ரெஸ்டாரண்ட்டில் ஒரு காதல் கதை
ரெஸ்டாரண்ட்டில் ஒரு காதல் கதை
ரெபேக்காவும் வருணும் அந்த ரெஸ்டாரண்டின் ஓரத்தில் இருந்த இருக்கைகளில் அமர்ந்து தங்களின் உணவுகளை உண்டு கொண்டிருந்தனர்.
வருண் ரெபேக்காவின் டீம் லீடர். பொதுவாகவே பெண்கள் விஷயத்தில் ரொம்பவே பலவீனமானவன் வருண். அவனைப் பற்றி ஆபீஸில் இருக்கும் எந்த பெண்ணிற்கும் நல்ல அபிப்பிராயம் கிடையாது. இருப்பினும் வேளையில் அவன் திறமைசாலி.
இன்று ரெபேக்காவும் வருணும் மிகவும் முக்கியமான ஒரு மீட்டிங்க்கு செல்லவேண்டியிருந்ததால் காலையிலேயே கிளம்பி சென்று அந்த மீட்டிங்கை அட்டன் செய்துவிட்டு ஆபீஸ்க்கு திரும்பிக் கொண்டிருக்கும் பொழுது வருண் உணவருந்த நேரம் ஆகிவிட்டது என்று கூறி ரெபேக்காவை நகரின் முக்கிய ரெஸ்டாரண்டுகளில் ஒன்றான ஆர்ஆர் ரெஸ்டாரண்ட்க்கு அழைத்து வந்திருந்தான்.
ரெபேக்காவிற்கு வருணுடன் இருப்பது சுத்தமாக பிடிக்கவில்லை. இருப்பினும் டீம் லீடராக அவன் இருக்கும் பொழுது அவனை உதாசீனப்படுத்துவது சரியல்ல என்ற காரணத்திற்காக அவனுடன் வந்திருந்தாள்.
ஆனால் இப்பொழுது வருணின் செயல் எல்லை மீறத் தொடங்கியது. ரெபேக்காவுடன் பேசிக்கொண்டிருக்கையிலேயே ரெபேக்காவின் கால்களை அவனது பாதங்களால் உரசத் தொடங்கினான்.
ரெபேக்காவிற்கு ஒரு பக்கம் கோபமும் இன்னொரு பக்கம் அவமானமுமாக இருந்தது. அவள் காலை உள்ளே இழுத்துக் கொள்ள, சற்று தைரியம் பெற்று வருண் ரெபேக்காவின் கைகளைப் பிடித்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.
"உனக்கு ரொம்பவே மிருதுவான விரல்கள் ரெபேக்கா..."
என்று அவன் விரல்களைத் தடவிக்கொடுக்க,
அவனது கையைத் தட்டி விடவும் முடியாமல் எப்படி அவனிடம் இருந்து விடுபடுவது என்றும் தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க அந்த நேரம் வந்த வெயிட்டர் ஒருவன் அவர்கள் ஆர்டர் செய்த உணவை வைத்துக் கொண்டிருக்கும் பொழுதே ரெபேக்காவின் மீது ஜுசை கொட்டி விட்டான்.
"சாரி மேடம் ரொம்ப சாரி தெரியாம கொட்டிருச்சு"
என்று அவன் மன்னிப்புக் கேட்க,
" அறிவில்லையா உனக்கு ? பார்த்து வேலை செய்ய மாட்டாயா ?"
என்று வருண் அவனைத் திட்டினான்.
"சாரி சாரி சாரி... மேடம் வாஷ் ரூம் அந்தப்பக்கம் இருக்கு. "
என்று அவன் வழிகாட்ட ரெபேக்காவும் இதுதான் சமயம் என்று வருணிடமிருந்து தப்பி வாஷ் ரூமிற்குள் சென்றாள்.
அதற்குள்ளாக வருணுக்கு போன் வந்துவிடவே அவன் சந்திக்க வேண்டிய ஒரு முக்கியமான நபரைக் காண வேண்டும், அதனால் இப்போதே கிளம்புகிறேன் என்று வெட்டரிடம் சொல்லி ரெபேக்காவிடம் தெரிவிக்குமாறு சொல்லிவிட்டு, அவன் வெளியே கிளம்பினான்.
வாஷ் ரூமில்,
ரெபேக்காவின் உடை இன்னும் ஈரமாக இருக்க, எப்படி அந்த உடையுடன் வெளியே வருவது என்று தெரியாமல் அவள் தவித்துக் கொண்டு நிற்கும் பொழுது வாஷ் ரூமிற்குள் ஒரு பெண் வந்தாள்.
அவள் அங்கு வேலை செய்யும் பெண் என்பது அவள் அணிந்திருந்த உடையில் இருந்து தெரிந்தது.
" இந்தாங்க மேடம் எங்க பாஸ் உங்ககிட்ட இந்த டிரஸ்ஸ கொடுக்கச் சொன்னார் "
என்று சொல்லி ரெபேக்காவிடம் ஒரு உடையைக் கொடுத்தாள்.
" நீங்க தவறா நினைச்சுட்டு இருக்கீங்க. அது நானாக இருக்காது..."
" இல்ல மேடம். நீங்க தான். எனக்கு நல்லா தெரியும் இந்தாங்க "
என்று சொல்லி உடையை கொடுத்துவிட்டு,
" எனக்கு வெளிய வேலை இருக்கு"
என்று சொல்லி உடனே கிளம்பிவிட்டாள்.
ரெபேக்கா குழப்பதுடனேயே உடையை மாற்றிவிட்டு வெளியே வந்த பொழுது அவள் மீது ஜூசை கொட்டிய வெயிட்டர் வாஷ் ரூம் வாசலில் காத்துக்கொண்டிருந்தான்.
" சாரி... நானும் ரொம்ப நேரமா பார்த்துட்டுதான் இருந்தேன். அந்த ஆளு உங்ககிட்ட நடந்துகொண்ட முறை சரியில்லை. ஏதோ தப்பா இருக்குது என்று தோன்றியது. அதனால் தான் வேணும்னே உங்க மேல ஜுசை கொட்டினேன். "
"ஓஹோ..."
" அப்புறம் அவன் கிளம்பிப் போய்விட்டான். யாரோ ஒரு முக்கியமான நபரை பார்க்கணுமாம். உங்ககிட்ட சொல்லச் சொன்னார். உணவுக்கான பில்லைக் கூட உங்கக்கிட்ட வாங்கிக் கொள்ளச் சொன்னார். "
"தேங்க்ஸ் "
என்று கூறிவிட்டு பில் செலுத்தும் இடத்திற்கு அவள் வர அந்த வெயிட்டரும் அவளைப் பின் தொடர்ந்து அந்த இடத்திற்கு வந்தான்.
" நீங்க எதுக்காக என்னை ஃபாலோ பண்றீங்க ?"
என்று அவள் கேட்க அந்த நேரத்தில் ரெபேக்காவிற்கு உடையைக் கொடுத்த பெண் அங்கு வந்து,
" பாஸ் நீங்க சொன்ன மாதிரி இவங்களுக்கு டிரஸை கொடுத்துட்டேன் "
என்று கூறி விட்டுச் செல்ல,
"அப்படி என்றால் நீங்க தான் இந்த ரெஸ்டாரன்ட் ஓட முதலாளியா ?"
"ஆமாம் "
"பிறகு எதுக்காக வெயிட்டர் உடையில் இருக்கிறீங்க ?"
" ஏன் முதலாளியாக இருந்தால் வேலை செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கிறதா? சாதாரண வெயிட்டராக இருந்து தான் இன்றைக்கு இந்த நிலைமைக்கு வந்திருக்கிறேன். அதை என்றைக்கும் மறக்க கூடாது என்று தான் இப்போதும் வேலை செய்கிறேன்"
என்று அவன் சிரித்துக் கொண்டே கூற ,
"ரொம்ப தேங்க்ஸ் "
என்றாள் ரெபேக்கா.
" பரவாயில்ல. இதுல என்ன இருக்கு? டிரஸ் உனக்கு சரியாகத்தான் இருக்கா?"
" ரொம்ப சரியா இருக்கு. இந்த உதவியை நான் மறக்க மாட்டேன்."
" அதெல்லாம் இருக்கட்டும் இன்னொருமுறை யாராவது இப்படி தவறான முறையில் நடந்துகொண்டால் முகத்துக்கு நேராக கேளுங்கள். நீங்க வாயை மூடிக்கொண்டு இருந்தால் தான் அவர்களுக்கு வசதியாக போய்விடும். என்ன செய்தாலும் இவங்க வெளியே சொல்ல மாட்டார்கள் என்ற தைரியத்தில் எது வேண்டுமானாலும் செய்யத் துணிவார்கள். அதனால இன்னொரு முறை இப்படி ஒரு நிகழ்வு நடப்பதற்கு நீங்களே இடம் கொடுத்து விட வேண்டாம் "
என்று அவர் கூறிய வரிகள் முற்றிலும் உண்மை என்பதை ரெபேக்கா உணர்ந்தாள்.
பின்னர் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அவ்விடத்தை விட்
டு நகர்ந்தாள்.
இரண்டு நாட்களுக்குப் பின்னர்,
ரெபேக்கா மீண்டும் ஆர்ஆர் ரெஸ்டாரண்டுக்கு வந்திருந்தாள்.
இம்முறை அவன் கடந்த முறை கொடுத்த உடையை திருப்பிக்கொடுக்க வந்திருந்தாள்.
ரெபேக்காவைப் பார்த்ததுமே அந்த ரெஸ்டாரன்டின் உரிமையாளரும் சிரித்த முகத்துடன் அவளை வரவேற்றான்.
"என்ன ரெபேக்கா திடீரென்று இந்த பக்கம் ?"
என்று அவன் விசாரிக்க,
" நீங்க கொடுத்த இந்த ட்ரெஸ்ஸை திருப்பிக் கொடுத்து விட்டு போகலாம் என்று வந்தேன் "
"எதுக்குங்க அதெல்லாம் ? நீங்களே வைத்திருக்கலாமே "
"அப்படி இல்லை என்ன இருந்தாலும் இது வேறு ஒருவருக்குச் சொந்தமானது தானே "
"இது புது டிரஸ் தான். யாரும் பயன்படுத்தவில்லை. நீங்களே வைத்திருந்திருக்கலாம். இதைக் கொடுக்கவா அவ்வளவு தூரம் பயணம் செய்து வர வேண்டும் ரெபேக்கா?"
என்று அவன் கேட்க, அதற்கு
" உங்களுக்கு எப்படி என்னோட பெயர் தெரியும்? நான் சொல்லவே இல்லை... அதே மாதிரி நான் ரொம்ப தொலைவில் இருந்து வருகிறேன் என்பதையும் நான் சொல்லல... இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும் ?"
என்று ஆச்சரியமாக வினவ,
அவளுக்கு இன்னும் ஆச்சரியம் சேர்க்கும் வகையில் அவன் கூறிய விஷயங்கள் அமைந்தது.
"அது... அது வந்து... ரொம்ப நாளாவே எனக்கு உன்னை தெரியும்... இல்லை ரொம்ப வருடங்களாகவே தெரியும்... நீயும் நானும் ஒரே காலேஜில்தான் படித்தோம். ஆனால் வேற வேற டிபார்ட்மெண்ட். தினமும் நீ உங்க அப்பா கூட பைக்கில் வருவ. காலேஜ் வாசலில் நானும் என்னோட பிரின்ட்ஸும் நின்று கொண்டிருப்போம்.
அப்போதெல்லாம் உன்னை சைட்டடிச்சிருக்கேன்.
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும். இன்னும் சொல்லப்போனால் உங்களை பாலோவ் பண்ணிட்டு வந்து உங்க வீடு எது என்பதையும் கண்டுபிடித்தேன்.
ஆனால் உனக்குத்தான் நான் யார் என்பதே தெரியாது. நீ உண்டு உன் படிப்பு உண்டு என்று இருந்த. உங்க அப்பா கூட பலமுறை என்னை முறைத்திருக்கிறார்.
ஒருமுறை நேராகவே என்கிட்ட வந்து,
' என் பொண்ண லவ் பண்றியா?'
அப்படினு கேட்டாரு. எனக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. கை காலெல்லாம் வேடவேடனு ஆகிருச்சு.
' என்னோட பெண்ணை என்றில்லை... பொதுவாகவே கல்யாணம் பண்ணிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? உன்னை நம்பி ஒரு பொண்ணு வந்தால் எப்படி காப்பாற்றுவ? '
என்று அவர் கேட்ட அந்தக் கேள்விதான் என்னுடைய எதிர்காலத்தையே மாற்றியது. அது வரைக்கும் பொறுப்பில்லாம சுத்திட்டு இருந்தேன். எனக்கு சொந்தம்னு சொல்லிக்க ஒரே ஒரு மாமா மட்டும் தான். வேற யாரும் கிடையாது.
என்னோட படிப்பு செலவுகள் எல்லாமே நான் பார்ட் டைமாக வேலை பார்த்து சம்பாதித்ததில் இருந்துதான் செலவு செய்தேன். உங்க அப்பா பேசியதை கேட்ட பிறகு, அடுத்தமுறை உன்னோட அப்பாவை சந்திக்கும் பொழுது
'இப்ப எனக்கு கல்யாணம் செய்துக்க தகுதி இருக்கு... உங்க பெண்ணை கல்யாணம் செய்து கொடுப்பீங்களா' னு கேட்கும் அளவிற்கு வளர்ந்திருக்கணும்னு என்னை நானே தயார் படுத்தத் தொடங்கினேன்.
அதுக்குப் பிறகுதான் சின்னதா ஒரு பாஸ்ட் புட் கடையாக ஆரம்பித்தது, இந்த நாலு வருடத்தில் இவ்வளவு பெரிய ரெஸ்டாரண்ட்டாக வளர்ந்திருக்கு.
இந்த நாலு வருஷமா உன்னை பார்க்கணும் என்று தோன்றும் போதெல்லாம் உன்னோட அப்பா சொன்ன வார்த்தை தான் எனக்கு ஞாபகம் வரும்.
இப்போ எனக்கு சொந்தமா ஒரு வீடு ஒரு ரெஸ்டாரண்ட் ஒரு கார் எல்லாத்துக்கும் மேல என்னோட உழைப்பு, இவ்வளவு தான் என்னோட சொத்து.
இப்போ உன்னை பொண்ணு கேட்கிற தகுதி எனக்கு இருக்கும்னு நான் நினைக்கிறேன் "
என்றவன் பேசிக்கொண்டே போக ரெபேக்காவோ ஆச்சர்யம் அதிர்ச்சி என்ற கலப்படமான உணர்வுகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருந்தாள்.
" உனக்கு இதெல்லாம் ரொம்பவே ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கும்னு எனக்குத் தெரியும். நாலு வருஷத்துக்கு அப்புறம் உன்னை ரெண்டு நாளைக்கு முன்னாடி இங்க சந்திப்பேன் என்று சத்தியமாக நினைக்கவில்லை.
இது எல்லாமே விதியின் செயல் என்று தான் நினைக்கிறேன்.
இந்த ரெஸ்டாரண்டே உனக்காக ஆரம்பித்ததுதான். அதனால தான் உன்னோட பெயரைப் போட்டு இல்ல நம்ம பேரை போட்டு இதை ஆரம்பித்தேன். "
ரெபேக்கா புரியாமல் முழிக்க,
" ஆர்ஆர் ரெஸ்டாரண்ட்... ரெபேக்கா ராபின் ரெஸ்டாரண்ட் "
என்று அவன் சிரித்த முகத்துடன் கூற,
" உன்னோட பெயர் ராபின்னா?"
" ஆமாம்."
"..."
"இப்போ உன்கிட்ட நான் எந்த முடிவையும் எதிர்பார்க்கல... "
என்று சொல்லிக் கொண்டே அவனது பாக்கெட்டில் இருந்து விசிட்டிங் கார்டை எடுத்தான்.
"இதுல என்னோட போன் நம்பர் இருக்கு. உனக்கு என்னை பிடித்திருந்தால் என்கிட்ட பேசணும்னு தோன்றினால் இந்த நம்பருக்கு போன் பண்ணு. உன்னோட போனுக்காக நான் காத்துட்டு இருப்பேன் "
என்று சொல்லி விசிட்டிங் கார்டை அவளது கையில் கொடுத்தேன்.
அவளோ எதுவும் பேச முடியாமல் அந்த விசிட்டிங் கார்டை வாங்கி கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தாள்.
அவள் செல்வதையே பார்த்துக் கொண்டிருக்க அதே நேரத்தில் அவனது போனுக்கு ஒரு எண்ணிலிருந்து கால் வந்தது.
அவன் எடுத்துப் பேசியபோது,
"நானும் டிரஸ்ஸை கொடுப்பதற்காக திரும்ப வரவில்லை... கொடுக்கும் சாக்கில் உன்னை பார்க்கலாம் என்று தான் வந்தேன். ஆனால் இவ்வளவு பெரிய ஆச்சரியத்தை எனக்காக நீ கொடுப்பாய் என்று நினைக்கல... "
என்று ரெபேக்கா கூற, ராபின் சிரித்துக்கொண்டே ரெபேக்கா சென்ற திசையை நோக்கினான்.
அவளும் காதில் வைத்திருந்த போனுடன் ராபினை திரும்பிப் பார்த்து புன்னகைத்துவிட்டு,
" நாளைக்கே வந்து எங்க அப்பாகிட்ட பொண்ணு கேளு"
என்று கூறிவிட்டு போனை வைத்தாள்.