மனவேதனையோடு
மனவேதனையோடு
கொரோனா மிரட்டலுக்கு இடையே ஊரடங்கு தளர்வுகள் அமலில் இருந்ததால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்தது. இதனால் கொரோனாவுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதையடுத்து சென்னையில் கொரோனாவின் பிடியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிக்கினர். பலர் பலியாகி வருகின்றனர்.
இந்தநிலையில் அதிரடி நடவடிக்கையாக சென்னையில் நேற்று முதல் வருகிற 30-ந்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் இறைச்சி விற்பனைக்கு மாநகராட்சி அதிரடி தடை விதித்தது. கொரோனா பரவலை பற்றி கவலைப்படாமல், இறைச்சி கடைகளில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகம் இருந்ததால் இந்த நடவடிக்கையை மாநகராட்சி எடுத்து உள்ளது.
மீன், நண்டு, இறால் போன்ற கடல் உணவு வகைகள் விற்பனைக்கும் மாநகராட்சி திடீர் தடை போட்டு உள்ளது. இதனால் மீன், நண்டு, இறால் போன்றவற்றை அண்டை மாநிலங்களில் இருந்து இறக்குமதி செய்திருந்த வியாபாரிக
ள் ஏமாற்றம் அடைந்து உள்ளனர். கொரோனாவிடம் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கு மாநகராட்சி எடுத்து உள்ள இந்த நடவடிக்கை பாராட்டுக்குரியது என்றாலும், கடைகளை திறக்க அனுமதி இல்லை என்று முன் கூட்டியே சொல்லி இருந்தால் நாங்கள் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து பொருட்களை வாங்கி வந்திருக்க மாட்டோம் என்று வியாபாரிகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
இதனால் தங்களுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. 2 நாட்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி கொடுத்தால் கைவசம் உள்ள மீன் உள்பட பொருட்களை விற்பனை செய்துவிடுவோம் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
குப்பையில் கொட்டப்பட்டது
மீன்கள் அழுகும் பொருட்கள் என்பதால் அவற்றை நீண்ட நாட்களுக்கு வைக்க முடியாது. இந்தநிலையில் சென்னை வில்லிவாக்கம் மார்க்கெட்டில் மீன், நண்டு, இறால் போன்றவற்றை மனவேதனையோடு குப்பையில் வியாபாரிகள் கொட்டினர்.