மருத்துவர்
மருத்துவர்


செய்தித்தாளில் வந்திருந்த கொரானா செய்திகளைப் படித்து முடித்தார். இதழ்கள் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட செய்தி வரலாற்றைக் கோடு போட்டுக் கட்டம் கட்டியிருந்த பக்கத்தை மருத்துவர் சொர்ணா படித்தபடி இருந்தார். விளம்பரம் குறைந்திருந்த காரணங்களினால் பத்திரிகை மெலிந்திருப்பதைக் கண்டார். மகள் மருத்துவப் படிப்பு வேண்டாம் என்று சொல்லியும் கணவனது ஆசைக்காக படிக்கக் கட்டாயப்படுத்தியதை நினைத்துப் பார்த்தாள். மகள் வீணாவின் அறைக்கதவு திறக்கப்படுவதைக் கவனித்தாள்.
என்னம்மா! தூங்கலையா?
தூக்கம் வரலை....
ஏம்மா?
பெண்களுக்கு மருத்துவம் பார்க்கணும்னுதான் எங்கப்பா,எங்க தாத்தா எல்லோரும் என்னை மருத்துவருக்குப் படிக்க வைத்தார்கள். ஆனால் மளிகைக் கடைக்கும்,காய்கறிக் கடைக்கும் போறதுக்கு வரிசை வரிசையாக நிற்கிறதைப் பார்த்தால் பயமா இருக்கும்மா! தவறான பாதையில் உன்னை வழி நடத்துகிறேனோ என்று............
முன்னாடி எல்லாம் கிராமங்களில் மருத்துவ வசதி கம்மி. பெண்கள் மருத்துவவசதி இல்லாமல் இறந்துடறாங்கன்னுதான் பெண்கள் படிச்சுட்டு மருத்துவரா வர்றாங்க!
ஆனால் இங்கே என்னம்மா நடக்குது! நாலு வருஷத்துக்கு முன்னாடி இலட்ச இலட்சமா சீட் விலை போச்சு! இப்ப நீட் தேர்வுன்னு வைக்கிறாங்க! அதுலயும் ஏகப்பட்ட குளறுபடி..இப்படி இருந்தால் எப்படி கிராமங்களுக்கு சேவை செய்ய மருத்துவர் வருவாங்க.?....
அதைப் பற்றி உனக்கென்ன கவலை? உனக்கு ஆங்கிலம் தெரியும்...தாய்மொழி தமிழ் தெரியும்... அது போதாதா!! நம்ம வேலையை மட்டும் பார்க்கணும். இப்ப இந்த நோய் வந்ததில் இருந்து உன்னை நீட் எழுத சொல்லணுமான்னு யோசிக்கிறேன். மருத்துவம் பார்க்கிறப்ப மக்கள் குடிச்சுட்டு வந்தா நல்லாவா இருக்கு....
நீ பேசாமல் விவசாயப் படிப்பு எடுத்துப் படிம்மா! அப்புறம் நோயில்லாமல் மருத்துவமனைக்கே வராமல் மக்கள் வாழ என்ன படிப்பு இருக்கிறதோ அதை எடுத்துப் படி! அது போதும்..என் மகள் குடும்பம்,குழந்தை,குட்டின்னு வாழ்ந்தால் போதும்னு நினைக்கிறேன்.
இது தப்பிக்கிற வழி இல்லையா அம்மா....
ஆமாம்! மக்கள் நோயில்லாமல் இருக்க வழி பசுமையோடு சுயநலமில்லாமல் இயற்கையை அழிக்காமல் வாழப் பழகுவது மட்டும்தான் தேவை.
ஆமாம்! நீங்கபாட்டுக்கு சொல்லிட்டீங்க..இப்ப சென்னையில் கொரானா அதிகரிக்க காரணமே அதிக மக்கள்தொகை,அதிக கட்டிடங்கள். மக்கள் இலஞ்சம் கொடுத்து வாழப் பழகிட்டாங்க...
பெண்கள் தங்களுக்கான கொடுமையை முறியடிக்க பெண்கள்தான் முயற்சிக்க வேண்டும். என்னைப் போன்ற ஆண்கள் அதை ஒழிக்க முயல்வதுகூட வீண்தான்’’ என்றார் காந்தி. ‘‘ஆண்களால் பெண்களுக்கு விடுதலை கிடைக்காது. பூனைகளால் எலிகளுக்கு விடுதலை கிடைக்குமா?’’ என்று கேட்டார் பெரியார் என சொர்ணாவின் மகன் தான் எழுதிக்கொண்டிருந்த கட்டுரையை வாசித்துக் கொண்டிருந்தான்.