மனைவி பிரிந்த நிலையில் பிரதான கடமை
மனைவி பிரிந்த நிலையில் பிரதான கடமை


மனைவி பிரிந்து சென்ற நிலையில், மகளைக் காப்பாற்ற மருத்துவமனை, வீடு என அலைந்துகொண்டிருந்த சென்னை ஆட்டோ டிரைவர் நந்தகுமாரின் வாழ்க்கையில் அடுத்த சோக நிகழ்வு நடந்துள்ளது.
சென்னை அயனாவரம், பழனி ஆண்டவர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார் (43). இவர், மதுரவாயல் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, `நான் மேற்கண்ட விலாசத்தில் குடியிருந்துவருகிறேன். ஆட்டோ டிரைவராகப் பணியாற்றிவருகிறேன். எனக்குத் திருமணமாகி கிருஷ்ணவேணி (15) என்ற மகள் உள்ளார். கிருஷ்வேணிக்கு பிறந்ததிலிருந்து நரம்பு சம்பந்தப்பட்ட நோய் இருந்ததால் அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவந்தோம்.
எனக்கும் என் மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் என்னைப் பிரிந்து சென்றுவிட்டார். அதனால் என் மகளை சரிவர கவனிக்க முடியாததால், என்னுடன் பிறந்த தங்கையின் வீடு சென்னை மதுரவாயல் துண்டலத்தில் உள்ளது. அங்கு, கிருஷ்ணவேணியை என் தங்கை கவனித்துவந்தார். இந்த நிலையில், கடந்த ஒரு மாதமாக சரிவர மருத்துவமனைக்கு செல்ல முடியாததால் எனது மகளின் உடல் நிலை மிகவும் மோசமானது. எனவே, நான் கடந்த 10.6.2020-ல் மருத்துவமனைக்கு கிருஷ்ணவேணியை அழைத்துச்சென்றேன். அப்போது, நியூரோ மருத்துவர் வராததால் மறுநாள் வரும்படி கூறினர்.
அதையடுத்து 11.6.2020-ல் ஆட்டோவில் கிருஷ்ணவேணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு கிருஷ்ணவேணியைப் பரிசோதித்த டாக்டர், வரும்வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக கூறினார். எனவே, என் மகள் கிருஷ்ணவேணியின் சடலத்தை அடக்கம் செய்ய உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் வேல்ராஜ் வழக்குப்பதிந்து விசாரித்துவருகிறார்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``ஆட்டோ டிரைவர் நந்தகுமார் அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்துள்ளோம். மனைவியைப் பிரிந்து வாழ்ந்த நந்தகுமாருக்கு அவரின் மகள் கிருஷ்ணவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே பிரதான கடமையாக இருந்துவந்துள்ளது. ஊரடங்கு காரணமாக மகளை அழைத்துச் செல்வதில் ஏற்பட்ட சிக்கலால் கிருஷ்ணவேணி உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டார்" என்றார்.
நந்தகுமார் போலீஸாரிடம், `என் வாழ்க்கையில் எனக்கு ஏற்பட்ட சோகம் மற்ற யாருக்கும் வரக்கூடாது' என்று கண்ணீர்மல்க கூறியுள்ளார். இதையடுத்து போலீஸார் அவருக்கு ஆறுதல் கூறியுள்ளனர்.