Anu Mva

Drama Romance

5.0  

Anu Mva

Drama Romance

லவ் ப்ரொபோசல்

லவ் ப்ரொபோசல்

4 mins
1.4K


ரெட் கார்பெட் வரவேற்பில் நடந்து வந்து கொண்டிருந்தவளுக்கு எதிரே, வண்ண விளக்குகள் நிறைந்திருக்க, அதற்கு நடுவே பலவகை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையில் அவளுக்காக காத்திருந்தான் அவன்.


அவனைக்கண்டதும் முகம் மலர அவன் எதிரே நடந்து செல்ல சுற்றி இருந்த நட்பு வட்டாரம் கரகோஷத்துடன் ஆர்ப்பரித்தது.


கொஞ்சம் வெட்கம், கொஞ்சம் தயக்கம், கொஞ்சம் மகிழ்ச்சி என்ற கலப்படமான உணர்வுகளில் மிதந்த அவள், அவனை நோக்கி எட்டுவைத்துச் சென்றாள்.


அவனோ அவளுக்காக மண்டியிட்டு அவனிடமிருந்த வைர மோதிரத்தை வெளியே எடுக்க, சட்டென டிவியை ஆஃ செய்தாள் அஞ்சலி.


அவளுடன் அமர்ந்து டிவி பார்த்துக்கொண்டிருந்த அஞ்சலியின் நெருங்கிய தோழிகளான ரஞ்சனியும் பர்வினாவும் இதனால் எரிச்சலுற்று,


ரஞ்சனி- லூசாடி நீ? எதுக்கு ஆஃப் பண்ணின?


பர்வினா- செம சீன் போய்ட்டு இருக்கு..


அஞ்சலி- எதுடி செம சீன்... எனக்கு இதை மாதிரி காட்சியை பார்த்தாலே கடுப்பாகுது...


பர்வினா- ஏன் உன்னோட லவ்வர் உங்க பர்ஸ்ட் இயர் அன்வெர்சரிக்கு (first year anniversary) இப்படி சர்ப்ரைஸ் கொடுத்தால் நீ வேண்டாம்னா சொல்லுவ?


அஞ்சலி- அவன் மட்டும் இப்படி ஏதாவது செய்தால் உடனே பிரேக்கப் தான்...


ரஞ்சனி- என்னடி இப்படி சொல்ற?


அஞ்சலி- எனக்கு ஆடம்பரமா எது செய்தாலும் பிடிக்காது... அதுவும் இல்லாமல் இதெல்லாம் செயற்கையா இருக்கு...


பர்வினா- ஹே... உனக்கு இன்னும் இரண்டு நாள்ல பர்ஸ்ட் இயர் அன்வெர்சரி வருதுல?


அஞ்சலி- ம்ம்...


ரஞ்சனி- அதுக்கு ரிஷி என்ன செய்கிறான் என்று பார்க்கலாம்


பர்வினா- ஒருவேளை இதே போல ஏதாவது சர்ப்ரைஸ் கொடுத்தால் என்ன செய்வ


அஞ்சலி- தெரியலையே....


என்று கூறும் போதே அஞ்சலியின் மனம் யோசிக்கத்தொடங்கியது.


'ரிஷி இப்படி ஏதாவது செய்துவிட்டால் என்ன செய்றது? வேண்டாம் என்றும் சொல்ல முடியாது... அதே நேரத்துல எனக்கு பிடிக்காததையும் ஏற்றுக்கொள்ள முடியாதே'


ரஞ்சனி- உனக்கு கல்யாணம் செய்ய ஆசை இல்லையா?


அஞ்சலி- நான் எப்போ அப்படிச் சொன்னேன்? நான் ரிஷியைப்பற்றி வீட்டுல சொல்லிட்டேன். அவங்களும் என்னை பார்க்க இங்க வரும் போது ரிஷியை சந்திப்பதாக சொல்லிட்டாங்க.


பர்வினா- உன் அண்ணன்கூட ஒரு முறை இங்க வந்த போது ரிஷியை பார்த்துப் பேசினார் தானே?


அஞ்சலி- ம்ம்... அண்ணாவுக்கு ரிஷியை ரொம்ப பிடித்திருக்கு... ரிஷியும் அவன் வீட்டுக்கு என்னை கூட்டிட்டுப் போனான். அவங்களுக்கும் என்னை பிடித்திருக்கு...


ரஞ்சனி- பிறகு ஏன் ப்ரொபோஸ் பண்ணவேண்டாம்னு சொல்ற?


அஞ்சலி- ப்ரொபோஸ் பண்ணவேண்டாம்னு யாரு சொன்னது... உங்களுக்கே தெரியும் தானே... எனக்கு கூச்ச சுபாவம் அதிகம். அத்தனை பேருக்கு முன்னாடி வைத்து என்னாலெல்லாம் ப்ரொபோசலை ஏற்க முடியாதுப்பா...


பர்வினா- இன்ஷா அல்லா... உன்னை வச்சுட்டு என்னதான் செய்றதோ... பாவம் ரிஷி...


ரஞ்சனி- நீ வேணும்னா பாரு... உன்னை இம்ப்ரெஸ் செய்ய ரிஷி பெரிய பிளான் போட்டிருக்கப்போகிறான்... நீ சொதப்பப்போகிற


அஞ்சலி- போங்கடி லூசுகளா...

என்று திட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள் அஞ்சலி.


அஞ்சலியும் ரிஷியும் பக்கத்து பக்கத்து நிறுவனங்களில் வேலை செய்கின்றனர். அஞ்சலி சென்னையில் தோழிகளுடன் பிளாட் எடுத்து தங்கியிருக்கிறாள். ரிஷிக்கு சொந்த ஊர் சென்னை தான்.

நல்ல வேலை நல்ல சம்பளம். நிம்மதியான வாழ்க்கை. இருவரும் காதலிக்கத் தொடங்கி ஒரு வருடம் முடியப்போகிறது. அடுத்த வருடம் இந்நேரம் எப்படியும் கணவன் மனைவியாக இருப்பார்கள்.


இரண்டு நாட்களுக்குப் பின்னர்,


திங்கள் கிழமை காலை,


அஞ்சலிக்கு யூஎஸ் நேரத்தின்படியான வேலை. எனவே வாரத்தில் திங்கள் கிழமைதான் விடுமுறை. ரிஷிக்கோ அன்று ஆஃபீஸ் இருந்தது.


அஞ்சலி நைட் ஷிப்ட் முடித்துவிட்டு ஆபீஸில் இருந்து வெளியே வந்தாள். வெளியே அவளுக்காக ரிஷி காத்துக்கொண்டிருந்தான்.


"ஹாப்பி அனிவெர்சரி அஞ்சலி பேபி"


"ஹாப்பி அனிவெர்சரிடா... "


என்று மகிழ்ச்சியுடன் அவன் அருகில் வர,


"சாரிடி இன்னைக்கு ஆஃபீஸ்ல முக்கியமான மீட்டிங். நான் உன்கூட இருக்க முடியாது"

என்று ரிஷி தெரிவிக்க,


அஞ்சலிக்கு வருத்தம் இருந்த போதும்,

'நல்லவேளை இவன் நாம டிவியில் பார்த்ததுபோல பைத்தியகாரத்தனம் எதுவும் செய்யவில்லையே... அதுவே போதும்'

என்று எண்ணிக்கொண்டாள்.


"பரவாயில்லடா... வேலை முடிந்ததும் வா.. உனக்கு ஒரு கிப்ட் வைத்திருக்கிறேன்"


"அப்படியா? என்னடி அது?"


"அதெல்லம் சொல்லமாட்டேன்... வந்து பாரு தெரியும்"


"சரி நீ பத்திரமா வீட்டுக்குப் போ"


"ம்ம்.. ஓகே பை"


என்று கூறிவிட்டு தனது ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினாள்.


அவள் வீட்டிற்கு வந்த அதே நேரம் அவளது தோழிகள் வேலைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர். அனைவரும் அஞ்சலியை வாழ்த்திவிட்டு ரிஷி என்ன கொடுத்தான் என்று கேட்க, அஞ்சலி பதில் சொல்ல முடியாமல் தவித்துவிட்டாள்.


பின்னர் ஒருவழியாக அனைவரையும் சமாளித்து அனுப்பிவைத்துவிட்டு தனது அறைக்குள் நுழைந்த போது கட்டிலில் ஒரு கவர் இருப்பதைக்கண்டாள்.


'என்ன இது?'


என்று யோசித்துக்கொண்டே அதனை திறந்து பார்க்க, அது ரிஷி எழுதிய கடிதம்.


'இவன் என்ன லெட்டர்லாம் எழுதி இருக்கிறான்?'

என்று நினைத்துக்கொண்டே அதனை படித்தாள்.


'ஹாப்பி அனிவெர்சரி புஜ்ஜிமா... என்னடா புதுசா லெட்டர் எழுதி இருக்கிறானே என்று பார்த்தியா? என்ன செய்ய... என்னால தான் இன்னைக்கு உன்கூட இருக்க முடியல... என்னோட லெட்டராவது இருக்கட்டுமே என்று தான்.. அப்புறம் உனக்கு நைட் ஷிப்ட் போட்டுட்டதால அடிக்கடி தலை வலிக்குது, பகல்ல சரியா தூக்கம் வரலைன்னு சொன்னியே... உன் டேபிள் மேல ஒன்னு இருக்கு பாரு'


அஞ்சலியும் டேபிளை நோக்க அங்கே ஒரு பாக்ஸில் சில மெழுகுவர்த்திகள் இருந்தது.


'அது ஹெர்பல் மெழுகுவர்த்தி. நீ எப்போ தூங்கணுமோ அப்போ அதை ஏற்றி வச்சுட்டு படுத்துக்கோ... நல்ல ஸ்மெல் வரும். அந்த ஸ்மெல்லுக்கு சீக்கிரமே நீ தூங்கிடுவ.. தலைவலி இருந்தாலும் போய்விடும். நான் ஏற்கனவே ஒன்னு வாங்கி பயன்படுத்தி பார்த்துட்டேன். அதனால தைரியமா யூஸ் பண்ணு... '


அஞ்சலிக்கு லெட்டரை படிக்கப்படிக்க,


'அடிக்கடி தலை வலிக்குது, சரியா தூக்கம் வரலைன்னு நான் சொன்ன போது ரிஷி போனில் விளையாடிட்டு இருந்தானே... நான் பேசுவதை கவனிக்கவில்லை என்று நினைத்தேன்... ஆனால் கவனித்து, நியாபகம் வச்சுருக்கானா?'

என்று ஆச்சர்யமாக இருந்தது.


'அப்புறம் புஜ்ஜிமா நீ சமைப்பதற்கு சோம்பல்பட்டு இப்போதெல்லாம் சரியாவே சாப்பிடுறதில்லை. போன மாதம் இருந்ததைவிட இந்த மாதம் 3 கிலோ குறைந்துவிட்டாய். அதனால பிரிட்ஜ்ல பழங்கள் வாங்கி வச்சுருக்கேன். பாதமும் இருக்கு. மறக்காமல் தினமும்  சாப்பிடு... '


அஞ்சலி உடனே எழுந்து சென்று பிரிட்ஜை திறந்து பார்த்தாள். அங்கே பழங்களும் இருந்தது, அதனுடன் கேக்கும் இருந்தது. அதுவும் அஞ்சலிக்கு மிகவும் பிடித்த ஐஸ்கிரீம் கேக்.

'இதையெல்லாம் எப்போ செய்தான்?'


என்று யோசித்துக்கொண்டே லெட்டரை தொடர்ந்து படிக்க,


'ஐஸ்கிரீம் கேக்கை நீயே தனியா சாப்பிட்டுவிடாதே... எனக்கும் கொஞ்சம் வை... அப்படியே சாயந்தரம் நான் வரும் போது எனக்காக சமைக்கறேன், சர்ப்ரைஸ் கொடுகிறேன்னு கஷ்டப்படாதே... நானே ஏதாவது வாங்கிட்டு வருகிறேன். அது வரைக்கும் சமத்தா என் செல்லம் தூங்கி ரெஸ்ட் எடுங்க. பை....'

என்று முடிந்திருந்தது அக்கடிதம்.


'ரிஷி.. எனக்கு ஏற்ற ஆளு நீதாண்டா'


என்று கடிதத்திற்கு முத்தமிட, அதே நேரம் அழைப்பு மணியின் ஓசை கேட்டது.


அஞ்சலியும் சென்று கதவை திறந்து பார்க்க, வெளியே ரிஷி நின்றுகொண்டிருந்தான்.


"டேய் நீ என்னடா இங்க?"


என்று ஆச்சர்யமாக அஞ்சலி கேட்க,


"சாரி ஒரு கிப்ட் இருக்கு. அதை கொடுக்க மறந்துட்டேன்"


என்று கூறிக்கொண்டே அவனது ஆஃபீஸ் பேக்கில் எதையோ தேட,


'என்னவாக இருக்கும்? ஒருவேளை மோதிரமா? அய்யயோ எனக்கு மோதிரம் போடப் பிடிக்காதே... இப்போ என்ன சொல்லி சமாளிப்பது'

என்று அவள் என்னும் போதே வெறும் கையுடன் அஞ்சலியிடம் திரும்பியவன்.


"அந்த கிப்ட் நான் தான்"

என்று புன்னகையுடன் கூறினான்.


"அடப்பாவி..."


என்று ரிஷியின் நெஞ்சில் குத்த, அவளை அணைத்துக்கொண்டான் ரிஷி.


"ஆஃபீஸ் போகலயா நீ?"


"இல்லை... முக்கியமான நாளை வைத்துக்கொண்டு ஆஃபீஸா முக்கியம்... இந்த நாள் உனக்காக மட்டும் தான். "


என்று அவன் கூற, அஞ்சலி மகிழ்ச்சியில் மூழ்கிப்போனாள்.


"எப்போதுமே பெண்களுக்கு பணம், காசு, நகை, ஆடம்பரம் இது எல்லாவற்றையும் விட, தன்னை புரிந்துகொள்ளும் நபரைத்தான் ரொம்ப பிடிக்கும். தனக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது, எது தேவை என்று பார்த்து செய்யும் துணை கிடைக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் அதிர்ஷ்டசாலிதான். அந்த வகையில் நானும் ரொம்ப அதிர்ஷ்டசாலிதான். "

                                          - அஞ்சலி

"பொண்ணுங்க மனசை புரிஞ்சுக்க முடியாது. அவங்க மனசை புரிஞ்சுக்கறது கஷ்டம் என்றே நாமெல்லாம் சொல்லிட்டு இருக்கிறோம். ஆனால் நமக்கு நெருக்கமானவர்களோட மனசை புரிஞ்சுக்க நாம முயற்சி செய்தோமா? அவர்களை எந்த அளவிற்கு நமக்குத் தெரியும்? தினமும் அவர்களை கவனிக்கிறோமா? அவங்க பேசுவதை காதுகொடுத்து கேட்கிறோமா? இதையெல்லாம் நாம முதலில் யோசிக்கணும்.

நல்லா யோசித்துப் பார்த்தால், அவங்க பேசும் போதே அவர்களையும் அறியாமல் அவங்களுக்கு பிடித்ததை பிடிக்காததை எல்லாமே சொல்லியிருப்பார்கள். பசங்களுக்கு போதுவாவே கொஞ்சம் பொறுமை குறைவுதான்.. அதனாலேயே கவனிக்காமல் விட்டிருப்போம். பொண்ணுங்க பெருசா எதையும் எதிர் பார்க்கமாட்டாங்க... அவங்களை புரிஞ்சுக்கணும், அவர்களுக்காக நேரத்தை செலவிடனும்னு பாசத்துக்காகத் தான் ஏங்குவாங்க. ஒரு நல்ல துணையால் இதை நிச்சயமா புரிந்துகொள்ள முடியும்"

                                                 


Rate this content
Log in

Similar tamil story from Drama