பேசணும், மனசவிட்டு.... " என்று இழுத்தாள். இனிமேல் கண்டிப்பாக ரெண்டு பேரும் பேசித்தான் ஆகனும் என்று அவர் விளையாட்டாக பேச, தனது கணவரிடம், மனம் விட்டு பேச ஆரம்பித்தாள். "நீங்க நினைக்கிற மாதிரி, நான் ரொம்ப வசதியான வீட்ல இல்ல... சின்ன வயசுல இருந்தே பல இன்னல்களையும் துன்பங்களையும் அனுபவித்த பெண் நான். அதனால் எதிலும் தனித்து நின்று போராடும் பெண்ணாக என்னை மாற்றி விட்டது எனக்கான உலகம். பல்வேறு கட்டங்களை தாண்டித்தான் இந்த நிலைமைக்கு என்னை என் அம்மா கொண்டு வந்திருக்காங்க. கல்யாணத்துல பாத்தீங்களா எவ்வளோ சொந்த பந்தங்கள் அப்டின்னு... எனக்கே இந்த விசேஷத்துல தான் எனக்கு இவ்வளோ சொந்தக்காரங்க இருக்காங்கன்னு தெரியும். கஷ்டப்பட்ட காலத்துல இவங்க யாரையுமே அம்மா எதிர்பார்க்காமல் என்ன பாத்துக்கிட்டாங்க. என்னோட ஆசையே பெரிய என்ஜினீயர் ஆகனும் அப்டிலாம் இல்லைங்க.. எங்க அம்மாவ சந்தோஷமா பாத்துக்கணும்.. கடைசிவரைக்கும்.. ஏன்னா எங்க அம்மா அவங்களுக்காக ஒரு வாழ்க்கைய தேடிப்போகாம, எனக்காகவே வாழ்ந்துருக்காங்க.. நா அவங்களுக்காக எதும் பண்ணலயே அப்டின்னு தோணுது.. அதனாலதான் கல்யாணம் பண்ணாம கடைசி வரைக்கும் அம்மாவ பாத்துக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டேன்.. ஆனா என்னால முடியல... காலம் என்னோட ஆசைக்கு முட்டுக்கட்டை போட்ருச்சு...எப்படியும் அம்மாகிட்ட பேசி, இந்த கல்யாணத்தை நிறுத்தி, அம்மாவ கூட வச்சி பாத்துக்கலாம் அப்டினுதாங்க நெனச்சேன்... இந்த கல்யாணத்தை வேண்டாம்னு சொன்னது உங்களை பிடிக்காம இல்லைங்க... அம்மா மேல இருந்த பாசத்தினால.. அதுக்கும் மேல என்னோட கடமை என்னை உருத்திட்டே இருக்குங்க... " என்று கண்ணீர் மல்க அவனது தோலில் சாய்ந்து அழுதாள் அவளறியாமல். விழித்தவள் தன் நிலை உணர்ந்து சற்று விலகினாள். அவர் எதுவும் பேசாமல் அவள் கொண்டு வந்த பாலை அவளை குடிக்க சொல்லி விட்டு, இருவரும் உறங்கினர். கண்கள் மட்டுமே மூடியிருக்க, இருவருமே இறங்கவில்லை.. யோசனையில் அந்த இரவு கடந்தது.
அடுத்த நாள் காலை, யூகாவிற்கு முன்பாகவே எழுந்து எங்கேயோ கிளம்பிவிட்டார் அவரது கணவர். இவள் மனமோ பரிதவித்து கொண்டிருந்தது.. "அச்சச்சோ, தவறு செய்து விட்டோமோ, முதல் நாளே இப்படி அழுது புலம்பி விட்டோமே! என்ன நினைத்தாரோ நம்மைப்பற்றி... பெரிய பிரச்சனை ஆகிவிடுமோ.. அவங்க வீட்டுல சொல்லிட்டாரு போலயே... அம்மாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்கள் என்ன பண்றது.. " என்று மனதில் புலம்பிய படியே இருந்தாள் யுகா.. திடீரென்று வெளியில் ஒரு கார் வந்து நின்றது.. காரிலிருந்து இறங்கிய அவளது கணவர், விறுவிறுவென்று மாடிக்கு சென்று, அங்கு இருந்த அறையை ஒழுங்குபடுத்தி விட்டு கீழே வந்தார். ஆனால் யுகாவிடம் பேசவில்லை. " அம்மா ஒரு டீ போட்டு கொண்டு வாங்க என்னோட மாமியாருக்கு... " என்றார். ஆச்சரியத்துடன் பார்த்த யுகாவிற்கு, ஒரு பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. "இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் யுகா! உனக்காக ஒரு கிஃப்ட்... இனிமேல் எப்பவுமே உங்க அம்மாவும் நம்ம கூடத்தான் இருக்க போறாங்க... " என்றவுடன் யுகா அழுதுகொண்டே அவள் அறைக்கு ஓடினாள். அவரும் பின்தொடர்ந்து செல்ல, "என்ன ஆச்சு உனக்கு பிடிச்ச கிஃப்ட் தானே குடுத்தேன் அப்புறம் எதுக்கு இப்படி அழர.. "என்றார்... "ரொம்ப தேங்க்ஸ்" என்றவள் அவன் தோள் மேல் சாய்ந்தாள்.. "இப்பவாவது உண்மையாகவே சாய்ந்து அழறிங்களா, இல்ல தெரியாம பண்ணிட்டிங்களா" என்றார் சிரித்துக்கொண்டே... "நான் கிராமத்து ஆள் அப்டினாலும் நானும் படிச்சிருக்கேன் யுகா.. உங்களை எனக்கு பேசி முடிச்சப்பவே முடிவு பண்ணிட்டேன் உங்க அம்மாவை இந்த வீட்டுக்கு கூட்டி வந்துடனும் அப்டின்னு.... அதும் இல்லாம, இனிமேல் நீ உங்க அம்மாவுக்கு உன்னோட சம்பளப் பணத்த இதுவரைக்கும் எப்படி குடுத்தையோ அதோ போல இப்பவும் குடு.. நா உன்னோட சம்பளத்தை பத்தி கேக்கவே மாட்டேன்.. ஓகேவா யுகா"... என்றார்... இந்த நெகிழ்ச்சியில், யுகா தனது அம்மா ஹாலில் இருப்பதையே மறந்து விட்டாள். "சரிங்க யுகா.. நாம வந்து ரொம்ப நேரம் ஆகியிருக்கும் போல.. நீங்க வேற அழுதுட்டே வந்திங்களா.. எல்லாரும் பயந்து போய் இருப்பாங்க வெளிய.. நாம..."என்று பேசிக்கொண்டிருக்க, அவனை அனைத்து நெற்றியில் முத்தமிட்டு, என் அம்மா எனக்கேற்ற கணவனைத்தான் எனக்கு தந்திருக்கிறார். இதுக்கு மேல ஒரு பெண்ணுக்கு என்ன வேணும்...I am feeling blessed to have you as my husband and you gave me the best ever gift" என்றாள் சந்தோஷத்துடன்...
ஒவ்வொரு பெண்ணும் எதிப்பார்ப்பது இதை மட்டுமே.. இன்று பல பெண்கள் திருமணத்திற்கு பிறகு உறவினர்களால் பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.. பல பெண்கள் தனது பெற்றோருகாகவே திருமணம் வேண்டாம் என்று கூறி வருகின்றனர். தனது கணவர், தனது பெற்றோரை அன்புடன் அரவணைத்தால், அந்த பெண் அந்த கணவரின் குடும்பத்தை தூண் போல நின்று தாங்குவாள்.. எந்த சூழ்நிலை வந்தாலும் கணவன் மனைவி குடும்பத்தினரையும், மனைவி கணவன் குடும்பத்தினரையும் அரவணைத்து, வாழ்ந்தால், நிம்மதியான வாழ்க்கை வெகு தூரம் இல்லை. உறவுகளைப் போல உன்னதம் எங்கும் இல்லை சரியான புரிதல் இருக்கும்பட்சத்தில்..... ராஜு போல நல்ல கணவன் கிடைத்துவிட்டால், அனைத்து பெண்களுக்கு ஒரு நல்ல விடியல் கிடைத்துவிடும்..
